தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

கோவிந்த்


குழந்தைகள் உலகத்தை குழந்தைகள், பெரியவர் என்ற ஒரு கோணப் பார்வையின்றி, பொதுக் கோணத்தில் சொல்லப்பட்ட கதை…
வகுப்பு என்றாலே, நீண்ட குச்சி, சத்தமுடனும், அழுத்தமுடனும் திணிக்கப்படும் பாடங்கள்…
நாளைய மருத்துவர்கள், பொறியாளர்களுக்கான நிர்பந்த உந்தல்கள்….
எழுதப்படுதலை…. தட்டச்சு, கணணி மாதிரி அச்சுபோல் எழுத நிர்பந்திக்கும் சூழல்….
வாத்தி சொன்னதை அப்படியே வாந்தி எடுத்தால் கைதட்டு இல்லையேல், புறங்கையில் அடிஸ்கேல் கொண்டு அடிகள்….
இப்படியான சூழலில், ஒரு மாணவனுக்கு மட்டும் எழுத்துக்கள் நடனங்கள் ஆடுகின்றன…
3 + 6 = ? என்ற கேள்விக்கு விடைகான, விண்ணில் ஒரு செயற்கைத் தட்டில் பறந்து அங்கு கோளாக சுற்றும் 3ஐ , தூண்டிலில் கோர்த்து வேகமாக கோள் 6-ல் மோதினால், 6சுக்கு நூறாக 3 மட்டும் மிஞ்சுகிறது….
அவனது விடைத்தாளில், 3+6= 3 பதிவாகிறது…
அடியும், ” 0 ” முட்டையும் தான் கிடைக்கிறது……
மக்கு என்றும் முட்டாள் என்றும் துரத்தப்படுகிறான்…
வகுப்பில் வாத்தியார் திட்டி அடிக்கிறார்…
வீட்டில் அம்மாவின் அரவணைப்பையும் மீறி அப்பாவின் நிர்பந்த கண்டிப்பு துரத்துகிறது…
அண்ணணோ நன்று எழுதி படிப்பவன்…..
இந்த அடங்காத பையனுக்கு “போர்டிங்” பள்ளி தான் லாயக்கு என விடப்படுகிறான்.
அங்கும் தொடர்கிறான்….. வலிகளுடன் வாழ்வை…
இப்படியான சூழலில், தற்காலிகமாக ஒரு வாத்தியார் வருகிறார்….
10வயது சிறார்கள் வகுப்பு, வாத்தியாருக்காக எதிர்பார்ப்புடன் இருக்க, ஒரு கோமாளி டைவ் அடித்து வருகிறான்….
கோமாளிதனம் செய்கிறான்…
விலா நோக சிரிக்கிறார்கள்……
இவன் அமைதியாக இருக்கிறான்…..

இவனது வழக்கமான கோணல் கோணல் எழுத்துக்கள்…. bad என்பதை dab என்று எழுதுவது தொடர்கிறது….
ஆனால்……
மற்ற வாத்தியார் போல் அல்லாமல்….. இந்த “கேலி”யான வாத்தியாருக்கோ விஷயம் புரிகிறது…
இரவோடு இரவாக அம்மாணவனின் ஊருக்கு போகிறான்…
பெற்றோரை சந்திக்கிறான்….
அவர்கள் புலம்ப… மாணவனை திட்ட… இவனோ மாணவனின் நடவடிக்கைகள் பற்றி விசாரிக்கிறான்……
அவனுக்கு வரைவதில் ஆர்வமுண்டு என அவனது கிரையான், வாட்டர்கலர் படங்களை காண்பிக்கிறாள் அம்மா…
அதில் ஒரு “ஒரு குயர்” நோட்டில் ஒரு அம்மா, அப்பா, இரு சிறுவர்கள் கைகோர்து இருக்கும் படம் அத்தனை பக்கங்களிலும் வரைந்திருப்பதை காண்பிக்கிறார்ள்…
வாத்தியாரோ… நோட்டைப் பிடித்து அத்துனை உள்பக்கங்களையும் ஒன்றாக மூலையில் மடக்கி, “சர்ரென்று..” ஒவ்வொரு தாளாக விடுபடவைக்கிறான்…
அற்புதம்…
அம்மா, அப்பா, பெரிய சிறுவன் கைகோர்த்தது அப்படியே இருக்க….. கைகோர்த்திருந்த கடைச்சிறுவன் கைகள் விடுபட்ட…. கடைசியில் அம்மா-அப்பா-பெரிய சிறுவன் மட்டும் இருக்க…இவனைக் காணோம்…..
பெற்றேர்களுக்கு விழிகள் விரிகிறது…
கண்கள் கலங்க வாத்தியார் சொல்கிறார்…. “உங்கள் சிறுவனுக்கு இருப்பது “dyslexia” என்று,
“பயிலும் குறை” உள்ளதால் அவன் உதவாக்கரையோ.. முட்டாளோ அல்ல… சிறப்பு கவனிப்புக் கொடுக்கப்பட்டால்… அவன் சிறந்தவனாக வருவான் என்று சொல்கிறார்…..
(( மேல் விவரங்களுக்கு, ” http://en.wikipedia.org/wiki/Dyslexia ” ))
அடுத்த நாள் வகுப்பு….
பயிலும் குறையுள்ள ஒரு சிறுவனைப் பற்றி பெயர் சொல்லாமல், வாத்தியார் வகுப்பை ஆரம்பிக்கிறார்…
ஒரு சிறுவனுக்கு, ஒழுங்காவே எழுத வராது…
எழுத்துக்கள் நடனம் ஆடுவது போல் தெரியும்…
எப்போதும் கற்பனைதான்…
கணக்கு ஒழுங்காக வரவில்லை…
யாருடனமும் பேசாமல் ஒதுங்கியே இருப்பான்…..
வகுப்பு யார் என்ற எதிர்பார்ப்புடன் இருக்க…
இவனுக்கோ மனது படபடக்க விழிகள் விரிகிறது….
வாத்தியார் யாரைச் சொல்கிறார் எனப் புரிகிறது…….
ஆனால், அப்படி பில்டப் கொடுத்த வாத்தியார், தனது டேபிள் நோக்கிச் சென்று, கவிழ்த்து வைக்கப்பட்ட ஒரு பெரிய போஸ்டரை திருப்பி ,இவர் தான் அது… என வகுப்பிற்கு காண்பிக்கிறார்….
அவர், E=MC2 தந்த மகாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டின்…..
அவர் மட்டுமல்ல… தாமஸ் ஆல்வா எடிசன்…
அதுமட்டுமல்ல…
இன்னொரு படத்தைக் காண்பிக்கிறார், மாணவர்கள், “அபிஷேக் பச்சன்” என உற்சாக கூச்சலிடுகிறார்கள்…

ம்… அவருக்கும் பயிலும் குறைபாடு சிறுவயதில் இருந்தது என்கிறார்…
சிறுவனின் உலகம் படிபடியாக மாறுகிறது…….

அது ஒரு அற்புத அனுபவம்….
குடும்பத்துடன் பாருங்கள்….

பிறரையும் பார்க்கச் சொல்லுங்கள்……
முடிந்தால்
அமீர்கான்,
மும்பை
-என ஒரு கடிதம் போடுங்கள்…….

படத்தின் இணையதளம்: http://www.taarezameenpar.com/
———-
பின் குறிப்பு:
தமிழக அரசிற்கு:
தமிழில் பெயரில்லா விடினும், ஒரு மிகப் பெரிய சமூக அக்கறை, சினிமா நேர்த்தி, தயாரிப்பு, இயக்கம் , கதாநாயகன் எனும் நிலை இருந்தும், இடைவேளையுடன் வரும் பாத்திரத்தில் நடித்த மனப்பக்குவம், என்று பல அற்புதங்கள் புரிந்த இந்தப் படத்திற்கு வரிவிலக்கு தர தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.
திரைகடலோடி திரவியம் என்பது செல்வம் மட்டுமல்ல…. அறிவும் தான்… அதனால் இந்தத் திரவியம் தமிழ் நல்லுலகம் பெற இதனை தமிழிலில் டப் செய்து திரையிட்டால் வரிவிலக்கு உண்டு என ஒரு G.O வர அருள் புரியுங்கள்… முதல்வரே…

ஹாசினி / மதன்ஸ் /இருவருக்கும்:
ஒரு அற்புத சினிமா தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது…. இதயத்திற்கு மொழி தேவையில்லை என்பதை உணர்த்தும் உன்னத காவியம்… தயவு செய்து உங்கள் தராசிலும் , பார்வையிலும் எடுத்துக் கொள்ளுங்கள்
——-

அமெரிக்க சிந்தனை வட்டம் / சுஜாதா / ஞானி / சிறுபத்திரிக்கைகளுக்கு:
தயவுசெய்து உங்கள் தொடர்(பு)களில் இந்தப் படம் பற்றி தெரிவிக்கவும்…..
உலக தமிழ்ச் சங்கங்களே…..
இந்தப் படத்தைத் திரையிட்டு, ஒரு சமூக சேவைக்கு அடித்தளமிடுங்கள்… இந்தப் படம் சிலரையேனும் மாற்றும்….

—-
அமீர்கான் அவர்களுக்கு:
நன்றி.. நன்றி…….


govind.karup@gmail.com

Series Navigation

author

கோவிந்த்

கோவிந்த்

Similar Posts