சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


குடுகுடுப்புக் காலக் குயவன்,
முடுக்கி வைத்த பம்பரக் கோளம்!
உடுக்க டிக்கும் அசைவு போல
நடன மிடும் நமது கோளம்!
பல்லாயிரம் ஆண்டுக் கொருமுறை
பரிதியைச் சுற்றி வரும்
வட்ட வீதி நீளும்!
முட்டை வீதி யாகும்!
கோளத்தின் சுழலச்சு சரிந்து
கோணம் மாறி
மீளும் மறுபடியும்!
பனிக் களஞ்சியம்
துருவத்தின் ஓரத்தில் சேர்ந்து,
பருவக் காலத்தில்
உருகி ஓடும்!
காலக் குயவன்
ஆடும்
அரங்கத்தை மாற்றி,
கரகம் ஆட வைப்பான்!
சூட்டுக் கோளம் மீண்டும்
மாறும்,
பனிக்கோளாய்!

“காலநிலைச் சுற்றுப் போக்கு [Climate Cycles] பரிதியின் கதிர்வீச்சு [Solar Radiation] பூகோளத்தின் மட்டரேகையில் படுவதாலும், விழும் காலத்தைப் பொருத்தும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று வித வேறுபாடுகளால் மாறுபடுகின்றன. முதலாவது பூமி பரிதியை வலம்வரும் சுற்றுவீதி [Orbit] எப்போதும் முழு வட்டமா யில்லாது சற்று நீள்வட்டமாகி மீண்டும் வட்டமாகிறது! இரண்டாவது பூமி ஆடுமோர் பம்பரம் போன்று தலை சுற்றுகிறது [Spin Axis Wobble or Precession]! மூன்றாவது பூகோளத்தின் மத்திம ரேகைத் தளத்திற்கும், சுற்றுவீதித் தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் சில டிகிரிகளில் மாறி வருகின்றன.”

மிலுடின் மிலான்கோவிச் [Milutin Milankovitch, Yogoslav Geophysicist (1879-1958)]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அண்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர். அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

ஆர்க்டிக் வட்டாரத்தைத் துணைக்கோள் கண்காணித்த உளவுகள், பூகோளச் சூடேற்றம் மெய்யானது என்று நிரூபித்ததுடன், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட 8 மடங்கு வேகத்தில் வெப்பச் சீற்றம் ஏறி வருகிறது என்றும் எடுத்துக் காட்டியுள்ளன! கடற்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது. காரணம், கடற்பனிக் குன்றுகள் கடலில் மிதக்கின்றன. ஆனால் கிரீன்லாந்தின் நிலப்பகுதிப் பனிக் குன்றுகள் முழுதும் உருகினால் கடல் மட்டம் 7 மீடர் வரை [சுமார் 25 அடி] ஏறிவிடலாம் என்று அஞ்சப் படுகிறது! ஆனால் அவ்விதம் பனிக்குன்றுகள் யாவும் கிரீன்லாந்தில் உருக 1000 ஆண்டுகள் கூட ஆகலாம்!

மார்க் ஸெர்ரீஸ் [Mark Serreze, University of Colorodo]

பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகின்றன! கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது! கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

முன்னுரை: பூகோளச் சூடேற்றத்திற்கு முக்கிய காரணம் பரிதி, கார்பன் டையாக்ஸைடு அல்ல என்னும் புது நியதி பரவி வருகிறது! அவ்விதிப்படி மனிதர் உண்டாக்கும் கார்பன் டையாக்ஸைடு இரண்டாம் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது! 4.6 பில்லியன் ஆண்டுகளாக நாமறிந்த பூகோளத்தின் வரலாற்றில் பரிதியை வலம்வரும் பூமியின் பாதை மாற்றம், சுழலச்சுத் திரிபு போன்ற மாறுதல்களே பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய காரணம் என்பது உறுதியாக்கப் பட்டிருக்கிறது. சுழலச்சின் கோணம் 23.5 டிகிரி என்பதும், பூமிக்கும் பரிதிக்கும் உள்ள தூரம் 90 மில்லியன் மைல் என்பதும், பூமி வலம்வரும் பாதை வட்டவீதி என்பதும் நிலையான பரிமாணக் கணிப்புகள் அல்ல! அவை மூன்றும் மெதுவாக ஆமை வேகத்தில் விண்வெளியில் மாறி வருகின்றன. அம்மாறுதல்களே பூகோளத்தின் வெப்ப மீறல், பனிப்படிவுக்கு முக்கிய காரணம் என்பது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் உறுதி செய்யப் பட்டன!

கடந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளாக தற்காலப் பனியுகத்தில் ஏற்பட்ட தோற்றம், அழிவுக் கோளாறுகள், பரிதியை வலம்வரும் பூகோளத்தில் மாறி, மாறி மீளும் வட்டவீதி நீட்சி, சுழலச்சின் சாய்வு, துருவத் தலையாட்டம் [Eccentricity, Axial Tilt, Precession] எனப்படும் மூவகைத் திரிபுகளால் நேருகின்றன என்பது 20 ஆம் நூற்றாண்டின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பூகோள நகர்ச்சியின் அந்த மூன்று சுழற்திரிபுகளே “மிலான்கோவிச் சுழற்சிகள்” [Milankovitch Cycles] என்று அழைக்கப் படுகின்றன. சுழற்திரிபுகளின் பரிமாணத்தையும், மீளும் காலத்தை ஆண்டுகளில் கணக்கிட்டுக் காட்டியவர் செர்வியாவின் வானியல் விஞ்ஞானி [Serbian Astronomer] மிலான்கோவிச். பரிதியை வலம்வரும் வட்டவீதி சிறிது நீண்டு நீள்வட்டமாகி மீண்டும் வட்டவீதியாகும் காலப் பரிமாணம் சுமார் 100,000 ஆண்டுகள் என்றும், பூகோளத் துருவத் தலையாட்ட மீட்சி 25,800 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றும், சுற்றும் அச்சு 21.5 டிகிரி முதல் 24.5 டிகிரி வரை திரிபு எய்தி மீண்டும் வர சுமார் 41,000 ஆண்டுகள் ஆகும் என்றும் மிலான்கோவிச் கணித்து அறித்தார்.

வானியல் விஞ்ஞானி மிலான்கோவிச்சின் பூகோளச் சுற்று நியதி:

முதல் உலக யுத்தத்தின் போது, 1914-1918 ஆண்டுகளில் போர்க் கைதியாக புடாபெஸ்ட்டில் [ஹங்கேரி] சிறைப்பட்ட யுகோஸ்லாவின் பூதளவியல் விஞ்ஞானி மிலுடின் மிலோன்கோவிச் [Geophysicist, Milutin Milankovitch] உறுதியாகக் கண்டறிந்தது இதுதான்: பண்டையக் காலநிலை மாறுபாடுகளுக்கு ஒரு முக்கியக் காரணம், பூகோளத்தின் மீது படும் பரிதியின் கதிர்வீச்சுகள் [Solar Radiations] கோடைக் குளிர் காலத்துக்கும், மட்டத் தளத்துக்கும் [Earth’s Season & Lattitude] ஏற்றபடி மாறுகின்றன! பூகோளம் தன்னச்சில் சுழன்று கொண்டு, பரிதியை ஏறக்குறைய வட்டமான வீதியில் வலம் வருகிறது! வட்ட வீதி சற்று நீண்டு நீள்வட்ட வீதியாகி [Circular Orbit –> Eliptical Orbit –> Circular Orbit] மறுபடியும் வட்டவீதிக்கு மீள்கிறது! இது முதல் மாறுதல். ஆனால் பூமி தானே சுற்றும் அச்சு செங்குத்தாக இல்லது தற்போது 23.5 டிகிரி சாய்ந்து உள்ளது. அதன் அச்சின் கோணமும் 21.5 முதல் 24.5 டிகிரி [Angle of Tilt 21.5 –> 24.5 –> 21.5] மாறுபடுகிறது. இது இரண்டாவது மாறுதல். அடுத்து பூமியின் சுழல் அச்சுத் தலையாட்டும் சுழல் பம்பரம்போல் “தலையாட்டம்” [Precession or Spin Axis Wobble] செய்கிறது! இது மூன்றாவது மாறுதல்.

அம்மூன்று வேறுபாடான பூகோள நகர்ச்சியும், சுழற்சியும், ஆட்டமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மீளும் சுற்றுகளாக [Repeat Rhythmic Cycles] வந்து, வந்து பரிதியின் வெப்பசக்தியை உறிஞ்சியும், புறக்கணித்தும் பூமியைப் பனிக்கோளாகவும், சூட்டுக் கோளாகவும் மாற்றி வருகின்றன என்று மிலன்கோவிச் எடுத்துக் கூறினார்! பரிதியின் கதிர் வெப்பம் பூகோளத்தின் துருவப் பிரதேசங்களில் குன்றும் போது, வாயுக்களில் சேர்ந்துள்ள நீர்மை ஆவி நீராய்ப் படிந்து பனிப்பாறைகள் அடுக்கப்படுகின்றன.

1970 ஆண்டுகளில் அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக் கழகத்தின் காலநிலை விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வரும் ஆனந்து வெர்னேகர் [Anandu Vernekar, Dept of Meteorology, University of Maryland, MD] மிலான்கோவிச்சின் பூகோளச் சுற்று நியதி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். நவீனப் பூகாந்தத் திருப்பங்கள் [Geomagnetic Reversals] பண்டைய பனிமூட்ட யுகத்திற்கு [Glacian Periods] முந்தைய காலங்களை மிகவும் நுண்மையாக உளவறிய உதவுகின்றன! அக்கூற்றுக்கு மிலான்கோவிச் நியதி முற்றிலும் சரியாகப் பொருந்தி வருகிறது. நமது பூகோளம் தற்போது அடுத்த பனிமூட்ட யுகத்தை நெருங்கி வருவதால் நாமிப்போது பூகோளத்தின் சூட்டுப் பெருக்கத்தில் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

பூகோளச் சுற்றுப் பாதையின் மையத் திரிபு [Earth’s Eccentricity]

மிலான்கோவிச்சின் முப்பெரும் சுழற்திரிபுகளால் பரிதியின் கதிர்வீச்சு பூகோளத்தின் எந்தப் பரப்பில் விழுகிறது, பூகோளத்தின் எந்தக் காலப் போக்கில் [வேனிற் காலம், இலையுதிர்க் காலம், கூதற்காலம், வசந்த காலம்] படிகிறது என்பதே வெப்ப ஏற்றத்தையும், தணிவையும் நிர்ணயம் செய்கின்றன. முதல் திரிபு பூமியின் சுற்று மைய நகர்ச்சி [Earth’s Eccentricity]. அதாவது பூமி பரிதியைச் சுற்றி வரும் பாதை எப்போதும் வட்டவீதி யில்லை! அப்பாதை 100,000 ஆண்டுகளில் [(0% –> 5% –> 0%) Ellipticity] மாறிக் கொண்டு மீள்கிறது. 0% என்பது வட்டவீதியைக் குறிப்பிடுகிறது. வட்டப் பாதையில் பூமி நான்கு காலத்திலும் ஒரே தூரத்தில் [சராசரி 90 மில்லியன் மைல்] பரிதியை வலம்வருகிறது. 5% அகற்சியில் பூமி ஒருசமயம் பரிதிக்கு மிக்க அருகிலும் [84 மில்லியன் மைல்], நேர் எதிர்புறத்தில் மிக்க தூரத்திலும் [96 மில்லியன் மைல்] பயணம் செய்கிறது!

தற்போது பூமி சிறிது நீண்ட நீள்வட்டத்தில் 3% மிகையான தூரத்தில் சுற்றுவதாக அறியப்படுகிறது. 3% மிகையான தூரம் என்றால், 6% அதிகமான பரிதி வெப்பம் பூதளத்தில் ஜூலை மாதத்தை விட ஜனவரியில் விழுகிறது. மிக்க நீண்ட நீள்வட்டத்தில் [5%] சுற்றும் போது, பரிதியின் பக்கத்தில் வரும் பூதளப் பகுதி, தூரத்தில் வரும் பூதளப் பகுதியை விட 20%-30% மிகையான பரிதியின் வெப்ப சக்தியைப் பெறுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பூமியின் சுற்றுப் பாதை ஏறக்குறை வட்டவீதி யென்று தெரிய வருகிறது.

பூகோளச் சுழலச்சின் சாய்வு [Earth’s Axila Tilt]

பூகோளச் சுழலச்சு, சுற்றுப் பாதை மட்டத்துக்குச் சரிந்துள்ள கோணமே சாய்வுக் கோணம் [Tilt Angle] எனப்படுகிறது. அந்தச் சரிவுக் கோணம் 21.5 டிகிரி முதல் 24.5 டிகிரி வரை 41,000 ஆண்டுகளில் மாறி, மாறி மீண்டும் பழைய கோணத்துக்கே வருகிறது. பூமியின் நான்கு காலநிலை மாறுதல்களுக்குப் பூமியின் சுற்றச்சின் சரிவே கரணம். குன்றிய சரிவுக் கோணம் பூமத்தியப் பகுதிக்கும், துருவப் பகுதிக்கும் உள்ள வெப்ப உறிஞ்சல் வேறுபாட்டை மிகையாக்குகிறது. குன்றிய சரிவுக் கோணத்தில் அதிகமான பனித்தட்டுகள் துருவங்களில் உருவாகின்றன. அதாவது சூடான குளிர்காலத்தில், சூடான வாயு மிகையான நீர்மை ஆவியை [Moisture] உட்கொண்டு, பிறகு பனிப் பொழிவாகப் பெய்கிறது. மேலும் வேனிற் காலம் மித வெப்பத்தில் நிலவி, பனிப்பாறை உருகுதல் வேகம் குறைகிறது. தற்போது சரிவுக் கோணம் [23.5] சுமாராக நடுவில் உள்ளது.

பூகோளத் துருவத்தின் தலையாட்டம் [Earth’s Precession]

பூகோளத் தலையாட்டம் துருவ நட்சத்திரம், வேகா நட்சத்திரம் என்னும் இரண்டு விண்மீன்களின் [Pole Star & Vega Star] இடையே நிகழ்கிறது. அந்தத் தலையாட்டம் 23,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீள்கிறது. சுற்றும் பம்பரத்தின் தலையைப் போல் பூமியின் சுற்றச்சும் சுழல்கிறது! அந்தத் தலை யாட்டத்தால், பூகோளத்தின் வடகோளம், தென்கோளம் ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க வெப்பக் குளிர்ச்சி மாறுபடுகள் உண்டாகுகின்றன.

(தொடரும்)

************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Is Our World Warming? By: Samuel Matthews, Senior Assistant Editor National Geographic [Oct 1990]
10 http://www.thinnai.com/sc1014051.html [Author’s Article on Katrina Damage & Evaquation]
11 Stormy Weather: Can We Link to Global Warming By: Jim Motavalli [Nov 11, 2004]
12 A Cold Hard Look at a Telltale Region Arctic By: Peter Spotts, Christian Science Monitor [Nov 18, 2004]
13 Global Warming : Definitions & Debate [http://zfacts.com/p/49print.html
14 Meltdown: Arctic Wildlife is On the Brink of Catastrophe By Steve Connor [Nov 11, 2004]
15 Discovery of Greenpeace Expedition on Greenland By: Dr. Gordon Hamilton [July 22, 2005]
16 Carbon Dioxide [CO2] & Global Warming Potential [Several Internet Reports]
17 Ecological Reports: The Data on Global Warming is Conclusive [Jan 29, 2004]
18 Third World Nears Brunt of Global Warming Impacts By: Paroma Basu [July 11, 2006]
19 Ozone Crisis, The 15 Year Evolution of a Sudden Global Emergency By: Shron L. Roan [1989]
20 Evidence for Global Warming: Degradation of Earth’s Atmosphere; Sea Level Raise; Ozone Holes; Vegetation Response By: Dr. Mitchell K. Hobish [Earth System Science]
21 Warning from Al Gore on Future, “Global Warming Called an Emergency” (June 5, 2005)
22 National Geographic: “Unlocking the Climate Puzzle [May 1998]
23 National Geographic: “Global Warming” Your Vacation May Never Be the Same, The Climate Bomg By: Jonathan Tourtellot [July-Aug 2006]
24 Macleans Magazine: Now with the Weather -Al Gore [May 22, 2006]
25 Pledge to See “An Incovenient Truth” Movie [May 27, 2006]
26 Milankovitch Cycles: Changes in Earth-Sun Interaction By: Matt Rosenberg
27 Astronomical Theory of Climate Change -NOAA Paleoclimatology Program [Sep 9, 2003]
28 Anandu Vernekar Home Page Biographical Sketch [www.atmos.umd.edu/~adv/]

******************

jayabarat@tnt21.com [August, 3 2006]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts