ஆத்மாநாம் கவிதைகள்

This entry is part [part not set] of 6 in the series 20000827_Issue

சுந்தர ராமசாமி


ஆத்மாநாமின் மறைவும், அவர் மறைந்த விதமும் அவரது கவிதைகளைப் பற்றி சற்றுத் தூக்கலாகப் பேச நம்மைத் தூண்டிற்று என்று நினைக்கிறேன். பிரிவின் கொடுமையை எதிர் கொள்ளும் தருணங்களில் மிகை எப்போதும் தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கிறது. அவர் நம்மை விட்டுப் பிரிந்து இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவர் கவிதைகளும் நம் இலக்கியத்தின் ஒரு பகுதியாகி விட்டது. இன்று அவரைப் பரிசீலனை செய்ய இந்த இடைவெளி நமக்கு உதவக்கூடும்.

ஒவ்வொரு கவிஞனும் தான் அழிந்த பின்னும் தன் கவிதைகள் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறான். ‘என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க இயலாது ‘ என்றார் ஆத்மாநாம். என்னை அழித்தும் என்னை அழிக்க இயலாது என்றும் சொல்லியிருக்கிறார். அது சரிதான். அவருடைய் சாரம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அவருடன் உறவாட முடிகிறது. இந்த நேரத்தில் ஆத்மாநாமின் கவிதைகளை முழுமையாகவும் சிறப்பாகவும் பதிப்பித்து தந்திருக்கும் பிரம்மராஜனின் பணியை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

புதுக் கவிஞர்களில் பிரக்ஞைபூர்வமான கவிஞர்கள் மிகக்குறைவு. ஆத்மாநாம் பிரக்ஞைபூர்வமானவர். தன் செயல்பாடுகள் குறித்தும் தான் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அவருக்கு யோசனைகள் இருந்திருக்கின்றன. காலத்தின் வரிசையில் கடைசியாக தன்னிடம் வந்து சேர்ந்திருக்கும் கவிதைகளின் பொதுக் குணத்தை பிரதிபலித்தல் இவருக்கு இயற்கையாக இல்லை. தன்னுடைய கவிதைகளை கண்டுபிடிக்கும் முயற்சியாகவே இவர் கவிதைகள் இருக்கின்றன. ஞானக்கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைப் போக்கை பிரதிபலித்து இவர் எழுதியுள்ள ‘இன்னும் ‘ என்ற தலைப்பிட்ட கவிதையில்தான் இவர் சுத்தமாக இல்லாமல் இருக்கிறார். மற்றக் கவிதைகளில் – மொத்தம் 143 கவிதைகள் – இவரது ஆளுமை, பலவற்றில் மங்கலாகவும் ஒரு சிலவற்றில் மிகச் சிறப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. பிரதிபலிப்பு படைப்பாகாது என்ற விழிப்பு இவரிடம் கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.

வாழ்நிலையில் தான் பெற்ற அனுபவங்களை கவிதை மூலம் இவர் ஆராய்ந்து கொண்டே போகிறார். தன்னை அறிந்து தன் பார்வையைத் தெளிவு படுத்திக் கொள்ளும் முனைப்பு இது. இந்த தெளிவு கூடிவரும் வகையை உணருவது இன்று சிரமமாக இருக்கிறது. இவரது கவிதைகளை கால வரிசைப்படுத்தித் தர பிரம்மராஜனுக்குச் சாத்தியப்பட்டிருக்கும் என்றால் இவர் பெற்றுள்ள வளர்ச்சியை இன்னும் துல்லியமாக நாம் மதிப்பிட்டிருக்க முடியும்.

சுதந்திரம் மனித ஆளுமைக்கு தரும் விகாசம், வாழ்நிலை சார்ந்த அபத்தங்களும் கேவலங்களும் தரும் வருத்தம், மனிதனை ஆசுவாசப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கும் இயற்கை, நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம், இவை சார்ந்த உணர்வுகள் அவர் கவிதைகளில் அழுத்தம் பெறுகின்றன. தன் கவிதைகள் மூலம் ஒரு உயர்நிலை பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார் இவர். இதனால் தன் கவிதை மொழி தன் சக மனிதனுக்குப் புரிய வேண்டும் என்பதில் அவருக்கு கவனம் இருந்தது. ஏற்கும் புதுமையின் பொருள் என்ன என்பதிலும் இந்த மண் சார்ந்து அதன் பொருத்தம் என்ன என்பதிலும் அவர் கவனங்கள் கொண்டிருந்தார்.

மேற்கத்திய சோதனைகளின் பிரமிப்புகள் மீது அல்ல; உலக இலக்கியத்தின் தரம் மீதே இவர் பற்றுக் கொண்டிருக்கிறார். பழைய கவிதைகளின் அலங்காரங்கலை புறக்கணித்த புதுக்கவிதைகள் மூலம் உறுதிப்பட்டு வந்து கொண்டிருந்த புதிய அலங்காரங்களையும் இவர் புறக்கணித்திருக்கிறார். பேச்சு அல்லது கடிதங்களில் நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு மேற்பட்ட ‘கவிச்சொற்கள் ‘ அவர் கவிதையில் இல்லை. கவிதைக்குரிய வலுக்களாகக் கருதப்படும் உவை, உவமேயம், படிமங்கள் இவற்றின் மீது சார்ந்து நிற்காமல் -இயற்கையாக கூடிவருவது வேறு- அர்த்தங்கள் தரும் அனுபவ அலைகளை நம்பி கவிதைகளை எழுதியிருக்கிறார். அநேக கவிதைகளில் குழாயின் ஒரு நுனியிலிருந்து மறு நுனிக்கு தண்ணீர் ஓடி இறங்குவது போல முதல் வரியிலிருந்து கடைசி வரிக்கு அர்த்தம் விரைந்து ஓடுகிறது. ஒரு சில கவிதைகளில் முன் பகுதியும், பின் பகுதியும் தொடர்பின்றி பிளந்து கிடக்கின்றன. இது வாசிப்பு சார்ந்த நம் குறையாகவோ அல்லது நோயுற்ற காலங்களில் கவிஞருக்கு ஏற்பட்ட தடையாகவோ இருக்கலாம்.

ஆத்மாநாமின் அநேக கவிதைகள் குறிக்கோளைச் சென்றடையவில்லைதான். நிறைவான கவிதையை அடைய முன்னுவதும் குறையாக அவை முடிந்து போவதும் கவிதைத் தொழிலின் விதி என்று கூறும் அளவுக்கு மிகச் சிறந்த கவிஞர்கள் கூடி வராமலேயே கவிதையை முடித்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.

ஆனால் ஆத்மாநாமின் கவிதைகளில் அலங்காரத்தினால் தடைபட்டவை என்றோ பிரமிப்பினாலோ மயக்கத்தினாலோ செயற்கையினாலோ இருப்பை மிகைப்படுத்திக்காட்ட விரும்பியதினாலோ தடைபட்டவை என்றோ அதிகம் இல்லை. அனுபவத்த்தில் மனம் இழையும் பயணம் எந்தப் புள்ளியில் கவிதையின் உடலாக மாறுகின்றது என்ற கேள்விக்கு திட்ட வட்டமான பதில் இல்லை. அநேக கவிதைகளில் இந்த உடல் உயிராக மாறும் காரியம் அவருக்கு நடக்கவில்லை.

கவிஞரான ஆத்மாநாமை அவர் வாழ்ந்த காலத்தின் நேர்மையான மனிதன் என்றும் சொல்லலாம். இது அபூர்வமான தகுதி. அவருடைய தொடர்புகள் சிறு வட்டத்தினுள் இருந்திருக்கலாம். உடல், காலம் இடம் சார்ந்த வரையறை கொண்டது. ஆனால் அவருடய கனவுகளின் எல்லை மேலான கவிதையின் விரிந்த தளத்தில் இருந்தது. மேலான கவிதையை மேலான வாழ்விலிருந்து பிரிக்க இயலாத லட்சியவாதியாகவும் அவர் இருந்தார்.

அவரது கவிதைகள் அவரது அனுபவ சாரங்களின் நாட்குறிப்புப் போல இருக்கின்றன. தன் அனுபவங்களை தான் விளங்கிக் கொண்ட விதத்தை சக மனிதனிடம் – மக்களிடம் அல்ல – அநேக சமயங்களில் ஒரு நண்பனுக்குச் சொல்லும் விதமாக – இவர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். ஒலி பெருக்கியால் எழுதாமல் தன் மனதால் எழுதிய கவிதைகள் சக மனிதனின் கரங்களைப் பற்றிக் கொண்டு அவன் காதோடு சொல்லும் வரிகளுக்குரிய அந்தரங்கத்தோடு இருக்கின்றன. அந்த வரிகள் பொருட்படுத்தத் தகுந்தவை என்றால் தன்னுடைய நண்பனிடம் அவன் இந்த வரிகளைச் சொல்வான். ஒரு மனதிலிருந்து மற்றொரு மனதிற்கு கவிதை இப்படித்தான் தவழ்ந்து செல்கிறது.

மென்மையான கவிஞர் என்று இவரைச் சொல்லலாம். இவருடைய ரீங்காரம் தான் மென்மையானதே தவிர ரீங்காரத்துக்கு ஆதாரமான கம்பி – உள்பலம்- வலிமையானது. சுயத்தின் மீது நம்பிக்கை கொண்ட உள்பலம் இது. தன் அனுபங்களை சதா அசை போடுவதில் கூடிவரும் உள்பலம். அனுபவங்களின் சாரங்களை அறிய தனக்கு உகந்த தயாரிப்புகளிலும் இவர் கவனம் கொண்டிருந்தார். படிப்பும், தொடர்புகளும், விவாதங்களும், இதனால் காலத்தைப் பற்றிய உணர்வு இவருக்குச் சாத்தியமாயிற்று. கூடிவராத கவிதைகளில் கூட காலத்துக்கும் கவிதைக்கும் இடையே பழமையின் களிம்பு இல்லை.

பிறப்பு, வளர்ப்பு, தேசம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் குறுகல்கள் தாண்டிய முகம் இவருடையது. இதனால் அடையாளங்கள் அற்று வெற்று அம்பலத்தில் வெளிறிப்போன கவிதைகளாக இவருடையவை இருக்கின்றன என்பது இல்லை. ஒரு தமிழ் நகரத்தில் வாழ்ந்த தமிழனின் நவீனக்கவிதைகளாக இவை இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வேர் இந்த மண்ணில் இருக்கிறது. இந்த மண்ணின் வேதனை இந்தக் கவிதையிலும் இருக்கிறது.

-1993

 

 

  Thinnai 2000 August 27

திண்ணை

Series Navigation

author

<b>சுந்தர ராமசாமி</b>

சுந்தர ராமசாமி

Similar Posts