பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முடத்துவ விண்மீன்களின் ஈர்ப்பலைகள் ! (Gravitational Waves)(கட்டுரை: 15)

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஓர் உன்னத சித்தாந்தச் சாதனை.”

பெர்ட்ராண்டு ரஸ்ஸல் (1872-1970)

“எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும். நியதி பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும்! ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும்!”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

“நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஒரு மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது.”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

“விண்டுரைக்க அறிய அரியதாய்,
விரிந்த வானவெளி யென நின்றனை!
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை!
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை!
மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவது எத்தனை,
அத்தனை யோசனை தூரம்
அவற்றிடை வைத்தனை!

மகாகவி பாரதியார் (1882-1921)

முன்னுரை:

பூமியிலுள்ள கடலலைகளின் ஏற்ற இறக்கங்கள், பூதகரமான வியாழக் கோளின் வால்மீனைப் பிளக்கும் பேராற்றல், காலாக்ஸிகள் என்னும் ஒளிமந்தைகள் விண்மீன்களை வெட்டி விலக்கும் விந்தைப் போக்குகள் அனைத்துக்கும் மூலகாரணம் எது ? அகிலத்தின் மிக்க நலிவு விசையான ஈர்ப்பாற்றலின் அசுரச் சிதைவுச் செயலே ! இவை நம்ப முடியாத நிலையில் இருக்கின்றன. இரசாயன மூலக்கூறுகளால் உண்டான இந்த மனித உடம்பில் எல்லா அங்கங்களையும் மனித ஈர்ப்பியல்பே ஒன்றாய்ப் பிணைத்திருக்கிறது ! பிரபஞ்சத்தில் நகரும் கோடான கோடி விண்மீன் மந்தைகளை ஒன்றாய்ப் பின்னி இருப்பதும் ஈர்ப்பியலே ! பூமியின் மெல்லிய வாயுக் கோளத்தை ஐந்து மைல் உயரத்தில் பாதுகாப்புக் குடையாக நமக்குப் பிடித்திருக்க உதவுவதும் ஈர்ப்பியலே ! அதுபோல் அண்டங்கள் அற்றுக் கொண்டு நழுவிச் செல்வதற்கும் ஈர்ப்பியலே காரணமாக இருக்கிறது ! செவ்வாய்க் கோளில் நீர்வளம் செழிக்க ஒரு காலத்தில் இருந்த வாயு மண்டலம் மறைந்து போனதற்கும் ஈர்ப்பியலே காரணம்.

ஈர்ப்பியல் விசை பிரபஞ்சத்தின் நான்கு அடிப்படை இயற்கை விசைகளில் ஒன்று. மற்ற மூன்று விசைகள் : மின்காந்த விசை, அணுக்கரு வலு விசை, அணுக்கரு நலிவு விசை. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி பரிதி மண்டலத்தின் சுற்றுப் பாதைகளை விளக்குவதோடு, பிரபஞ்சக் கால்-வெளி விரிந்து செல்லும் விதத்தையும் கூறுகிறது. அத்துடன் வளர்வேகத்தில் செல்லும் பளுவான அண்டங்கள் (Accelerated Massive Bodies) எழுப்பிடும் “ஈர்ப்பலைகளைப்” பற்றியும் கூறுகிறது. அவை யாவும் விஞ்ஞானக் கருவிகள் மூலம் நோக்கப்பட்டு நிரூபணம் ஆகியுள்ளன. இப்போது நாமறிவது: பிரபஞ்சப் பெரு வெடிப்பே முதன்முதல் பேரளவு அண்டங்களுக்கு மாபெரும் வளர்வேகத்தை உண்டாக்கி யுள்ளது. கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்னதாகப் பெரு வெடிப்பு நிகழ்ந்திருந்தாலும், இப்போதும் அண்டங்கள் சிலவற்றின் ஈர்ப்பலை எதிரொலிகள் உளவு செய்யும் போது பதிவாக்கப் படுகின்றன.

பிரபஞ்சத்தில் ஈர்ப்பலைகள் எப்படி உண்டாகின்றன ?

ஈர்ப்பியல் கதிர்வீச்சு (Gravitational Radiation) அல்லது ஈர்ப்பியல் அலைவீச்சு (Gravitational Wave) என்பவை காலவெளிக் கடலில் எழுகின்ற துடிப்பு அதிர்வுகள் (Ripples in Spacetime) ! ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி நியூட்டனின் ஈர்ப்பு விசையை ஒருவிதக் காலவெளி வளைவாகக் கூறுகிறது. இதற்குச் சிறிது விளக்கம் தரலாம். விண்கோள்களின் பளுவுக்கும், கால-வெளிப் பின்னலுக்கும் உள்ள ஓர் உறவை அவரது பொது ஒப்பியல் நியதி குறிப்பிடுகிறது : பிண்ட-சக்தியானது கால-வெளியை எப்படி வளைக்கலாம் என்று கூறுகிறது ! கால-வெளியானது பிண்ட-சக்தியை எப்படி நகர்த்தலாம் என்று சொல்கிறது. முதல் கருத்தின் ஆரம்பப் பாதிச் சமன்பாடுதான் ஈர்ப்பியல் அலைவீச்சுகளைப் பற்றி அறிய பாதை காட்டுகிறது.

ஈர்ப்பலைகளை உண்டாக்குபவை : பளுவுள்ள அண்டங்கள், முக்கியமாக “இரட்டை நியூட்ரான் விண்மீன்கள்” (Binary Neutron Stars) அல்லது “இரட்டைக் கருந்துளைகள்” (Binary Black Holes) போன்ற “இரட்டை முடமீன் வடிவுகள்” (Binary Stellar Objects) அல்லது ஒன்றை ஒன்று நெருங்கும் சாதாரண விண்மீன்கள் ஆகியவையே.

ஈர்ப்பியல் அலைவீச்சுக்கு மூன்று நிபந்தனை நிகழ்ச்சிகள் நேர வேண்டும்.

1. ஈர்ப்பியல் அலை உண்டாக்கும் அண்டம் ஏதாவது தொடர் நகர்ச்சியில் செல்ல வேண்டும். நகர்ச்சி இல்லை என்றால் அந்த அண்டத்தில் ஈர்ப்பலைகள் எழ மாட்டா !

2. மின்காந்த அலைகள் சுழற்சி-1 (Spin-1) கொண்ட அண்டங்களால் உண்டாகும். ஆனால் ஈர்ப்பலைகள் சுழற்சி-2 (Spin-2) உள்ள அண்டங்களால் எழுபவை. மேலும் சீரிய உருண்டை வடிவான (Spherically Symmetric Object) ஒற்றைக் கருந்துளை (Single Black Hole) ஈர்ப்பலைகளை எழுப்ப மாட்டா !

3. ஈர்ப்பலை அகற்சி (Amplitude of the Gravity Waves) முடத்துவ அண்டத்தின் பளுவையும், நகர்ச்சி வேகத்தையும் பொருத்தது. பளு மிகையானாலும், வேகம் அதிகமானாலும் ஈர்ப்பலைகளின் அகற்சி பெரிதாகி அவற்றைக் கண்டுபிடிக்க ஏதுவாகிறது.

ஈர்ப்பலைகள் பற்றிய சுருக்கக் கருத்துகள்

— ஈர்ப்பலைகள் சீரான வடிவமற்ற, பளு மிக்க நகரும் முடத்துவ விண்மீன்களால் உண்டாக்கப் படுகின்றன.

— ஈர்ப்பலைகள் ஒளிவேகத்தில் (186,000 மைல்/வினாடி) பரவித் தூரத்தைக் கடக்கும் போது சிறுகச் சிறுகத் தேய்கிறது.

— ஈர்ப்பலைகள் மின்காந்த அலைகளைப் போல் பல்வேறு அதிர்வு வீதத்தில் (Frequency) பரவுகின்றன.

— ஈர்ப்பலைகள் இருவிதச் செங்குத்து அதிர்வுப் போக்கு முறையில் (Two Polarizing Modes) பரவுகின்றன. (Polarization is a property of Transverse Waves which describes the Orientation in the plane perpendicular to the direction of the Waves)

ஈர்ப்பலைகளை உளவிட நாசாவின் விண்வெளித் திட்டங்கள்

முடத்துவ அண்டக் கோள்கள் உண்டாக்கும் ஈர்ப்பலைகள் அப்பால் பரவப் பரவ ஆற்றல் குன்றி
நலிவடைகின்றன. ஆதலால் அவற்றை உளவிக் கண்டுபிடிப்பது மிகச் சிரமத்தைக் கொடுக்கிறது. மற்ற அண்டங்களில் பட்டு எதிரொலிக்கும் மங்கிய ஈர்ப்பலைச் சமிக்கைகளை பூமியில் உளவித் தெரிவது ஒருமுறை. அந்த மங்கிய சமிக்கைகளை உளவி அறிய “லேசர் சமிக்கைத் தடுப்பு முறை” (Laser Interferometry Method) பயன்படுகிறது. இரண்டு மிகக் கனமான திணிவுத் துண்டங்கள் (Two Large Test Masses) அதிகத் தூரத்தில் வைக்கப்பட்டு ஈர்ப்பலை உளவு செய்ய உதவுகின்றன. அத்திணிவுத் துண்டங்கள் எத்திசையிலும் நகர ஏதுவாக அமைக்கப் பட்டுள்ளன. அவற்றின் இடைத் தூரத்தை லேசர் துல்லியமாகக் கணித்து வருகிறது. அவ்விரண்டு திணிவுத் துண்டங்களுக்கு இடையே ஈர்ப்பலைகள் குறுக்கிடும் போது தூரச் சமிக்கையின் அளவு சிறிது மாறுபடுகிறது. அந்த பொறிநுணுக்க முறையில் ஈர்ப்பலைகளை அளக்க உலகத்தில் பல நாடுகள் முயன்று வருகின்றன.

மாஸ்ஸசுஸெட்ஸ் எம்.ஐ.டி, வாஷிங்டன் கால்டெக், லூஸியானா லிவிங்ஸ்டன் ஆகிய மூன்று விஞ்ஞான ஆய்வுக் கூடங்களின் பொறியியல் வல்லநர்கள் சேர்ந்து “லிகோ” வென்னும் நோக்ககத்தை [Laser Interferometer Givitational Waves Observatory (LIGO)] ஆக்கியுள்ளார்கள். பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் ஐரோப்பிய ஈர்ப்பலை நோக்கதத்தின் [European Gravitational Observatory] வானியல் நிபுணர்கள் “விர்கோ ஈர்ப்பலை உளவியை” [Virgo Givitational Waves Detector] தயாரித்துள்ளார்கள். பிரிட்டன், ஜெர்மெனி ஆகிய நாடுகள் (GEO-600 Detector) சேர்ந்து ஜொயோ-600 உளவியைப் படைத்திருக்கிறார்கள். 1995 இல் ஜப்பான் தாமா-300 திட்டத்தை (TAMA-300) ஆரம்பித்து அந்த உளவியும் பணிசெய்யத் துவங்கியுள்ளது.

ஈர்ப்பலை உளவு ஆய்வுகள் புரிய நாசா மூன்று முறைகளில் முயற்சி செய்து வருகிறது. 1.
லீஸா உளவி [Laser InterferometerSpace Antenna (LISA)] 2. உப்பிடும் உளவி (Inflation Probe) 3. பெரு வெடிப்பு நோக்கி (Big Bang Observer). அனைத்துப் பூதளத் திட்டங்களையும் விடப் பெருமளவில் “லீஸா” [Laser InterferometerSpace Antenna (LISA) என்னும் விண்ணுளவியை 2015 இல் ஏவிட முயற்சிகள் நடந்து வருகின்றன. அப்பெரும் விண்ணுளவி மகத்தான முறையில் விஞ்ஞானிகளுக்கு கால-வெளி பிண்டம் ஆகியவற்றின் பின்னலைப் பற்றியும், பிரபஞ்சம் எப்படி தற்போதைய நிலைக்கு வந்தது என்னும் விபரத்தையும் தெளிவாகத் தெரிவிக்கும்.

லீஸா உளவி சாதாரண இரட்டை முடத்துவ மீன்கள், மற்றும் இரட்டைக் கருந்துளைகள் ஆகியவற்றின் ஈர்ப்பலைகளைக் கண்டுபிடித்து அவற்றின் தன்மைகளைக் கணிக்கும். இந்த விண்ணுளவியில் சமகோண முக்கோண (Equilateral Triangle) அமைப்பில் மூன்று விண்படகுகள் லேஸர் கருவிகளால் ஒன்றை ஒன்று நோக்கி நகரும். இந்த முக்கோணத்தின் ஊடே ஈர்ப்பலைகள் குறுக்கீடு செய்தால் லேஸர் சமிக்கைகளின் போக்கு தடைப்பட்டு மாறுபடும். அந்த மாறுதல் சமிக்கைகள் ஈர்ப்பாற்றலின் பண்பாடுகளைக் கணிக்க எடுத்துக் கொள்ளப்படும்.

ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த “ஒப்பியல் நியதி” [Theory of Relativity] அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] ஆகிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது! புது பௌதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை! ஆரம்பத்தில் பலருக்குப் புரிய வில்லை! ஆதலால் பலர் நியதியை எதிர்த்து வாதாடினர்! மானிடச் சிந்தனை யூகித்த மாபெரும் எழிற் படைப்பு, அவ்வரிய “ஒப்பியல் நியதி” என்று கூறினார் ஆங்கிலக் கணித மேதை பெர்ட்ராண்டு ரஸ்ஸல். பல நூற்றாண்டுகளாய்ப் பரந்த விஞ்ஞான மாளிகையை எழுப்பிய, உலகின் உன்னத மேதைகளான, ஆர்க்கிமெடிஸ் [Archimedes], காபர்னிகஸ் [Copernicus], காலிலியோ [Galileo], கெப்ளர் [Kepler], நியூட்டன் [Newton], ·பாரடே [Faraday], மாக்ஸ்வெல் [Maxwell] ஆகியோரின் தோள்கள் மீது நின்று கொண்டுதான், ஐன்ஸ்டைன் தனது ஒப்பற்ற அகில நியதியை ஆக்கம் செய்தார். ஐன்ஸ்டைன் படைத்து முடித்த பிறகு, இருபதாம் நூற்றாண்டிலும் விஞ்ஞான வல்லுநர்களான ஹென்ரி பாயின்கரே [Henri Poincare], லோரன்ஸ் [Lorentz], மின்கோவஸ்கி [Minkowski] ஆகியோர், ஒப்பியல் நியதியை எடுத்தாண்டு, மேலும் செம்மையாகச் செழிக்கச் செய்தனர். ஆதி அந்தம் அற்ற, அளவிட முடியாத மாயப் பிரபஞ்ச வெளியில் தாவி, ஈர்ப்பியல், மின்காந்தம் [Gravitation, Magnetism] ஆகியஇவற்றின் இரகசியங்களை அறிந்து, அணுக்கரு உள்ளே உறங்கும் அளவற்ற சக்தியைக் கணக்கிட்டு வெளியிட்டது, ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி!

விரிந்து கொண்டே போகும் விண்வெளி வளைவு!

பொது ஒப்பியல் நியதி பிரபஞ்சத்தின் அமைப்பு எத்தகையது என்று ஆய்வு செய்கிறது. ஐன்ஸ்டைன் தனித்துவ, நிலைமாறாத [Absolute] அகிலத்தையோ, காலத்தையோ ஒப்புக் கொள்ளாமல் சில விஞ்ஞானிகள் ஒதுக்கித் தள்ளினார்! நோக்காளன் [Observer] அளக்கும் காலமும், வெளியும் அவன் நகர்ச்சியை [Motion] ஒட்டிய ஒப்பியல்பு உடையவை! ஆகவே நீளமும், காலமும் தனித்துவம் இஇழந்து விட்டன! அவை இரண்டும் அண்டத்தின் அசைவு அல்லது நோக்குபவன் நகர்ச்சியைச் சார்ந்த ஒப்பியல் பரிமாணங்களாய் ஆகிவிட்டன. வேகம் மிகுந்தால் ஒன்றின் நீளம் குன்றுகிறது; காலக் கடிகாரம் மெதுவாகச் செல்கிறது! விண்வெளியின் வடிவம் சதுரப் பட்டகமா [Cubical]? அல்லது நீண்ட கோளமா? ஒரு வேளை அது கோளக் கூண்டா? அல்லது அது ஓர் எல்லையற்ற தொடர்ச்சியா [Unbounded Infinity]?

அகில வெளியின் எல்லையைக் கணிக்க இருப்பவை இரண்டு கருவிகள்: பல மில்லியன் மைல் தொலைவிலிருந்து பூமியின் மீது, சுடரொளி வீசும் கோடான கோடிப் “பால் மயப் பரிதிகள்” [Milky Way Galaxies] எழுப்பும் ஒளி, மற்றொன்று அவை அனுப்பும் வானலைகள் [Radio Waves]. ஒளி எல்லாத் திக்குகளிலிருந்தும் பூமியைத் தொடுவதைப் பார்த்தால், ஒன்று அது ஒழுங்கமைப்பு [Symmetrical Shape] உடையது, அல்லது முடிவற்ற தொடர்ச்சி கொண்டது போல் நமக்குத் தோன்றலாம். உண்மையில் அவை இஇரண்டும் அல்ல! ஐன்ஸ்டைன் கூற்றுப்படி பிரபஞ்சத்தை எந்த “முப்புற வடிவியல்” [Three Dimensional Geometry] அமைப்பாலும் உருவகிக்க முடியாது. ஏனெனில் ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யாது தகவல் ஏதும் அனுப்பாததால், அண்ட வெளியின் எல்லை வடிவு நமக்குத் தெரிவதில்லை! ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி கூறுகிறது: ஓர் அண்டத்தின் பளு [Mass] விண்வெளி மீது, நடு நோக்கிய வளைவை [Curvature of Space towards the Centre] உண்டு பண்ணுகிறது. தனியாக வீழ்ச்சி [Free Fall] பெறும் ஓர் அண்டம், வேறோர் அண்டத்தின் வெளி வளைவுக்கு அருகே நெருங்கும் போது, முதல் அண்டம் அடுத்த அண்டத்தை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றுகிறது. அண்ட கோளங்களின் ஈர்ப்பியல்புக்கு [Gravitation], ஐன்ஸ்டைன் வைத்த இஇன்னுமொரு பெயர் “வெளி வளைவு” [Curvature]. ஐஸக் நியூட்டன் ஈர்ப்பியல்பைத் தன் பூர்வீக யந்திரவியலில் [Classical Mechanics] ஓர் உந்துவிசை [Force] என்று விளக்கினார்.

விண்வெளியை ஒரு மாளிகை வடிவாகவோ, கோள உருவாகவோ முப்புற அங்களவுகளால் [Three Dimensional] கற்பனை செய்ய இயலாது. ஐன்ஸ்டைன் கூற்றுப்படி அது நாற்புற அங்களவு [Four Dimensional] கொண்டது. அண்ட வெளியின் நான்காம் அங்களவு [Fourth Dimension], காலம் [Time]. கோடான கோடி அண்ட கோளங்களையும், ஒளிமயப் பரிதிகளையும் [Galaxies] பிரம்மாண் டமான பிரபஞ்சம் தன் வயிற்றுக்குள்ளே வைத்துள்ளதால், விண்வெளி வளைந்து வளைந்து, கோணிப் போய் [Curved & Distorted] விரிந்து கொண்டே போகிறது! அண்ட வெளியின் ஈர்ப்பு விசையால் ஒளியின் பாதை பாதிக்கப் படுகிறது நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் ஒளி, அண்டத்தின் அருகே நேர் கோட்டில் செல்லாது வளைந்தே போகிறது. தொலைவிலிருந்து வரும் விண்மீனின் ஒளி சூரிய ஈர்ப்பு மண்டலத்தின் அருகே சென்றால், அது உட்புறமாக சூரிய மையத்தை நோக்கி, நேர்வளைவு அல்லது குவிவளைவில் [Positive Curve] வளைகிறது. ஒளி சூரிய மண்டலத்தை நெருங்கும் போது, மையத்திற்கு எதிராக வெளிப்புறத்தை நோக்கி, எதிர்வளைவு அல்லது குழிவளைவில் [Negative Curve] வளைவதில்லை! 1919 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது, இஇரண்டு பிரிட்டீஷ் குழுவினர், விண்மீன் பிம்பங்களின் வக்கிர போக்கைப் படமெடுத்து, ஐன்ஸ்டைன் கணித்ததுபோல் ஒளியின் நேர்வளைவு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டினர். ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதியின்படி, சுமார் 25,000 மைல் சுற்றளவுள்ள பூமியில் ஓரிடத்திலிருந்து கிளம்பும் ஒளி, புவி ஈர்ப்பால் வளைக்கப் பட்டு, முழு வட்டமிட்டு புறப்பட்ட இடத்தையே திரும்பவும் வந்து சேர்கிறது.

[தொடரும்]

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Albert Einstein By: Frederic Golden, Time Magazine -Person of the Century [Dec 31, 1999]
2. A Brief History of Relativity By: Stephan Hawking, Time Magazine
3. Einstein’s Unfinished Symphony By: Madeleine Nash, Time Magazine
4. The Age of Einstein By: Roger Rosenblatt, Time Magazine
5. 100 Years of Einstein By: Gregory Mone, Popular Science [June 2005]
6. Gravity Probe Launched By: Chad Cooper, Staff Writer, NASA Kennedy Space Center (Apr 2, 2004]
7. http://www.thinnai.com/science/sc0317021.html [Author’s Article on Einstein]
8. Einstein Probe Heads into Space BBC News.
9. Einstein Mass Energy Equation Marks 100 Years By: Roland Pease BBC Science Writer.
10 All Systems Go on Gravity Probe B Source NASA [April 30, 2004]
11 Testing Einstein’s Universe: Gravity Probe B [Feb 2005]
12 50 Greatest Mysteries of the Universe – What Creates Gravitational Waves ? (Aug 21, 2007)
13 NASA Report : (http://science.hq.nasa.gov/universe/science/bang.html)
14 LIGO (Laser Interferometer Gravitational-Wave Observatory) Fact Sheet : (www.ligo.caltech.edu/LIGO_Web/about/factsheet.html)
15 Astronomy Magazine “The Ugly Side of Gravity” By: C. Renee James
16 Scientific American Magazine “Beyond Einstein” (September 2004)
17 Gravitational Wave Detectors & Spaceflight (www.exodusproject.com/GravWave.htm )

******************

jayabarat@tnt21.com [February 7, 2008]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts