மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


நீர், நிலம், நெருப்பு,
வாயு, வான மாகிய பஞ்ச பூதங்கள்
ஆயுதங் களாய் மாறிக்
கோரப் புயல் வடிவத்தில்
பேரழிவு செய்யும்
தாரணி முழுவதும்!
அங்கு மிங்கும் கண்ணீர்
பொங்கும் புகை மூட்டம்!
வடதுருவப் பனிமலை உருகிக்,
கடல் மட்டம் ஏறும்!
தென்துருவப் பனிப்புயல்
தென்ற லாகும்!
பருவத் தராசு ஏறி யிறங்கிப்
பெருமழை பெய்யும்,
நிலப் பகுதி நீர்மய மாகி மாந்தர்
புலப்பெயர்ச்சி செய்ய நேரும்!
மனிதக் குணம், உயிரினம், பயிர்வளப்
புனிதம் சிதைக்கும்,
சூட்டு யுகப் பிரளயம்,
சிரிப்புடன்
வீட்டு முன் நிற்குதடா!

****************

“கடந்த 1000 ஆண்டுகளில் எந்த நூற்றாண்டிலும் காணாத வெப்ப ஏற்றம் சென்ற 50 வருடங்களில் காணப்பட்டது! தென் அமெரிக்கவாவில் பெரு நாட்டின் உலகப் பெரும் மலைச்சிகரப் பனிக்கிரீடம், வருடத்திற்கு 200 அடி வீதத்தில் குறைந்து, கடந்த 20 ஆண்டுகளாக 22% நிறையளவு உருகிப் போயுள்ளது.”

லோனி தாம்ஸன், பூதளவியல் பேராசிரியர், ஓஹையோ பல்கலைக் கழகம்

2005 ஆண்டு இதுவரைப் பதிவான உச்ச வெப்ப வருடமாகக் கருதப் படுகிறது! 1990 ஆண்டு முதல் 13 உச்ச வெப்ப ஆண்டுகள் பதிவாகி யுள்ளன! 1980 ஆண்டு முதல் 23 ஆண்டுகள் உச்ச உஷ்ண வருடங்கள் தொடர்ந்துள்ளன! 2003 ஆண்டு வேனிற் காலத்தில் ஐரோப்பாவில் மட்டும் வெப்ப அலைகளால் 35,000 பேர் மாண்டதாக அறியப் படுகிறது!

டாக்டர் ஜான் ஹோல்டிரன்

10,000 ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றி முடிந்து போன பனியுகத்தின் போதிருந்த உஷ்ணம் தற்போதைய உஷ்ணத்தை விட 6 டிகிரி C தணிவாகத்தான் இருந்தது. உயிரினக் கோரச் சிதைவுகளைத் [Biodiversity Holocaust] தூண்டி விட 3 டிகிரி C கூடுமான சூடேற்றம் போதுமானது!

பேராசியர் ஸ்டீ·பன் ஸ்னைடர், ஸ்டான்·போர்டு பல்கலைக் கழகம்

பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகின்றன! கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது! கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர். அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் கட்டுரை

1950 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் வட துருவத்துக்கு அடியில் குறுக்கிடும் சமயங்களில் முதன்முதலாகக் கடற்பனி ஆழத்தைத் துல்லியமாகக் கண்டறிந்த போது, பனிப்பாறைத் தடிப்பு கணிக்கப் பட்டது! ஆர்க்டிக் துருவ வட்டாரத்தில் கடந்த 50 ஆண்டுகளாகப் பனியுருகும் காலம் ஒவ்வொரு பத்தாண்டுகளில் 5 நாட்கள் அதிகமாகிப் பனித்தளங்கள் படிப்படியாய் நலிந்து, பனித்தேய்வு வீதம் விரைவாகி வருகின்றது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள்! (1958-1976) ஆண்டுகள் அமெரிக்க இராணுவம் கடற் பனித் தடிப்புகளையும், (1993-1997) ஆண்டுகள் தடிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், ஆர்க்டிக் பனிப்பாறை 42% உருகி நலிந்து விட்டதென்று அறியப்படுகிறது! அதே போன்று 1976, 1996 ஆண்டுகளில் ஆர்க்டிக் வட்டாரத்தை உளவிய பிரிட்டீஷ் நீர்மூழ்கிக் கப்பல் குழுவினர், 20 ஆண்டு இடைக்காலத்தில் பனித்தடிப்பு 43% குன்றியுள்ள தென்றும் கண்டிருக்கிறார்கள்! கடந்த 30 ஆண்டுகளில் செய்த மேற்பட்ட உளவுகளும், கணிப்புகளும் சராசரி கடற்பனித் தடிப்பு 4 மீடரிலிந்து ஒரு மீடர் உருகிச் சராசரி 3 மீடராக மெலிந்து போனது தெரிய வருகிறது. பூகோளக் கண்காணிப்புத் துணைக் கோள்கள் 10 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடற்பனி 4% தேய்ந்து விட்டது என்று கணித்துள்ளன!

ஸ்டீவ் கான்னர், ஆர்க்டிக் துருவப் பனியுருக்கம் (நவம்பர் 11, 2004)

“ஐயமின்றி பூகோளம் சூடாகிறது என்பது நமது காலத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக முதன்மைச் சவாலாகத் தெளிவாகி உறுதியாகி விட்டது. அதனால் உலக நாடுகள் விழித்துக் கொண்டு, புதிய அரசியல் விதி முறைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆயினும் அவை மட்டும் போதா. மேலும் செய்யத் வேண்டியவை யின்னும் மிகையாக உள்ளன. நல்ல செய்தி என்ன வென்றால், அதிகமான மாற்றங்கள் அடுத்து அடுத்து வரப் போவதற்கு அறிகுறிகள் தெரிகின்றன.”

அல் கோர் [Al Gore, Former US Vice President & Environmentalist]

உலக உடல்நலக் கண்காணிப்புப் பேரவையின் கூற்று

21 ஆம் நூற்றாண்டின் முடிவில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் பெருக்கத்தால், பூகோளத்தின் உஷ்ணம் 6 டிகிரி F ஏறிவிடும் என்று உலக உடல்நலப் பேரவை மதிப்பிடுகிறது! அதனால் பேரளவு வெள்ளங்கள், பஞ்சம், வெப்ப அலைகள் [Heat Waves] எழுலாம் என்றும் பேரவை கூறுகிறது. உலக உடல்நலக் கண்காணிப்புப் பேரவை [World Heath Organization (WHO)] சமீபத்தில் உளவறிந்து வெளியான ஓர் அறிவிப்பின்படி, மனிதத் தூண்டல் மாறுதல்களால் ஏற்பட்டச் சூழ்வெளிக் காலநிலைப் பாதிப்புகளால் மாந்தருக்கு நேரும் 5 மில்லியன் மாறுபட்ட நோய்களில் 150,000 நபர் ஒவ்வோர் ஆண்டும் மரணம் அடைகிறார் என்னும் அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது! சூடேறிய சூழ்வெளியின் வெப்ப அலைகளாலும், நாட்டில் புயலடித்துப் பேய்மழைகள் பெய்து வெள்ளக்காடாய் ஆவதாலும் மாந்தருக்குத் துர்நீரால் பல்வேறு தொற்று நோய்கள் பீடிக்கின்றன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்!

சூழ்வெளி மாறுதல் பற்றி உலக நிபுணர்களின் எச்சரிக்கை

2007 பிப்ரவரி 18 ஆம் தேதி அமெரிக்காவின் ஸான் ·பிரான்ஸிஸ்கோவில் [American Association for the Advancement of Science (AAAS)] உலக விஞ்ஞான நிபுணர்கள் பெருத்த எண்ணிக்கையில் ஏகோபித்த குரலில் ஓர் அவசிய எச்சரிக்கையை விடுத்தார்கள், “சூடேறும் பூகோளம் என்பது மனிதரின் ஒரு கோட்பாடில்லை! மெய்யான விளைவுகளைச் சேர்த்து வெளியிடும் ஓர் உண்மை எச்சரிப்பு! சூழ்வெளியின் கிரீன்ஹவுஸ் வாயுக்களில் அதி முக்கிய கார்பன் டையாக்ஸைடு வாயு, 650,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை விட மிகையாகப் பெருகி வருகிறது! பூகோளத்தின் சராசரி உஷ்ணம் பல மில்லியன் ஆண்டுகளாய் உணரப்படாத நிலையை நோக்கிச் செல்கிறது! அநேக நிபுணர்கள் ஒருமித்து ஆண்டு நிறைவு விழா உரையில் உலகுக்கு விடுத்த முதல் எச்சரிக்கை இதுவே!

கடந்த 20 ஆண்டுகளில் ஆர்க்டிக் அரங்கத்தின் பெரும்பகுதியில் உஷ்ணம் 4 டிகிரி C [7 டிகிரி F] ஏறி விட்டதென்று அமெரிக்கக் பூர்வப் புதை விலங்கின வல்லுநர் [Paleontologist of the American Musium] மால்கம் மெக்கென்னா கூறுகிறார். அதே காலத்தில் வடகோளப் பனிப்பரப்பு 6% குருகி விட்டதென்றும், கடந்த 30 ஆண்டுகளில் பனித்தளத்தின் தடிப்பு 42% ஆகக் குறைந்து போனதாகவும் கூறுகிறார். பூகோளம் சூடேறும் போக்கு இதே ரீதியில் பெருகினால், 2100 ஆண்டுக்குள் கனடா, ரஷ்யா, ஸ்காண்டிநேவியாவைச் சேர்ந்துள்ள வடகோளப் பகுதியில் வாழும் உயிரினங்கள் 20% குன்றிவிடும் என்று கனடாவின் டேவிட் சுஸ¥க்கி ஆய்வக [David Suzuki Institute of Canada] அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுக்கிறது. அத்துடன் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட சராசரிக் குளிர்கால மாதங்கள் 18 நாட்கள் குறைந்திவிட்டன என்றும் அறியப் படுகிறது!

இமாலய மலைத்தொடரின் தசோப்புப் பனிப்பீடத்தில் [Dasuopu Glacier] ஆராய்ச்சியாளர்கள் குழிகளை யிட்டுக் காலநிலை மாறுபாடுகள் தற்போது கண்காணிக்கப் பட்டு வருகின்றன. காலநிலைப் பலூன்களைப் மேலே பறக்க விடப்பட்டு 23,500 அடி உயரத்தில் சூழ்வெளியின் மாறுபாடுகள் பதிவு செய்யப் படுகின்றன. அமெரிக்காவில் உள்ள ஓஹையோ பல்கலைக் கழகத்தின் பூதளவியல் பேராசிரியர், லோனி தாம்ஸன் அத்திட்ட அதிபராய்ப் பணியாற்றிக் கூறியது: “கடந்த 1000 ஆண்டுகளில் எந்தக் காலத்திலும் காணாத வெப்ப ஏற்றம் சென்ற 50 வருடங்களில் காணப்பட்டது! தென்னமெரிக்கவாவில் பெரு நாட்டின் உகலப் பெரும் மலைச் சிகரப் பனிக்கிரீடம், வருடத்திற்கு 200 அடி வீதத்தில் குறைந்து, கடந்த 20 ஆண்டுகாளாக 22% நிறை யளவு உருகிப் போயுள்ளது.” “10,000 ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றி முடிந்து போன பனியுகத்தின் போதிருந்த உஷ்ணம் தற்போதைய உஷ்ணத்தை விட 6 டிகிரி C தணிவாக இருந்தது,” என்று ஸ்டான்·போர்டு பல்கலைக் கழகப் பேராசியர் ஸ்டீ·பன் ஸ்னைடர் கூறுகிறார்.


கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை. அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2]. மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas]. அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது. அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692. அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது! பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது. அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines. CBC.ca Website, Canadian Geographic.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Evidence of Human-caused Global Warming Unequivocal [Paris Report (Feb 2, 2007)]
10 An Unequivocal Truth, Global Warming is Man-made Canadian CBC News in Depth: Climate Change [Feb 2, 2007]
11 In Depth Climate Change, Global Warming CBC News (March 24, 2005)
12 Discover Magazine: Earth Science Global Warming Leaves Its Marks By: Josie Glausiuz (Jan 2007)
13 Earth Science And The Environment By: Graham Thompson Ph.D. & Jonathan Turk Ph.D [1993]
14 Canadian Geographic – Annual Environment Issue [May-June 2006]
15 Discover: More Than 50 Discoveries in Science, Genetics, Space, Medicine, Environment, Evolution, Physics & Geology [Jan 2001]
16 Summary on Climate Change & Global Warming [www.greenfacts.org/studies/climate_change]
17 Understanding The Global Carbon Cycle [www.whrc.org/carbon/index.htm]
18 Emminent Scientists Warn of Disastrous, Permanent Global Warming (Feb 19, 2007)

(தொடரும்)
******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (Feb 22, 2007)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts