விண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை! (Earth ‘s Deep Impact Space Probe Hits the Comet)

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


பரிதியின் கவர்ச்சி வலையில் சிக்கி

திரிந்து வரும்

வால்மீனை விரட்டி,

காலவீதி கணிக்கிட்டு

புவித்தள ஏவுகணை

அவிழ்த்து விட்ட விண்ணுளவி,

கவண் கல் வீசி

வயிற்றிலே அடித்து

காயப் படுத்தி

வாயுக்களை வெளியேற்றும்

பாயும் ஒளிவீசி!

‘டெம்பெல் வால்மீன் நிச்சயமாகப் புதிய தகவல்களை வைத்துள்ளது! இன்னும் மிகையான புதிர்களையும் நமக்கு வெளியிடப் போகிறது. ‘

ரிச்சர்டு கிராம்மியர் நாசா திட்ட மேலதிகாரி

‘டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று! நாங்கள் நெடுங்காலம் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று! வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதிகள் கொண்டவை அல்ல! அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியம் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழி நிரூபித்துக் காட்டும். ‘

டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டிஃப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து

விண்வெளி வரலாற்றில் இன்னுமோர் மகத்தான சாதனை

1942 ஆம் ஆண்டில் அணுவியல் மேதை என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi (1901-1954)] நியூட்ரான் கணைகளை ஏவிக் கண்ணுக்குத் தெரியாத யுரேனிய அணுவைத் தாக்கி, சிகாகோ நகரில் அணுக்கருத் தொடரியக்கத்தை உண்டாக்கி வெற்றி பெற்றார்! அதைப் போன்று 2005 ஜூலையில் அமெரிக்கா 333 மில்லியன் டாலர் நிதியைச் செலவு செய்து, 370 கிலோ கிராம் விண்ணுளவியை [Space Probe] அண்டவெளியில் அனுப்பி, டெம்பெல்-1 என்னும் வால்மீனை [Comet: Tempel-1] வயிற்றில் அடித்துப் பெரும் வெடிப்பொளியைக் கிளப்பி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பேரடி வால்மீனைப் பிளக்க முடியா விட்டாலும், ஆராய்ச்சி செய்ய ஒரு பெரும் வட்டக்குழியை உண்டாக்கி விட்டது! இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை! பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை! எறிகணை மோதி வால்மீனில் ஒளிக்கனல் பற்றியதை ஹப்பிள் தொலைநோக்கியும் [Hubble Telescope] படமெடுத்து அனுப்பி யுள்ளது!

‘ஆழ மோதல் ‘ [Deep Impact] என்று நாசாவால் பெயரிடப் பட்டது அத்திட்டம்! 1998 ஆம் ஆண்டில் ‘ஆழ மோதல் ‘ என்னும் திரைப்படம் ஒன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அத்திரைப்படத்தைப் பின்னணியாகக் கொண்டு பெயரிடப்பட்ட அத்திட்டம், அதில் வரும் ஒரு முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வையும் காண முற்பட்டு மகத்தான வெற்றியும் பெற்றது! விண்வெளியிலிருந்து பூமிநோக்கி விழும் ஒரு விண்கல்லை அணு ஆயுத வெடி மூலம், விண்வெளி விஞ்ஞானிகள் திசை திருப்ப முற்படும் ஒரு புனைகதை அது! பூமியிலிருந்து மனிதரற்ற வாகனத்தை அனுப்பி மெய்யாக வால்மீனைக் குறிவைத்து எறிகணையால் வெற்றிகரமாக மோதி அடித்தது, அத்தகைய ஓர் அசுர சாதனைக்கு வழி வகுத்து விட்டது என்று உறுதியாகச் சொல்லலாம்!

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிதி மண்டலம் தோன்றிய போது, ஆர்கானிக் அண்டச் சிதறலைப் [Organic Intersteller Dust] பற்றிக் கொண்டு, வால்மீன்கள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாறு முதன்மையும், முக்கியத்துவமும் பெற்ற இந்த திடார்மோதல், வால்மீன் பனித்தளத்தின் கீழே பதுங்கிக் கிடக்கும் உயிர் மூலவிகளின் பிண்டத்தை [Living Matter] உடைத்து வெளியே கொண்டு வரலாம் என்று நினைக்கிறார்கள். வால்மீனை நோக்கி விண்சிமிழ் [Spacecraft] ஏவிய 820 பவுண்டு எடையுள்ள எறிகணைத் தாமிர உலோகத்தில் [Copper Projectile] தயாரிக்கப்பட்டது. தாமிரக் கட்டி வால்மீனைத் தாக்கிய போது, அதன் வேகம் மணிக்கு 23000 மைல்! அப்பேரடி வால்மீன் வயிற்றில் 100 மீடர் விட்டம், 15-20 மீடர் ஆழத்தில் பெருங்குழியைத் தோண்டி 100,000 டன் நிறையுள்ள பொருட்களை வெளியேற்றினும், வால்மீனின் சுற்றுவீதியைச் [Comet ‘s Orbit] சீர்குலைக்காது என்று நாசா நிபுணர்கள் சொல்கிறார்கள்! விண்வெளியில் சிதறிய அந்தச் சிதைவுப் பொருட்களால் பூகோளத்துக்கு எவ்வித இன்னலும் விளையாது என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

வால்மீன் ஆழ்குழித் திட்டம் ஆரம்ப தினம்

2005 ஜனவரி 12 இல் பிளாரிடா கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II ராக்கெட்டை [Boeing Delta-II 2925 Rocket] 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றிப் பூமியை நெருங்கி வரும் டெம்பல்-1 வால்மீனைக் குறிவைத்து நாசா விஞ்ஞானிகள் ஏவினார்கள். ராக்கெட் பகுதியில் 10 அடி நீளத்தில் அனைத்து சாதனக் கருவிகளையும் அமைத்தது ஒரு திறமையான சாதனை! வாகனத்தில் ராக்கெட், விண்சிமிழ், எறிகணை மற்றும் கருவிகள் [Rocket, Flyby Spacecraft, Impactor & Instruments] ஆகியவை உள்ளே அமைக்கப்பட்டன. முதற் கட்டத்தில் ஒன்பது சிறிய உந்து ராக்கெட்டுகள் [First Stage Nine Booster Rockets], பிரதம எஞ்சினுடன் சுடப்பட்டு வாகனத்தை விடுதலை வேகத்தில் [Escape Speed] தூக்கிச் சென்று விண்வெளியில் விட்டன. பிறகு இரண்டாம் கட்ட ராக்கெட் விண்சிமிழையும், எறிகணையையும் தூக்கி வால்மீனைத் துரத்திப் பிடிக்க பயணம் செய்தது. மூன்றாம் கட்டத்தில் விண்சிமிழ் மட்டும் வால்மீனை 5000 மைல் நெருங்கி, எறிகணையை விடுவித்தது. எறிகணை வால்மீனை மோத 24 மணி நேரம் பிடித்தது. ஆறு மாதங்கள் வாகனம் பயணம் செய்து 2005 ஜூலை 3 ஆம் தேதி வரலாற்று மகத்துவம் பெற்ற வால்மீன் மோதலை, நாசா விண்வெளியில் நடத்திக் காட்டியது! உருளைக் கிழங்கு போல் தெரியும் டெம்பெல் வால்மீனின் அளவு: 14 கி.மீடர் அகலம், 4 கி.மீடர் நீளம் [8.4 மைல் X 2.4 மைல்]. 83 மில்லியன் மைலுக்கு அப்பால் வால்மீன் மோதல் நிகழ்ந்தாலும், அந்த ஒளிமயக் காட்சியைப் பூமியில் சிலர் நேராகக் காண முடிந்திருக்கிறது.

வால்மீன் மோதலில் கண்டவை என்ன ?

திட்டமிட்ட நேரத்தில், திட்டமிட்ட பகுதியில் விண்சிமிழ் தாமிர எறிகணையை விடுவித்து வால்மீனில் மோதிப் பனித்தூளையும், விண்புழுதியையும் வெளியேற்றியது. பேரடிபட்ட இடத்தில் பெருங்குழி ஏற்பட்டதுடன், மோதிய கனல் வெப்பம் பேரொளிக் காட்சியை வான வேடிக்கையாகக் காட்டியது! சில இடங்களில் தூர நோக்கிகள் [Telescopes, Binoculars] மூலமாக அல்லது நேராக அந்த ஒளிமயத்தைக் காணலாம் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்தனர்! மோதலின் போது, விண்வெளியில் எதிர்பார்த்த அளவை விடப் பெரிதான ஒளிமயக் காட்சி எழுந்தது என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வால்மீன் மோதல் திட்டத்தின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான, ரோடு ஐலண்டு பிராவிடன்ஸின் பிரெளன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீடர் ஸுல்ஷ் [Dr. Peter Schultz, Brown University, Providence, Rode Island] கூறுகிறார்: ‘வால்மீனின் தளத்தில் மணிக்கு 23000 மைல் வேகத்தில் அடித்த எறிகணையால் பிரமிக்கத் தக்க ஒளிமயம் எழும் என்பதில் சிறிதளவு ஐயப்பாடும் இருக்க முடியாது. மோதலினால் கிளம்பிய வெப்பம் பல்லாயிரம் டிகிரி கெல்வின் [Kelvin] உஷ்ணத்தை உண்டாக்கி, எந்த உலோகத்தையும் கனலாக்கி ஒளியை உமிழச் செய்யும். பக்க விளைவாக நாங்கள் உண்டாக்கிய தாக்குதலே பேரோளியை எழுப்பி, எங்கள் படம் எடுக்கும் திட்டத்துக்கு மின்னல்போல் வெளிச்சம் காட்டியது.

வால்மீன் ஆழ்குழித் திட்டத்தின் குறிக்கோள்கள்

எறிகணையுடன் அண்டையில் பறக்கும் விண்சிமிழ் [Flyby Spacecraft] 3.3 மீடர் நீளம், 1,7 மீடர் அகலம், 2.3 மீடர் உயரம் உள்ளது. விண்சிமிழின் எடை: 650 கி.கிராம். மோதும் எறிகணையின் எடை: 370 கி.கிராம். மோதல் உண்டாக்க எறிகணை 24 மணி நேரத்துக்கு முன்பு, விண்சிமிழை விட்டு விடுவிக்கப்படும். எறிகணை மோதும் போது, விண்சிமிழ் வால்மீனுக்கு அருகில் பயணம் செய்து, வான வேடிக்கைப் பார்த்து, பூமிக்குத் தகவல் அனுப்பும். எறிகணை மோதுவதற்கு முன்பு வால்மீனை நெருங்கும் போது எடுக்கும் படங்கள், தகவல்கள் ஆகியவற்றை முதலில் விண்சிமிழ் ஏற்றுக் கொண்டு பூமிக்கு அனுப்பும். அடுத்து மோதும் போதும், மோதலுக்குப் பிறகும் நிகழும் காட்சிகள் யாவற்றையும் விண்சிமிழ் சேகரித்துப் பூமிக்கு அனுப்பும். அதாவது விண்சிமிழ் அருகில் பறந்து செல்லும் போது, வால்மீனுடன் மோதிய பின்பு எழும் ஒளிமயம், விளையும் குழி, சிதறும் துணுக்குகள், வாயுக்கள் விபரம் யாவற்றையும் சேமித்துக் கொள்ளும்.

விண்சிமிழின் சிறிய உந்திகள் இயங்கி, வால்மீனுக்கு 5000 மைல் தூரத்தில் பயணம் செய்து முப்பெரும் பணிகளை மேற்கொள்ளும்:

1. வால்மீனில் 20 மீடருக்கு மேற்பட்ட ஆழக்குழியை ஏற்படுத்த [>30 அடி ஆழக்குழி] எறிகணைக்குப் போதிய இயக்க சக்தியை [Kinetic Energy] அளிப்பது.

2. பத்து நிமிடங்களுக்கு மேலாக வால்மீன் பாதிப்புகளை விளக்கமாகப் பதிவு செய்வது. [மோதல் வெடிப்பொளி, வாயுக்கள், துணுக்குகள் வெளியேற்ற விளைவுகள், குழி எழுச்சி, குழிக்குள் நோக்குவது]

3. குழிக்குள்ளே உளவி ஒளிக்கற்றைக் கணிப்பு [Spectrometry] மூலம் வால்மீன் உட்பண்டங்களின் விபரங்களைப் பதிவு செய்வது.

வால்மீன் மோதலில் விண்சிமிழ் அனுப்பிய படங்கள்

மோதல் வெற்றிகரமாக நிகழ்ந்து 12 மணி நேரங்கள் கழித்து நாசா விஞ்ஞானிகள் எறிகணை மோதுவதற்கு முன்பு நெருங்கி எடுத்த வால்மீனின் படங்களையும், மோதிய நிகழ்ச்சிப் படங்களையும் காட்டினார்கள். ‘ஆழ் மோதல் ‘ வால்மீன் திட்டத்தின் பிரதம விஞ்ஞானி டாக்டர் மைக்கேல் ஏகேர்ன் [Dr. Michael A ‘Hearn, University of Maryland], மோதல் நேர்ந்தபின் கூறியது: ‘எறிகணை வால்மீனில் மோதிய காட்சி மகத்தானது! நான் எதிர்பார்த்த ஒளிவீச்சை விடப் பேரளவில் எழுந்தது! வால்மீனின் நெருக்கப் படங்கள் விந்தையாக இருந்தன! எதிர்பார்த்த முறையில் வால்மீன் தோன்றாமல், பள்ளங்கள் நிரம்பிய உருளைக் கிழங்கு போல் திடக்கோளாகக் காணப்பட்டது. மோதலில் வால்மீன் வயிற்றிலிருந்து வெளிப்பட்ட பேரொளி, வாயுக்கள், துணுக்குகள், தோன்றிய பெருங்குழி, பரிதி ஒளியூட்டும் பனித்துளிகள் யாவும் பிரமிக்கத் தக்க முறையில் இருந்தன! ‘குழியின் தூசி மண்டலம் குழியின் அகலத்தையும், ஆழத்தையும் காண முடியாமல் மூடி யிருந்தது என்று மைக்கேல் ஏகேர்ன் கூறினார். பெருங்குழியில் கிளம்பும் தூசிகள் அடங்குவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்!

‘எங்கள் ஆய்வுச் சோதனைகள் எல்லாம் சிறந்த முறையில் நடந்தன. நாங்கள் வால்மீனைத் தொட்டோம், கடுமையான வழியில் ‘, என்று துணை ஆய்வாளர் பிரெளன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பீடர் ஸுல்ட்ஸ் கூறினார். வால்மீன் பனித்துளிகள் சிக்கிக் கொண்ட, மென்மையான தூசிகள் நிறைந்த வட்டக் குழிகள் உள்ள ஓர் அண்டமாகத் தெரிகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பனித்தளம் மூடிய பாறைக் கோளான இந்த வால்மீனின் உட்தளப் பண்டங்களை ஆராய்வதால், பரிதியின் மண்டலத்தையும் அண்டக் கோள்களையும் உளவ முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். வாயுக்களின் பூதமுகிலும், அண்டத் தூசிகளும் கொந்தளித்து மோதி, 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிதி மண்டலத்தில் எஞ்சிய படைப்புப் பண்டங்களில் வால்மீன்கள் தோன்றின என்ற கருத்து நிலவி வருகிறது. மோதல் நேரும் போது விண்சிமிழ் 8500 கி.மீடர் [5000 மைல்] தூரத்தில் பயணம் செய்து விளைவுகளைப் பதிவு செய்தது. பிறகு கவசக் குடைகள் கொண்டு விண்சிமிழ் வால்மீனுக்கு 500 கி.மீடர் [300 மைல்] அருகில் பறந்து சென்ற போதும் அதற்கு எந்தப் பாதகமும் நேரவில்லை என்று அறியப்படுகிறது!

வால்மீனின் ஆழ்குழி ஆராய்ச்சியால் உலகுக்கு என்ன பயன் ?

பரிதியை வலம்வந்து புவியை நெருங்கிச் செல்லும் ஓர் வால்மீனின் மாதிரியை எடுத்தோ அல்லது மனிதரற்ற விண்ணுளவியைத் தளத்தில் இறக்கியோ ஆழ்ந்து ஆராய்வதைத் தவிர்த்து, வால்மீன் வயிற்றைச் சிறிது காயப்படுத்தி, 333 மில்லியன் டாலர் பணத்தை விரையமாக்கி விஞ்ஞானிகள் உருப்படியாக என்ன சாதித்தார்கள் என்னும் வினா பலரது மனதில் தோன்றலாம்! மர்மமான இந்த வால்மீன் ஆழ்குழி ஆராய்ச்சி மனித முன்னேற்றதுக்கு என்ன பயன் அளிக்கப் போகிறது என்னும் கேள்வி சிலருக்கு எழலாம்! மெய்யாக இவ்வாராய்ச்சி வரலாற்று மகத்துவம் அல்லது முக்கியத்துவம் உடையதா வென்று சில மேதைகள் ஐயப்பாடு கொள்ளலாம்! நிகழ்ச்சி நடந்து இரண்டு நாட்கள் கடந்த இன்று இதை மட்டும்தான் ஒருவர் கூற முடியும்: 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வால்மீன் கடலில் விழுந்து, உலகைக் கலக்கி அடித்து டைனோஸார்ஸ் போன்ற விலங்கினம் யாவும் மடிந்து போயின என்பதை நாம் மறக்கலாகாது! எதிர்காலத்தில் அவ்விதம் வழி மாறிய ஒரு வால்மீனோ அல்லது விண்கல்லோ புவியை நோக்கித் தாக்க வரும் தருணத்தில், அணு ஆயுதத்தை விண்கப்பல் மூலம் அனுப்பி அதனைச் சரியான திக்கில், சரியான நேரத்தில் அடித்துத் திசைமாற்ற முடியும்! அதனால் ஓரளவு கதிரியக்கப் பொழிவுகள் விழ வாய்ப்புக்கள் இருப்பினும், இரண்டு அரக்கர்களில் எவனுடைய பாதிப்பை மனித இனம் ஏற்றுக் கொள்ளலாம் என்று அப்போது முடிவு செய்ய வேண்டிய திருக்கும்.

****

தகவல்:

1. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005

2. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]

3. Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]

4. Watch Deep Impact ‘s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.com July 1, 2005]

5. NASA to Study Comet Collision www.PhysOrg.com [2005]

6. NASA Looks for Signs of Success from Celestial Broadside www.PhysOrg.com [2005]

7. Deep Impact Makes a Better Impact than Planned http://english.people.com.cn/ [July 5, 2005]

8. Deep Impact Slams into Comet By: Anthony Duignan-Cabrera Space.com Managing Editor {July 4, 2005]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 13, 2005)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts