உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள் -1

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்! ….
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்! …
வானை அளப்போம்! கடல்மீனை அளப்போம்!
சந்திர மண்டலத் தியல் கண்டு தெளிவோம்!

மகாகவி பாரதியார் [பாரத தேசம்]

கப்பலில் பயணம் செய்ய முடியாத எந்தக் கடலுமில்லை! மனிதர் குடியேற முடியாத எந்தப் பூமியுமில்லை!

ராபர்ட் தோர்ன் [Robert Thorne, Geoghapher (1527)]

உலகப் புதிர்களை விடுவிக்கும் பணிகளை மேற்கொள்!
உணர்வாய்! உளவு செய்யும் நாம் கடவுளின் ஒற்ற ரென்று!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [Play: King Lear]

“உலகப் புதிர்களை ஒளித்து வைப்பது கடவுளின் மகத்துவம்! ஆனால் அதைக் கண்டுபிடித்து விடுவிப்பது அரசனின் [அரசாங்கம்] மகத்துவம்.”

·பிரான்ஸிஸ் பேகன் (1605) [The Advancement of Learning]

புல்லாங்குழல் ஞானிக்கு அவன் புதல்வனே.
நல்லிசை கற்றவன் திறமுடன் சிறு வயதிலே! -தெரிந்த
எல்லாக் கானமும் வடிப்பது மட்டும் குழலிலே!
நில்லாமல் பொழிவான் மலைமேல் வெகு தொலைவிலே!

பாலர் களிப்பா [Nusery Rhyme]

முன்னுரை: கற்காலப் பண்டை மனிதர் முதல் தற்கால நவயுக மனிதர் வரை, அனைவரும் தம்மைச் சுற்றியுள்ள உலகை ஆராயவும், தமக்கு அப்பாற்பட்ட விண்வெளியைத் தேடிப் பயணம் செல்வதிலும் தீராத தாகம் கொண்டிருந்தனர்! கற்கால மனிதன் நாற்புறமும் நடந்து சென்றோ, குதிரை மீது சவாரி செய்தோ கண்டுபிடித்த கண்டங்களில்தான் நாமின்று உண்டு, உறங்கி, திரிந்து, போராடி வசித்து வருகின்றோம். தற்கால மனிதன் எளிதில் அணுக முடியாத ஆர்டிக், அண்டார்க்டிக் துருவ முனைகளுக்கும் சென்று மீண்டு விட்டான்! பனி உறங்கும் உன்னதச் சிகரமான இமயமலை உச்சிக்கும் ஏறி இறங்கி விட்டான்! கடலுக்குக் கீழ் ஆறு மைல் ஆழத்திற்கும் தணிவாகப் பசிபிக்கடலில் உள்ள “மெரியானாஸ் பாதாளத்துக்கு” [Marianas Trench, Pacific Ocean] மினி கடலடிக் கப்பலை [“Trieste” US Navy’s Submersive (Mini Submarine)] அனுப்பி எப்படி அழுத்தம் உள்ளது என்று அறிந்துவிட்டார்!

வரலாறு முழுவதும் உலக மாந்தர் பூதளத்தின் குறுக்கிலும், நெடுக்கிலும் தனித்தோ அல்லது குழுவாகவோ நடந்து புலப்பெயர்ச்சி யானதைப் பற்றிப் படித்திருக்கிறோம். பஞ்சம், பட்டினி, நோய், பகைவர் தாக்கல், உள்நாட்டுப் போர், ஜனப் பெருக்கம், வேலையின்மை, பணம் தேடல், ஆய்வுத் தேடல் போன்ற பல காரணங்கள் மாந்தரின் புலப்பெயர்ச்சியை நாட வைத்தன! கண்டங்களுக்குப் புலம் மாறும் சிலர் தரை வழியாகச் செல்கிறார். சிலர் கடல் வழியாகப் படகிலோ, கப்பலிலோ செல்கிறார். அவரில் சிலர் அன்னிய நகரில் நிரந்தரமாகத் தங்கி விடுகிறார். சிலர் உளவுப் பணி முடிந்ததும் தாயகத்துக்கு மீள்கிறார். புகுந்திடும் புதிய நாட்டு மக்களால் சிலர் கொல்லப் படுகிறார்! புகுவோர் சிலர் புது நாட்டு மக்களுடன் போரிட்டு அவரைக் கொன்று விடுகிறார்!

பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பஸ் வட அமெரிக்காவின் கண்டு பிடிப்புக்குக் காரணமாகி உலக வரலாற்றின் மாறுதலுக்கும், மேன்மைக்கும் அடிக்கல் நாட்டினார். ஆர்க்டிக், அண்டார்க்டிக் துருவப் பனித் முனைகளுக்குச் சென்றோர் பெருஞ் சாதனையாளர் என்று பெயர் பெற்றார். இமயத்தின் சிகரத்தில் முதன் முதலில் ஏறி நின்ற டென்சிங், ஹிலாரி ஆகியோர் உலகப் புகழ் பெற்றனர்! எல்லாவற்றுக்கும் மேலாக 1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தேடலில் உலக வரலாற்றுச் சாதனைகளின் உன்னத கிரீடமாகச் சந்திர மண்டலத்தில் முதன்முதல் தடம்வைத்த நீல் ஆர்ம்ஸ்டிராங் பெருஞ் சாதனைத் தீரரெனப் பெயர் பெற்றார். மனித இனம் இந்த மாநிலத்தில் வாழும் வரை என்றென்றும் தள ஆய்வுத் தேடல், அறிவுத் தேடல், விஞ்ஞானத் தேடல், விண்வெளித் தேடல் போன்ற தீராத வேட்கைகளை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது! அரசாங்கமோ அல்லது தனி நபரோ அவற்றை எழவிடாமல் தடுப்பதும் தவறாகும்!

பண்டைக் காலத்துத் தீரரின் நீள் பயணத் தேடல்கள்

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆ·பிரிக்காக் கண்டத்திலிருந்துதான் மனித இனம் முதன்முதலில் தோன்றி விருத்தியானது என்னும் புதிய கோட்பாடு சமீபத்தில் பலராலும் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது! பிறகு அங்கிருந்துதான் மானிடக் குழுவினர் அடுத்தடுத்து உலகெங்கும் பரவிக் குடியேறினார். அவரேதான் பின்னால் வெவ்வேறு வித நிறத்திலும், தோற்றத்திலும் மாறி, வெவ்வேறு மரபுகளைப் பற்றிக் கொண்டு, புது மொழிகளைப் படைத்துக் கொண்டு, பல்வேறு அரசியல் முறைகளில், சமூக வாழ்க்கை வரலாறுகளை வடித்துக் கொண்டார் என்றும் அறியப் படுகிறது. உலகத்தின் பெரும்பாகங்கள் எழுத்தறி வில்லாத, சமூக வரைநெறி யில்லாத, பயண வரலாறுகளை விட்டுச் செல்லாத, சாதாரண மானிடரால் தேடிக் குடியேற்றப் பகுதிகளாய் மாற்றம் அடைந்தன. அவரது துணிவுச் செயல்கள், விடா முயற்சிகள், பயணத் திறமைகள், சாதனைகள் ஆகியவற்றைப் பின்வந்த சந்ததிகள் எதுவும் அறிந்து கொள்ள முடியாமல் போயிற்று!

எனது தேடற் பயணக் கட்டுரைகள் அதற்குப் பின் தோன்றிய நாகரீகச் சமூகங்களின் சாதனைகளைக் கூற வருகின்றன. எனது கட்டுரைகள் கூட்டம், கூட்டமாய்ப் புலப்பெயர்ச்சி செய்தவரைப் பற்றியவை அல்ல. தனிப்பட்ட முறையில் ஒருவரோ, அவரைச் சார்ந்தவரோ தெரியாத தளத்துக்குத் துணிவாகப் பயணம் செய்த தீரரைப் பற்றியவை. எனது கட்டுரை 2350 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் மாஸிடோனியா மாநிலத்து மாவீரர் மகா அலெக்ஸாண்டர் [கி.மு:356-323] முதலாகத் தொடங்குகிறது. கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டர் தனது மத்திம வாழ்வின் துவக்கத்தில் 33 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். பதினெட்டு வயது முதல் அவரது அபாரப் போர்த்திறமை வெளிப்பட்டு, அந்தக் குறுகிய காலத்திலே சீரான கிரேக்கப் படையைத் தயாரித்து வட ஆ·பிரிக்கா, மத்தியாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிக் கடல் வழியாக முதன் முதலில் மீண்டு மத்தியாசியாவை அடைந்தவர். பெரும் படை வீரரை மட்டும் கொண்டு செல்லாது, அலெக்ஸாண்டர் தன்னுடன் விஞ்ஞானிகள், தளவரையாளிகள் [Surveyors] ஆகியோரையும் அழைத்துச் சென்று, பூகோள வரைப்படம், காலநிலை, நாட்டின் வரலாறு, கலை, கலாச்சாரம் போன்றவை பதிவு செய்யப் பட்டன. அதே சமயம் ஐரோப்பிய கிரேக்க நாகரீகம், கலைகள், கலாச்சாரம் பற்றி அந்த நாடுகளும் முதன்முதல் அறிந்து கொண்டன.

கி.மு.1100-1000 ஆண்டுகளில் கிரீஸின் வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மாந்தர் டோரியன்ஸ் [Dorians Tribe] என்போர் தென் ஐரோப்பியப் பிரதேசங்களில் புகுந்து குடியேறினர். கி.மு.445 இல் ஹெரொடோடஸ் [Herodotus: Dorian Greek] என்பவர் எகிப்த் மற்றும் மத்தியாசியப் பகுதிகளில் பயணம் செய்து ·பாரோ மன்னர்களின் பிரம்மாண்டமான பிரமிட்களைப் பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்தார். கி.மு.138 இல் சைனாவின் சாங் செயன் [Chan Ch’ien] என்பவர் மத்தியாசியாவின் குறுக்கே சாமர்க்கண்டு வரைப் பயணம் செய்ததாக அறியப் படுகிறது. அலெக்ஸாண்டரைத் பின்பற்றி எட்டாவது நூற்றாண்டில் [கி.பி.1200] பேகன் வைக்கிங்ஸ் [Pirates: Pagan Vikings] என்னும் கடற் கொள்ளைத் தீவிரவாதிகள் ஐரோப்பாவில் நார்வே, சுவீடன், டென்மார்க், ரஷ்யா ஆகிய நாடுகளை 200 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்தனர். அத்துடன் ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, ஏன் வட அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் முதன்முதல் கப்பலில் சுற்றி வந்து சில இடங்களில் புதுக் குடியேற்றத்தைப் புகுத்தினர்! வைக்கிங் மாந்தர் ஸ்காண்டிநேவியா, கடற்தளப் பகுதிகளில் வாழ்ந்து வந்த வேளாண்மை மக்கள். ஆங்கே ஜனப்பெருக்கம் மிகையாகவே, அவர்கள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது! வைக்கிங்ஸ் தீவிரவாதிகளைத் தொடர்ந்து கப்பல் பயணி வெனிஷியன் மார்கக் போலோ [Venetian Voyager: Marco Polo], ஸ்பானிஷ் கிரிஸ்ட·பர் கொலம்பஸ் [Spanish Voyager: Christopher Columbus], ·பெர்டினென்ட் மாஜெல்லன் [Ferdinand Magellan], வாஸ்கோட காமா, காப்டன் குக், டேவிட் லிவிங்ஸ்டன், ரோவால்டு அமுன்ட்ஸென் [Roald Amundsen] ஆகியோர் தமது தீரக் கப்பல் பயணங்களைத் துவங்கி முடித்துக் காட்டினார்.

(தொடரும்)

************************

தகவல்கள்:

Picture Credits: [The Following References (1 to 8)]

1. Journeys of the Great Explorers By: Rosemary Burton, Richard Cavendish, Bernard Stonehoue [2001]
2. The Discoveries, A History of Man’s Search to Know his World By: Daniel Boorstin [1985]
3. Geographical Atlas of the World [1993]
4. Atlas of World History By: Harper Collins [1998]
5. Atlas of the World By: Reader’s Digest [1992]
6. The Travels of Marco Polo, The Venitian By: William Mars [1948]
7. Far Voyager, The Story of James Cook By: Jean Lee Lantham [1970]
8. Works of Man – A History of Invention & Engineering from the Pyramids to the Space Shuttle By: Ronald Clark [1985]
9. Marco Polo, Travels the Silk Road to China & India, Awake Magazine [June 8 2004]
10 Britannia Concise Encyclopedia [2003]

******************

jayabarat@tnt21.com [September, 21 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts