இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


கொஞ்சமோ பிரிவினைகள், ஒரு

கோடி என்றாலும் அது பெரிதாமோ ? ….

கண்ணிலாக் குழந்தைகள் போல், பிறர்

காட்டிய வழிசென்று மாட்டிக் கொள்வார்! ….

பஞ்சமோ பஞ்சமென்றே, நிதம்

பரிதவித்தே உயிர் துடிதுடித்து

துஞ்சி மடிகின்றாரே, இவர்

துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே! …(நெஞ்சு பொறுக்குதில்லையே)

மகாகவி பாரதியார்

இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசாங்க மந்திரி, நீர்வளத்துறை எஞ்சினியர் டாக்டர் கே.எல். ராவ் உருவாக்கிய கங்கா-காவேரி இணைப்புத் திட்டத்தைக் கட்ட முடியாதது, நிதி விழுங்குவது என்று பலர் நிராகரித்தனர்! மறுபடியும் அதே மாதிரி நீரிணைப்புத் திட்டங்கள், தற்போது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் தலைதூக்கி உள்ளன! முப்பதுக்கும் மேற்பட்ட அத்திட்டங்கள் சிரமமானவை, சிக்கலானவை, செய்ய முடியாதவை, செலவு மிக்கவை என்று மாநிலங்களில் பல்வேறு எதிர்ப்பாளிகள் முட்டுக்கட்டை யிட்டு நிறுத்தத் தயாராக நிற்கிறார்கள்! மக்கள் தொகை பெருத்துவரும் இந்தியாவில், நீர்ப்பற்றாக்குறை இன்னும் பேரளவில் பெருகி நதியிணைப்புத் திட்டங்கள் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்றுத் தலை நீட்டப் போகின்றன! அன்றும், இன்றும் ஆரம்பிக்கப்படாத கங்கா-காவேரி நதியிணைப்புத் திட்டம் இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அடித்தளம் இடப்பட்டால், எத்தனை மடங்கு நிதிச் செலவை அது இழுத்துவிடப் போகிறது என்று இந்தியர் சிந்திக்க வேண்டும்!

தென்னாட்டில் 2004 அக்டோபரில் சென்னைக்கு தண்ணீர் அனுப்பிய தெலுங்கு கங்கா கால்வாய் திட்டம், ஐந்தாண்டுகளில் முடிவதற்குப் பதிலாக, நான்கு மடங்கு செலவாகி இருபதாண்டுகள் எடுத்ததுக் கொண்டது! வடநாட்டில் ஸட்லெஜ் யமுனா இணைப்புக் கால்வாய் இருபதாண்டுகள் கடந்தும், 55% நீளம் மட்டும் முடிந்து முடங்கிப்போய், அரசியல் கலகவாதிகளின் கால்பந்தாக இங்குமங்கும் எற்றப்பட்டு வருகிறது! இவ்விரு நதியிணைப்புகளும் முன்னேறும் இந்திய மண்ணில் பின்னேறிய மாதிரித் திட்டங்கள்! இவற்றின் பிரச்சனைகள் முளைத்துக் கிளைவிட ஆணிவேரான காரணிகள் மாநிலங்களின் அதிகார வர்க்க அரசியல் வாதிகள்! நதியிணைப்புத் திட்டங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் குறை கூறும்படி எந்தவிதத் தவறுகளும் இல்லை! ஒப்பந்தமான திட்டங்கள் இரண்டும் நீர்ப்பாசான, நீர்வளப் பலனளிப்பில் மெய்யாக உன்னதமானவையே!

கட்டுரை ஆசிரியர்

பஞ்சாப் ஹரியானா கால்வாய்த் திட்டத்தில் ஏற்பட்ட தகராறுகள்

சென்னை நகரின் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீரனுப்பும் தெலுங்கு-கங்கா திட்டம் 1983 இல் துவங்கி, நான்கு மடங்கு நிதிப்பணத்தை விழுங்கி, இருபது ஆண்டுகள் ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் கடைசியில் நீர் வெள்ளம் கால்வாய் வழியோடி, சிறிது நீரைப் பூண்டியின் வாயில் ஊற்றித் தாகம் தீர்த்துள்ளது! ஆனால் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களுக்கு இடையே 1981 ஆண்டில் ஒப்பந்தமான ஸட்லெஜ்-யமுனா இணைப்புக் [Sutlej Yamuna Link Canal] கால்வாய்த் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, ஐந்தாண்டுகளில் 55% கட்டுமானப் பணிகள் முடிந்து, 1986 ஆண்டு முதல் பஞ்சாப் மாநிலம் தொடராமல், பல்லாண்டுகளாக மாநிலங்களுக்குள் சட்டப்போர் நடந்து கொண்டு மத்திய அரசின் குறுக்கீடும், நீதி மன்றங்களின் தலையீடும் ஏற்பட்டுப் பெரும் அரசியல் குழப்பத்தை உண்டாக்கி விட்டிருக்கிறது! பஞ்சாப் மாநிலச் சட்டசபை 1981 ஆம் ஆண்டு கால்வாய் ஒப்பந்தத்தை, 2004 ஜூலை 12 ஆம் தேதி நடைமுறையிலிருந்து விலக்கியதும், ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஜூலை 22 இல் இந்திய உச்சநீதி மன்றத்திற்குப் புகார் செய்திருக்கிறார்! இப்போது ஐந்து நீதிபதிகள் அமர்ந்திருக்கும் உச்சநீதி மன்றம் ஜனாதிபதியின் புகாரை எடுத்துக் கொண்டு ஆகஸ்டு 2 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மீது வழக்காட அறிக்கை அனுப்பியுள்ளதாக அறியப் படுகிறது!

மிகவும் விளம்பரப் படுத்தப்பட்டுப் பெயர் போன ஸட்லெஜ் யமுனா இணைப்புக் கால்வாய்த் திட்டம் 2004 ஆண்டு வரை 850 கோடி ரூபாயை விழுங்கி யிருக்கிறது! 180 மைல் நீளத்தில் (125 மைல் பஞ்சாப் +55 மைல் ஹரியானா) டிசைன் செய்யப்பட்ட கால்வாயில் பஞ்சாப் 55% முடித்து, 1986 ஆண்டுக்குப் பிறகு தொடரப்படாமல் 25 ஆண்டுகளாய் முடங்கிக் கிடப்பது இந்திய வரலாற்றில் மன்னிக்க முடியாத, மறக்க முடியாத, பயனற்ற, பண்பற்ற ஓர் அரசியல் குழப்பமாகக் கருதப்படுகிறது! கால்வாய் வேலைகளுக்கு 1700 நபர்களைப் பணிபுரிய வைத்த பஞ்சாப் மாநிலம், தனது கடைசி 53 மைல் தூரக் கால்வாயை முடிக்க விரும்பாது, கடந்த இருபது ஆண்டுகளாக நிறுத்தி வைத்து, முரட்டுப் பிடிவாதமுடன் ஹரியானாவோடு சண்டையிட்டு வருகிறது! சண்டித்தனமாய்ப் பஞ்சாப் அரசாங்கம் ஹரியானாவுக்கு உபரி நீர்வெள்ளம் அனுப்பத் தேவையில்லை என்று கண்டனம் செய்தும் வருகிறது! 1990 ஜூலை மாதம் பஞ்சாப் மூர்க்கவாதிகள் இரண்டு முக்கிய எஞ்சினியர்களைச் சுட்டுக் கொன்று, கால்வாய் கட்டுமானப் பணிகள் அனைத்தையும் நிற்கும்படி செய்தனர்! இவ்வாறு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் நீர்ப்பாசான வசதி, குடிநீர் அளிக்கப் போகும் ஓர் உன்னத நதியிணைப்புத் திட்டம், பஞ்சாப் அதிகார வர்க்கத்தின் கையில் சிக்கிக்கொண்டு அரசியல் திருவிளையாடலாக மாறிப் பெரும் உள்நாட்டு மாநிலப் போரை உண்டாக்கி உள்ளது! அப்போரின் இடையே இடர்ப்படுவோர் மூன்று மாநிலங்களில் வாழும் பொதுமக்கள், வேளாண்மைக்காரர்கள், தொழில் அதிபதிகள் ஆகியோர்!

விடுதலை இந்தியாவில் மொழிவாரியாகப் பிரிபட்ட பஞ்சாப் மாநிலம் 1966 இல் துண்டுபட்டுப் பஞ்சாப், ஹரியானா என்னும் இரண்டு மாநிலங்களாகப் பிளவு பட்டது! 1966 இல் ‘மாநிலச் செம்மை மீளமைப்புச் சட்டம் ‘ [States Re-organization Acts] எழுதப்பட்டு பியாஸ் நதியில் உள்ள பக்ரா, நங்கல் அணைகளின் கால்வாய் நீர் வெள்ளத்தைப் பயன்படுத்திக் கொள்ள இரு மாநிலங்களுக்கும் பங்கீட்டு உரிமைகள் அளிக்கப்பட்டன. அந்த நீர்ப் பங்கீட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டு, மாநிலங்கள் தமக்குள் தீர்க்க முடியாமல் போகவே, ஹரியானா 1969 இல் மத்திய அரசாங்கத்தின் உதவியை நாடியது. மத்திய அரசு 1976 மார்ச் 24 இல் ரவி-பியாஸ் நதிகளின் 3.5 (maf) மில்லியன் ஏக்கர் அடி உபரி வெள்ளத்தை ‘ஸட்லெஜ் யமுனா இணைப்பு ‘ [Sutlej Yamuna Link] என்னும் புதுக்கால்வாய் ஒன்றை அமைத்து ஹரியானாவுக்கு அனுப்புவதாய் வாக்களித்தது! அந்த கால்வாய் அமைப்பு பஞ்சாப் வழியாக ஹரியானாவுக்கு வருவதால், மத்திய அரசு அப்பகுதியைத் அதன் மாநிலத்தில் கட்டும்படி வேண்டியது.

ஹரியானா அரசு உடனே வேலையை ஆரம்பித்து 55 மைல் நீளத்துக்குக் கால்வாயைத் தன் பகுதியில் 1980 ஆம் ஆண்டிலேயே முடித்து விட்டது! ஆனால் பஞ்சாப் மாநிலம், மத்திய அரசின் 1976 ஆண்டு தீர்மானத்தை மீளாய்வு [Review of 1976 Allocation] செய்யத் தூண்டியது! மத்திய அரசு 1981 டிசம்பர் 31 ஆம் தேதி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களை ஒருங்கிணைத்து, முப்புற ஒப்பந்தம் ஒன்றில் உடன்பட வைத்தது. அவ்விதிப்படி ரவி, பியாஸ் நதிகளின் உபரி வெள்ளத்தை ஸட்லெஜ் யமுனா இணைப்புக் கால்வாய் மூலம், பஞ்சாப்பிற்கு 3 maf அளவிலிருந்து மிகையாக்கி 4.22 maf, ஹரியானாவுக்கு முன்பு குறிப்பிட்ட அளவு (3.5 maf), ராஜஸ்தானுக்கு 8.6 maf அளவு அனுப்புவதாகத் தீர்மானம் ஆனது. ஒப்பந்தப்படி 1986 ஜனவரியில் கால்வாய்த் திட்டம் முடிவு பெற வேண்டும்.

1982 ஏப்ரலில் பஞ்சாப் மாநிலம் 1700 பேரை வேலைக்கு வைத்துக் கட்டுமானப் பணிகளைத் துவங்கி 72 மைல் தூரக் கால்வாயைக் கட்டி முடித்தது. பஞ்சாப் பகுதிக் கால்வாயில் கடைசி 53 மைல் தூரம் அரசியல் சம்மதம் பெறாமல் இருந்தது. 1986 ஆம் ஆண்டு முழுவதும் முடிய வேண்டிய திட்டம், அப்போது மொத்தத்தில் ஏறக்குறைய பாதி அளவே [55%] முடிந்திருந்தது! பஞ்சாப் காரணமின்றி வேலையை நிறுத்தி 1986 ஆண்டுக்குப் பிறகு எதுவும் செய்யாமல் இருந்ததால், ஹரியானா வழக்கு மனுப் போட்டு சட்ட மன்றங்களை அணுகியது! பஞ்சாப் மாநிலம் ஹரியானாவுக்கு 0.9 maf அளவுக்கு மேற்பட்ட 3.5 maf அளவு தர இயலாதென்றும், தந்தால் பஞ்சாப் நீர்ப்பாசானம் பாதிக்கப்படும் என்றும் வாதாடியது! மத்திய அரசு அமைத்த நீதிபதிகள் பங்கேற்ற ‘ரவி-பியாஸ் நீர்ப்புகார் ஆய்வுக் குழுவும் ‘ [Ravi-Beas Waters Tribunal] பஞ்சாப் ஹரியானா நீர்த் தகராறுகளை தீர்க்க முடியவில்லை. இதுவரை [2003] ஆன 850 கோடி ரூபாய் கால்வாய்ச் செலவில், பஞ்சாப் மட்டும் 520 கோடி ரூபாய் செலவழித்திருப்பதாக அறியப்படுகிறது! மீதம் 330 கோடி ரூபாய் ஹரியானா செலவு செய்துள்ளது! 1983, 1986, 1987, 1988, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நீதிமன்றம் அனுப்பிய தூண்டு அறிவிப்புகள் பஞ்சாப் மாநில அரசால் புறக்கணிக்கப்பட்டு, ஏழாவது முறை 2003 ஜனவரி 15 ஆம் தேதி அனுப்பிய முடிப்பு எச்சரிக்கையும் [Seventh Deadline Warning] வீணானது!

இந்தியாவில் மழைகால வெள்ளத்தால் நேரும் விளைவுகள்

மழைக்காலச் சமயங்களில் அஸ்ஸாம், பீஹார் அல்லது பஞ்சாப் பிரதேசங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பகுதிகளில் நீர்வெள்ளம் அடைபட்டு கிராம, நகர வீதிகள், வீடுகள் மூழ்கி மக்கள் இன்னலுக்குள் மாய்வது தவறாத காட்சிகளாக மீண்டும், மீண்டும் காணப்படுபவை! மத்தளத்துக்கு இருபறமும் அடி என்பது போல், அஸ்ஸாம் பெருமழையில் பிரமபுத்திரா கரைபுரண்டு ஒருபுறத்திலும், கங்கா கூட்டு நதிகளால் வெள்ள ஓட்டம் மிஞ்சி மறுபுறத்திலும் தாக்கிப் பங்களா தேசத்தை நீர்மயமாக, நீர்க்காடாக ஆக்குகின்றன! 1955 ஆகஸ்டு, அக்டோபர் மாதங்களில் ஏற்பட்ட வெள்ள அடிப்புகளில் பிரமபுத்திராவின் நீர்பெருக்கு அஸ்ஸாமிலும், மகாநதி பீஹாரிலும், ரவி பஞ்சாப்பிலும், யமுனா டெல்லியிலும், ராப்தி உத்தரப் பிரதேசத்திலும் வெள்ளச் சிதைவுகளையும், சேதாரங்களையும் ஏற்படுத்தி மக்களுக்கு பேரிடரை விளைவித்தன. ஊர்ப் புறங்களில் நீர்க்கழிவு ஓடைகள் நிலமட்டச் சாய்வு பெறாமல் அல்லது குப்பை கூளங்கள் நிரம்பிச் சரிவர வடிக்கப்படாமல் இருப்பதாலே அடைத்துக் கொள்கின்றன. நீர்வெள்ள அடைப்புகளுக்குச் செம்மையான நீரோடைகள் இன்மையும், அவற்றை அமைக்க நிதியிருப்பு இல்லாமையும் ஒரு காரணம். நிதிவளம் இருந்தாலும், சீரான நீரோடை அமைத்து நீரை வெளியேற்றத் திட்டம் இல்லாமையும் அடுத்த காரணம். வெள்ளம் வந்தபின் சமாளிக்க முடியாமல் சபித்துக் கொண்டும், தலைவிதியே என்று சகித்துக் கொண்டும் காலம் தள்ளும் மக்களின் மனோபான்மை மற்றுமொரு காரணம். மழை வெள்ளக் கட்டுப்பாடு இல்லாத கிராமங்கள், நகரங்கள் பல மாநிலங்களில் இருந்து வருவதை, அந்த மாநில அரசாங்க அதிகாரிகள் புறக்கணிப்பதும், அதே அரசாங்கங்கள் தமது மாநில எஞ்சிய நதிநீர்ப் பெருக்கை அண்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொள்ள மறுப்பதும், பாரத நாட்டில் தவறாது நிகழ்ந்து வரும் தண்ணீர்ப் போராட்டங்களாகும்!

1955 ஆண்டு வெள்ளப் பெருக்குச் சேதராங்களில் பஞ்சாப் மாநிலம் பேரளவு பாதிக்கப்பட்டது. 7000 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின! 75,000 இல்லங்கள் சிதைந்தன! 1500 நபர் உயிரிழந்ததாக அறியப்படுகிறது! பெப்சுவில் 6000 இல் 5000 கிராமங்கள் பாதகம் அடைந்து 200 பேர் உயிரிழந்தனர். பிரமபுத்திராவின் நீர்மட்டம் பேரளவில் பெருகி, அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்கள் மூழ்கிச் சிதைவு பெற்றன. பீஹாரில் நெல் வயல்கள், சணல் நிலங்கள் யாவும் மூழ்கி, 5 லட்சம் மக்கள் இல்லங்களை இழந்தனர்! 1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு கங்கா, ஸோன் நதிகளின் வெள்ளப் பெருக்கில், பீஹாரின் தலை நகரம் பாட்னா நரகமானது! ஆகஸ்டு 24 ஆம் தேதி பாட்னாவின் இருண்ட நாளாகக் கருதப்படுகிறது! விமான தளம் நீர் மண்டலமாகி ஊர்திகள் ஏறவோ, இறங்கவோ முடியாமல் முடக்கப் பட்டது. 140 மைல் தூர இரயில்பாதை சேதமுற்றதால், பரெளனியில் பயணிகள் அடைபட்டனர். மாநில ஆளுநர் முதல் தெரு நபர் வரை பாதிக்கப் பட்டனர். அரசாங்க மனைகள், முதல் மந்திரி அலுவலகம், மந்திரிகளின் மாளிகைகள், மாநில அரசிய மன்றம், உயர்நீதி மன்றம், வானொலி நிலையம் யாவும் நீரடைப்பால் பாதகம் அடைந்தன.

யமுனா நதியோட்டத்தில் துர்மாசுக் கூளங்கள், விஷக் கிருமிகள்

2004 ஜனவரி 17 ஆம் தேதி இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு நீர் கொண்டுவரும் மேற்கு யமுனா கால்வாயில் [Western Yumuna Canal] ஏற்படவிருந்த ஒரு பெரும் குடிநீர்ச் சீர்கேடு தவிர்க்கப்பட்டது. ஹரியானா வழியாக வரும் அந்தக் கால்வாயின் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் டெல்லியின் தெற்கு, மேற்குப் பகுதியில் வாழும் 3 கோடி மாந்தருக்கு அனுப்பப்படுகிறது. அன்றைய தினம் திடாரென்று கால்வாயில் வந்த கச்சா நீரின் [Raw Water] அமோனியா அளவு அதிகரித்து ஹைதர்பூர், நங்கலாய் பதம்படுத்தும் சாதனச் சாலைகள் [Water Treatment Plants in Haiderpur, Nangloi] நிறுத்தம் ஆயின! ஹைதர்பூர் சாலை நாளொன்றுக்கு 200 மில்லியன் காலன், நங்கலாய் 40 மில்லியன் காலன் கச்சா நீர்ப் பதம்படுத்தும் திறம் கொண்டவை. ‘மேற்கு யமுனா கால்வாயின் நீரில் தொழிற்துறைகள் வெளியேற்றும் தீவிர துர்மாசுக்கள், சுத்தீகரிக்கும் சாதனங்களின் திறமைக்கு அப்பாற்பட்ட நிலையில் நிரம்பி யுள்ளன ‘, என்று டெல்லி நகர நீர்த்தர ஆய்வு அதிகாரி ஒருவர் கூறினார். ஹரியானா நீர்வள அதிகாரிகளுக்கும், நீர்த்தரம் கண்காணிக்கும் துர்மாசு மையக் கட்டுப்பாடு குழுவுக்கும் [Central Pollution Control Board] புகார் செய்து, கச்சா நீரில் அம்மோனியா அளவு மட்டம் குறைந்த பின்பு, டெல்லி நகர இல்லங்களுக்கு நீர்ப் பரிமாற்றம் தொடர்ந்தது.

யமுனாக் கால்வாயின் நீர்ச் சீர்கேடுகள் யாவும் ஹரியானா மாநிலத்தின் தஜேவாலா என்னும் இடத்தில் உற்பத்தியாகி, அங்கே இரண்டாகப் பிரியும் கிழக்கு யமுனா கால்வாயிலும், மேற்கு யமுனா கால்வாயிலும் [Eastern & Western Yamuna Canals] சேர்கின்றன! மேற்கு யமுனா கால்வாய் யமுனா நகர், கர்நல், பானிபட் ஆகிய நகரங்களைக் கடந்து, டெல்லியின் ஹைதர்பூர் நீர்ப்பதம்பாடு சாலைக்கு வருகிறது. யமுனா நகர் இல்லங்களின் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுத் திரவங்கள், பானிபட் சர்க்கரை ஆலைக் கழிவுகள் யாவும் மேற்குக் கால்வாயில் விழுகின்றன! ஹரியானாவின் பரந்த வேளாண்மை வயல்கள் கால்வாயில் வெளித்தள்ளும் களைக்கொல்லி, மற்றும் இரசாயன உரங்களின் துர்மாசு நச்சுக்கள் அநேகம்! அடுத்து யமுனா நீரை மாசு படுத்துவது டெல்லி மாநகரம்! அது தினம் வெளியாக்கும் மலநீர்க்கழிவு [Sewage] மட்டும் 1900 மில்லியன் லிடர்! அது பக்குவ சாதனங்களால் வடிகட்டப் பட்டாலும், 630 மில்லியன் லிடர் கச்சாநீர்க் கழிவு யமுனா நதியில் தினமும் கலந்துவிடப் படுகிறது!

ஏரிகளும், நீர்த்தேக்கங்களும் சீர்கேடாவதற்கு மூல காரணங்கள்: நதிகளும், கால்வாய்களும் தூக்கிச் செல்லும் தொழிற்துறைகள் வெளியேற்றும் துர்மாசுக் கழிவுகள், வேளாண்மை வடிகால் இரசாயனத் திரவங்கள், இல்லக் கழிவுநீர் ஓடைத் திரட்டுகள், சோப்புநீர் வெளுப்புத் திரவங்கள், உணவு எச்சங்கள் போன்றவை. நுண்ணுயிர்ச் ஜீவிகள் அவற்றைத் தின்று, வளர்ந்து தம் வமிசாவளியைப் பெருக்குகின்றன! ஓடிவரும் போது ஆறு தன்னுடன் சகதியையும் திரட்டிக் கொண்டுவந்து கால்வாய் மடியிலும், ஏரியின் அடித்தளத்திலும் தள்ளுகிறது. குடிநீர்த் தேக்கங்களை உளவு ஆய்வு செய்யும்படி, பல நபர்கள் நீதி மன்றங்களுக்கு அநேக மனுக்களைத் தாக்கி யுள்ளதாக அறியப்படுகிறது. அத்தகைய விண்ணப்பங்கள் தாக்கப்பட்ட ஏரிகளின் பெயர்கள் பின்வருமாறு: 1. தால் ஏரி, காஷ்மீர் 2. சந்தோலா ஏரி, அகமதாபாத் 3. ரவீந்திர சரோவர், கல்கத்தா 4 சரூர் நகர் ஏரி, ஆந்திரா 5. பிம்டால் ஏரி, நைனிடால் 6. டெல்லி நீர்த்தேக்கங்கள் 7. உதயப்பூர் ஏரிகள் 8. பெங்களூர் ஏரிகள் 9. சென்னை நீர்த்தேக்கங்கள்.

இந்தியா சுமார் 182.5 மில்லியன் ஹெக்டா ஏக்கர் வயல்களுக்காக, ஆண்டுக்கு 86,311 டன் பூச்சிகொல்லி இரசாயனத்தைப் பயன்படுத்தி வருகிறது. பெரும்பான்மையான இந்திய ஆறுகள் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தும் வேளாண்மை நிலங்களின் வழியாகத்தான் ஓடுகின்றன. அவ்வித வேளாண்மை வயல்களின் உட்கசிவில் [Leaching] வெளியேறும் விஷத் துணுக்குகள் நதியில் கலந்து, நீர்வள உயிரினங்களுக்கும், மனித இனத்துக்கும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை பெற்றவை. 1995 ஆண்டு உளவு ஆய்வில் யமுனா நதி உள்பட இந்திய ஆறுகளில் ஏக மூலக்கூறுகளின் இம்மிகள் [Traces of Isomers: a Carcinogenic Organochlorine] இருந்ததாக அறியப்படுகிறது!

கொலராடோ நதிக் கிளைக் கால்வாய்களில் கட்டுப்பாடு

1859 ஆண்டு தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு மக்கள் எண்ணிக்கை பெருகி, அமெரிக்காவின் நீர்ப்பாசான தானிய விளைச்சல்கள் மிகுந்து, கொலராடோ நதி தீரத்தில் சிற்றூர்கள் நகரங்கள் ஆயின. கொலராடோ நதியின் நீர்வெள்ளம் ராக்கி மலைத் தொடர்களின் கிழக்கிலும் (டென்வர், கொலராடோ ஸ்பிரிங்ஸ், பியூபலோ), மேற்கிலும் (அரிசோனா, காலிஃபோர்னியா மாநிலங்கள்) மலைகளைக் கடந்து கால்வாய்கள் அல்லது குகைகளின் வழியாகத் தூக்கிச் செல்லப்பட்டது. கொலராடோ நதி வெள்ள வினியோக அளிப்பைச் சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தும் உரிமையை நிலைநாட்ட அமெரிக்க மாநிலங்களுக்குப் பல்லாண்டுகள் பிடித்தன. வெள்ளக் கட்டுப்பாடு, நீர்த்தரக் கண்காணிப்பு, நீர்ப்பாசான அமைப்பு, குடிநீர் அளிப்பு, நிலவள நிலைப்பு [Soil Conservation], வனத்துறை நீடிப்பு, நீர்மின்சார எடுப்பு ஆகியவை அனைத்தும் மத்திய அரசுச் சட்டங்களாலும், மாநில அரசாங்க விதிகளாலும் வரையறை செய்யப்பட்டுள்ளன.

கடந்த நூறு ஆண்டுகளாக கொலராடோவின் நதி வெள்ளம் எடுத்துக் கொள்ளப்பட்டு, பயன்படுத்திக் கொள்ளக் கட்டுப்பாடானது. ஆனால் 1973 இல் கொலராடோ சட்டசபை, கொலராடோ நதியில் குறைந்த அளவு நீரோட்டம் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், கூடுமானவரை இயற்கைச் சூழ்மண்டலம் நிலைபெற வேண்டும் என்றும் கொலராடோ நீர்வளக் கண்காணிப்புக் குழுவுக்கு [Colorado Water Conservation Board] ஆணையிட்டது. அக்குழு கொலரடோ நதியின் 8400 மைல் நீண்ட கால்வாய்கள், சிற்றாறுகள், 486 ஏரிகள், நீர்த் தேக்கங்கள் ஆகியவற்றை மேற்பார்வை செய்து வருகின்றது. கொலராடோ நதியின் நீர் வெள்ளம் யாவும் பல முறைகளில் கிளைக் கால்வாய்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டு, அது கடல் மடியில் விழும்போது சிறுத்துக் கண்ணீர்த் துளிகளாய் கரைகிறது!

நதியின் அருகில் வாழும் 17 மில்லியன் நபர்கள் தவிப்புடன் விரும்பும், கொலராடோ நதியின் உரிமையை 400 வேளாண்மைவாதிகள் கைப்பற்றிக் கொண்டு கையாண்டு வருகிறார்கள்! ஒப்பந்தம் ஒன்று முடிவு பெறாமல் இந்த நிலை நீடித்தால், ஆண்டு முடிவில் பல நகரங்களுக்கு நீரளிப்பு நின்று போகலாம்! இப்போது காலிஃபோர்னியா வேளாண்மைக்காரர்கள் ஓர் ஏக்கர்-அடி நீருக்கு 58 டாலர் தரும் போது, நகரவாசிகள் தமது வீட்டுப் புழக்கத்துக்கு ஓர் ஏக்கர்-அடி நீருக்கு 950 டாலர் கொடுத்து வாங்கிறார்கள்!

சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய், செயின்ட் லாரென்ஸ் கடல்வீதி

உலகக் கப்பல்களின் கடல் கணவாய்த் திட்டங்களான எகிப்தின் சூயஸ் கால்வாய், வட அமெரிக்காவின் பனாமா கால்வாய் ஆகியவை முறையே பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட மாபெரும் நீரிணைப்புத் திட்டங்கள். வட அமெரிக்காவின் நடுவில் கனடா, அமெரிக்காவுக்குப் பொதுவான ஐம்பெரும் ஏரிகள் இணைந்து, செயின்ட் லாரென்ஸ் நதியில் கலந்து, ஆற்றோட்டம் 2350 மைல் தூரம் கடந்து அட்லாண்டிக் கடலை அடைகிறது! வரைதளப் படத்தில் மட்டமாகத் தெரியும் சுப்பீரியர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ என்று அழைக்கப்படும் ஏரிகள் ஒவ்வொன்றின் வெவ்வேறான நீர் மட்டம் கடல் மட்டத்திலிருந்து உயரமானது! மேலும் வேறானது! அவற்றைச் சேர்க்கும் ஆறுகள் சில இடங்களில் நயாகரா நீர்வீழ்ச்சி போல் விழுந்து மட்டத்தைக் குறைத்துக் கடலை நோக்கி ஓடிச் சங்கமம் ஆகின்றன. ஐம்பெரும் குடிநீர் ஏரிகள் இயற்கையாகவே நதிகளால் இணைக்கப் பட்டு அமெரிக்கா, கனடாவில் உள்ள எட்டு மாநிலங்களின் துறைமுக நகரங்களைத் தொட்டு ஐரோப்பிய, ஆசிய நாடுகளுடன் வர்த்தகப் பண்டங்கள் பகிர்ந்து கொள்ள கப்பல் போக்குவரத்துக்கு வசதியாய் அமைந்துள்ளன.

அமெரிக்கக் கனேடிய கூட்டுப் பணியாக 470 மில்லியன் டாலர் [1959 நாணய மதிப்பு] செலவில் திட்டமான செயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway] 1954 இல் கட்ட ஆரம்பிக்கப் பட்டு 1959 இல் முடிந்து கப்பல்கள் செல்லக் கால்வாய் திறக்கப் பட்டது. அத்துடன் செயின்ட் லாரென்ஸ் கடல்வீதிப் போக்குவரத்து 40,000 நபருக்குப் பிழைப்பு வேலைகள் அளித்தும், ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் வருவாயைப் பெருக்கியும் வட அமெரிக்கா, கனடா இரண்டு நாடுகளின் நிதிவளத்தை வளர்த்து வந்திருக்கிறது.

எகிப்தில் நீல நைல் நதிக்கருகே அமைத்த சூயஸ் கால்வாய், வட அமெரிக்காவில் கட்டிய மாபெரும் பனாமா கால்வாய் ஆகிய இரண்டும் கப்பல் போக்குவரத்து வசதிக்காகக் கடல்களை இணைத்தாலும், அவை இடையில் இருக்கும் ஆறுகளையும், இயற்கையான அல்லது செயற்கையாய் உண்டாக்கப்பட்ட ஏரிகள், நீர்த் தேக்கங்களையும் சேர்த்துக் கொண்டுதான் கால்வாய்கள் பிணைக்கப் பட்டுள்ளன. 100 மைல் நீளமான சூயஸ் கால்வாய் உலகத்திலே நீளமானது! பனாமா கால்வாய் 50 மைல் நீளமானது! மத்தியதரைக் கடலை விட 30 அடி உயர்ந்த செங்கடலை இணைக்க, கடல்மட்ட நேரடித் தொடர்புக் கால்வாயாக சூயஸ் வெற்றிகரமாய் வெட்டப் பட்டது. 1869 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் கட்டி முடிக்கப்பட்டுச் சூயஸ் கால்வாய் கப்பல் பயணங்களுக்குத் திறந்து விடப்பட்டது.

வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய புதுக் கண்டங்களின் இடையில் குறுகிய தளமான [Isthmus] பனாமா நாட்டின் வழியே, அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் இணைக்க 400 ஆண்டுகளாய்த் திட்டங்கள் உருவாகி இடையிடையே பலமுறைக் கைவிடப் பட்டன! வெற்றிகரமாக சூயஸ் கால்வாயைக் கட்டி முடித்து ‘சூயஸ் கால்வாய் தீரர் ‘ [The Hero of Suez] எனப் பெயர் பெற்ற பிரான்சின் ஃபெர்டினட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps], 74 ஆம் வயதில் பனாமா கால்வாயைக் கட்ட முன்வந்தார். அடிப்படை வேலைகள் ஆரம்பித்து ஏழாண்டுகள் உழைத்து, பலவித இன்னல்களால் முடிக்க இயலாமல் பிரென்ச் அரசாங்கம் பனாமா திட்டத்தைக் கைவிட்டது! பின்னர் அமெரிக்க அரசு கால்வாய்த் திட்டத்தை வாங்கி அமெரிக்க எஞ்சினியர் மேஜர் ஜெனரல் கோதல்ஸ் [Goethals] 1914 இல் பனாமா கால்வாயைப் பூர்த்தி செய்தார்.

பூர்த்தி செய்த பனாமா கால்வாய் 50 மைல் நீளம் கொண்டது. பனாமா நாட்டின் குறுக்கு வழியில் அட்லாண்டிக் கடலிலிருந்து ஐம்பது மைல் தூரத்தைக் கடந்து பசிபிக் கடலை அடைவது அத்தனை எளிதான பயணம் அன்று! மலை மீது செயற்கையாக உண்டாக்கப் பட்ட 90 அடி உயர ஏரியின் நீர் மட்டத்துக்கு முதலில் கப்பல் ஏறிப் பின்னால், 90 அடி உயரத்துக்குக் கீழிறங்கிக் கடல் மட்டத்துக்கு வர வேண்டும்! பனாமா கால்வாயைக் கட்ட பிரென்ச், அமெரிக்க மேற்பார்வைகளில் பணி செய்த 80,000 நபர்களில் 30,000 பேர் மலேரியா நோயிலும், விபத்திலும் மாண்டனர்! பயங்கர பனாமா மலைக் காடுகளில் 44 ஆண்டுகள் (1870-1914) சிக்கலான அந்த இமாலயப் பணியை முடிக்க எஞ்சினியர்களும், பணியாளிகளும் எவ்விதம் திறமையாகப் போராடினார்கள் என்னும் அனுபவம், இந்தியாவின் பூத நதிகளை இணைக்க முன்வரும் அதிகாரிகளுக்கும், நிபுணர்களுக்கும் வழிகாட்டும் முயற்சியாக, பயிற்சியாக இருக்கும். நீர்ப்பாசான பயிர்விருத்தி, குடிநீர் வசதிக்காக நதியிணைப்புக் கால்வாய்கள் கட்டினாலும் அல்லது கப்பல், நீர்ப் போக்குவரத்துப் பயணங்களுக்காக கடல்-நதிக் கண்வாய்கள் வெட்டினாலும், அவற்றின் சர்வே வரை யமைப்புகள், டிசைன் கணிப்புகள், நீரோட்டத் திட்ட முறைகள், பொறி நுணுக்கங்கள், கட்டுமான யந்திரங்கள், கருவிகள், அவற்றைக் கையாளும் விதங்கள் யாவும் ஒரே மாதிரி நிறுவக விதிகளைப் பின்பற்றுபவையே!

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission.

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]

19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]

20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [October 14, 2004] (Part IV)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts