ஜெயகாந்தன்
2000 ஜூலை மாதம் 22ஆம் தேதி, நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கமும் சிந்தனைவட்டமும் இணைந்து நடத்திய ‘ஜெயகாந்தன் மாலைப்பொழுது ‘ நிகழ்ச்சியில் ஆற்றிய சொற்பொழிவு.
நண்பர்களே பெரியோர்களே தாய்மார்களே உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலர் எனக்கு எழுத்துக்களின் மூலம் ஏற்கெனவே என்னை அறிந்தவர்கள். இங்கே எனது கருத்துக்களை எனது கட்டுரைகளை ஒரு நாடக வடிவிலே உங்களுக்குத் தந்தவர்கள் தொழில் நடிகர்கள் அல்லர். அவர்களுக்கு வேறு தொழில்கள் வேறு தகுதிகள் உண்டு. தாங்கள் வாசித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இந்த மேடையை பயன்படுத்திக்கொண்டு ஒரு நாடக முயற்சியாக அவற்றைத் தந்திருக்கிறார்கள். இதனை அவர்கள் இன்னும் சிறப்பாக மேலும் மேலும் வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்; அப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். இதன் மூலம் அவர்கள் தங்கள் இலக்கிய அபிமானத்தை வெளிப்படுத்தியமைக்கு அவர்களுக்கு நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனக்கு வாழ்வின் மகத்துவம் என்ற தலைப்பு கொடுத்து பேசச்சொல்லியிருக்கிறார்கள். ஒரு தலைப்பில் பேசுவது என்பது ஒரு கடினமான காரியம்,.ஆயினும் பரந்து பட்ட என் எண்ணங்களையும் அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகின்றேன்.
என்னை அறிமுகப்படுத்தியவர்கள் நான் 5ஆம் வகுப்பு வரை படிந்த்திருக்கிறேன் என்று சொன்னார்கள். அதுகூட கொஞ்சம் அதிகம். நான் 5ஆம் வகுப்பில் இரண்டுமுறை பெயில் ஆனவன். அந்தக்காலப் படிப்பு அப்படி இருந்தது. எனக்குப் பள்ளிக்கூடம் போக விருப்பமே ஏற்பட்டதில்லை. எனவே படித்தால் அல்லவோ பாஸ் செய்வதற்கு ? நான் பள்ளி வரைக்கும் போய் பிறகு வேறு பள்ளிகளில் பயின்றவன்.
ஒழுங்காகப் படிப்பவர்கள் ஏதோ ஒரு டிகிரி வாங்கிவிட்டு நான் படித்துவிட்டேன் என்று தலையை நிமிர்த்திக் கொள்ளலாம். நான் இன்றுவரை ஒரு மாணவனாக படித்துக்கொண்டே இருக்கிறேன். எனவே எனது படைப்பு எல்லையில்லாமல் விரிந்து கொண்டே போகிறது.
நான் வாழ்வின் மகத்துவத்தை, மகாகவி பாரதி மூலம் பயின்றேன். நான் படிக்காத காலத்திலும் கூட என் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அது மகாகவி பாரதி புத்தகம். அதன் மூலம் வாழ்க்கையை நான் நுணுக்கமாகவும் நெருக்கமாகவும் ஆத்மார்த்தமாகவும் அறிய முடிந்தது. பாரதியை எனக்கு பயின்றுவித்த நண்பர்கள் பலர் எனக்கு நெருக்கமான தோழர்களாக இருந்தார்கள்.
நான் 15 வயதிலே எழுத ஆரம்பித்தேன். தமிழே தெரியாத உனக்கு எப்படி எழுதவரும் என்று கேட்டார்கள். எனக்குத்தான் தமிழ் தெரியாது; தமிழுக்கு என்னைத் தெரியும் என்று நான் சொன்னேன்.
எப்படி தன் குழந்தைகளை தாய் அறிந்து கொள்வாளோ அது போல், தமிழ் மொழி என்னை அறிந்துகொண்டது. நான் தமிழிலே பிழையற எழுதவும் பேசவும் படிக்கவும் இயல்பாகவே அறிந்திருந்தேன். அதுதான் தாய்மொழியின் தனிச்சிறப்பு.
படிப்பது என்றால் பிற மொழிகளைத்தான் நாம் படிக்கவேண்டும். ஒரு ஆசானை வைத்துகொள்ளவேண்டும் தாய்மொழியை பயில்வதற்கு வாழ்க்கையே சிறந்த ஆசான் என்று கண்டேன்.
எனவே ஒரு அச்சுக்கூடத்திலெ எனக்குஅச்சுக்கோர்ப்பதற்கான தொழிலை கற்பிக்க என்னைச் சேர்த்தார்கள். சிறு வயதான காரணத்தினால் அந்த வேலை எனக்குக் கடினமாக இருந்தது. எனக்கு எழுத்துக்களோடு பரிச்சயம் நேர்ந்ததே அந்த எழுத்து அச்சுக்களின் மூலம்தான்.
அதனால், அதனினும் உயர்ந்த வேலைக்குச் சென்றேன். அதாவது அச்சகத்தில் பிழை திருத்துகிற வேலை. புரூப் ரீடர் என்று அதற்குப் பெயர். செய்கிற வேலையை சிறப்பாகச் செய்தால் புகழ் நம்மைத் தேடிவரும் என்பதற்கு அந்த பணி எனக்கு உதவியாக அமைந்தது.
ஜெயகாந்தன் புரூப் திருத்தினால் அதிலே பிழையே இராது என்று அந்த ஆசிரியர்கள் என்னைத் தேடி அவர்கள் நூல்களுக்கு பிழைதிருத்தச் சொல்வார்கள். பெரிய ஆசிரியர்கள், திருவிக போன்றவர்களது புத்தகங்களுக்கு நான் பிழை திருத்தியிருக்கிறேன்.
அப்புறம் சங்க இலக்கியங்கள் போன்ற பழந்தமிழ் நூல்களுக்கும் பிழை திருத்தியிருக்கிறேன். பிறகு ஜீவானந்தம் போன்றவர்களது கட்டுரைகளுக்கும் புத்தகங்களுக்கும் நான் பிழை திருத்தலானேன். இதன் மூலம் எனது கல்வியும் எனது பணியும் ஒருங்கிணைந்தாயிற்று
நான் பிழை திருத்துகிறபோதே அதை பணியாக மேற்கொள்ளாமல் அதனை ஒரு கல்வியாகப் பயின்றேன்.
இவ்வாறாக தமிழ் என்னை சுவீகரித்துக் கொண்டது. 15 வயதிலே நான் எழுத ஆரம்பித்தேன். வாழ்க்கைதான் எனக்கு ஆசானாக.
வாழ்க்கையை நேசிக்க கற்றுக்கொள்ளவேண்டும் அதற்கு நல்ல மனம் வேண்டும். நல்ல மனத்தை நல்ல நூல்கள் தரும். எப்படி நம் உடம்புக்கு ஆரோக்கியத்துக்கு நல்ல உணவும் நல்ல மருந்தும் தேவையோ அதுமாதிரி நமது ஆத்மாவுக்கும் நமது மனத்துக்கும் ஆரோக்கியம் தருவதற்கு நல்ல நூல்கள் உதவியாக அமைந்தன.
அந்த நூல்களை என்னை படிக்கச் சொல்லி யாராவது வற்புறுத்தியிருந்தால் ஒருவேளை நான் மறுத்திருப்பேன். அது எனக்குப் பணியானதினால், புதுமைப்பித்தனது எல்லா புத்தகங்களுக்கும் பிழை திருத்துகின்ற பணி எனக்கு 20வயதில் ஏற்பட்டது.
அதன் மூலம் சிறுகதை வடிவம் எப்படி, சிறுகதையின் உயிர்ப்பு என்ன, சிறுகதையின் மூர்ச்சனை என்ன என்றெல்லாம் நான் உணர ஆரம்பித்தேன்.
எனவே ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதினேன்.
வாழ்க்கையை பயில்வதற்கு இயற்கையை நேசித்தல் வேண்டும்.
இதற்கு நிறைய பாடம் மாதிரி நமக்குச் சொல்லிக்கொடுத்திருப்பவர் மகாகவி பாரதி வானத்தைப் பற்றிம் இயற்கையைப் பற்றிம் மனிதர்களைப் பற்றிம் தாவரங்களைப்பற்றி புழு பூச்சிகளைப்பற்றியும் கூட அவர் நிறையச் சொல்லியிருக்கிறார். அவற்றையெல்லாம் மதி என்று சொல்லியிருக்கிறார். அவற்றை பயில வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு விஷயத்தையும் அவர் சொல்லுகிறபொழுது அது எனக்கே சொல்லியதுபோலத் தோன்றிற்று. பாப்பா பாட்டிலிருந்து பகவத் கீதை முன்னுரை வரைக்கும் நான் தொடர்ந்து படித்துப் பயின்றேன். எனவே ஏதேனும் ஒரு நூலை ஆசானாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பயில்வீர்களேயானால் அது உலகத்தையும் பிரபஞ்சத்தையும் நமக்கு அறிமுகம் செய்யும்.
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் மேற்பட வைத்தாங்கு குலாவும் அமுதக் குழம்பில் குடித்தொரு கோலவெறி படைத்தேன் என்று அவர் சொல்லுகிறபோது அது எப்படி இருக்கும் என்று நானும் ஆராய்ந்து பார்த்தேன். அவற்றை சேர்த்துவைத்துப் பார்க்கிறபொழுது அந்தக் கோலவெறி நமக்கும் பிடிப்பதை உணர்ந்தேன்.
இதுமாதிரி பாரதியாரை உள்வாங்கிக் கொண்டு அவரை ஆசானாகக் கொண்டு நான் பயின்றேன்
மனிதர்களை தரமில்லாமல் எந்தத் தரத்திலும் பார்த்து நேசிக்கிற ஒரு மனப்பக்குவம் கொண்டேன். அவர்களோடு நான் வாழ்ந்தேன்.
சென்னை நகரத் தெருக்களிலே அக்காலத்திலே ரிக்ஷா என்று ஒரு வாகனம் உண்டு
ஒரு மனிதனை உட்காரவைத்து ஒரு மனிதன் இழுத்துக்கொண்டு போகிற அந்தக் காட்சி மிகக்கொடுமையானதாகவும் அவலமானதாகவும் இருந்தது. அதனால் அவர்கள் மீது நேசம் கொண்டேன். அவர்களோடு நான் பழகினேன். அந்த பிளாட்பார வாசிகளையும் அவர்களது மொழியையும் நான் நேசித்தேன்.
அந்த கொச்சை மொழிக்கு இலக்கிய அந்தஸ்து தருவது எனது கொள்கையாயிற்று. அதன் மூலம் இன்றைக்கு அந்த ரிக்ஷாக்கள் தமிழகத்தில் இல்லை. நான் எழுதியதால்தான் அது ஒழிந்ததோ அல்லது அது இல்லாமல் போகும் என்ற தீர்க்க தரிசனத்தோடு நான் அதை எழுதினேனா என்பதனையும் எழுத்துக்கு அந்த சக்தி உண்டு. எழுதுகோல் தெய்வம் என் எழுத்தும் தெய்வம் என்றார் பாரதி. அது மாதிரி எழுத்தின் மீது விசுவாசம் கொண்டு மனிதர்களை நேசித்திட வேண்டும்.
வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதே என் இலக்கியத்தின் கொள்கை என்றுநான் கருதினேன். வாழ்க்கையில் எவ்வளவோ அவலங்களைப் பார்க்கிறோம்.
நம்பிக்கையற்று விரக்தியுற்று வாழ்வை சபிக்கிற மனிதர்களையெல்லாம் பார்க்கிறோம்.ஆனால் வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதுதான் இலக்கியத்தின் கொள்கை கோட்பாடு என்று நான் உணர்ந்தேன்.
பாரதிக்குப் பிறகு நான் அதிகம் படித்தது புதுமைப்பித்தனின் படைப்புக்கள். அவர் எனது படைப்புக்கள் ‘நம்பிக்கை வறட்சியை ‘த் தருபவை என்று அவரே சொல்லுகிறார். எனது எழுத்துக்களின் தன்மை நம்பிக்கை வறட்சி அதாவது பெஸ்ஸிமிஸம் என்று அவர் சொல்லுகிறார். அவர் அப்படிச் சொன்னாலும்கூட அந்த எழுத்தைப் படித்து நான் வாழ்க்கைமீது நம்பிக்கையுற்றேன்.
எனது எழுத்துக்கள் வாழ்க்கையின்மீது நம்பிக்கை ஏற்படுத்திற்று. திரும்பத்திரும்ப என் எழுத்துக்கள் எதையாவது இந்த வாசகர்களுக்கு சாதித்து சாதனை செய்ய கொடுத்திருக்குமென்றால் வாழ்வின் மீது நம்பிக்கைதான். அந்த வாழ்வின் மகத்துவத்தை உணர்த்துவதற்கு எழுதுகோலும் இலக்கியமும் பயன்படுதல் வேண்டும்.
50ஆண்டு காலத்தில் நான் படைத்த அந்த பாத்திரங்கள் என்னை வந்து சந்தித்து ‘என்னைவைத்து, என்னைப்பற்றித்தானே எழுதியிருக்கிறீர்கள் ‘ என்று சொல்லுகிற அளவுக்கு அது மனிதர்களின் காலத்தோடு உறவு கொண்ட அதிசயத்தை நான் அனுபவப்பூர்வமாக- அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
ஆகவே எழுத்தை வாழ்க்கையாகக் கொள்வது எனக்குச் சுலபமாக இருந்தது. எல்லோருக்கும் அப்படி என்று நான் சொல்லிவிடமுடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் வாழ்வின் மகத்துவத்தை பாடுவதனாலேயே இலக்கியம் உயர்வு பெறுகிறது. வாசகன் பயன் பெறுகிறான் என்பதனை நான் உணர்ந்தேன்.
(தொடரும்)