விண்ணிலிருந்து ஒரு பார்வை

This entry is part [part not set] of 7 in the series 20000130_Issue

பாரி பூபாலன்


உட்கார்ந்து உட்கார்ந்து கால் மரத்து விட்டது. மணிக்கொருதடவை எழுந்திருத்து, ஒரு சுற்று சுற்றி விட்டு, வந்து அமர்ந்து கொள்கிறாய். சிறிது தூங்கி விட்டு, காலை உணவுக்காக எழுப்பப் படுகிறாய். ஜன்னலின் வழியே, கீழே பார்க்கும் பொழுது அங்கு கிரேக்க நாடும், ரோமும் இருப்பது தெரிகிறது. அங்கே இஸ்ரேலும் சினாயும் தெரிகிறது. உன் பார்வையில் தெரியும் அந்த ஒரு காட்சி, மனிதனின் நூறாண்டு கால வரலாறு என்பதனையும் நாகரீகம் வளர்ந்த இடம் என்பதனையும் உணர்கிறாய்.

அட்லான்டிக் சமுத்திரத்தைக் கடந்து செல்கிறாய். ஆப்பிரிக்காவை கடந்து செல்கிறாய். மறுபடியும் மறுபடியும் பறந்து செல்கிறாய். அமெரிக்காவின் மீது பறந்து செல்கிறாய். ஓரிடத்தை சிகாகோ என்றும் மற்றொரு இடத்தை அட்லாண்டா என்றும் உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

அடிக்கடி பறந்து செல்கிறாய். சிங்கப்பூரை காண்கிறாய். அடுத்து என்ன வரும் என்று உன்னால் எளிதாக கணிக்க முடிகிறது. அடுத்து வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறாய். இப்படிச் சுற்றிச் சுற்றி வரும் போது, உனக்குள் உன்னைப் பற்றி எண்ண ஆரம்பிக்கிறாய். உனக்கும், உன்னைப் போன்ற சக மனிதர்களுக்கும், இந்த உலகிற்குமிடையே உள்ள உறவைப் பற்றி எண்ண ஆரம்பிக்கிறாய்.

இப்படி விண்ணிலே பறந்து செல்லும் போது, எத்தனை எல்லைக்கோடுகளையும், நாடுகளையும் கடந்து செல்கிறாய் என்று உன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அந்த எல்லைக்கோடுகளை உன்னால் பார்க்கக் கூட முடியவில்லை. உன்னால் இந்தியாவையும் பாகிஸ்தானையும் கணிக்க முடிந்தாலும், அவற்றைப் பிரித்துப் பார்க்க உன்னால் முடியவில்லை. இந்த முழு உலகத்தினையும் உன்னால் ஒரு பார்வையில் அளந்து விட முடிகிறது. அந்த ஒரு பார்வை உனக்குள் ஒரு உன்னத, மகோன்னத எண்ணத்தை உதிக்க வைக்கிறது. அந்த பார்வை, உன்னை வேறு விதமாக யோசிக்க வைக்கிறது. இந்த முழு உலகத்தின் பிரதிநிதியாய் அங்கு அமர்ந்திருப்பதாய் உனக்குத் தோன்றுகிறது.

ஆனால் அந்த அதிகாலைப்பொழுதில் நீ பார்த்த நாடுகளுக்கிடையே ஆயிரக்கணக்கான மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். உன்னால் பார்க்கக் கூட முடியாத அந்த கற்பனையான எல்லைக்கோட்டின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறனர். அப்படிச் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் உனது இரு கையிலும் எடுத்து ‘அதோ பார், இதோ பார், எது முக்கியம் ‘ என உனது பார்வையையும் எண்ணத்தினையும் அவர்களுடன் பங்கிட்டுக்கொள்ள பிரியப் படுகிறாய்.

பின்னர், உன்னைப் போன்ற மனிதர், சந்திரனில் காலடி எடுத்து வைக்கிறார். அங்கிருந்து அவரால் இந்த பூமியைப் பார்க்க முடிகிறது. ஆனால் கண்கொள்ளா காட்சிகளையும் அதிசயங்களையும் கொண்ட பிரமாண்டமான இடமாகப் பார்க்க முடிவதில்லை, மாறாக ஒரு சிறிய பந்தினைப்போல் காண்கிறார். இங்கு நீ பார்த்து இரசிக்கும் ஓவியங்களையும் அதன் ஒவ்வொரு கோடுகளுக்கிடையேயான வண்ண வேறுபாடுகளையும் அவரால் அங்கிருந்து பார்க்க முடிவதில்லை. உன்னால், இவ்வுலகில் இரசிக்க முடிந்த ஒவியங்களும், காட்சிகளும், இசையும், நடனமும், உன்னால் இங்கு பார்க்க முடிந்த, கேட்க முடிந்த பிறப்பும் இறப்பும், சண்டையும் சமாதானமும் அவரால் ஒரு சிறு உருண்டையாத்தான் பார்க்க முடிகிறது.

இந்த எண்ணங்கள், உன்னை ஒரு முக்கிய கர்த்தாவாக உணர வைக்கிறது. விண்ணிலிருந்து, கீழே பார்க்கும் போது, நீ வாழும் பூமி உனக்குத் தெரிகிறது. அங்கு உன்னைப் போன்ற மனிதர்கள் வாழ்வது உனக்குத் தெரிகிறது. எப்படியோ, நீ அந்த மனிதர்களின் ஒட்டு மொத்தமாய், ஒரே பிரதிநிதியாய் இருப்பதாய் ஒரு பொறுப்புணர்வு உனக்குள் எழுகிறது. இந்த மகத்தான வாழ்க்கையின் ஒரு சிறிய அங்கமாய் அங்கு அமர்ந்திருப்பதாய் உனக்குத் தோன்றுகிறது. அங்கே முக்கிய ஸ்தானத்தில் இருக்கும் நீ, உன்னுடைய இந்த அனுபவத்தை எப்படியாவது, இந்த பூமியில் வாழும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இது உனக்கு மிக முக்கிய பொறுப்பாக அமைந்திருக்கிறது. ஏனென்றால், இதுதான், உனக்கும் இந்த உலகிற்கும் உள்ள உறவைப் பற்றி எடுத்துக் காட்டுவதாய் அமைந்திருக்கிறது.

Thinnai 2000 January 30

திண்ணை

Series Navigation

author

பாரி பூபாலன்

பாரி பூபாலன்

Similar Posts