மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

க்ருஷாங்கினி


“குருவே சரணம்” என்னும் தலைப்பில் ஒரு இசை நூல் சதுரம் பதிப்பகம் மூலம் கொணர்ந்திருக்கிறேன். 19 கர்நாடக இசைக் கலைஞர்களின் நேர்காணல்களை எழுத்தாக்கம் செய்து தொகுத்திருக்கிரேன். இம்மாதம் 20ஆம் தேதி தாம்பரம் மியூசிக் கிளப் அதை தாம்பரத்தில் வெளியிடுகிறது.

மிருதங்க வித்வான் திரு T.K.மூர்த்தியின் நேர்காணலை இங்கு இணைத்திருக்கிறேன்.

க்ருஷாங்கினி
நூல் பெறவிரும்புவோர்
சதுரம் பதிப்பகம்
#34,சிட்லபாக்கம் 2ஆம் பிரதான சாலை,
தாம்பரம் சானடோரியம், சென்னை-600 047 முகவரியை தொடர்புகொள்ளலாம்
P.n. 2223 1879


T.K.மூர்த்தி

எனது வம்சமும் அதில் எனது இடமும்

எனது சொந்த ஊர் கன்யாகுமரிக்குப் பக்கத்தில் உள்ள மஹாதானபுரம். எங்கள் அப்பாவின் தாத்தா தாணு பாகவதர். என் தாத்தா சுப்ரமண்ய பாகவதர். ஆனால் அவரை முத்து பாகவதர் என்று கூப்பிடுவார்கள். என் அப்பா தாணு பாகவதர். என் பெயர் மஹாதானபுரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர். நான் பாடுவேன். நாங்கள் கோவிலில் பாடுவதற்காக திருவனந்த புரம் ராஜா எங்களுக்கு வீடு, நிலம், தோப்பு என சகலவிதமான சொத்துக் களும்அளித்திருந்தார். அப்போது அரண்மனை திருவனந்தபுரத்தில் கிடையாது. பத்மநாபபுரத்தில் இருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து, கன்யாகுமரி போகும் வழியில் தக்கலையில் இறங்கிச் செல்ல வேண்டும். அங்குதான் அரண்மனை இருந்தது. எங்களுக்கு சன்னதித் தெருவில் வீடு. கோயிலில் குடிகொண்டிருந்த ஈஸ்வரனின் பெயர் ஆனந்தேஸ்வரர். ஈஸ்வரியின் பெயர் ஆனந்தேஸ்வரி. அதுதான் என் அம்மாவின் ஊர். எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி பத்மனாபபுரம் நீலகண்ட சிவனின் வீடு. அவர் பெரிய ஞானி. நிறைய அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் என்னுடைய உறவு என்றும் சொல்வார்கள். நாட்டியத்தில் சொல்லப்படும் தஞ்சை நால்வரில் ஒருவரான வடிவேலு அந்த ஊரில்தான் வசித்துவந்தார். அவரோடு கோமள வல்லி, ஆனந்தவல்லி இருவருக்கும் கூடத் தனித்தனி வீடு கொடுத்திருந்தார் ராஜா. வடிவேலுவுக்கும் தனியாக வீடு உண்டு. சுவாதித்திருநாள் பத்மநாப புரத்தில்தான் இருந்தார். அதன் பிறகு வெகுநாட்கள் கழித்துத் தான் திருவனந்த புரத்தில் வசித்தார். அப்போதெல்லாம் திருவனந்தபுரத்தில் அரண்மனை கிடையாது. தெற்குத் தெருவில் வேறு ஒரு அரண்மனை இருந்தது.

எனது அப்பா, அம்மா இருவருமே பாடுவார்கள். நான் சின்னக் குழந்தையாக இருக்கும் போதே பாடுவேன். அப்பா சொல்லிக் கொடுப்பார். நீலகண்டசிவனின் கீர்த்தனைகளை அம்மா பாடுவார். ஒருநாள், நான் என் அம்மாவிடம் மிருதங்கம் வாங்கிக் கொடுக்கும்படி கேட்டேன். அந்தக் காலத்தில் ஒரு மிருதங்கம் மூன்று ரூபாய். எனது பெரிய அண்ணா கோபால கிருஷ்ணன் மிருதங்கம் வாசிப்பார். என் அம்மா எனக்கு மிருதங்கம் வாங்கித் தந்தார். அண்ணாவின் வாசிப்பைக் கேட்டு அது போலவே வாசித்துப் பழகினேன். தனியாக நான் அதைப் பயிற்சி செய்வேன். எனக்கு அப்போது குரு என்று தனியாக யாரும் கிடையாது. ஆனால் நான் எனது எட்டாவது வயது முதல் கச்சேரிகளுக்கு வாசிக்க ஆரம்பித்தேன். ஹரிகதா, கால§க்ஷபத் திற்கும் வாசிப்பேன்.

அருகில் குரு, ஆனால் பயம்

எனக்குத் தஞ்சாவூர் வைத்தியநாத அய்யரிடம் மிருதங்கம் சொல்லிக்க வேண்டும் என்று ஆசை நிறைய உண்டு. அவர் எங்கெல்லாம் கச்சேரிக்கு வாசிக்கிறாரோ அங்கெல்லாம் தவறாமல் சென்று அவரின் வாசிப்பை உன்னிப்பாக கவனிப்பேன். அந்தக்காலத்தில் சுசீந்திரம், எர்ணாகுளம் போன்ற இடங்களில் கச்சேரிகள் நடக்கும், அங்கெல்லாம் அவர் வாசிக்க வருவார். அருகில் சென்று கற்றுக் கொடுங்கள் என்று கேட்கப் போவேன். ஆனால் பயமாக இருக்கும். கேட்காமல் வீட்டிற்கு ஓடி வந்து விடுவேன்.

எனக்கு அப்போது வயது ஒன்பது. ஒரு சமயம் ஸ்ரீராம நவமி உற்சவம். அவர் கச்சேரிக்கு வாசித்து முடித்த பின், நான் ஹரிகதாவுக்கு வாசிக்க இருந்தேன். அவர் என்னிடம் ‘நீ வாசிக்கப் போகிறாயா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன். அப்போது அங்கு கச்சேரி செய்தவர்கள் உமையாள்புரம் கல்யாணராமன் பாட்டு, சி.டி சங்கர அய்யர் பிடில், எனது குரு வைத்யநாத அய்யர் மிருதங்கம். அந்த உற்சவத்தை நடத்தியவர், திருவாங்கூர் சகோதரர் களில் ஒருவரான நாராயணய்யர். பிற்காலத்தில் இந்த நாராயண அய்யரின் மகளைத்தான் நான் திருமணம் செய்து கொண்டேன். அவர்கள் எல்லோரும் அடுத்து வந்த எங்களின் கச்சேரியைக் கேட்டார்கள். கச்சேரியில் எனதுகுரு என்னைத் தனி வாசிக்கச் சொன்னார். தனி ஆவர்த்தனம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு என்ன தெரியுமோ அதை வசித்தேன். கச்சேரி முடிந்தவுடன், நாராயண அய்யர் ஒரு பட்டு சால்வையும், என் குருநாதர் தஞ்சாவூர் வைத்தியநாத அய்யர் ஓரு பட்டு சால்வையும் போர்த்திப் பாராட்டினார்கள். குரு என்னிடம் ‘நான் உனக்குக் கற்றுத் தருகிறேன், என்னுடன் வந்து விடுகிறாயா?’ என்று கேட்டார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தானே ரொம்ப நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்? என் அப்பா அவரிடம், ‘உங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை அவனுக்கு’ என்றார். ‘என்னை எப்படித் தெரியும் உனக்கு?’ என்றார். அப்பா, நான் கச்சேரிகளுக்குச் சென்று கேட்டுவிட்டு, அவரிடம் பேச பயந்து திரும்பி விடுவதைக் கூறினார்.

குருவே தந்தையுமாகிறார்

மறுநாள் தஞ்சாவூர் வைத்தியநாத அய்யர் என் வீட்டிற்கு வந்தார். என் அப்பா விடம், ‘எனக்குக் குழந்தைகள் இல்லை. எனவே இவனை எனக்குத் தத்துக் கொடுத்து விடுங்கள்’ என்றார். அப்பா சற்று யோசித்துவிட்டு ‘சரி’ என்று கூறி விட்டார். ஆனாலும் ‘அவனின் அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு சொல்லி விடுகிறேன்’ என்றார். அம்மாவிடம் சம்மதம் பெறுவதற்காக சென்று கேட்டார். ஆனால், அம்மா சரி என்றும் கூறாமல், வேண்டாம் என்றும் கூறாமல் ‘பகவான் என்ன நினைத்துக் கொண்டிருக் கிறாரோ?’ என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டு விட்டார். என்னிடம் அம்மாவுக்கு ரொம்பப் பிரியம். என் குருநாதர் ஊர் திரும்பி விட்டார்.

ஒரு நாலைந்து மாதத்தில் என் அம்மா இறந்து விட்டார். என்னை கவனித்துக்கொள்ள யாருமில்லை என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு நாள் நான் என் அப்பாவிடம் போய் ‘அப்பா, என்னை தஞ்சாவூர் கொண்டு விடுங்கள், நான் அங்கு மிருதங்கம் கற்றுக் கொள் கிறேன்’ என்றேன். அப்பாவோ சரியென்றும் சொல்லவில்லை. மறுக்கவு மில்லை. பேசாமல் இருந்து விட்டார். நான் நேரே அரண்மனைக்குச் சென்றேன். எங்களிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள் சமஸ்தானக்காரர்கள். எங்களுக்கு திருவனந்தபுரத்திலும் வீடு, நிலம் எல்லாமே உண்டு. தினந்தோறும் எங்களுக்கு அரண்மனையிலிருந்து சாப்பாடு வந்துவிடும். வாரா வாரம் அரிசியும் வந்து விடும். இது தவிர, சம்பளமும் உண்டு. எந்தக் குறையும் கிடையாது. எங்களை அரண்மனை வித்வான்கள் என்று சொல்ல மாட்டார்கள். ‘முள்ளு முட்டு பாகவதாள்’ என்று சொல்வார்கள். நான் பாலஸில் பாடியும் இருக்கிறேன். மிருதங்கமும் வாசித்திருக்கிறேன். மிகவும் நெருக்கமானவர்கள் அவர்கள். நான் அரண்மனைக்கு சென்று, ‘தஞ்சாவூர் சென்று மிருதங்கம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு ஏதாவது கொடுங்கள்’ என்று கேட்டேன். அவர்கள் என்னிடம் ‘என்ன எதிர்பார்க்கிறாய், உனக்கு என்ன வேண்டும்?’ என்றனர். நானோ துணிவாக ‘உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்’ என்றேன். அவர்கள் என் அப்பாவைக் கூப்பிட்டு, 200 ரூபாய் பணம் கொடுத்தார்கள். அப்போது எனக்கு வயது பத்து. அது 1934 ஆம் வருடம். நான் தஞ்சாவூர் கிளம்பிச் சென்று விட்டேன்.

நான் தஞ்சாவூரில் வைத்தியநாத அய்யரிடம் மிருதங்கம் கற்றுக் கொள்ளும் போது என்னுடன் கற்றுக் கொண்டவர்கள் பலர். பாலக்காட்டு மணிஅய்யர் நான் அங்கு செல்வதற்கு முன்பிருந்தே அங்கிருக்கிறார், டி.எம். தியாகராஜனின் தம்பி, மைலாட்டூர் ராமச்சந்திரன், உமையாள்புரம் கோதண்ட ராமைய்யரின் தம்பி கணேசய்யர் போன்றவர் குறிப்பிட்ட சிலர். இன்னமும் சிலரும் கற்றுக் கொண்டனர்.

குருவின் அன்பு-அப்பாவின் அன்பு

எங்கள் குருநாதரான தஞ்சாவூர் வைத்தியநாத அய்யருக்கு என்னிடமும், பாலக்காட்டு மணிஅய்யரிடமும் மிகவும் பிரியம். நான் தஞ்சாவூர் சென்று இறங்கியவுடன், அவர், ‘மணி, நான் இந்தப் பையனை சுவீகாரம் எடுத்துக் கொள்ளப் போகிறேன். நீ என்ன சொல்கிறாய்?’ என்றார் மணி அய்யர் ‘பேஷாகச் செய்யுங்கள்’ என்றார். ஆனால் என்னை சுவீகாரம் எடுத்துக் கொள்வது என்பது ஏனோ கைவரப் பெறவில்லை. எனவே குருநாதர் ‘சுவீகாரமில்லை என்றால் என்ன? நான்தான் அவனை வளர்க்கப் போகிறேன்’ என்றார். என்னை அவர்தான் வளர்த்தார் மகனைப் போல. நான் அவரிடம் போன பத்து நாட்களுக்குள்ளேயே எனக்கு காதுக்கு வைரக் கடுக்கண், வைர மோதிரம், தங்கச் சங்கிலி கழுத்துக்கு லாங் செயின், ஒரு கைக்குக் காப்பு, மற்றொரு கைக்கு வாட்ச் எல்லாம் அணிவித்து அழகு பார்த்தார். எனக்கு எப்போதும் ஜரிகை வேட்டிகள்தான் சட்டைகள்தான். அம்மாவின் மடியில் தலை வைத்துக்கொண்டு அப்பாவின் அருகில்தான் நான் தூங்குவேன். யார் அம்மா? என் குருநாதரின் மனைவி மீனாட்சி அம்மாள் தான். எனக்கு வெல்வெட் மெத்தை, வெல்வெட் தலைகாணி. (இதன் பிறகு அனைத்து இடங்களிலும் அப்பா, அம்மா என்று குறிப்பிடுவது குருநாதரும் அவரின் மனைவியுமே ஆகும்.) நான் எங்காவது வெளியூர் சென்றால் அவரிடம் ‘உங்கள் மகன் எங்கே?’ என்றுதான் எல்லோரும் விசாரிப்பார்கள். அப்பாவும் ‘கச்சேரிக்குப் போயிருக்கிறான்.’ என்பார். எப் போதும் எனக்குப் பிடித்த உணவு வகைகள்தான் வீட்டில் தயாராகும். இருவரும் என்மீது அன்பைப் பொழிந்தார்கள்.

பாட்டிற்கு வாசிக்கப் பயிற்சி

நான் கற்றுக்கொண்டபோது என் குருநாதரிடம் பதினெட்டுப்பேர் கற்றுக் கொண்டிருந்தனர். அவருக்குக் குழந்தைகள் இல்லாததால், எல்லோர் மீதும் மிகப் பிரியமாக இருந்தார். தனது ஜாதியைச் சேர்ந்த சிஷ்யர்களுக்கு அம்மாவே சமைத்துப் போடுவார். அவர் கையால் பரிமாறுவார். யார் வயிறும் வாடக் கூடாது. வீட்டில் அமர்த்தி உணவிட முடியாத மற்ற சிஷ்யர்களுக்கு வெளியில் உணவுக்கு ஏற்பாடு செய்திருப்பார். அனைவருக்கும் அவரே பணம் கட்டிவிடுவார். எனது குருநாதருக்கு நிறைய சொத்து உண்டு. அவர் அக் காலத்தில் மஹாவைத்யநாத சிவன் என்ற வித்வானின் பரம்பரையில் வந்தவர். 72 மேளகர்த்தா ராகங்களுக்கு சக்ரம் என்று இப்போது பாடுகிறார்களே அது அவர் வடிவமைத்ததுதான். அவர் இவருடைய அத்தையின் கணவர்.

முதலில் எனக்கு முறையாகப் பாடம் ஆரம்பிக்கவில்லை. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும். இது நடந்தது 1934 இல். தாளத்திற்கும் பாட்டிற்கும் வாசிக்க மட்டும் கற்றுக் கொடுத்தார். எனது பயிற்சிக்காக பாடிய வர்கள், டி.வி.சுப்ரமணிம், டி.எம்.தியாகராஜன், தஞ்சாவூர் சங்கரய்யரின் குருநாதர் சாத்தூர் கிருஷ்ணய்யங்கார், இது தவிர, இன்னமும் சிலரும் பாடி உள்ளனர். என்னால் டி.எம்.தியாகராஜனை மறக்கவே முடியாது. நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்த புதிதில், அலுப்பில்லாமல் ஒரு கீர்த்தனையை பதினைந்து முறை கூடப் பாடியிருக்கிறார். நான் பாட்டுக் கச்சேரிகளுக்கு நன்றாக வாசிக்கிறேனென்று பெயர் உண்டு. என்னைப் பற்றிக் கூறும் பெருமைகள் அனைத்தும் டி.எம்.தியாகராஜனையே சேரும். அவரின் அப்பா, எனக்கு கோவிலில் வாசிக்கும் முறை பற்றிச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். விநாயகர், சுப்ரமணியர், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், அம்பாள், ஈஸ்வரன் ஆகியோர் மீது கவுத்துவங்கள் உண்டு. இந்தக் கவுத்துவங்கள் எல்லாமே நான் தியாகராஜனின அப்பா மஹாலிங்கம் பிள்ளையிடம்தான் பயின்றேன். நவசக்தி தாளத்திற்கு வாசிக்கவும் அவர்தான் சொல்லிக் கொடுத்தார். இது அவ்வளவையும் என் மகன் ஜெயராமும் கற்றுக் கொண்டு இருக்கிறான். நான் அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அவனுக்கு கர்நாடக சங்கீதம்தான் கற்றுக் கொடுத்தது. டி.எம்.தியாகராஜன்தான் கற்றுக் கொடுத்தார். B.ராஜமய்யரிடமும் பயின்றான். அதன் பிறகு கல்லூரியில் படித் தான். தற்போது ‘ஆல் இண்டியா ரேடியோ’ வில் மெல்லிசை பிரிவில் வேலை பார்க்கிறான்.

முதல் வாசிப்பும் தொடர் நிகழ்ச்சிகளும்

1934 இல் கோயமுத்தூரில் முசிறி சுப்ரமணிய அய்யர் துக்காராம் வேடத்தில் நடித்தார். என் அப்பாவும் அவரும் நண்பர்கள். அப்பா அம்மாவுடன் நானும் கோயமுத்தூர் சென்று இருந்தேன். முசிறி சுப்ரமணிய அய்யரின் குரு சபேசய்யர், கரூர் சின்னச்சாமி அய்யர் ஆகியோர் அங்கிருந் தனர். அவர்கள் இருவரும் சினிமாவில் வாசிப்பவர்கள். பூதலூர் கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள் கோட்டு வாத்யம். இவைகள் கச்சேரியாக நடைபெற்றது. ஒரு நாள் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் வீட்டுத் திருமணம். அவர் வீட்டுத் திருமணத்திற்குக் கச்சேரிக்காக அனைவரும் கூடி இருக்கிறோம். அவர் கொச்சி அரண்மனையின் திவானாக இருந்தார். சபேச அய்யரும், சின்னசாமி அய்யரும் என்னை வாசிக்கும்படி சொன்னார்கள். அப்பாவும் என்னை வாசிக்கும்படி சொன்னார். ஷண்முகம் செட்டியார் வீட்டுக் கல்யாணத்தில் தான் எனது முதல் வாசிப்பு கச்சேரிக்கு ஆரம்பித்தது. அப்பாவும் குருநாதரு மான தஞ்சாவூர் வைத்தியநாத அய்யருக்கு நான் முதற் கச்சேரி செய்யும் போது ஏதாவது தட்சிணையாகக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. அரங்கேற்றமாயிற்றே? நான், முசிறி சுப்ரமணிய அய்யரிடம் சென்று ‘மாமா, எனக்கு கொஞ்சம் பண உதவி செய்யுங்கள், நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் திருப்பிக் கொடுத்துவிடுவேன். அப்பாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இருக்கிறது’ என்று கேட்டேன். அவர் என்னைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போய், எனக்கு வேட்டி, சட்டை, அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு வேட்டி, சட்டை எல்லாம் எடுத்துக் கொடுத் தார். எல்லாவற்றயும் அப்பாவிடம் கொடுத்து ஆசி வாங்கிகொண்டேன். பிறகு தான் முதல் கச்சேரி வாசித்தேன். பின்னால் எவ்வளவோ பெயரும் புகழும் கிடைத்தாலும்கூட, குருவின் ஆசீர்வாதத்தால்தானே நாம் அத்தனையும் அனு பவிக்கிறோம்? என்ற எண்ணம் எனக்கு. அடுத்து ஷண்முகம் செட்டியார் எனக்கு நாலு பவுனில் மெடல் கொடுத்தார். என் அப்பாவிடம் சிட்சை என்று சொல்லிக்கொடுத்து, கற்றுக்கொண்டு நான் வாசிக்கவில்லை.

நாங்கள் திருவனந்தபுரத்திலிருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். திருவனந்தபுரத்தில் ஒரு கச்சேரி நடைபெற உள்ளது. லால்குடி ஜெய ராமனின் பெரியப்பா கந்தசாமி அய்யர் பிடில், மதுரை கேசவ பாகவதர் மிருதங்கம். மதுரையில் அவர்களை சந்தித்தோம். அவர்கள் என்னை யார் என்று விசாரித்தார்கள். ‘அவன் என் பிள்ளை’ என்றார் என் அப்பா. ‘மிருதங்கம் வாசிப்பானா?’ என்று கேட்க ‘ஆம்’ என்றார் அப்பா. ‘நாளை திருவனந்த புரத்தில் கச்சேரிக்கு அவன் வாசிக்கட்டும்’ என்று சொன்னார்கள். என் அண்ணா திருவனந்தபுரத்தில் இருந்ததால், அவரிடம் மிருதங்கம் ஏற்பாடு செய்யச் சொல்லி, எடுத்துவரச் செய்து அன்றைக்கு வாசித்தேன். நாலுகளை சவுக்கம் பல்லவி பாடினார். அதற்கு நான் வாசித்தேன்.

அடுத்த கச்சேரி, மைசூர் அரண்மனையில் மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர் பாட்டு, சௌடையா வயலின், என் அப்பா மிருதங்கம். அங்கிருந்த வித்யா பாகவதர் என்னையும் வாசிக்கும்படி சொன்னார். அப்பாவின் அனு மதியுடன் வாசித்தேன். நவராத்திரி விழா அது. ஜெயசாமராஜ உடையாரின் பெரியப்பா கிருஷ்ணராஜ உடையார் காலம் அது. மறுநாள் என் வாசிப்பைத் தனியாக கேட்க ஆசைப்பட்டார் அவர். மழவராய சுப்பராம பாகவதர் பாட்டு, நான் மிருதங்கம் வாசித்தேன். எனக்கு மரியாதை செய்வதற்காக அரண் மனையில் எனக்கு இரண்டு எட்டு முழம் ஜரிகை வேட்டி, இரண்டு அங்க வஸ்திரம், இரண்டு ஜரிகைக் ‘கோட்’டிற்கு உண்டான துணி, இரண்டு சால்வை என ராஜாவின் உடையைப் போலவே தைப்பதற்கு வேண்டிய அனைத்தும் கொடுத்தனர். அத்துடன் 1000 ரூபாய் பணமும் கொடுத்தனர். நினைவில் வைத்து கொள்ளுங்கள் இது நடந்தது 1934 இல். எனக்கு வயது பத்து. எவ்வளவு பெரிய மரியாதை? அதன் பிறகு நாங்கள் தஞ்சாவூர் திரும்பி விட்டோம்.

அடுத்ததாக, கும்பகோணத்தில் ராஜமாணிக்கம் பிள்ளையின் வீட்டுத் திருமணம். அவரின் மூத்த பெண்ணுக்குத்தான் திருமணம். அங்கு காரைக்குடி சாம்பசிவ அய்யரும் அவரின் அண்ணாவுமாக வீணை வாசித்தார்கள். தாட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். அடுத்த நாள் செம்பை வைத்தியநாத அய்யரின் பாட்டு, சௌடையா பிடில், பாலக்காட்டு மணி அய்யர் மிருதங்கம். தட்சிணாமூர்த்தி பிள்ளை கஞ்சிரா. நான் கச்சேரி கேட்பதற்காக அங்கு போனேன். அந்த கஞ்சிரா கேட்க வேண்டும் என்று சென்றேன். அடுத்த நாள், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாட்டு, செம்மங்குடி நாராயணசாமி பிடில், என் அப்பாவுடன் நான் மிருதங்கம். 1935 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சி நடந்தது.

1937 ஆம் வருடம் தட்சிணாமூர்த்தி பிள்ளை இறந்துவிட்டார். அவர் போல கஞ்சிரா வாசிக்க யாரும் இதுவரை கிடையாது. அவர் தரத்திற்கு வாசிப்பவர் என்றால் பாலக்காட்டு மணி அய்யரை மட்டுமே சொல்லலாம். மெட்ராஸில் ஆர்.ஆர்.சபாவில் முசிறி சுப்ரமணிய அய்யர் பாட்டு, பாப்பா வெங்கடராம அய்யர் பிடில், நான் மிருதங்கம், மணி அய்யர் கஞ்சிரா. அதன் விளம்பரம் இப்படி வந்தது, ‘முசிறி பாட்டு, பாப்பா பிடில், மணி கஞ்சிரா, மூர்த்தி மிருதங்கம்’. அதுவரை எனது பெயர் கிருஷ்ணமூர்த்தி என்றுதான் இருந்தது. அன்று முதல் மூர்த்தி ஆயிற்று. முசிறி சார்தான் அப்படி வைத்தார். அந்தப் பெயருடன் நான் சுகமாக, சாந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக் கிறேன். பாலக்காட்டு மணி அய்யர் கஞ்சிரா, நான் மிருதங்கம்; மணி அய்யர் நான் இருவருமே மிருதங்கம், பழநி சுப்ரமணிய பிள்ளை கஞ்சிரா என்று பல காம்பினேஷனில் நான் வாசித்திருக்கிறேன்.

சபேச அய்யர், டைகர் வரதாச்சாரியார், சாத்தூர் கிருஷ்ணய்யங்கார், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் செம்மங்குடி சீனிவாச அய்யர், முசிறி சுப்ரமணிய அய்யர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற பலருக்கும் நான் வாசித்திருக்கிறேன். பதினைந்து, பதினாறு வயதிலேயே நான் நல்ல பெயர் எடுத்துவிட்டேன். இவை எல்லாமே அந்த வயதில் நடந்த நிகழ்ச்சிகள் தான்.

எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மியுடன் எனது வாசிப்பு இணைந்த கதை

தஞ்சாவூரில் ஒரு நாள், நானும் பாலகாட்டு மணி ஐயரும் குளித்துவிட்டு வீட்டிற்கு வந்தோம். எங்கள் வீட்டிற்கு எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாள் வந்திருக்கிறார். அப்பா என்னைக் காட்டி ‘இது யார் தெரியுமா?’ என் வினவினார். எம்.எஸ்.அவர்கள் ‘தெரியாது’ என்றார். ‘இவன்தான் மூர்த்தி. மிருதங்கம் வாசிக்கிறான்,’ என்றவுடன் அந்த அம்மா ‘நான் கேள்விப்பட்டு இருக்கிறேனே. ஆனால் பார்த்ததில்லை’ என்றார். ‘இன்று மாலை உங்கள் வீட்டில் பாடுகிறேன் மூர்த்தியை மிருதங்கம் வாசிக்கச் சொல்லுங்கள்’ என்றார். அதன் பிறகு நான் மெட்ராஸ¤க்கு வந்து, எம்.எஸ்.அம்மாவுக்கு நிறையக் கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்தேன். தொடர்ந்து 45 வருடங்கள் அவரின் கச்சேரிகளுக்கு நான் வாசித்திருக்கிறேன். அவரின் கடைசிக் கச்சேரிக்குக்கூட நான்தான் வாசித்தேன். வயலின் வாசிப்பவர் மாறியிருக் கிறார்கள், ஆனால் மிருதங்கம் நான் மட்டுமே வாசித்தேன். என்னிடம் அளவு கடந்த பாசம் உண்டு அவருக்கு. மாறாத அன்பும் கொண்டிருந்தார். அவரை விடவும், அவர் கணவர் சதாசிவத்திற்கு அசாத்யப் பிரியம் என்மீது. எம்.எஸ்.அவர்கள் ‘சாவித்திரி’ யில் நாரதராக நடித்த போதும், ‘சகுந்தலை’ ‘மீரா’ ஆகிய படங்களில் நடித்த போதும் நான் உடன் இருந்தேன். இந்தியா முழுவதும் அவர்களுடன் சென்றிருக்கிறேன். உலகம் முழுவதும் அவர்களுடன் சென்றேன். நான் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் அவருக்கு வாசித்திருக் கிறேன். எம்.எஸ்.அம்மா மாதிரி ஞானத்துடன் பாடுபவர்கள் குறைவு. அவருக்கு மிக நன்றாக மிருதங்கம் வாசிக்கவும் தெரியும். எனவே தாளம் அறிந்து தாளம் போடும் சிலரில் அவரும் ஒருவர். பெண் பாடகர்களில் அவர் மட்டுமே என்று நான் தைரியமாய்க் கூறவும் முடியும். தெலுங்கு, கன்னடம் ஹிந்தி, மலையாளம், பெங்காலி என இந்திய மொழிகள் அனைத்திலும் அந்தந்த உச்சரிப்புக் கெடாமல் பாடக்கூடியவர், யுனைடெட் நேஷனில் ஆங்கிலத்திலும் பாடினார்.

எம்.எஸ். அவர்கள் மிகவும் சாது. மனதில் கபடு சூது கிடையாது. அவர் உலக அளவில் பெயரும், புகழும் பெற்றிருக்கிறார் என்றால், அதற்கு முழுக் காரணமும் அவர் கணவர் சதாசிவம்தான். அவரை எவ்வளவு பாராட்டி னாலும் தகும். அதனால்தான் பாடகியாக அவர் உலகம் முழுவதும் அறியப் பெற்றார். ஒரு சகோதரனைப் போல நினைத்து என்னிடம் பழகுவார். அவருக்கு என்று தனி வங்கிக் கணக்குக்கூட கிடையாது.

அந்தக்காலத்தில் பக்கவாத்யக்காரர்கள் பெண்களுக்கு வாசிக்க மாட்டார்கள். நான்தான் முதலில் வாசித்தேன். எம்.எஸ்.அம்மாவிற்கு வாசித் தேன். டி.கே.பட்டம்மாளுக்கும், எம்.எல்.வசந்தகுமாரிகும் கூட வாசித்திருக் கிறேன். பாலக்காட்டு மணி அய்யர் பெண்களுக்கு வாசிக்க மாட்டார். டி.கே. பட்டம்மாளின் சம்பந்தி ஆனபிறகுதான் அவருக்கு வாசிக்க ஆரம்பித்தார். என் குருநாதர் சொல்லித்தான் நான் வாசித்தேன். என்குருநாதரின் சொல்லை நான் தட்ட மாட்டேன். மணி அய்யர் கூட இது வேண்டாம் என்றுதான் கூறினார். பிற் காலத்தில் அவர் டி.கே.பட்டம்மாள் அவர்களுக்கு வாசிக்கும்போது ஒரு கச்சேரிக்கு நான் போயிருந்தேன். என்னை மணி அய்யர் ஒரு மாதிரிப் பார்த்தார். நான் அவரிடம் வேடிக்கையாக ‘நான் கச்சேரி பார்க்க வந்திருக் கிறேன்’ என்றேன். அவரும் சரி என்றார். பிறகு ‘பார்த்துவிட்டேன், நான் வீட்டிற்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நான் பெண்களுக்கு வாசிக்கக் கூடாது என்றோ, பெண்கள் தாழ்வு என்றோ, வாசிப்பது தப்பு என்றோ கூற வில்லை. ஆனால் பெண்களுக்கு வாசிப்பதில் சில சிக்கல்கள் உண்டு. ஆண் களைப்போல சங்கீதத்தில் சிலவற்றைப் பெண்களால் செய்ய இயலாது. கொன்னக்கோல் என்று ஒருவகை உண்டு அதில் இதுவரை பெண்கள் ஈடுபட முடியவில்லை. ஏனெனில் அந்த சொற்களை அடிவயிற்றிலிருந்து, வேகமாக, பலமாக சொல்ல வேண்டும். அடி வயிற்றிருந்து எழும் சொற்கள் பெண்களின் மிருதுவான குரல்களில் சாத்யமில்லை. அவர்களின் சொற்கள் நளினமாகவும் மென்மையாகவும் விழும். பாட்டு, வீணை, புல்லாங்குழல் போன்றவற்றுடன் தங்களைப் பெண்கள் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் தவில் போன்றவற்றுடன் இணைப்பது சிரமம். மேலும் கச்சேரிகள் போகும் பாதை நமக்குப் புரியும் அவர்களுக்கு ஓரளவுக்கு மேல் விரிவுபடுத்த இயலாது. ஒரு சில பெண்கள் பக்கவாத்யக் காரர்களை மதிக்காமலும் இருக்கிறார்கள். ஆனால் நான் தைரியமாக இதையும் குறிப்பிட வேண்டும், எம்.எஸ்.அம்மா மட்டுமே பக்கவாத்யக்காரர்களை மதித்தார். இதை நான் பலமாகவும் கூறுவேன். சரியாக நடத்தினால், ஆண்களானாலும், பெண்களானாலும் ஒன்றுதான்.

நான் முதன்முதலில், எடின்பரோ பெஸ்டிவலுக்கு எம்.எஸ். அம்மாவுடன் வெளிநாடு சென்றேன். இதை ஏற்பாடு செய்து கொடுத்தவர், பண்டிட் ஜவஹர்லால் நேருதான். நம் சங்கீதம் அங்கு எடுபடுமா என்று சந்தேஹித்தேன். நிறைய மக்கள் வெளிநாட்டவர்களாகவே இருந்த அந்தக் கச்சேரியை எல்லோரும் மிகவும் ரசித்துப் பாராட்டினார்கள். என் எண்ணம் தவறு என்பதை உணர்ந்தேன். என்னுடன் அல்லா ராக்கா தப்லா வசித்தார். ஆர்.வெங்கடராமன் அவர்கள் அங்கு வந்திருந்து சபையில் அமர்ந்து கச்சேரியை ரசித்தார். அதே போல யுனைடெட் நேஷனிலும் எம்.எஸ். அம்மாவுடன் கச்சேரி சிறப்பாக நடந்தது.

(தொடர்ச்சி அடுத்த பக்கம்)

Series Navigation

author

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி

Similar Posts