சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
பூதள விண்வெளித் தீரர்கள் முன்னாள்
சீதள நிலவில் பாதங்கள் வைத்தார்!
முடுக்கும் பேராற்றல் ஈர்ப்பின்
கவண்வீச்சில் தாவி
காஸ்ஸினி விண்கப்பல் வியாழக்கோள் தாண்டி
சனிக்கோள் சரண் புகுந்து சுற்றிவரும்!
பனிக்கோளான துணைக்கோளில் இறங்கி
தடம் வைத்துப்
படங்களை
அணியாக அனுப்பியது, ஹியூஜென்
பனியாரச் சிமிழ்!
‘பரிதியைச் சுற்றிவரும் நீள்வட்டவீதி மட்டத்துக்குச் சாய்வாக [Inclined to the Ecliptic (Orbital Plane)] சனிக்கோளுக்கு அதனைத் தொடாத மெல்லிய வட்டத் தட்டு ஒன்று இருப்பதைத் தொலைநோக்கி மூலம் கண்டேன். அடுத்து நான் கண்ட சனியின் மிகப்பெரும் சந்திரனுக்கு டைட்டான் [Titan] என்னும் பெயரைச் சூட்டுகிறேன் ‘.
கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens (1655)]
‘சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினிக் கப்பலும், அதன் மாபெரும் துணைக்கோள் டைட்டானில் தடம் வைத்த ஹியூஜென்ஸ் உளவிவும், தள மண்டலத்தை ஆய்ந்து அனுப்பிய தகவல்கள், பூகோளத்தில் எவ்விதம் உயிரினங்கள் உதயமாயின என்னும் புதிரை விடுவிக்கச் சில குறிப்புகளை அளிக்கலாம். ‘
காஸ்ஸினி-ஹியூஜென் குறிப்பணி
‘டைட்டான் துணைக்கோள் விஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டியதற்கு காரணம் இதுதான்: தற்போது விண்வெளி உயிரினம் [Astrobiology] உருவாக்க உதவும் ஓர் ஆர்கானிக் உலை [Organic Reactor] டைட்டானில் இயங்கி வருகிறது! ஒருசமயம் பூகோளத்தில் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது போல், நாம் எதிர்பார்க்கும் ஓர் ஆர்கானிக் உலை மாடலை [Possible Model] அது காட்டி வருகிறது. பரிதியின் ஒளியில் ஆர்கானிக் இரசாயனம் மிக்கப் பின்னலான மூலக்கூட்டுகளை [Complex Compounds] ஆக்கியதுபோல் நாங்கள் சக்தி இயக்கங்களின் மூலம் கணித்துள்ளோம். அவற்றின்படி நாம் பூமித் தண்ணீரில் தப்பிக் கொள்வதைப் போல், டைட்டான் தளத்தின் கடுங்குளிர் மீதேன் திரவத்தில் பிழைத்துக் கொள்ளும் உயிர் ஆர்கானிஸம் [Living Organism] இருக்கலாம் என்று கருதுகிறோம். ‘
கிரிஸ் மெக்கே [Ames Research Center]
‘காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் சனிக்கோளைச் சமீபத்தில் சுற்றியபோது ஏற்கனவே எடுத்த டைட்டான் முகப்படங்கள் பல மகத்தானவை! ஆயினும் புதிரான சனிமண்டலத்தின் துணைக் கோள்கள் பற்றி இன்னும் அறிய வேண்டியவை அநேகம் உள்ளன. டைட்டானை முற்றிலும் கனத்த முகில் மண்டலம் சூழ்ந்திருப்பதால் பரிதியின் ஒளி புக முடியாமல், தளப்பொருட்கள் போதிய நிழலின்றி மூன்றாம் பரிமாணமில்லாமல் [Third Dimension (Depth)] தட்டையாகப் படத்தில் தெரிகின்றன. ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயம் சொல்லலாம். டைட்டான் தளப்பரப்பு இளமையாகத் தோன்றுகிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உண்டான தளமாக டைட்டான் தெரியவில்லை! ஏதோ புழுதிகள் படிந்தாகத் தோன்றி, விண்கற்கள் விழுந்து மாபெரும் வட்டக் குழிகள் பல வெட்டப் பட்டவையாகக் காணப்பட வில்லை. ‘
காரோலின் போர்கோ [Carolin Porco, ESA Cassini Imaging Team]
‘பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, டைட்டான் துணைக்கோள்! ஆரஞ்சு முகில் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாகப் பூர்வீகப் பூமி எவ்விதம் உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்! ‘
டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]
‘பரிதி மண்டலத்திலே சனிக்கோளின் துணைக்கோள் டைட்டான் ஒன்றுதான், நமது பூகோளத்தைப் போன்று, கனத்த வாயு மண்டலத்தைச் சுற்றிலும் கொண்டது! அதன் வாயுச் சூழ்வெளியில் முக்கியமாகப் பேரளவு நைட்டிரஜன் வாயு, சிற்றளவு ஆர்கான், மீதேன், ஹைடிரஜன் வாயுக்கள் கலந்துள்ளன! ‘
வாயேஜர் விண்வெளிக் கப்பல் தகவல் (1980-1981)
‘இதுவரைக் குருடர் தடவிப் பார்த்த யானையைப் போன்றுதான், சனிக்கோளின் காந்த கோளத்தைப் பற்றி விஞ்ஞானிகள் தெரிந்து கொண்டிருந்தனர்! இப்போதுதான் மெய்யான யானைப் பார்க்கப் போகிறோம் ‘
டாக்டர் டாம் கிரிமிகிஸ் [John Hopkins Applied Physics Lab. Laurel, Maryland]
முன்னுரை: சனிக்கோளைத் தொலைநோக்கியில் ஆய்வு செய்த முப்பெரும் விஞ்ஞானிகள், இத்தாலியில் பிறந்த காலிலியோ [1564-1642], டச் மேதை கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [1629-1695], பிரென்ச் கணித ஞானி கியோவன்னி காஸ்ஸினி [1625-1712]. 350 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனிக்கோளை ஆராய்ந்தவர் உலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானிக் கருதப்படும் காலிலியோ. அவர் ஆக்கிய தொலைநோக்கிப் பிற்போக்கானதால் சனியின் வளையங்கள் செம்மையாகத் தெரியவில்லை! கால வேறுபாட்டால் சனி வளையங்களின் சரிவுக் கோணம் மாறுவதையும், காலிலியோ காணாது தவற விட்டார்! வளையங்களை 1610 இல் சனியின் சந்திரன்கள் என்று கூறிய தன் கருத்தை மாற்றி 1612 இல் காலிலியோ சனி ஒரு நீள்கோளம் [Ellipsoidal Planet] என்று தவறாகக் கூறினார்! அதன்பின் 1655 இல் ஹியூஜென்ஸ் முதலில் டைட்டான் துணைக்கோளைக் [Titan] கண்டுபிடித்தார். ஹியூஜென்ஸ் காலிலியோவின் கருத்தைத் தனது மேம்பட்ட தொலைநோக்கியில் சரிபார்த்த போது, அவை சந்திரன்கள் அல்ல வென்றும், சனி நீள்கோள் அண்டமில்லை என்றும் 1659 இல் அறிவித்தார். சனியைச் சுற்றி இருக்கும் ‘வளைந்த திடத் தட்டுதான் ‘ [Solid Plate] அவ்விதக் காட்சியைக் காலிலியோவுக்கு காட்டி யிருக்க வேண்டும் என்று ஹியூஜென்ஸ் எடுத்துக் கூறினார்.
அதற்கடுத்து இன்னும் நுணுக்கமான தொலைநோக்கியை ஆக்கிய பிரென்ச் கணித ஞானி காஸ்ஸினி, வளையம் திடத் தட்டில்லை என்றும், சனியைத் தொடாது சுற்றி யிருக்கும் துளைத் தட்டு என்றும் கண்டுபிடித்தார். காஸ்ஸினி மேலும் சனியின் உட்தள, வெளிப்புற வளையங்கள், வளையங்களின் இடைவெளிகள், சனியின் மற்ற நான்கு பனிபடர்ந்த துணைக் கோள்கள் ஐயாபெடஸ், ரியா, டையோன், டெதிஸ் [Icy Moons: Iapetus, Rhea, Dione, Tethys] ஆகிய வற்றையும் கண்டுபிடித்தார். வளையங்களின் விளிம்புகள் பூமியை நேராக நோக்கும் போது, சில சமயங்களில் சனியின் கோள வடிவம் மட்டுமே தொலைநோக்கியில் தெரிகிறது! சில மாதங்கள் சென்று அந்த கோணக் காட்சி [Angle of View] மாறும் போது, மறுபடியும் வளையங்கள் பல்வேறு சாய்வில் பூமியில் நோக்குபவருக்குத் தெரிகின்றன. காலிலியோ காலத்திற்குப் பிறகு தொலை நோக்கிகளின் பொறிநுணுக்கம் பன்முறை மேன்மைப் பட்டிருந்தாலும், இன்னும் சனிக்கோளின் பல புதிர்கள் விடுவிக்கப் படாமலே உள்ளன!
டைட்டான் துணைக்கோளில் தடம் வைக்கும் முதல் உளவி
2005 ஜனவரி 14 ஆம் நாள் அண்டவெளி வரலாற்றில் மற்றுமோர் மகத்தான சாதனை நிகழ்ந்து புதிய மைல்கல் நாட்டப்பட்டது! ஈரோப்பிய உளவி ஹியூஜென்ஸ் பரிதி மண்டலத்தின் அப்பால் உலவும் சனியின் துணைக்கோள் டைட்டானில் மெதுவாக இறங்கி முதம்முதல் தடம் பதித்துப் படங்கள் அனுப்பியது! 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஏழாண்டு பயணத்துக்குப் பிறகு சனிக்கோளை சுற்றிவரும் அமெரிக்காவின் காஸ்ஸினி விண்கப்பல், அத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஹியூஜென்ஸ் உளவியை அதன் துணைக்கோளுக்கு இறங்க அவிழ்த்து விட்டது! ஹியூஜென்ஸ் உளவி 20 நாட்கள் தொடர்ந்து 36,000 மைல் தூரம் பயணம் செய்து, ஜனவரி 14 இல் டைட்டான் சூழ்மண்டலத்தில் இறங்க ஆரம்பித்தது.
ஒன்பது அடி விட்டமும் 700 பவுண்டு எடையும் கொண்ட ஹியூஜென்ஸ் டைட்டான் உளவியைத் தயாரித்தது ஈஸா எனப்படும் ‘ஈரோப்பிய விண்வெளி ஆணையகம் ‘ [European Space Agency (ESA)]. ஆறு உளவுக் கருவிகளைக் கொண்டது, ஹியூஜென்ஸ் விண்சிமிழ். டைட்டான் உளவியின் கருவிகளை இயக்கும் மின்கலன்கள் [Batteries] 1.8 கிலோவாட் மின்னாற்றல் பெற்றவை. சனிக்கோளின் மிகப் பெரிய சந்திரனான டைட்டானில் திட்டமிட்டவாறு 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் வெற்றிகரமாக அற்றுவிடப் பட்டது. 20 நாட்கள் டைட்டான் உளவி சூழ்மண்டலத்தில் பயணம் செய்து இறங்கிய பின், மொத்தம் 120 நிமிடங்கள் மின்கலன்கள் உயிருடனிருந்து, அதன் சுய இயக்கிக் கருவிகள் வாயுவின் அழுத்தம், உஷ்ணம், திணிவு ஆகியவை பதிவு செய்யப்பட்டுக் காஸ்ஸினி மூலமாகப் பூமிக்குத் தகவல் பரிமாறப்பட்டது. டைட்டானின் தள உஷ்ணத்தில் (-179 C), மின்கலன்கள் நீடித்து இயங்க முடியாமல் உறைந்துபோய் விடும் [Batteries Freeze]!
எதிர்பாராதவாறு ஹியூஜென்ஸ் உளவி ஏழு மணி நேரங்கள் சிறப்பாகப் பணியாற்றியதாக ஹியூஜென்ஸ் திட்ட மேற்பார்வை அதிகாரி ஜான்பியர் லெபிரெட்டன் கூறினார். காரணம் அது சீராக டிசைன் செய்யப்பட்டு, அதன் கருவிகள் கடுங்குளிரில் பாதிக்கப் படாது, கணகணப்பில் பராமறிக்கப் பட்டன. அது ஜனவரி 14-15 இல் அனுப்பிய படங்கள் முதலில் 100 மைல், 12 மைல் உயரத்திலிருந்தும், பிறகு தரையில் அமர்ந்ததும் தளப் பகுதிகளையும் காட்டின. ‘முகிலைக் கடந்தபின் படங்கள் மிகத் தெளிவாகவும் கூர்மையாகவும் இருந்தன ‘ வென்று உளவிப்பட விமர்சகத் தலைவர் [Leader, Probe Imaging Team] மார்டின் தொமஸ்கோ கூறினார். பாய்ந்து இறங்கிச் செல்லும் ஹியூஜென்ஸ் உளவி 300 மேற்பட்ட படங்களை முதலில் அனுப்பியது. டைட்டான் அனுப்பிய முதல் படங்களில் ஆயில்கடல் கரை எல்லை [Oily Ocean Shoreline] காணப் பட்டது. மலைமேடுகளின் ஊடே ஓடிய கருந்திரவ ஆறுகள் பிற்காலத்தில் உறைந்து போன தளப்பகுதிகள் டைட்டானில் தெரிந்தன! அதன் தட்டையான பரப்புகள் மீது கிடக்கும் கற்பாறைகள் [Boulders] படத்தில் தென்பட்டன! அப்பாறைகள் கடுங்குளிரில் [-179 C] உறைந்து போன வாயுத் திரவங்கள் [Liquified Gases] தவிர வேறு மெய்யான கற்களாகக் கருதப் படவில்லை! ‘அது மெய்யாகக் கடலன்று! அது ஒரு தார்த் தடாகமாக [Lake of Tar] இருக்கலாம். யாரும் அதில் அலைகளைக் காணவில்லை! ‘ என்று பிரதம தளஆய்வு விஞ்ஞானி ஜான் ஸர்நகி [John Zarnacki] கூறினார். இன்னும் பல படங்கள் எடுத்து ஆராயப் படாமலே இருக்கின்றன.
காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளுக்கு ஏவப்பட்டது
3.4 பில்லியன் டாலர் [1995 நாணய மதிப்பு] செலவில் மிக நுணுக்கமாகத் தயாரிக்கப் பட்ட காஸ்ஸினி விண்கப்பல் ‘சுற்றும் சிமிழ் ‘ [Orbiter] ஒன்றும், ‘இறங்கு சிமிழ் ‘ [Lander] ஒன்றும் கொண்டது. காஸ்ஸினி சுற்றுச் சிமிழுடன் [Cassini Orbiter], ஹியூஜென்ஸ் டைட்டான் உளவி [Huygens Probe] இணைக்கப் பட்டுள்ளது. 1997 அக்டோபர் 15 இல் பிளாரிடா கெனாவரல் முனையில் ஏவப்பட்ட டிடான் சென்டர் ராக்கெட் [Titan IVB Centaur Rocket] இதுவரை விண்வெளிக்குச் சுமந்து செல்லாத பேரளவுப் பளுவான 5.6 டன் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பலைத் தூக்கிக் கொண்டு செங்குத்தாக ஏறிச் சென்றது! பூமியிலிருந்து கிளம்பி விண்கப்பல், ராக்கெட் முனையிலிருந்து விடுதலை அடைந்ததும், வெள்ளிக் கோளை இருமுறைச் சுற்றி, பூதக்கோள் வியாழனைத் தாண்டி, அக்கோள்களின் ஈர்ப்பு ஆற்றலில் வேகம் முடுக்கப் பட்டு மிகையாகிச் [Venus, Venus, Earth, Jupitar Gravity Assist Flyby Swings] சனிக்கோளை விரைவாக நெருங்கத் திட்டமிடப் பட்டது! இந்த முறை முதலில் சென்ற இரண்டு வாயேஜர் பயணங்களில் பூமியிலிருக்கும் ஆட்சி அரங்கிலிருந்து ஆணையிடப் பட்டு, வெற்றிகரமாக நிறைவேறியது. இத்தகைய விஞ்ஞான கவண் முடுக்கு ஈர்ப்பு முறைகளால் காஸ்ஸினி ராக்கெட் 68 டன் எரிஆயிலை மிச்சப்படுத்தி இருக்கிறது!
சனிக்கோளை நெருங்கிய காஸ்ஸினி விண்கப்பலின் ராக்கெட் எஞ்சின்கள் பூமியிலிருந்து தூண்டப் பட்டு, 96 நிமிடங்கள் இயங்கி வேகம் தடைப்பட்டுத் தணிந்து, 2004 ஜூலை முதல் தேதியில் சனி மண்டல ஈர்ப்பாற்றலில் இழுக்கப்பட்டு [Saturn Orbit Insertion (SOI)], விண்கப்பல் நீள்வட்டச் சுழல்வீதியில் சனியைச் சுற்றத் துவங்கியது. சனியின் அகண்ட வளையங்களில் அடிபட்டு விடாதபடி, இடைவெளித் துளையில் நுழைந்து சுற்றிவரும் காஸ்ஸினி பாதுகாப்பாகப் பயணம் செய்தது! அதற்கு உதவி புரிவது காஸ்ஸினியின் முனையில் உளவு செய்யும் ஏரியல் சாதனம்! விண்கப்பல் வளையத்தில் வேகமாய் ஓடும் துணுக்குகள், பாறைக் கற்கள் மீது மோதாதவாறு பாதுகாப்பவை இரு நீண்ட ஏரியல் கம்பிகள். விண்கப்பல் சுற்றும் முதல் சுழல்வீதி சனியின் முகில் மண்டலத்துக்கு மேல் 12,000 மைல் உயரத்தில் அமையத் தூண்டப்பட்டது. அந்த நீள் பாதையில் பயணம் செய்யும் போது, திட்டமிட்ட மற்ற பாதைகளை விட வளையங்களுக்கு 10 மடங்கு அருகில் காஸ்ஸினி பறக்க ஏதுவாகிறது. காஸ்ஸினியின் கடைசிச் சனிக்கோள் சுற்று 2008 ஆண்டு ஜூலையில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பரிதிக்குப் பல மில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் சனிக் கோளை நான்கு ஆண்டுகள் சுற்றிப் பத்தாண்டுகளுக்கு மேல் பணி புரியப் போகும் காஸ்ஸினி விண்கப்பலுக்கு ‘சூரிய இதழ்கள் ‘ [Solar Panels] மட்டும் தொடர்ந்து மின்சக்தியும், வெப்பசக்தியும் அளிக்க முடியாது! காரணம், விண்கப்பல் சூரியனுக்கு அப்பால் செல்லச் செல்ல, அதற்குப் பரிதியின் வெப்பமும், ஒளியும் குன்றி மின்சக்தி பற்றாமல் போகிறது. பரிதிக்கு ஒரு பில்லியன் மைல் தூரத்தில் உள்ளது, சனிக் கோள். அதலால் கதிர்வீசும் புளுடோனியம் தூண்டும் வெப்பமின் ஜனனிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு சிறப்பாகச் செய்யப் பட்டன. அவை போன்ற கதிர்வீசும் மின்கலன்கள் முன்பு, நாசாவின் விண்வெளிப் பயணங்களுக்கு விபத்தின்றிப் பயன்படுத்தப் பட்டு வெற்றிகரமாக இயங்கின!
காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?
1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:
1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?
2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது ?
3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன ?
4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா ?
5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது ? சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா ?
6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது ? அதன் மூலப் பிறப்பிடம் எது ?
7. டைட்டான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை ?
8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது ?
9. டைட்டானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா ?
10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா ?
டைட்டான் துணைக்கோளின் சூழ்வெளி விபரங்கள்
சூரிய மண்டலத்திலே பேரளவு முகிலடர்த்தி [Dense Atmosphere] சூழ்ந்து தனித்துவம் மிக்க ஓரண்டம், டைட்டான்! பூமண்டல வாயு அழுத்தத்தை விட 50% மிகையான அழுத்தம் [22 psi] கொண்டது, டைட்டான்! பூகோள வாயுச் சூழ்வெளியை விட, டைட்டான் வாயு மண்டலம் 180 மைல் அடர்த்தியில் பன்மடங்கு மிகுந்ததாய், சுமார் 370 மைல் உயரம் வரைப் பரவி யுள்ளது! வெளிறிய ஆரஞ்சு நிறத்தில் மங்கலாகத் தோன்றும் டைட்டான் முகிலில் இருப்பவை, ஈதேன், அஸெடிலின் [Ethane, Acetylene] போன்ற ஹைடிரோ கார்பன் வாயுக்கள்! அதன் வாயுச் சூழ்வெளியில் முக்கியமாக உள்ளவை 90%-95% நைடிரஜன் வாயு! 5% மிதேன் வாயு [Methane Gas]! டைட்டானின் தள உஷ்ணம்: (-179 C). கண்ணுக்குப் படும் பரிதியின் ஒளி டைட்டானின் அடர்த்தியான ஆரஞ்சு நிற புகைமூட்ட முகிலை [Smog] ஊடுறுவிக் கொண்டு நுழைய முடியாது! பூகோளத்தில் ஏற்படுவது போல பரிதி ஒளி ஹைடிரஜன் மூலக்கூறுகளுடன் இணைந்து அந்த ஆரஞ்சுப் புகைமூட்டம் உண்டாகிறது.
ரேடார் கருவிகள் டைட்டான் பகுதிகளைத் திடவ அண்டமாகக் காட்டினாலும், சில பரப்புகளில் ஈதேன் கடல்கள், மீதேன் கடல்கள் இருக்கலாம் என்று கருதப் படுகிறது! சனியின் மிகப் பெரிய துணைக்கோளாக 3090 மைல் விட்டம் கொண்டது, டைட்டான். பூமியின் நிலவை விடவும், புதன் கோளை விடவும் பெரியது, டைட்டான்! சனிக்கோளின் துணைகோளாய்ச் சுற்றினாலும் சனியைப் போன்று வாயுக் கோளாக இன்றி, பூமியின் நிலவைப் போன்று கரடு முரடான, குழிகள் [Craters] நிரம்பிய தளப் பகுதிகள் இல்லாதது, டைட்டான். சனிக்கோளை ஒருமுறைச் சுற்ற டைட்டான் 15 நாட்கள் 22 மணி நேரம் [சுமார் 16 பூகோள நாட்கள்] எடுக்கிறது. தன்னச்சில் தன்னைத்தானே ஒருமுறைச் சுற்றவும் 16 நாட்கள் பிடிக்கிறது. அதாவது பூமியின் நிலவைப்போல், டைட்டானும் எப்போதும் ஒரே முகத்தைக் காட்டிச் சனிக்கோளைச் சுற்றி வருகிறது. டைட்டான் துணைக்கோள் பளுநிறை மேவி ஈர்ப்பாற்றல் கொண்டுள்ளதால், காஸ்ஸினி விண்கப்பல் அதனைப் பயன்படுத்தி [Gravity Assist Flyby] அருகில் பயணம் செய்து, ஆய்வு புரிந்து படமெடுக்க எளிதாக இருக்கும். டைட்டான் சனிக்கோளைச் சுற்றிவரும் ஈவான நீள்வட்ட வீதித் தூரம் [Mean Orbital Distance]: 733,000 மைல்கள்! டைட்டானின் ஈர்ப்பாற்றல் பூகோளத்தின் ஈர்ப்பு விசையில் ஏழில் ஒரு பாகம்!
2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென் உளவி, 36,000 மைல் உயரத்தில் பவனி வரும் காஸ்ஸினித் தாய்க்கப்பலிலிருந்து பிரிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்து டைட்டான் சூழ்வெளியை நெருங்கியது. டைட்டான் வாயு மண்டலத்தில் வினாடிக்கு 3.6 மைல் [6 கி.மீடர்] வேகத்தில் இறங்கி 2005 ஜனவரி 15 ஆம் தேதி யன்று 27 அடி விட்டமுள்ள குடை விரித்து நுழைய ஆரம்பித்தது. உச்சத் தளர்வேகம் [Deceleration (10g-25g)] அடைந்து, இரண்டு அல்லது இரண்டரை மணியளவில் வினாடிக்கு 5 மீடர் மோது வேகத்தில் [Impact Speed: 5m/sec] டைட்டான் தளத்தில் விழும் என்று எதிர்பார்க்கப் பட்டது! வாயு மண்டலத்தில் விரைவாக விழும் உளவி, வெப்பத்தினால் எரிந்து விடாதபடி, ‘கும்பக் கலசம் ‘ கவசம்போல் கனல் பாதுகாப்பு [Heat Shield Capacity: 18,000 C] அளிக்கிறது. ஹியூஜென்ஸ் 350 கி.மீடரிலிருந்து 220 கி.மீ. வரை இறங்கும் போது உச்ச வெப்பத் தாக்குதலை உணரும்! அந்த இடைவெளியைக் கடந்து வரும் இரண்டு நிமிடத்தில், உளவியின் வேகம் மணிக்கு 21,600 கி.மீடரிலிருந்து, மணிக்கு 1440 கி.மீடருக்குக் குறைகிறது!
ஹியூஜென்ஸ் உளவி இறங்கி வரும்போது, அதன் வண்ணக் காமிரா சுமார் 1100 படங்களை எடுத்தனுப்பும் தகுதி பெற்றது! உளவியின் மற்ற ஐந்து கருவிகள் டைட்டான் வாயு மண்டலத்தின் மாதிரிகளை உறிஞ்சி என்ன என்ன இரசாயனக் கலவையில் உள்ளன வென்று சோதித்தது. மேலும் டைட்டான் சூழ்வெளியின் உஷ்ணம், அழுத்தம், வாயுக்களின் திணிவு, சக்திச் சமன்பாடு [Energy Balance] ஆகியவற்றைப் பதிவு செய்தது. டைட்டான் தளத்தில் மோதிய ஹியூஜென்ஸ் உளவியின் மின்கலன்களில் உயிருள்ள [2 Hours] வரை, அது தகவலைத் திரட்டியது. தலைக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் தாய்க்கப்பல் காஸ்ஸினி, ஹியூஜென்ஸ் அனுப்பும் வண்ணப் படங்களையும் மற்ற தகவல்களையும் சேமித்து வைத்து, அவற்றைப் பூமியின் விண்கப்பல் ஆட்சி மையத்திற்குப் [Spaceship Control Centre] பரிமாறி வந்தது.
டைட்டான் துணைக்கோளில் நைட்டிரஜன், ஹைடிரஜன், கார்பன்மனாக்ஸைடு, கார்பன் டையாக்ஸைடு,அமோனியா, மீதேன், ஈதேன், புரபேன், ஈரநீர்மை போன்ற உயிரியல் மூலக்கூட்டுகள், மூலக்கூறுகள் பூமியில் உள்ளன போல் இருப்பதால், டைட்டானில் உயிர்மையின் விதைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஹியூஜென் அனுப்பிய படங்களில் வாயுக்களின் திரவங்கள் ஓடும் ஆறுகள், குளங்கள் பிறகு வாயுக்கள் ஆவியாவது போலவும் தெரிகின்றன. அத்துடன் வாயுக்கள் திரவமாகிக் கடுமையான தணிவு உஷ்ணத்தில் திரண்டு போன வாயுக் கட்டிகளும் காணப்படுகின்றன. பூமியில் உயிரினங்கள் தோன்ற மூலக் காரணமான எளிய ஆர்கானிக் கூட்டுகள் [Simple Organic Compounds] டைட்டான் துணைக்கோளில் பனிமூடிக் கிடக்கலாம் என்னும் கருத்து விஞ்ஞானிகளிடையே இருந்து வருவது இனி நிரூபிக்கப்படலாம்! உயிரினம் வாழத் தகுதியற்ற, மிகக் குளிர்ந்த அண்டமான டைட்டானில் உள்ள பனிமூடிய புதையல்களை ஆய்வதின் மூலம், நமது பூர்வீகப் பூமி எப்படி ஆதியில் இருந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம்.
****
தகவல்கள்:
1. http://www.thinnai.com/sc0708045.html [Cassini-Huygens Spaceship Probing Saturn & Titan)
2. http://www.thinnai.com/science/sc0815035.html [Cassini-Huygens Spaceship Approaching Saturn]
3. Science Hopes Ride on Huygens BBC Science News [http://newsvote.bbc.co.uk] (Jan 15, 2005)
4. Huygens Sends First Titan Images By: Paul Rincon, BBC Science News (Jan 15, 2005)
5. Cassini-Huygens Mission Facts [ESA Site]
6. European Probe Lands on Titan CBC News [www.cbc.ca/story/scienc/] (Jan 15, 2005)
7. Huygens Probe Separation & Coast Phase, ESA Site Science & Technology [http://sci.esa.int/]
(Jan 18, 2005)
8. The Handy Space Answer Book By: Phillis Engelbert & Diane Dupuis (1998)
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 19, 2005)]
- சுனாமிக்கு (அமெரிக்கா) IRS காட்டும் பரிவு:
- கடிதம் ஜனவரி 20,2005
- புத்தக விழாவில் ‘பிடித்தவை ‘
- வெங்கட்ரமணனின் குவாண்டம் கனி
- ஓவியப்பக்கம் பதினான்கு – வில்லியம் கெண்ட்ரிட்ஜ் – நவீன் ஊடகத்தில் உயிர்த்தெழும் கோட்டோவியங்கள்
- பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் கால்வினோ கதைகள்
- மதம் அலுத்துப் போனது – மாதவிக்குட்டியின் கட்டுரை
- காஞ்சி மடம் – க.நா.சு – பிலோ இருதயநாத் – மாலதி சந்தூரின் தெலுங்கு மிட்டாய் – வலம் போன நரி (அல்லது – மஞ்சரி 1955 தொகுப்பு)
- நெரூதா அனுபவம்
- தியாகத்தின் கதை – போர்க்குதிரை – நுால் அறிமுகம்
- ஹதீஸ் – ஒரு சிறு விளக்கம்!
- கடிதம் ஜனவரி 20,2005 – செருப்பு: குறும்படம்.
- கடிதம் ஜனவரி 20,2005 – நேச குமார் தெளிவுபெறவேண்டும்
- குர்பான்
- அறிவியலும் ஒரு போலி அறிவுஜீவியின் நியோ-மனுவாதமும்
- ஜனவரி 30,2005 – ராஜராஜேஸ்வரம் நிகழ்ச்சி
- ஓவியர்களின் உலகம் அழைக்கிறது – ஜனவரி 25 ,2005
- முகம்
- அவரவர் உடை அவரவர் விருப்பமே!
- கடிதம் ஜனவரி 20,2005 – திருமாவளவனும் தமிழ்த்திரையுலகும்
- கடிதம் ஜனவரி 20,2005 – ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரால் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிர்ப்பு… பணிந்தது இரான்
- கடிதம் ஜனவரி 20 ,2005
- ஆறடி அறைகளின் குரல்கள்
- இயற்பியல்::2005 புதிய இணையதளம்
- சனிக்கோளின் துணைக்கோளில் தடம் வைத்த ஈரோப்பியன் விண்ணுளவி ஹியூஜென் [ESA Probe Huygens Lands on Saturn ‘s Moon Titan] (Jan 14 2005
- வாய் மூடிப்போன நடுநிலையாளர்கள்
- வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம்
- நிஜமான போகி
- பேரழிவுச் சீரமைப்பு -உளவியல் கண்ணோட்டம்-2
- வேட்கை
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -55
- து ை ண – குறுநாவல் – 1
- த ளி ர் ச் ச ரு கு
- இப்படிக்கு இணையம்….
- அஞ்சலி: சீன கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங்
- சொன்னார்கள் சொன்னார்கள் – ஜனவரி 20 ,2005
- மறுபடியும்
- கண்டு கொண்டேன் !
- இவ்வாண்டு படைத்த கடற்பொங்கல்!
- கவிதைகள்
- அலைகளை மன்னிக்கலாம்
- உதிரிப்பூக்கள்
- கவிக்கட்டு 45 – என்னை என்ன செய்யப்போகிறாய் ?
- பெரியபுராணம்- 27 -16. கண்ணப்ப நாயனார் புராணம்
- என் பொங்கல்
- கவிதைகள்
- தினம் ஒரு பூண்டு