பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பரிதி மையத்தில் கரும்பிண்டம் அடைபட்டுள்ளது!(Dark Matter is Trapped at the Centre of Sun)

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா


பரிதி ஒளிக்கதிர் வீசி
அண்டக் கோள்களைச் சூடாக்கி
எரித்தாலும்
உட்கருவில் காணாமல்
ஒளிந்திருப்பது
ஒரு கரும்பிண்டம் !
கருவைக் குளிர்ப்பிக்கும்
இருட் பிண்டம் !
கரும் பிண்டத்தில்
வெளியேறும் கனத் துகள்கள்
மையத்தின்
வெப்பத்தை விழுங்கி
விளிம்புக்குக் கடத்தி அனுப்பும் !
கருவிண் மீன்கள் செத்தவை
கருந்துளை உண்டாக்கும் !
உட்கருவில் உள்ள
கருப் பிண்டம்
பரிதிக்குத் தொடர்ந்து
எரிவாயு அனுப்பும் !
விளக்கு அணையா திருக்க,
ஒளிச்சுடர் வீச
வெப்பசக்தி ஊட்டி வரும் !
கருப்பிண்டம்
மையத்தில் இல்லை யெனின்
விதிப்படி இயங்குமோ
கதிரவன் ?

“கரும்பிண்டம் பரிதியின் மையத்தில் அடைபட்டுள்ளது. அதுவே பரிதியின் உட்கரு உஷ்ணத்தைக் குளிர்ப்படுத்தி வருகிறது. பிரபஞ்சப் பிண்டத்தின் 80% வீதப் பங்கைக் கரும்பிண்டமே எடுத்துக் கொண்டிருக்கிறது. கரும்பிண்டம் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் இதுவரை அது ஆய்வகத்திலோ அல்லது நேராகாவோ காணப் பட்டதில்லை ! அது மெய்யாக என்ன வென்பதற்கு மிகக் குறைந்த தகவலே நிலவுகிறது. கரும்பிண்டத்தின் இயற்கைப் பண்பாடுகளை எல்லா முறைகளிலும் நாம் உளவ வேண்டியது அவசியம். நமது சூரியனே அதைச் செய்ய ஓர் ஆய்வகத்தை நமக்குத் தரலாம்.”

டாக்டர் ஸ்டீ•பன் வெஸ்ட் (Dept of Physics at Royal, University of London)

“கரும்பிண்டத்தின் 5 கிகா எலெக்டிரான் வோல்ட் சக்தியுள்ள துகள் (5 giga-eV) (Giga-Electron Volts) புரோட்டான் அல்லது நியூட்ரானைப் போல் 5 மடங்கு கனமுள்ள கனத் துகள் ஆகும். அந்த எண்ணிக்கை பிரபஞ்சத்தில் பரவியுள்ள சாதாரண பிண்டத்தைப் போல் 5 மடங்கிருக்கும் கரும்பிண்டத்தை உறுதிப் படுத்துகிறது. அந்தக் கனத்துகள் கரும் பிண்டத்தின் சிறப்பான ஒரு பிறவியாகத் தெரிகிறது. அந்தத் துகள் கரும்பிண்டத்துக்கும், சாதாரணப் பிண்டத்துக்கும் உள்ள ஒப்பு வீதத்தைக் காட்டுகிறது.”

மாட்ஸ் •பிரான்ஸென் & சுபீர் ஸர்கார் (Mads Frandsen & Subir Sarkar, University of Oxford, London, UK.)

“கரும்பிண்டம் பரிதியின் மையத்தில் சேமிக்கப் படுவதால் முன்னறிக்கப் பட்ட நியூட்டிரினோ துகள்களின் எண்ணிக்கை எப்படி மாறுகிறது என்பதை நாம் கூர்ந்து நோக்க வேண்டும். இந்த மாறுதலை உண்டாக்கும் தற்போதுள்ள நியூட்டிரினோ துகள்களின் துடிப்பலைகளைச் சோதிப்பதும் இதில் அடங்கும்.”

டாக்டர் ஸ்டீ•பன் வெஸ்ட் (Dept of Physics at Royal, University of London)

“கரு விண்மீன்கள் கரும்பிண்டத்தின் துகள்களாகப் பலவீனத் தொடர்பால் உண்டான திணிவு பெருத்த துகள்களின் (WIMP -Weakly Interacting Massive Particles) இயற்கை விளைவுகள். இதை நிலைநாட்டத் தேவையான உபரிகளைச் சேர்க்க எங்களுக்குச் சில காலம் எடுத்தது. 2007 ஆம் ஆண்டில் நாங்கள் அறிவித்த போது இவை ஒளிவீசும் நிலைத்துவ அண்டங்களாய் நிலவிய மெய்யான விண்மீன்கள் (Hydrostatically Stable Objects) என்பதை உணராமல் போனோம். இப்போது அவற்றின் வானியல் கட்டமைப்பைக் (Steller Structure) கண்டுபிடிப்பதில் வெற்றி அடைந்ததால் கரு விண்மீன்களின் பண்பாடுகளைப் புரிந்து கொண்டோம். கரு விண்மீன்கள் நமது பரிதியைப் போல் பன்மடங்கு பெரிதான பூத வடிவில் நிறை பெருத்த வானியல் அண்டங்கள் (Giant Puffy Objects). அவை பரிதிபோல் பல மில்லியன் மடங்கு உடல் பெருத்து ஒளி வீசுபவை.”

காதரின் •பிரீஸ் (Katherine Freese) வானியல் விஞ்ஞானி மிச்சிகன் பல்கலைக் கழகம்

பரிதி மையத்தில் கரும்பிண்டம் உள்ளதெனப் புதிய கண்டுபிடிப்பு

ஆக்ஸ்•போர்டு பல்கலைக் கழகத்தின் இரண்டு ஆராய்ச்சிக் குழுவினர் அறிவிப்பின்படி கரும்பிண்டம் நமது பரிதியின் மையத்தில் இருந்து குளிர்ப்பித்துக் கொண்டு வருகிறது என்பது உறுதியாக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு சூரியனின் ஒட்டு மொத்த உஷ்ணத்தைப் பெருமளவில் பாதிக்கா விட்டாலும், குளிர்ந்த உட்கரு, பரிதியில் உஷ்ணப் பரவுதலைப் பற்றியும், கடத்தலைப் பற்றியும் புதியதோர் கோட்பாட்டை நிலைநாட்டுகிறது ! கரும்பிண்டம் ஒளியுடன் ஈடுபாடு இல்லாதால் (No Interaction with Light) கண்களுக்கும், தொலை நோக்கிகளுக்கும் அது தெரிவதில்லை ! பிற அண்டங்கள் மீது நிகழும் ஈர்ப்பியல் விளைவுகளால் கரும்பிண்டத்தின் இருப்புக்குச் சான்று கிடைக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவுகள் முடிவாகக் காட்டுவது யாதெனில் கரும்பிண்டம் பிரபஞ்சத்தின் மொத்தப் பிண்டத்தில் 80% பங்கைப் பெறுகிறது என்பதே.

பரிதி மையத்தில் கரும்பிண்டம் உறைவது என்னும் கோட்பாடு ஏறக் குறைய கடந்த 1980 முதல் முப்பது ஆண்டுகளாக நிலவி வருகிறது. சூரியனிலிருந்து வெளியாகும் மாயமான நியூட்டிரினோ பரமாணுக்களின் எண்ணிக்கை, கணினிப் போலி இயக்க வடிவுகள் (Computer Simulations) கூறியதில் மூன்றில் ஒரு பங்கே என்று வானியல் விஞ்ஞானிகள் கண்டு உள்ளனர். கரும்பிண்டம் வெப்பசக்தியை விழுங்கி அணுப்பிணைவு இயக்கங்களின் வீதத்தைக் (Rate of Fusion Reactions) குறைத்து குன்றிய எண்ணிக்கைக்கு ஏற்ற காரணத்தை விளக்கமாய்க் கூறுகிறது. வேலும் நியூட்டிரினோ துகள்கள் மூன்று விதத்தில் அதிர்வு செய்கின்றன. அவற்றில் ஒன்று மட்டுமே பூமியில் கண்டுபிடிக்கப் படுகிறது. அதனால் சூரியக் கரும்பிண்டம் அறியப் படாமல் விடப்பட்டது. இப்போது மறுபடியும் அது புத்துயிர் பெற்று ஆராயப் படுகிறது. அதை ஆழ்ந்து அறிய கரும்பிண்டம் கொண்டுள்ள துகள்களுக்கு நிறை வரையறை வகுத்தனர். அடுத்து அவை சாதாரணப் பிண்டத்துடன் ‘மெலிவு ஈடுபாடுகள்’ (Weakly Interactions) மட்டும் கொள்பவை. லண்டன் பல்கலைக் கழத்தின் ஸ்டீ•பன் வெஸ்ட் தலைமையில் (Stephen West of Royal Holloway, University of London) பரிதியின் கரும்பிண்டத்தில் உள்ள துகள்கள் இந்த வரையறைக்குள் இருந்தால் என்ன நேரிடும் என்று ஆராய்ந்தனர்.

பரிதிக் கரும்பிண்டம் பற்றி ஆக்ஸ்•போர்டு குழுவினர் செய்த ஆய்வுகள்

ஆக்ஸ்•போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாட்ஸ் •பிரான்ஸென் & சுபீர் ஸர்கார் (Mads Frandsen & Subir Sarkar, University of Oxford, London, UK.) ஆகியோரின் ஆய்வுகள் பின் வருமாறு : கரும்பிண்டத் துகள்களின் கணினிப் போலி இயக்கங்கள் (Computer Simulations) பரிதி மேற்கூறிய துகள்களைத் தன் மையத்தை நோக்கி இழுக்கிறது என்றும், துகள்கள் வெப்பசக்தியை உறிஞ்சுகின்றன வென்றும் காட்டுகின்றன. கரும் பிண்டத்தின் சில துகள்கள் இந்த வெப்பத்தை மையத்திலிருந்து விளைம்புக்குக் கடத்திச் செல்கின்றன என்றும் அதனால் பரிதி மையம் குளிர்ப்பிக்கப் படுகிறது என்றும் •பிரான்ஸென், ஸர்கார் இருவரும் வெளியிட்டார். அவர் இருவரும் கரும்பிண்டத்தின் 5 கிகா எலெக்டிரான் வோல்ட் சக்தி (5. giga-eV) உள்ள துகள்களை மட்டும் எடுத்துக் கொண்டனர். ஆனால் டாக்டர் ஸ்டீ•பன் வெஸ்ட் (Dept of Physics at Royal, University of London) ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கரும்பிண்டத் துகள்கள் 5. giga-eV சக்தியை விடக் குறைந்தவை.

•பிரான்ஸன் கூற்றுப்படி கரும்பிண்டத் துகள்கள் புரோட்டான், நியூட்ரான் பரமாணுக்களை விட 5 மடங்கு கனத்தவை ! அந்த வழிமுறையில் பிரபஞ்சத்தை நோக்கினால் கரும்பிண்டம் சாதாரணப் பிண்டத்தை விட 5 மடங்காக இருப்பதை உறுதிப் படுத்துகிறது. ஸர்கார், •பிரான்ஸென் இருவரும் சூரியக் கரும்பிண்டத் துகள் மற்றுமோர் புதிர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதாக நம்புகிறார். பரிதியின் மையத்தைச் சுற்றிலும் எழும் பேரளவு வெப்ப சக்தி கடப்பு, கதிர்வீச்சு இயக்க முறைகளால் (Heat Movement By Conduction & Radiation) விளிம்புக்கு நகர்கிறது. விளிம்புக் கருகில் சுற்றியக்க முறையில் (Convection) நிகழ்கிறது. ஆனால் சுற்றியக்க முறை, கடப்பியக்க முறை ஆகியவற்றின் எல்லை அரங்கு (Boundary Between Conduction & Convection /Radiation Transfer) எங்குள்ளது என்பது தர்க்கத்தில் உள்ளது.

சூரிய உட்கலப்பு மூலமான கணினிப் போலி இயக்கங்கள் (Simulations Based on Solar Composition) ஒலி அலைகள் மூலம் பரிதி மேற்தளத்தில் சோதித்தபடி அந்த எல்லை அரங்கை மையத்துக்கு அப்பால் (விளிம்புக்கு அருகே) இருப்பதாகக் காட்டுகின்றன. ஸர்கார் •பிரான்ஸென் இருவரும் கரும்பிண்டத் துகள் மூலம் அமைத்த போலி இயக்கங்கள் எல்லை அரங்கை மையத்துக்கு அருகில் இருப்பதாகக் கூறுகின்றனர் ! அவரது ஆய்வுகளே போலி இயக்கங்களுக்கும் உளவிய நோக்குகளுக்கும் நெருங்கி ஒத்திருப்பதாகத் தெரிகின்றன.

கருவிண்மீன்கள் கருந்துளை உண்டாக்கலாம் !

பிரபஞ்ச வெடிப்பின் துவக்க யுகங்களில் தோன்றிய முதற் பிறப்பு விண்மீன்கள் இப்போது நாம் காணும் விண்மீன்களுக்கு முற்றிலும் வேறாக இருந்திருக்க வேண்டும். அந்த ஆதியுக விண்மீன்கள் பிரபஞ்சத்தின் புதிரான அமைப்புகளைப் புரிந்து கொள்ள ஓரளவு உட்குறிப்புகளைக் கொண்டிருக்கலாம். 2007 ஆம் ஆண்டில் நியதியாக்கப் பட்ட “கரு விண்மீன்கள்” (Dark Stars) நவீன விண்மீன்களை விடப் பன்மடங்கு பெரிதாக வளரலாம் என்றும் அவை கரும்பிண்டத்தின் துகள்களால் (Dark Matter Particles) ஆற்றல் ஊட்டப் படலாம் என்றும் வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார். அந்தத் துகள்கள் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறையில் அல்லாமல் கரு விண்மீன்களின் உள்ளே பிணைந்து அழியலாம் என்றும் எண்ணப்படுகிறது. பிள்ளைப் பிரபஞ்சத்தில் கரு விண்மீன்கள் நமது பரிதி போல் கண்ணுக்குப் புலப்படும் ஒளியை வீசியிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அந்த ஒளிவீச்சு நம்மை அணுக முடியாது உட்சிவப்பு நீட்சியில் “செந்நிறக் கடப்பாகி” (Redshifted into the Infrared Range) தெரியாமல் போனது என்று விளக்கம் கூறப்படுகிறது. ஆதலால் கரு விண்மீன்கள் நமது கண்களுக்குத் தெரியாமல் போய் விட்டன !

கருந்துளைகளின் மூலத் தோற்றம் மர்மமானது. ஒரு கோட்பாடு : பிரபஞ்ச மிச்சத்தின் முதற் பிறவி விண்மீன்கள் அவை என்பது. ஒருவித விண்மீன் மாதிரிகளைச் சேர்ந்தவை யாக இருக்கலாம். அவை பளு மிக்க கரும் பிண்டத்து முகிலின் உட்புறத்தில் உள்ளதாக எண்ணப்பட்டவை. இந்த முதற் பிறப்பு விண்மீன்களின் நடுவே கரும்பிண்டத் துகள்கள் இருந்திருக்கலாம். அத்துகள்கள் கதிர்வீச்சால் வெடித்து ஒன்றை ஒன்று அழித்திருக்கலாம். இந்த மிஞ்சிய சக்தி இவ்வித விண்மீன்கள் சாதாரண விண்மீன்களை விடப் பெரிதாக வளர விட்டிருக்கலாம். விண்மீன்கள் எரிவாயு தீர்ந்து அணுப்பிணைவு நின்று சாகும்போது பேரளவு சக்தியுள்ள கருந்துளைகளாய் மாறலாம். ஆனால் கருவிண்மீன்களைக் (Dark Stars) ஒருநாள் காண்போம் என்னும் நம்பிக்கை விஞ்ஞானிகளிடையே இருப்பதில்லை.

பிரபஞ்சத்தில் பரிதியின் உட்கருவில் மட்டுமே கரும்பிண்டம் இருக்கலாம் என்று கருத வேண்டாம். காலாக்ஸிகளின் மையத்தில் பேரளவு பளுநிறை கொண்ட கருந்துளைகளை (Supermassive Black Holes) உண்டாக ஏராளமான விண்மீன்களுக்குக் கரும்பிண்டம் உதவியுள்ளதா என்று சீக்கிரத்தில் நாம் கண்டு விடலாம்.

வானியல் விஞ்ஞானிகளின் கரு விண்மீன் கோட்பாடு

நான்கு விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் இதுதான் : கரு விண்மீன்கள் எனப்படும் அபூர்வ விண்மீன்கள் பிரபஞ்ச விண்மீன் பரிணாம வளர்ச்சியின் ஒரு புதுமுக நோக்கு, முதல் நோக்கு, பெரு வெடிப்புக்குப் பிறகு பிள்ளைப் பிராயத்தில் 200 மில்லியன் ஆண்டுக்குப் பின்னால் விளைந்தவை ! அப்போது கரும்பிண்டங்களின் திணிவு (Density of Dark Matter) பிரபஞ்சத்தின் ஆரம்ப யுகங்களில் இப்போது உள்ளதை விடப் பேரளவு இருந்தது. மேலும் முதற்பிறப்பு விண்மீன்கள் ஆரம்ப யுகக் “கரும்பிண்டத்தின் ஒளிச்சுழி” (Dark Matter Halo) மையத்தில் உண்டாகி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் முன்னறிவிக்கிறார். அந்த நிகழ்ச்சியே ஒளிமந்தைகள் (Galaxies) தோன்றுவதற்கும் அடிகோலி இருக்க வேண்டும். மாறாக இப்போது காணப்படும் ஒளிமந்தைகளில் விண்மீன்கள் சிதறிப்போய் விளிம்புகளில் ஒட்டிக் கொண்டுள்ளன ! அந்த நான்கு விஞ்ஞானிகளின் கோட்பாட்டில் முதற்பிறப்பு விண்மீன்கள் தம்மைச் சுற்றியுள்ள பிண்டங்களைப் பிணைத்துக் கொண்டு அருகிலிருக்கும் கரும்பிண்டத்தின் வாயு முகிலை இழுத்துக் கொள்ளும் என்று கூறப் பட்டுள்ளது.

கரு விண்மீன்களின் உள்ளே இருக்கும் உட்துகள்கள் எப்படிச் சேர்கின்றன ? கரும்பிண்டத்தின் உட்துகள்கள், பலவீனத் தொடர்பால் உண்டான திணிவு பெருத்த துகள்களாய்க் (WIMPs -Weakly Interacting Massive Particles) கரு விண்மீனில் சேர்கின்றன. விம்ப் (WIMPs) துகள்களில் அவற்றின் எதிர்த்துகள்களும் உள்ளதால் அவை இரண்டும் பிணைந்து அழிந்து சக்தியை உண்டாக்கும் மூலாதாரச் சேமிப்பாய் அமைகிறது. கரும்பிண்டத்தின் திணிவு பேரளவாயின் அதுவே ஆக்கிரமித்து அணுப்பிணைவு இயக்கத்தை விட (Nuclear Fusion) வெப்பசக்தி எழுப்பும் அல்லது தணிக்கும் இயக்கமாகிறது. அணுப்பிணைவு இயக்கத்தோடு ஒப்பிட்டால் விம்ப் அழிவு சக்தி (WIMP Annihilation Process) ஒரு மேம்பட்ட ஆற்றல் ஊற்றாக அமைகிறது ! ஆதலால் பூர்வீக விண்மீனுக்கு ஆற்றல் ஊட்ட சிறிதளவு கரும்பிண்டமே தேவைப்பட்டிருக்க வேண்டும் !

“கரு விண்மீன்கள் கரும்பிண்டத்தின் துகள்களாகப் பலவீனத் தொடர்பால் உண்டான திணிவு பெருத்த துகள்களின் (WIMP -Weakly Interacting Massive Particles) இயற்கை விளைவுகள். இதை நிலைநாட்டத் தேவையான உபரிகளைச் சேர்க்க எங்களுக்குச் சில காலம் எடுத்தது. 2007 ஆம் ஆண்டில் நாங்கள் அறிவித்த போது இவை ஒளிவீசும் நிலைத்துவ அண்டங்களாய் நிலவிய மெய்யான விண்மீன்கள் (Hydrostatically Stable Objects) என்பதை உணராமல் போனோம். இப்போது அவற்றின் வானியல் கட்டமைப்பைக் (Steller Structure) கண்டுபிடிப்பதில் வெற்றி அடைந்ததால் கரு விண்மீன்களின் பண்பாடுகளைப் புரிந்து கொண்டோம். கரு விண்மீன்கள் நமது பரிதியைப் போல் பன்மடங்கு பெரிதான பூத வடிவில் நிறை பெருத்த வானியல் அண்டங்கள் (Giant Puffy Objects). அவை பரிதிபோல் பல மில்லியன் மடங்கு உடல் பெருத்து ஒளி வீசுபவை.” என்று காதரின் •பிரீஸ் கூறுகிறார்.

(தொடரும்)

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine. New Scientist

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How do Massive Stars Explode ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By : Robert March (1983)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html
11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40308155&format=html
12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html
13 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
14 “Physics of the Impossible” Michio Kaku – Article By : Casey Kazan (March 4, 2008)
15 Space & Earth – Seeing the Invisible – First Dark Galaxy Discovered (Feb 23, 2005)
16 Did Dark Matter Create the First Stars ? (March 15, 2006)
17 Dark Matter in Newborn Universe, Doused Earliest Stars (Dec 3, 2007)
18 Space & Earth – Dark Matter in a Galaxy (October 30, 2009)
19 The Newrork Timea – Black Holes, A Riddle All Their Own, May be Fueling the Blobs By : Dennis Overbye (July 7, 2009)
20 Science Daily – Mysterious Space Blob Discovered at Cosmic Dawn (April 2009)
21 New Book – Physics Theory – The First Stars -The Interconnectedness of Reality Phyisics Org – (November 3, 2009)
22 Stars Fueled By Datrk Matter Could Hold Secrets to the Universe (Nov 3, 2009)
23 Wikipedia – Dark Star (November 8, 2009)
24 Daily Galaxy – Dark Stars – Were There Once Dark Stars Powered By Antimatter ? (Nov 9, 2009)
25 Daily Galaxy – Were Gigantic Dark Stars of the Early Universe Powered By Antimatter (November 12, 2009)
26 Daily Galaxy – Are Black Holes Powering the Most Massive Objects in Space (Nov 11, 2009)
27 The Dark Attractor : What’s Pulling the Milky Way Towards it at 14 million mph. (Nov 13, 2009)
28. http://jayabarathan.wordpress.com/2009/08/20/katturai-62-1/ (Compact Stars & Preon Stars) (Aug 20, 2009)
29 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40911291&format=html (Earlier Stars & Dark Stars)
30 Scientific American – Dark Matter Particle Discovered By JR Minkel (April 13, 2008)
31 Wired Sources – A New Experiment – First Direct Evidence of Dark Matter Particles By Alxis Madrigal (November 19, 2008)
32 News Track, India – Is Dark Matter Cooling off the Sun’s Core ? (July 15, 2010)
33 New Scientist – Dark Side of the Sun – Exotic Dark Matter Lurks inside Our Sun (The Sun Has a Heart of Darkness By : Eugenie Samuel Reich (July 17, 2010)
34 Daily Galaxy – Could the Sun Have a Core of Dark Matter ? (July 23, 2010)

******************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) July 31, 2010

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts