பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சுக்கிரன் வரட்சிக் கோளாய் எவ்விதம் மாறியது ?(கட்டுரை: 22)

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


மின்னுவ தெல்லாம் பொன்னல்ல !
விண்மீன் போல்
கண்சிமிட்டும் மின்மினிகள்
விண்வெளியில்
கடன் வாங்குபவை !
கடன் கொடுப்பவை உயிர்மீன்கள் !
வெளுத்த தெல்லாம் வெண்ணையல்ல !
வான வில்லின் ஏழு வர்ணம்
நிஜமில்லை !
நீலக் கடலின் நிறமும்
மோன வெளி வண்ணமும்
காட்சிக் கனவு !
கடன் வாங்கிய களவு !
இடுப்புப் பிள்ளையைக்
கவண் கயிற்றில் சுற்றி இரவில்
வெண்ணிலவை
விளக்கேற்றி வைக்கும் பரிதி !
நீல வண்ணம் வானிலே
பின்புல மானது எப்படி ?
தொடுவானில்
தொத்தி ஏற முடியாது
ஒளிகாட்டி
முடிசாயும் விடிவெள்ளி
நொடிப் பொழுதில் !

Fig 1
Venus, Moon & Sun

“சனியின் துணைக்கோள் டிடானுக்குப் பலூன், தள வாகனத்துடன் நாம் மீண்டும் விண்ணுளவியை அனுப்பி அதைத் தெளிவாக அறிந்துவரச் செல்ல வேண்டும். டிடான் மேற்தளத்தில் இருப்பது 50% நீர்ப்பனிக் கட்டி. உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான நீர்வளம், இரசாயன மூலக்கூறுகள் மற்றும் வெப்பம் அளிக்கப் புவித்தள எரிசக்தி (Geothermal Energy) ஆகிய மூன்றும் அங்கே இருக்கலாம் என்று அறியப்படுகின்றன. கடந்த கண்டுபிடிப்புகள் டிடான் துணைக்கோள் பல முறைகளில் குறிப்பாக சூழ்வெளி வாயுப் பொருட்களில் பூமியை ஒத்திருப்பதைக் காட்டுகின்றன. ”

பிரிட்டீஸ் விண்வெளிப் பேராசிரியர் ஜான் ஸார்நெக்கி (John Zarnecki)

“புறச்சூரியக் கோளின் (Extrasolar Planet) உஷ்ணம், அழுத்தம், வாயுக்கள், வாயுப்புயல் வேகம், முகிலோட்டம் போன்ற தளப்பண்புப் பரிமாணங்களை அளப்பது விஞ்ஞானிகளின் முக்கிய குறிக்கோள். அவற்றின் மூலம் அங்கே உயிரின வளர்ச்சிக்கு வசதிகள் உள்ளனவா என்று ஆராய முடிகிறது.”

மார்க் ஸ்வைன் நாசா ஜெட் உந்துசக்தி ஆய்வகம் (Mark Swain, NASA Jet Propulsion Lab, USA)

Fig. 1A
Rocket & Express Path

விண்வெளியில் கண்சிமிட்டும் விடிவெள்ளி

கி.பி. 1610 இல் காலிலியோ முதலில் தான் அமைத்த தொலைநோக்கியில், வெள்ளியின் நகர்ச்சியைப் பின் தொடர்ந்து பல மாதங்களாய் ஆராய்ச்சி செய்து வந்தார். அப்போதுதான் அவர் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறை நிகழ்ச்சியை முதன் முதலில் கண்டுபிடித்து, வானியல் சரித்திரத்திலே ஒரு புரட்சியை உண்டாக்கினார். சூரிய மண்டலக் கோள்கள் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்ற கிரேக்க வானியல் மேதை டாலமியின் [Ptolemy] கோட்பாட்டு பிழை என்று நிரூபித்துக் காட்டினார். போலந்தின் வானியல் மேதை காபர்னிகஸ் [Copernicus] கூறியபடி, சூரிய மண்டலக் கிரகங்கள் யாவும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்ற பரிதி மைய நியதியே மெய்யானது என்பதற்கு முதல் கண்கூடான உதாரணமாக காலிலியோவின் கண்டுபிடிப்பு அமைந்து விட்டது! இப்புதிய நியதியைப் பறைசாற்றியதற்கு அவர் இத்தாலிய மதாதிபதிகளால் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக் குள்ளாகி சிறை வைக்கப் பட்டார்!

Fig. 1B
The Phases of the Venus

மேலும் தொலை நோக்கியில் காலிலியோ காணும் போது, பிறைவெள்ளி [Crescent Phase] பெரியதாகவும், முழுவட்டமற்ற குறைவெள்ளி [Gibbous Phase] சிறியதாகவும் இருக்கக் கண்டார். அதற்குக் காரணம் சுக்கிரன் மிக நெருங்கி பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நகரும் போது, பெரியதாய்ப் பிறை வடிவிலும், தூரத்தில் சூரியனுக்கு அப்பால் நகரும் போது சிறியதாய் முழுமையற்ற வடிவிலும் தெரிகிறது. வெள்ளியைச் சுற்றி அடர்த்தியான மேக மந்தைகள் சூழ்ந்துள்ளதால் பூகோளத்திலிருந்து தீவிரமான ஆராய்ச்சிகள் எதுவும் பூதத் தொலை நோக்கி [Giant Telescope] மூலம் செய்ய முடியாது. வெள்ளியின் கோளத்தைப் பற்றி அறிந்த விபரங்கள் பல, விண்ணுளவிகள் மேக மூட்டத்தை ஊடுருவிச் சென்று, கதிரலைகள் [Radar] மூலம் கண்டுபிடித்துப் பூமிக்கு அனுப்பியவை!

Fig. 1C
Venus Chemicals

பரிதி குடும்பத்தில் நீர்வள அண்டக் கோள்கள் படைப்பு

பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெடிப்பு மின்னலில் இந்தப் பிரபஞ்சம் பேபியாகப் பிறந்தது ! தெறித்த ஒவ்வொரு துளியிலும் ஆதிமூலச் சக்தி பேரளவு அடர்த்தியாகிப் பேருவம் உண்டாக்கத் துவங்கியது ! ஆற்றல் அடர்த்தியில் தவழும் பிரபஞ்சம் நகர ஆரம்பித்துப் பெருக்கமானது ! பெருக்கத்தில் அடிப்படைப் பரமாணுக்கள் திடமாகி முதன்முதல் அணுக்கள் நிலையாகி எளிய ஹைடிரஜன், ஹீலிய அணுக்கருக்கள் தோன்றின ! அவ்விதம் கொந்தளித்த ஒரு மில்லியன் ஆண்டுகளில் ஆதிக்கனல் வெள்ளம் அணுக்கருக்களைப் பின்னிப் பிணைத்து அகிலக் கருமை விண்ணில் தூவிக் காலக் குதிரையை முடுக்கி விட்டது ! ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு கருமைப் பொருள் பிரபஞ்சத்தை அடுத்த யுக மகாத் தோற்ற மாறுபாட்டுக்குத் (Macrocosmic Transfiguration) தயார் செய்தது ! நூறு பில்லியன் காலாக்ஸிகள் பிரபஞ்சத்தில் உருவாகின ! சூன்ய விண்வெளியில் இந்த ஒளிமய மந்தைகள் சுற்றிக் கொண்டு பேரளவு ஹைடிரஜன் ஹீலிய அணுக்கருக்களைத் திரட்டி சுய இயக்கமுடைய ஏற்பாடுகள், அவற்றின் கொத்துக்களை (Self Organizing Systems & Clusters of Systems) உண்டாக்கின !

Fig. 1D
Venus Express Probe

ஒவ்வொரு காலாக்ஸியும் தனித்துவ முறையில் பிரபஞ்சத்துக்கு வடிவைக் கொடுத்தது. ஒவ்வொன்றிலும் அதன் தனிப்பட்ட உள்ளக இயக்கவியல் (Internal Dynamics) அடங்கும். அவற்றுக்கு வேண்டிய மூலக்கருப் பொருட்களை அடங்கிக் கிடக்கும் ஆதி விண்மீன்களே பரிமாறின. உடல் பெருத்த ஒளிமய விண்மீன்கள் சுயமாக மாறத் தொடங்கி பூதச் சூபர்நோவாவாக வெடித்தன ! சூப்பர்நேவாக்கள் பால்மய வீதியைப் படைத்துப் புதிய சுயவொளிச் சூரியன்களைப் பெற்றன ! அவ்விதச் சூரியன்களில் ஒன்றே நமது பரிதி ! அந்தப் பரிதி பிரபஞ்சத்தில் உண்டான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெடிப்டியூன் ஆகிய அண்டக் கோள்களைத் தன் கவர்ச்சித் தளத்தில் பற்றிக் கொண்டு சூரிய குடும்பத்தை உருவாக்கியது ! அவற்றில் ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு மாதிரி ! பரிதியை நெருங்கிச் சுற்றும் அகக் கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் நான்கும் ஒருதரம் ! பல விதங்களில் ஒன்றுபோல் தோன்றினாலும் சில முறைகளில் வேறானவை ! அவை யாவும் திணிவு அல்லது திடக் கோள்கள் (Solid Planets) ! அவற்றில் பூமி, செவ்வாய், வெள்ளி மூன்றிலும் ஆதிமுதல் நீர்வளம் நிரம்பி பின்னால் ஏற்பட்ட எரிமலைக் கொந்தளிப்பில் செவ்வாய், வெள்ளி இரண்டும் முற்றிலும் வரண்டு போயின. பரிதியை அப்பால் சுற்றும் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் வாயுக் கோள்கள் (Gas Planets) ! அந்த நான்கு கோள்களும் ஒரே தரமாகக் கருதப்பட்டாலும் அவற்றில் பல ஒற்றுமைகளும், சில வேற்றுமைகளும் காணப்படுகின்றன !

Fig 1E
Launching the Probe

சனியின் துணைக்கோள் டிடானில் ஆழமான புதைகடல் கண்டுபிடிப்பு

2008 மார்ச் 24 ஆம் தேதி பி.பி.சி விஞ்ஞான எழுத்தாளி ஹெலன் பிரிக்ஸ் ஓர் அரிய தகவலை வெளியிட்டிருந்தார். விண்ணுளவி காஸ்ஸினி-ஹ¥யூஜென்ஸ் (Space Probe Cassini-Huygens) சனிக்கோளின் மாபெரும் துணைக்கோளான டிடானில் (Saturn’s Moon Titan) ஆழமான புதைகடல் (Subsurface Ocean) ஒன்று இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளது ! விண்ணுளவியின் ரேடார் படங்கள் டிடானில் காணப்படும் தடித்த பனிப்பாறைகளுக்கு அடியில் ஓர் ஆழக்கடல் ஒளிந்திருக்கிறது என்று காட்டின. மேலும் அது உறுதிப்படுத்தியது : டிடானில் உயிரினம் வாழ்வதற்கு முக்கிய அடிப்படையான மூன்று வசதிகள் இருப்பதாக அறியப்பட்டன. 1. நீர்வளப் பெருக்கம் 2. ஆர்கானிக் கூலக்கூறுகள் இருப்பு ! 3. புவித்தள எரிசக்தி (Geothermal Energy). அதைப்போல் பூதக்கோள் வியாழனின் மூன்று துணைக் கோள்களில் [கனிமீடு, காலிஸ்டோ & ஈரோப்பா (Ganymede, Callisto & Europa)] ஆழக்கடல்கள் ஒளிந்துள்ளன என்றும் கருதப்படுகிறது.


Fig. 1F
Venus Atmosphere -1

அடுத்து ஹப்பிள் தொலைநோக்கி 2008 மார்ச் 19 இல் பரிதி மண்டலத்துக்கு அப்பால் 63 ஒளியாண்டு தூரத்தில் உலவும் ஓர் விண்மீனின் அண்டக் கோளில் ஆர்கானிக் மூலக்கூறும் நீர்வளமும் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறது ! இந்த அரிய தகவல் சூரிய மண்டலத்தைத் தாண்டிய ஓர் அண்டக் கோளில் உயிரின வளர்ச்சிக்குச் சமிக்கை செய்யும் முதல் முக்கிய அறிவிப்பாகும் ! அந்த இரசாயன மூலக்கூறு மீதேன் (Methane) காணப்படும் “புறச்சூரியக் கோள்” (Extrasolar Planet # HD189733b) பூதக்கோள் வியாழன் அளவு பெரியது ! மீதேன் மூலக்கூறு நேரிய வாய்ப்பு முறைகளில் இணைந்து கலவைகளை உண்டாக்கும் “உயிரின மூல இரசாயனமாகக்” (Prebiotic Chemistry) கருதப்படுகிறது. மேலும் அது புறவெளி விண்மீனுக்கு வெகு அருகில் சுற்றுவதால் உஷ்ணம் 900 டிகிரி சென்டிகிரேட் ஏறிப் பரிதியின் புதன் வெள்ளிக் கோள்போல் அந்த கோளும் ஒரு வெப்பக் கோளாக அறியப்படுகிறது. “புறச்சூரியக் கோளின் உஷ்ணம், அழுத்தம், வாயுக்கள், வாயுப்புயல் வேகம், முகிலோட்டம் போன்ற தளப்பண்புப் பரிமாணங்களை அளப்பது விஞ்ஞானிகளின் முக்கிய குறிக்கோள். அவற்றின் மூலம் அங்கே உயிரின வளர்ச்சிக்கு வசதிகள் உள்ளனவா என்று ஆராய முடிகிறது,” என்று நாசா ஜெட் உந்துசக்தி ஆய்வகத்தின் விஞ்ஞானி மார்க் ஸ்வைன் (Mark Swain, NASA Jet Propulsion Lab, USA) கூறினார்.

Fig. 1G
Venus Atmosphere – 2

பூமியின் இரட்டை எனப்படும் சுக்கிரனில் பெருவரட்சி நரகம்

“நீரைத் தேடிச் செல்” என்பதே நிலவுக்கு அப்பால் பயணம் செய்ய நினைத்த இருபதாம் நூற்றாண்டு விண்வெளி விஞ்ஞானிகளின் தாரக மந்திரமாக இருந்து வந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் விண்வெளிப் புரட்சிக்கு முன்பு பல்லாண்டுகளாக சுக்கிரன் பூமியின் இரட்டைக் கோளாகக் கருதப்பட்டது. ஏறக்குறைய இரண்டின் உருவம் (Size) ஒன்றே. திணிவு நிறை (Mass) ஒன்றே. திணிவு அடர்த்தி (Density) ஒன்றே. ஆனால் ரஷ்ய, அமெரிக்க, ஈரோப்பிய விண்ணுளவிகள் கடந்த நாற்பது ஆண்டுகளாக அந்தக் கருத்துக்களை மாற்றிவிட்டன. சூழ்வெளி வாயுக்கள் ஒன்றாயினும் கொள்ளளவுகள் வேறு, அழுத்தம் வேறு. தள உஷ்ணம் வேறு. பூமியில் நீர்வளம் மிகுந்த அதே சமயத்தில் வெள்ளிக் கோளிலும், செவ்வாய்க் கோளிலும் நீர்வளம் பெருகியிருக்க வேண்டும் என்று எண்ண இடமிருக்கிறது. உஷ்ணம் மிதமான செவ்வாய்க் கோளில் தோன்றிய நீர்த்தள இருப்பையும், உயிரின வளர்ச்சியையும் உறுதிப் படுத்த விண்ணுளவு முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன. மாறாக வெள்ளிக் கோளின் உஷ்ணம் மிதமிஞ்சி அமைந்திருப்பதால் விண்ணுளவு முயற்சிகள் அந்த எண்ணிக்கையில் திட்டமிடப் படவில்லை !

Fig 1H
Earth & Venus Details

வெள்ளிக் கோள் ஒரு வெப்பக்கனல் (சராசரி உஷ்ணம் : 450 C / -30 C) கோளம் ! கடும் வெப்பமே பெருவரட்சி உண்டாக்கியது. இதற்கும் மிஞ்சி வரண்டு போன கோளம் வேறு எதுவும் சூரிய குடும்பத்தில் இருப்பதாகத் தெரியவில்லை ! இரண்டு மைல் ஆழக்கடல் கொண்ட பூமிக்குச் சுக்கிரன் சகோதரக் கோளுமில்லை ! அதன் இரட்டைப் பிறவியுமில்லை ! வெள்ளிக் கோளின் விட்டம் பூமியின் விட்டத்துக்கு 95% ! வெள்ளியின் நிறை பூமியைப் போல் 81% ! சுக்கிரனில் சூழ்வெளி வாயு அழுத்தம் புவியைப் போல் 93 மடங்கு மிகையானது. அதன் அசுர வாயு மண்டலம் மூவடுக்கு நிலையில் 30 மைல் முதல் 55 மைல் வரை வியாபித்துள்ளது. பூமியில் 5 மைல் உயரத்துக்கு மேல் வாயுவின் அழுத்தம் மிக மிகக் குறைவு. சுக்கிரனின் உட்கரு மண்டலம் பூமியைப் போல் அமைப்பும் தீவிரக் கொந்தளிப்பும் கொண்டது ! சூரியனின் அகக் கோளான பூமியில் பிரபஞ்சம் தவழும் பருவத்தில் ஆழ்கடல் வெள்ளம் பெருகியது போன்றும், உயிரினம் வளர்ந்தது போன்றும் வெள்ளிக் கோளிலும் தோன்றி யிருக்கலாம் அல்லவா ?

ஆரம்பகால யுகங்களில் இரண்டு கோள்களிலும் அவ்விதம் பேரளவு நீர்மயமும், கார்பன் டையாக்ஸைடும் (C02 – 65% Nitrogen – 3%) ஒரே சமயத்தில் உண்டாகி இருக்கலாம். ஆனால் பூமியில் இப்போது கார்பன் டையாஸைடு பெரும்பாலும் அடக்கமாகிக் கடலுக்குள்ளும், பனிப்பாறைக் குள்ளும், பதுங்கிக் கிடக்கிறது. சிறிதளவு C02 சூழ்வெளி மண்டலத்தில் பரவி கிரீன்ஹவுஸ் விளைவை உண்டாக்கி வருகிறது. அதனால் பூமியில் மித உஷ்ணம் நிலையாகி மனிதர் உயிர்வாழ முடிகிறது. முரணாக வெள்ளிக் கோளில் பூமியைப் போல் 250,000 மடங்கு C02 சுதந்திரமாகப் பேரளவு சேர்ந்து சூழ்வெளியில் தடித்த வாயுக் குடையாக நீடித்து வருகிறது ! அதனால் கிரீன்ஹவுஸ் விளைவு பன்மடங்கு மிகையாகிச் சூரியனின் வெப்பம் மென்மேலும் சேமிப்பாகி வெள்ளிக் கோள் மாபெரும் “வெப்பக் கோளாக” மாறிவிட்டது ! மேலும் பூமியில் காணப்படும் பேரளவு நைடிரஜன் வாயுவும், ஆக்ஸிஜென் வாயுவும் சுக்கிரனில் இல்லை. ஒரு யுகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பில் அநேக எரிமலைகள் கிளம்பி வெப்பக் குழம்புடன் உட்தளப் பாறைகளும் கற்களும் வீசி எறியப்பட்டுபேரளவு ஸல்·பர் டையாக்ஸடு வாயு பெருகிப் போனது. அந்த வாயு மேற்தள நீர்மையுடன் கலத்து அங்கிங்கெனாதபடி வெள்ளித் தளமெங்கும் கந்தகாமிலத்தை நிரப்பி நரகலோகமாக்கி விட்டது !

Fig 1J
Express Probe Parts

சுக்கிரன் தன்னைத் தானே மிக மெதுவாகச் (வெள்ளி நாள் = 243 பூமி நாட்கள்) சுற்றியும், சற்று வேகமாகச் (வெள்ளி ஆண்டு = 224 பூமி நாட்கள் ) சூரியனைச் சுற்றியும் வருகிறது. வெள்ளியின் சுயச்சுற்று மிக மெதுவாகச் செல்வதால் சூரிய வெப்பம் சூடேற்றி கிரீன்ஹவுஸ் விளைவில் சுக்கிரனில் பேரளவு வெப்பம் சேமிப்பாகிறது ! மேலும் சுக்கிரனில் நீர்மயம் வெறுமையானதற்குக் காந்த மண்டலம் இல்லாமல் போனதும் ஒரு காரணம் ! பூமி தன்னைத் தானே 24 மணி நேரத்தில் ஒருதரம் சுற்றுவதால் அதன் காந்த யந்திரம் தீவிரமாக இயங்குகிறது ! முரணாக சுக்கிரன் தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்கு 243 பூமி நாட்கள் பிடிக்கின்றன. அதாவது அதன் காந்த யந்திர சக்தி ஏறக்குறைய இல்லை என்றே சொல்லாம் ! அதாவது காந்த யந்திர சக்தி இல்லாமையால் அதன் அயனிக் கோளம் (Ionosphere) மிகப் பலவீனமாக உள்ளது ! அதற்கும் உயர்ந்த மேற்தளக் கோளம் பரிதிப் புயலால் தாக்கப் படுகிறது !

சூரியனை நெருங்கிச் சுற்றும் சுக்கிரனில் 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகாலத் தவழும் பருவத்தில் ஆழமில்லாத சிறிய வெப்பக் கடல்கள் உண்டாகி அவை விரைவில் ஆவியாகிப் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது ! பல யுகங்களில் நீர்வளம் சூடாகி நீர் மூலக்கூறுகள் மேற்தள வெளியில் ஏறி சூரியநின் புறவூதா ஒளியால் அயான்களாகப் பிரிவாகிப் சூரியப் புயலால் தூக்கிச் செல்லப் பட்டிருக்கலாம் ! சுக்கிரன் அவ்விதம் காலம் செல்லச் செல்ல நீர்வளம் அனைத்தையும் இழந்திருக்கலாம் ! அந்தப் பேரிழப்பு இப்போதும் தொடர்ந்து வால்மீன் விழுந்தாலும் சரி அல்லது எரிமலை வெடித்தாலும் சரி வெள்ளியில் தீவிர நரக வரட்சி நிலையாகி நிரந்தரமாகி விட்டது !

Fig. 1K
ESA Control Room

வெள்ளியை நோக்கி ரஷ்யாவின் வெனரா விண்வெளிக் கப்பல்கள்

1967 ஆம் ஆண்டு ரஷ்யா அனுப்பிய வெனரா-4 ‘வெள்ளி ஆய்வுச்சிமிழ் ‘ [Venus Probe] வெற்றிகரமாக சுக்கிர தளத்தில் வந்திறங்கியது. சுக்கிர மண்டலத்தின் அழுத்தமும், வெக்கையும் [Atmospheric pressure, temperature] மிகுந்து இருந்த போதிலும், ஆய்வுச்சிமிழ் அவற்றில் சிதைந்து போகாமல் பிழைத்து, விஞ்ஞான விபரங்களைப் பூமிக்கு அனுப்பியது, மாபெரும் ரஷ்ய சாதனையே. மே மாதம் 1969 இல் ரஷ்யா விண்வெளிக் கப்பல்கள் ‘வெனராவைத் ‘ [Venera-5,6] தொடர்ந்து ஏவி, வெள்ளி மண்டலத்தை நெருங்கிப் பறந்து, அவற்றின் தள ஆய்வுச்சிமிழ்கள் [Lander Probes] தரையில் இறங்கின. வெனரா-7 [1970] சுக்கிர தளத்தில் முக்கியமாக யுரேனியம், தோரியம் போன்ற நீள்-ஆயுள் ஏகமூலங்கள் [Long-lived Isotopes] தோன்றி இருப்பதைக் கண்டுபிடித்தன. 1972 ஜூலை 22 ஆம் தேதி ரஷ்யா அனுப்பிய வெனரா-8 இன் தள ஆய்வுச்சிமிழ் வெள்ளியின் தரையில் இறங்கினாலும், கடும் வெப்ப, வாயு அழுத்தத்தில் பழுதாகிப் படம் அனுப்ப முடியாமல் போனது! ஆனால் மற்ற தகவல்களை எப்படியோ அனுப்பி விட்டது.

Fig 1L
Water & Methane Found in
Extra Solar Planet

வெனரா-9,-10 [1975] முதன் முதல் வெள்ளிக் கோள் தளப் படங்களை நெருங்கி எடுத்து பூமிக்கு அனுப்பின. அவற்றில் சில பகுதிகளில் கூரிய பெரும் பாறைகளும், மற்ற பகுதிகளில் பொடித் தூசியும் தென்பட்டன. ரஷ்யா ஏவிய வெனரா-11,-12 [1978] சுக்கிரனின் கீழ்த்தள சூழகத்தில் [Lower Atmosphere] இருந்த ரசாயனக் கூட்டுறுப்புக்களின் [Chemical Components] பரிமாணங்களைக் [Measurements] கணித்தன. வெனரா-13,-14 [1981] சுக்கிரனில் அலுமினியம், மெக்னீஷியம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மாங்கனிஸ், டிடேனியம், சிலிகான் உலோகங்கள் இருப்பதைக் காமாக்கதிர் நிறப்பட்டை மானிகள் [Gamma Ray Spectrometers] எடுத்துக் காட்டின. வெனரா-15,-16 [1983] விண்வெளிக் கப்பல்கள் வெள்ளியை ஒட்டிச் சென்று, தள ஆய்வுச் சிமிழ்களை வெற்றிகரமாக இறக்கி விஞ்ஞான விளக்கங்களை பூமிக்கு அனுப்பின.

வெள்ளியை நோக்கி அமெரிக்காவின் விண்வெளிக் கப்பல்கள்

1960 மார்ச் 11 இல் முதன் முதல் அமெரிக்கா அனுப்பிய 95 பவுண்டு எடையுள்ள பயனீயர்-5 ஆய்வுச்சிமிழ் தவறு எதுவும் நிகழாது, சுக்கிரனை நெருங்கிப் பறந்து அண்டவெளியின் அகிலக் கதிர், காந்தத் தளவியல் திரட்சிகளைக் [Cosmic Ray, Magnetic-field Intensities] கணித்துப் பூமிக்கு அனுப்பியது. 1962 இல் முதல் அமெரிக்க ஏவிய விண்வெளிக் கப்பல் மாரினர்-2, அடுத்து ஏவிய மாரினர்-5 [1967] சுக்கிரனை ஒட்டிப் பயணம் செய்தன. பயனீயர்-6 [1965] சூரிய சுற்றுவீதியில் [Solar Orbit] ஏவப் பட்டுப் பூமிக்கும், சுக்கிரனுக்கும் இடைப்பட்ட விண்வெளிச் சூழ்நிலையை அறிய அனுப்பப் பட்டது. அமெரிக்கா பெருத்த செலவில் மாரினர் [Mariner-10], பயனீயர் [Pioneer-6,-12,-13], மாகெல்லன் [Magellan] ஆகிய நான்கு விண்வெளிக் கப்பல்களை 1973-1989 ஆண்டுகளில் வெள்ளிக் கிரகத்திற்கு அனுப்பியது.


Fig. 2
Earth & Venus

1974 பிப்ரவரி 5 ஆம் தேதி அமெரிக்கா முதன் முதல் புதன் கோளைக் குறிவைத்து ஏவிய மாரினர்-10 பூமியிலிருந்து 94 நாட்கள் பயணம் செய்து, சுக்கிரனுக்கு 3600 மைல் அருகில் பறந்து 3000 படங்களை எடுத்து அனுப்பியது. பயனீயர் வீனஸ்-1, -2 [1978] [Pioneer Venus-1,-2] இரண்டும் தனித்தனியாக வீதிச்சிமிழ் [Orbiter] ஒன்றையும், சூழ்மண்டல ஆய்வுச்சிமிழ்கள் [Atmospheric Probes] ஐந்தையும் ஏந்திக் கொண்டுச் சுக்கிர தளவரைவுப் [Mapping Venus] பணிக்கும், மேக மூட்டத்தின் ஆராய்ச்சிக்கும் அனுப்பப் பட்டன. 250 மைல் உயரத்திலிருந்தே அடர்த்தியான மேகப் போர்வை சுக்கிரனைச் சூழ்ந்துள்ளதால், வீதிச்சிமிழ் [Orbiter] காமிரா தளத்தைப் படமெடுக்க முடியாது. ஒளிபுக முடியாத மேக மண்டலத்தை ஊடுருவித், தள ஆய்வு செய்து படமெடுக்கக் கதிரலைக் கும்பா [Radar] பயன்பட்டது. 1989 மே மாதம் 4 ஆம் தேதி, முதன் முதலாக அமெரிக்கா புதிய முறையில் விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] மீதிருந்து, அதிகச் செலவில் மாகெல்லன் [Magellan] ஆய்வுச்சிமிழை ஏவியது. அது 15 மாதங்கள் அண்ட வெளியில் பயணம் செய்து, சுக்கிரனை 1990 ஆகஸ்டு 10 ஆம் தேதி அண்டி பல படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

Fig. 3
Venus & Earth Comparison

சுக்கிரனைப் பற்றி அறிந்த தளவியல் விளக்கங்கள்

பூமிக்கு நெருங்கி குன்றிய தூரம் 25 மில்லியன் மைல் இடையே உள்ளது, சுக்கிரன். அளவற்ற ஓளிவீச்சை உண்டாக்குவது, அடுக்கடுக்காய் அடர்த்தியான அதன் வெண்ணிற மேக மண்டலத்தின் மீது பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியே. பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சுக்கிரன் சிலசமயம், ‘விடிவெள்ளியாகக் ‘ [Phosphorus] காலையில் மூன்று மணி நேரமும், அந்தி வெள்ளி அல்லது ‘முடிவெள்ளியாக ‘ [Hesperus] மூன்று மணி நேரம் மாலையிலும் தென்படுகிறது. அதாவது, சூரியனுக்குக் கிழக்கில் 48 டிகிரி கோணத்தை மிஞ்சியும், மேற்கில் 48 டிகிரி கோணத்தை மிஞ்சியும், வெள்ளி பூலோக மாந்தருக்குத் தெரிவதில்லை!

பூமியின் சந்திரன் 27 நாட்களில் வடிவம் மாறி வருவது போல், சுக்கிரனுக்கும் வளர்பிறை, தேய்பிறை மாறி மாறி, ‘மீளும் காலம் ‘ [Synodic Period] 17 மாதங்களுக்கு ஒருமுறை வருகிறது. பூமியிலிருந்து தொலை நோக்கியில் பார்க்கும் போது, பிறைவெள்ளி [Crescent Phase] பெரியதாகவும், முழுமை குன்றிய குறைவெள்ளி [Gibbous Phase] சிறியதாகவும் தெரிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சுக்கிரன் நகரும் போது பிறை வடிவில் பெரிதாகவும், சூரியனுக்கும் பூமிக்கும் அப்பால் சுக்கிரன் நகரும் போது சிறிதாய் முழு வட்டமற்ற குறைவெள்ளியாகத் தென்படுகிறது. பூமி, சூரியன் நேர் கோட்டில், சுற்றி வரும் சுக்கிரன் இரண்டுக்கும் இடையே ‘குறுக்கீடு ‘ [Venus Transit] செய்வது ஓர் அரிய சம்பவம். இரட்டை எட்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து நிகழும் அந்த அரிய முக்கோள்களின் [பூமி, சுக்கிரன், சூரியன்] சந்திப்பு, மீண்டும் நிகழ ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆகலாம். அப்போது சுக்கிரன் ஒரு கரும் புள்ளியாய்க் காணப்பட, சுற்றிலும் சூரிய ஒளி பின்புறத்தில் சிதறி வட்டமாய்த் தெரிகிறது. சென்ற வெள்ளிக் குறுக்கீடு 1882 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அடுத்து வரப் போகும் சுக்கிரக் குறுக்கீடு 2004 ஜூன் 8 ஆம் தேதி என்று எதிர்பார்க்கப் படுகிறது!

Fig. 4
Venus Surface Picture

சுக்கிரனின் தள அழுத்தம் 100 பூவழுத்தம் [Earth atmosphere] என்றும், தள உஷ்ணம் 462 டிகிரி C என்றும் வெனரா-6 இன் தளச்சிமிழ் முதலில் பூமிக்கு அனுப்பியது. [1 பூவழுத்தம் =14.7 psi. வெள்ளியின் தள அழுத்தம் 100×14.7= சுமார் 1500 psi]. வாயு மண்டலத்தைச் சோதித்ததில் கரியின் ஆக்ஸைடு [Carbon dioxide] 97%, நைட்ரஜன் 2%, மற்ற முடவாயுக்கள் [Inert Gases] 1%, பிராண வாயு 0.4%, ஆவிநீர் [Water Vapour] 0.4%. சுக்கிர மண்டலத்தில் நிலப்பகுதியைத் தவிர வேறு நீர்ப்பகுதி எதுவும் கிடையாது. உயிரினங்கள் வாழும் பூமியில் முக்கியமாக இருப்பவை, நைட்ரஜன் 78%, பிராண வாயு 21% ஆவிநீர் 2%. நீர்க்கடல் மூன்றில் இரண்டு பகுதி; நிலப்பாகம் மூன்றில் ஒரு பகுதி. ஆகவே சுக்கிர மண்டலத்தில் உயிரினம் எதுவும் உண்டாகவோ அல்லது வளரவோ எந்த வசதியும் இல்லை! சுக்கிரன் சூரியனை ஒரு முறைச் சுற்றி வரும் காலம் 225 நாட்கள். பூமி சூரியனச் சுற்றி வரும் காலம் 365 நாட்கள். தன்னைத் தானே பூமி 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்வதைப் போல் வேகமாய்ச் சுற்றாது, மெதுவாகச் சுக்கிரன் தன்னைச் சுற்றிக் கொள்ள 243 நாட்கள் ஆகின்றன. சுக்கிரனின் சுய சுழற்சியும் [Spin], அதன் சுழல்வீதிக் காலமும் [Orbital Periods] பூமியின் சுழல்வீதியுடன் சீரிணைப்பில் இயங்கி [Synchronized] பூமிக்கு அருகில் நகரும் போது சுக்கிரன் எப்போதும் ஒரே முகத்தைக் காட்டி வருகிறது.

Fig 5
Solar Stripping of Ions

[தொடரும்]

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Sky & Telescope, Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Venus Turns Itself Inside out ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40205251&format=html (Venus Article)
15 BBC News – Saturn Moon Titan May Have Hidden Ocean By : Helen Briggs (Mar 24, 2008)
16. European Space Agency (ESA) Science & Technology – Evidence for a Subsurface Ocean on Titan (25 March 2008)
17 Hubble Finds First Organic Molecule on Extrasolar Planet (Heic-0807) (Mar 19, 2008)

******************

jayabarat@tnt21.com [March 27, 2008]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts