இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே!

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே!

இன்னுயிர் ஈந்தெமை ஈன்று வளர்த்தருள்

ஈந்ததும் இந்நாடே! …. (நாட்டு வணக்கம்)

மகாகவி பாரதியார்

குறுகிய காலத் தவிப்பு! நீண்ட காலக் களிப்பு!

இதை ஆங்கிலத்தில் ‘Short Term Pain! Long Term Gain! ‘ என்று சொல்வார்கள். இதன் எதிர்மறை குறுகிய கால உவப்பு! நீண்ட காலத் தவிப்பு! சிறிது காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கிக் கொள்ள விரும்பாதவர், நீண்ட காலத்துக்கு அனுபவிக்கும் பலாபலன்களை அடையத் திட்டமிடாதவர்கள்! அதே சமயம், குறுகிய கால தவிப்பைத் தவிர்ப்பவர்கள், நீண்ட காலத் தவிப்புக்கு விதை நடுபவர்கள்! நாற்பத்தியிரண்டு நதியிணைப்புத் திட்டங்களில் பெரும்பான்மையானவை மெய்யாகப் பலன்தரக் கூடியவை என்று நம்ப இடமிருக்கிறது. ஜனத்தொகையைப் பேரளவில் பெருக்கிக் கொண்டே போகும் இந்தியாவின் பூத வயிற்றுக்கு, நதியிணைப்பு நீர்ப்பாசானங்கள் ஆயிரங் காலப் பயிர்களாய் நீண்ட காலம் உணவளிக்கப் போகின்றன என்பதில் சற்றேனும் ஐயமில்லை! குறுகிய காலத்தில் நிதி திரட்டல், குன்றிய சமயத்தில் மாநில அரசுகள், மாநில மக்கள் உடன்பாட்டைப் பெறுதல், குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பெரும் இடப்பெயர்ச்சிகளைத் திட்டமிட்டுச் செய்முறையில் காட்டுதல் ஆகியவை யாவும் மக்கள் படப்போகும் குறுகிய காலத் தவிப்புகளே! ஐந்து அல்லது பத்தாண்டுகள் மக்கள் பாதிக்கப் பட்டாலும், அவர்கள் பெறப் போகும் நீர்வள, நிலவளப் பயன்பாடுகள் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிச்சயம் நீடிக்கத்தான் போகின்றன!

ஐக்கிய தேசீயப் பேரவைக் கண்காணிப்பில் நதியிணைப்புத் திட்டங்கள்

பூதளப் பூகோளக் காலநிலைச் சூழ்மண்டல ஆதரவு பெற்ற நதியிணைப்புத் திட்டங்கள் கால தாமதம் அடைவதற்கும், நிதி விரையம், நிதியிழப்பு ஆவதற்கும், நிறைவேறாமல் போவதற்கும் காரணமாகும் கர்த்தாக்களில் அரசியல் வாதிகள், அதிகார வர்க்கத்தினர், எஞ்சினியர்கள் ஆகியோர் போன்று பலர் அடங்கியுள்ளார்கள்! ஏராளமாக நிதிப்பணம் புரளும் தேசீய நதியிணைப்புத் திட்டங்களை அரசியல், சமூகக் கலகவாதிகள் தமது திருவிளையாடல் அரங்கின் கைப்பொம்மைகளாக ஆட்டிப் படைக்கப் பல வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன! உலக வங்கியின் உறுப்பினர்கள், உள்நாட்டு வங்கிகளின் வல்லுநர்கள் பதவி பெற்ற தனித்துறை நிதிக்குழுக் கட்டுப்பாடாலும், நீதிபதிகள், கல்லூரிப் பேராசிரியர் ஆகியோரைக் கொண்ட தனித்துவ நிபுணக்குழு கண்காணிப்பாலும் திட்டங்களின் முன்னேற்றத்தில் காலக் கடப்பு, நிதி சுருட்டல் போன்ற தவறுகள் நேராமல் தடுக்க முடியும்! நதியிணைப்புத் திட்டங்கள் ஒவ்வொன்றும், ஐக்கிய தேசீயப் பேரவைப் [United Nations Organization (UNO)] பிரதிநிதிகளின் நேரடி மேற்பார்வையில் நிறுவகமாக வேண்டும்!

உலக நாடுகளில் பயனளிக்கும் நீர்ப்பாசானத் திட்டங்கள்

நதியிணைப்புத் திட்டங்கள், கால்வாய் நீர்வசதித் திட்டங்கள் உலக நாடுகளில் பல்லாண்டுகள் பின்பற்றப்பட்டு வெற்றிகரமாகப் பயனளித்துக் கொண்டு வருகின்றன. அமெரிக்காவில் காலிஃபோர்னியா ஒரு மாநிலம்தான் 420 மைல் [720 கி.மீ] தூரம் கால்வாய் மூலம் வடபுற மலைத்தொடரின் உபரி வெள்ளத்தைச் செழிப்பான தென்பகுதி நிலங்களுக்கு வெற்றிகரமாகப் பாய்ச்சி வருகிறது. அடுத்த மகத்தான திட்டம், துருக்கி நாட்டிலிருந்து 1800 மைல் [2000 கி.மீ] தூரம் பைப்புகள் மூலம் அரேபியாவுக்கு நீரனுப்பும் ‘சமாதானப் பைப்தொடர்பு ‘ [Peace Pipeline]. அமெரிக்காவில் கொலராடோ நதி டெக்ஸஸ் மாநிலம் வழியாகக் கடலில் சங்கமமாகிறது. டெக்ஸஸில் கொலராடோ நதிநீரைப் பயன்படுத்த மேல்நிலை, இடைநிலை, கடைநிலை ஆணையகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. டெக்ஸஸ் மாநிலத்துக்கும், மெக்ஸிகோ நாட்டுக்கும் கொலராடோ, கிராண்டி நதிகளின் நீரைப் பங்கீடு செய்ய உலகமய ஒப்பந்தம் [International Treaty] செய்யப் பட்டுள்ளது. இந்தியாவில் சட்லெஜ் நதியின் இமாலய நீர்வளத்தைப் பஞ்சாப்-ராஜஸ்தான் மாநிலங்களுக்குப் பகிர்ந்தனுப்பும் ராஜஸ்தான் கால்வாய் [இந்திரா காந்தி கால்வாய்] நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் குடிநீர், நீர்ப்பாசானப் பலன்களைக் கொடுத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கங்கா காவேரி கால்வாய் இணைப்புத் திட்டம்

வடக்கே ஓடும் ஜீவநதிகளைத் தென்புறம் ஓய்ந்துபோன நதிகளுடன் இணைத்து நீரைப் பங்கீடு செய்யும் திட்டங்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே பலமுறை நீர்வளத்துறை நிபுணர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன. நீர்வளப் பொறியியல் வல்லுநரும், முந்தைய மத்திய மந்திரியுமான டாக்டர். கே.எல், ராவ் 1500 மைல் நீளத் திட்டமான கங்கா காவேரி கால்வாய் இணைப்பைப் பற்றி 1972 இல் ஆலோசனை கூறி யிருந்தார். அதன்படி பாட்னாவுக்கு அருகே கங்கை நதியில் 60,000 கியூசெக்ஸ் (cusecs) நீர் வெள்ளத்தை ஆண்டுக்கு 150 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அந்த வெள்ளத்தில் 50,000 கியூசெக்ஸ் அளவு அடுத்து அரை மைல் தூரம் குழாய்கள் மூலமாகத் தென்னகப் பகுதிகளுக்கு அனுப்பப்படும் என்றும் விளக்கி யிருந்தார். மிஞ்சிய 10,000 கியூசெக்ஸ் கங்கை நதி அரங்குகளுக்கும் அளிக்கப்படும்.

அத்துடன் 3000 கியூபிக் மீடர் வெள்ளத்தை 15 மீடர் உயரத்தில் கொண்டு செல்லும் கங்கா பிரமபுத்திரா கால்வாய்த் திட்டத்தையும், 300 கியூபிக் மீடர் நீரைத் தென்னகத்துக்கு அனுப்பும் மகாநதித் திட்டத்தையும், கிளை நதிகள் நீரை 275 மீடர் உயர்த்தி குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அனுப்பும் நர்மதா நதிக் கால்வாய்த் திட்டத்தையும் டாக்டர் ராவே அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தார். பணத்தை விழுங்கும் அந்தக் கால்வாய்த் திட்டங்கள் பல காரணங்களால் அங்கீகாரம் அடையவில்லை. நீர் வெள்ளத்தை மின்சக்தி மூலம் உயரத்தில் அனுப்புவதும் மேற்கொண்ட செலவாகக் கருதப்பட்டது. அத்துடன் கால்வாய் குறுக்கிட்டுச் சூழ்மண்டலத் தோற்றத்தை கோரமாக்கிவிடும் என்ற அச்சமும் உண்டானது! நதிகள் சங்கமமாகும் கடலரங்கு நீரோட்டங்களைக் கட்டுப்படுத்திப் பங்கீடு புரிவது தேசீய, உலக விதிகளில் விவாதிக்கப்பட்டது. பிரிட்டன் ஆண்ட காலங்களிலும் நதிகளுக்குள் நீரை திருப்பிப் பரிமாறிக் கொள்வது கடுமையாகத் தர்க்கத்தில் எதிர்க்கப்பட்டது. வட இந்தியாவில் பாக்ரா நங்கல் போன்ற பெரிய அணைகள் கட்டிய காலங்களிலும், காப்டன் தஸ்தூரின் மாலைக் கால்வாய்த் திட்டம் புறக்கணிக்கப்பட்டது.

நதியிணைப்பு அமைப்புகளைத் திட்டமிடுவது பகற்கனவா ?

நதிகளில் மிஞ்சிக் கடலில் வீணாகும் வெள்ளத்தைச் சேமித்துக் கால்வாய் மூலமாகக் காய்ந்துபோன நதிகளில் இணைக்கும் ஆக்க வினைகளைக் கனவென்றும், தவறென்றும், நிதி விரையம் என்றும் இந்தியாவின் பல திசைகளிலிருந்தும் எதிரொலிகள் கிளம்பியுள்ளன! இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நீர்ப் பற்றாக்குறை, நீர்ப்பாசானத் தளர்ச்சி பெரும் பிரச்சனைகளாக இந்தியாவில் விரியப் போகிறதென்று பல தீர்க்க தெரிசிகள், அரசியல், சமூக ஞானிகள் எச்சரித்துக் கொண்டு வருகிறார்கள். நீர்ப்பஞ்சம் உண்டாகி மக்களின் தொண்டைகள் காய்வதற்கு முன்பாக அரசாங்கம் ஆக்க வழிகளில் முற்படவில்லை யானால், பிரச்சனைகள் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு முற்றிவிடும்! உலகில் ஓடும் பல ஜீவநதிகள் இந்தியாவின் புனித கங்கை, யமுனா நதிகளைப் போன்றே துர்மாசுக்கள் கலப்பாகிக் குடிநீருக்குரிய தகுதி பெறாதவை. ஆறுகளின் நீர்வளம் சுத்தீகரிக்கப்பட்டுக் குளோரினும் கலக்கப்பட்டுக் கிருமிகள் கொல்லப்பட்டால்தான், அவற்றின் நீரைக் குடிநீராக உட்கொள்ள அனுமதி கிடைக்கும். மேலும் மிஞ்சிய மழைக்கால நீர் வெள்ளத்தை வெட்டிய கால்வாய்கள் மூலமாக தூர இடங்களுக்கு அனுப்பி, நீர்த் தேக்கங்களில் சேமித்து வைத்துக் கொண்டால், வேளாண்மைக்கும், தொழிற் துறைகளுக்கும், புழக்க வசதிகளுக்கும் தேவையான காலத்தில் பேரளவில் பயன்படும்.

1980 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 850 கோடி ரூபாய்ச் செலவாகி அமைக்கப்பட்டு வரும் 180 மைல் [306 கி.மீ] தூர ஸட்லெஜ்-யமுனா நதியிணைப்புக் கால்வாய் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் காலம் கடந்தும் முடிவு பெறாமல் முடங்கிக் கொண்டு வருவதன் காரணங்கள் தெரியவில்லை! அதிக விளம்பரத்தில் அறிவிக்கப்பட்ட ஸட்லெஜ்-யமுனா இணைப்புத் திட்டம் ஏராளமான நிதியை விழுங்கிக் கொண்டும், காலத்தைக் கடத்திக் கொண்டும் பலன்தராத நீர்ப்பாதையாகப் பாழ்பட்டு வருகிறது! அதற்கு முக்கியக் காரணம்

நீர்வள முடைய பஞ்சாப் மாநிலம், நீர் தேவைப்படும் ஹரியானா மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறையை நம்பவில்லை! அதனால் பூர்த்தி செய்ய வேண்டிய கால்வாய் அமைப்பைத் தொடராது நிறுத்தி வைத்துள்ளது! வட நாட்டில் நொண்டிக் கொண்டிருக்கும் ஸட்லெஜ்-யமுனா கால்வாய் போன்று, தென்னாட்டில் சென்னையின் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீரனுப்புவதாக அமைக்கப்படும் ‘தெலுங்கு-கங்கா திட்டம் ‘ 2001 மேமாதம் 6.7 tmc [thousand million cuft] நீர்வெள்ளத்தைக் குடிநீருக்கு அளித்தாலும், இன்னும் முற்றுப் பெறாமல் நிதி முடக்கத்தில் மூழ்கி 2005 ஆண்டில் முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

இந்தியாவில் இயங்கிவரும் வெற்றிகரமான நதியிணைப்புகள்

1. தமிழ்நாட்டின் பெரியாறுத் திட்டம்: கேரளம், தமிழ்நாட்டு மாநில எல்லை மலைகளில் உற்பத்தியாகி மேற்கே அரபிக் கடலில் சங்கமமாகும் பெரியாறு நதியின் நீரை அணைக்கட்டித் திருப்பி, வைகை நதியில் கலக்க 1895 இல் பிரிட்டன் திட்டமிட்டு வெற்றிகரமாக முடித்தது. மலை உச்சியில் 160 அடி நீளத்தில் [48 மீடர்] அணைகட்டி, நீரைத் தேக்கித் திசைதிருப்பி சுமார் ஒருமைல் [1740 மீடர்] நீளக்குகை ஒன்றை மலையில் குடைந்து, அதன்மூலம் வினாடிக்கு 40.75 கியூபிக் மீடர் [cubicmeter/sec] நீர் வெள்ளம் அனுப்பப்படுகிறது. அந்த வெள்ளம் கம்பம் வழியாக வைகை நதியுடன் இணைக்கப்பட்டு, 150 மைல் கிழக்கே ஓடி 57900 ஹெக்டா ஏக்கர் வயல் பரப்புகளுக்கு நீர்ப்பாசான வசதி அளித்து வருகிறது. அதற்குப் பிறகு தற்போது இணைப்பு நீட்சி செய்யப்பட்டு 81,000 ஹெக்டா ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசானம் செய்யப் படுகிறது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு அதன் நீரழுத்தம் பயன்படுத்தப் பட்டுத் தமிழ்நாட்டுப் பகுதியில் 140 மெகா வாட் நீர்மின்சார நிலையமும் நிறுவகமாகி இயங்கி வருகிறது.

2. பரம்பிக்குளம் அலியாறுத் திட்டம்: தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையில் புகுந்து செல்லும், பன்முக நதிப் படுகைகளில் பரவிய சிக்கலான ஏழு சிற்றாறுகள் இணைந்து பல்திறம் கொண்ட திட்டமிது. தற்போது 162,000 ஹெக்டா ஏக்கர் வயல்களுக்கு நீர்ப்பாசானம் அளித்துக் கொண்டு, அதே சமயத்தில் 185 மெகா வாட் நீர்மின்சாரமும் பரிமாறி வருகிறது. தமிழகத்தில் கோயமுத்தூர் மாவட்ட வயல்களுக்கும், கேரளத்தில் சித்தூர் பகுதிகளுக்கும் நீர்ப்பாசான வசதி கொடுக்கிறது.

3. கர்நூல்-கடப்பா கால்வாய்: 1863 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் தனியார் கட்டுமானக் கம்பெனி ஒன்று அமைத்த கால்வாய் இது. ஆந்திராவில் துங்கபத்ரா நதியில், கர்நூல் நகரின் மேலோட்ட முகப்பில் [Upstream Side] 30 அடி உயரத்தில் அணைகட்டி, 180 மைல் நீளக் கால்வாய் அமைக்கப் பட்டிருக்கிறது.

கால்வாயின் நீரோட்டத் திறம் வினாடிக்கு 85 கியூபிக் மீடர் [85 cumecs]. அதன் ஓட்டம் கிருஷ்ணா பெண்ணாறு படுகை வரை நீட்சியாகி, நீர்ப்பாசானம் செய்யும் நிலப்பகுதி 52,700 ஹெக்டா ஏக்கர் என்று அறியப்படுகிறது. இந்திய அரசு 1882 இல் தனியார் கைவசம் இருந்த கர்நூல்-கடப்பா கால்வாயைத் தனது நேரடிக் கண்காணிப்புக்கு ஏற்றுக் கொண்டது.

4. தெலுங்கு-கங்கா கால்வாய்த் திட்டம்: 1983 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2005 இல் முடிவதாகத் தீர்மானிக்கப்பட்டு 21 வருடங்கள் நீட்டப்பட்டுச் சமீபத்தில் [2004] முடிந்ததாகக் கூறப்படும் திட்டமிது! சென்னை நகரின் நீர்நெருக்கடித் தேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டமிது! மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் மொத்தம் 15 tmc [Thousand Million cuft] நீர் வெள்ளம் கொடுக்க முன்வந்தது! ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து, கிருஷ்ணா நதியின் நீரைத் திறந்த கால்வாய் மூலம் முதலில் பெண்ணாறு பள்ளத்தாக்கில் உள்ள சோமசீலா ஏரிக்குக் கொண்டு வந்து விடப்பட்டது. அதற்கு இடைப்பட்ட 120 அடி உயர மலை ஒன்று உடைக்கப்பட்டு பிளக்கப் பட்டது! பிறகு அந்த ஏரியிலிருந்து 27 மைல் தூரக் கால்வாய் வழியாக நீர்வெள்ளம் கந்தலேறு நீர்த்தேக்கத்துடன் இணைப்பானது. அதன் பின் அடுத்து 120 மைல் தூரம் கால்வாய் வெட்டப்பட்டு, சென்னை பூண்டி நீர்த் தேக்கத்துடன் சேர்க்கப்படும்.

இருமாநிலங்களின் ஒப்பந்தப்படி சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர்க் கொள்ளளவு 12 tmc அனுப்பப்பட வேண்டும். அதே சமயத்தில் தெலுங்கு-கங்கா கால்வாய் வரும் வழியில் ஆந்திராவில் 2.33 லட்சம் ஹெக்டா ஏக்கர் வயல்களுக்கு நீரளிக்கும். 1983 ஆண்டுத் துவக்க நிதி மதிப்பீடு: ரூ 637 கோடி! 1997 ஆண்டு மதிப்பீடு ரூ 2470 கோடியாக நான்கு மடங்கு அதிகமானது! அதில் தமிழ் நாட்டின் பங்கு: ரூ 639 கோடி! முப்பெரும் மாநிலங்கள் முன்வந்து முழு மனதுடன் சென்னைக்கு நீர் அளிக்கும் தெலுங்கு-கங்கா நதியிணைப்புக் கால்வாய், கால தாமதமாகிப் தமிழரின் பொறுமையைச் சோதித்தாலும், ஏராளமான நிதியை மீண்டும், மீண்டும் கரைத்தாலும், இந்திய ஒழுங்கீனச் சூழ்நிலையில் ஓரளவு பாராட்டப்பட வேண்டிய திட்டமே! தெலுங்கு-கங்கா கால்வாய் திட்டத்தில், புதிய திட்டங்களை அமைக்க இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் இருக்கின்றன!

நதியிணைப்புத் திட்டங்களில் மக்கள் படும்பாடு!

11. இமாலய நதிகளைத் தென்னக நதிகளுடன் இணைக்க வெட்டப்படும் 24,000 மைல் தூரத்தில் பல உள்நாட்டுக் கால்வாய்கள், அணைகள், நீர்த்தேக்கங்கள் உருவாகப் போவதால் பேரளவு மாந்தருக்குப் பெருங்கொண்ட இடப்பெயர்ச்சிகள் ஏற்படும். புதிதாகக் கட்டப்படும் அணைகளும், நீர்த்தேக்கங்களும், கால்வாய்களும் நதிகள் எப்போதும் புகும் கடற்படுகைப் பகுதிகளை மாற்றி அமைத்துப் புதுவித நீரோட்ட மடைகளை உண்டாக்கி, எப்போதாவது வெள்ளநீர் அடைப்புகள் சிக்கிக் கொண்டு மில்லியன் கணக்கான ஹெக்டேக்கர் பரப்பு வேளாண்மை வயல்களையும், கானங்களையும் மூழ்க்கிவிடலாம்!

2. குறுக்கிலும், நெடுக்கிலும் செல்லும் புதிய அணைக் கால்வாய்களால் பழைய வேளாண்மை வயல்கள் அழிக்கப்பட்டு, சூழ்மண்டல எழிற்கோலம் சிதைக்கப்படலாம்.

3. நதி யிணைப்புகள் பூதள மாறுதல் செய்து, அரங்கின் பூகோள அமைப்பையே கோரமாக்கி விடலாம்.

4. தேசீய ஒருமைப்பாடு உண்டாக்க செய்யப்படும் மாநில நதியிணைப்புகளில் உடன்பாடுகள் ஏற்படுவதற்குப் பதிலாக தீவிர வெறுப்பும், தீராத வில்லங்கமும் விளையலாம்.

5. நிதிக்கொடைகள் வற்றி நிரப்ப முடியாது, நடுமையத்தில் கால்வாய் நகர முடியாமல் நின்று போகலாம்.

6. நீர்வளக் கணக்கீடுகளில் பிழைகள் உண்டாகி, முழுக்கால்வாய் முடிவு பெற்றதும், நீரோட்டம் கணித்த அளவில் ஓடாமல் சுருங்கிவிடலாம்.

7. நதியிணைப்புக் கால்வாய்கள் முடிந்து வெற்றிகரமாக ஓடிவரும் நீர்வெள்ளத்தைப் புதிய மாநில அரசாங்கம் நிறுத்தி விடலாம்.

8. இடப்பெயர்ச்சியில் நட்டயீடு அளிக்கப்படும் மக்கள் அதிகார வர்க்கத்தால் ஏமாற்றப் படலாம்.

9. திட்ட மிட்டபடி நதியிணைப்பைத் தொடர முடியாது, திசைமாற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டு, நிதிச் செலவும், காலக் கடப்பும் நேர்ந்திடலாம்.

10 மாநில அரசுக் கட்சிகள் மாறி, நதியிணைப்புத் திட்டங்கள் தொடரப்படாது நிறுத்தப்பட்டு விடலாம்!

11 அணைக்கட்டு, நீர்த்தேக்கம், கால்வாய் கட்டமைப்புகளில் பழுதுகள், விரிசல்கள் ஏற்பட்டோ, உடைந்தோ வெள்ளம் ஊரை மூழ்க்கிவிடலாம்.

நதிகள் இணைப்புத் திட்டத்தில் எழும் பிரச்சனைகள்

இமாலத் திட்டமான நதிகள் இணைப்புப் பணிகளில் ஏற்படும் பெரும்பான்மையான சிக்கல்கள், சிரமங்கள், பிரச்சனைகள் கீழ்வரும் 20 தலைப்புகளில் அடங்குகின்றன. இந்தச் சிறிய பிரச்சனை நிரலில் அடங்காமல் வேறு சில வில்லங்களும், சிரமங்களும் எதிர்பாராமல் உண்டாகலாம்!

1. மத்திய அரசு, மாநில அரசுகளின் நில ஆதிக்கச் சட்ட வரையரைகளில் முரண்பாடுகள்.

2. நதியோட்ட முறைகளிலும், கடலில் நதிப் படுகை விரிவு முறைகளிலும் நீரோட்டக் கணிப்புத் தவறுகள் நேருதல். நதியிணைப்புகளில் நீர்வள இருப்பு, எடுப்புக் கணிப்பீடுகளில் குறைபாடுகள், பழுதுகள், பிழைகள் ஏற்படுதல்.

3. நதியிணைப்புத் திட்ட ஆணை, மேற்பார்வைக் குறைபாடுகள்

4. பூகம்பம், சைக்குளோன், சூறாவளி போன்ற பூதளப் பூகோளத் தடைகள் [Geological Seismic Restrictions].

5. தள உளவு, தள வரைவுக் குழுவினர் தயாரிக்கும் சர்வேப் பதிவுகளில் பிழைகள் ஏற்படுதல். நீரோட்டம், நிலத்துறைப் பொறியியல் பிரச்சனைகள். குன்றுப் பகுதிகளில் கால்வாய் வெட்டுவதா அல்லது குகைகள் குடைவதா என்பதில் தீர்மானக் குழப்பங்கள் உண்டாகுதல்.

6. நிதிச்சேமிப்பு, நிதிஒதுக்கு, நிதிச்செலவு, நிதிக் கட்டுப்பாட்டுச் சிக்கல்கள்

7. சமூகக் கலாச்சார எதிர்ப்புகள், குறுக்கீடுகள், சிதைவுகள்.

8. சூழ்மண்டல தோற்றம், காடு வனப்பு, வயல், வனத்துறை அழிப்புச் சீர்கேடுகள்

9. மாநில அரசியல், இனக்கட்சிகள், கிராம மக்கள் உடன்படாத் தடைகள்

10. பேரளவு இடமாற்றம், இடநகர்ச்சிகளில் [Large Scale Displacements & Relocations] ஏற்படும் பிரச்சனைகள்

11 இல்லங்கள், கடைகள், தெருக்கள் நீக்கப்பட்டு இடநகர்ச்சி நட்ட ஈடு அளிப்பில் [Relocation Compensation] முரண்பாடுகள், தகராறுகள்.

12. அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள பழைய நீர்நிலச் சண்டைகள்

13. கட்டமைப்பு நிறுவக ஒப்பந்த அளிப்புத் [Contract Agreements] தகராறுகள்

14. நகரக் கிராமப் பொதுமக்கள் புறம்போக உடன்படாமை [Relocation Disagreements]

15. நில ஆக்கிரமிப்புத் தகராறுகள், இடையூறுகள்.

16. லஞ்சக் கண்டுபிடிப்பு, தண்டனை, உடன்பாட்டு முறிவுப் பிரச்சனைகள்.

17. நிதிக்கொடை சுருங்கியோ, பிரச்சனைகள் மிகுந்தோ கால்வாய்த் திட்டங்கள் கால தாமதம், முடக்கம். 18. ஊழியர் அதிருப்தி, ஊதியச் சண்டை, வேலை நிறுத்தம்

19. தேர்தலில் கட்சியும், ஆட்சியும் மாறித் திட்டங்கள் புறக்கணிப்பு

20. அண்டை நாடுகள் நேபாளம், பூதான், பங்களா தேசம், பாகிஸ்தான் நதிநீர்ப் பங்கீடு உடன்பாடுகளில் மறுப்பு, மாறுபாடு, பிரச்சனைகள்.

நதியிணைப்புத் திட்டங்கள் வெற்றி பெற சில ஆலோசனைகள்

திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில், அனுமதித்த நிதிச் செலவில் வெற்றிகரமாக முடிவு பெற வேண்டும். கால தாமதமாகும் போது, நிதிக்கொடை காலியாகி மக்கள் பொறுமையும் கரைகிறது! பிறகு நிதி திரட்டக் காலதாமதம் ஆகிறது! நிதி கிடைக்காமல் போய் பாதி முடிந்த திட்டமும் நித்திரையில் மூழ்கிக் குறட்டை விடுகிறது! அல்லது குன்றிய நிதி திரட்டப்பட்டுத் திட்டம் இன்னும் சிறிது தூரம்போய் மூச்சுத் தடுமாறி இளைப்பாறிக் கொள்ளும், இன்றேல் மறுபடியும் படுத்துக் கொள்ளும்! இவ்விதம் ஆமை நகர்ச்சி வேகத்தில் நதியிணைப்புத் திட்டங்கள் தற்போது இயங்கிக் கொண்டு வருன்றன! உதாரணம் 1. சென்னைப் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீரனுப்பக் கட்டப்படும் ‘தெலுங்கு-கங்கா கால்வாய் நீர்த்திட்டம் ‘ 2. ஒருமைப்பாடு இல்லாத பஞ்சாப் ஹரியான மாநிலங்களுக்கு இடையே பகைப்பாடு மிஞ்சி, உச்ச நீதி மன்றத்தில் ஊஞ்சல் ஆடும் ‘ஸட்லெஜ்-யமுனாக் கால்வாய் நீர்த்திட்டம் ‘. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவி செய்யலாம்:

1. திட்டங்கள் குறிப்பிட்ட கால வரையறையில் முடிவு பெற, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தனி நிபுணக் குழுவினர் மாதம் தோறும் கூடிச் சீராய்வு செய்து, தடையிடும் பிரச்சனைகளைக் கையாள வேண்டும்.

2. நிதி ஓட்டம், நிதி முடக்கம், நிதி விரையம், நிதிச் செலவு, நிதி இருப்பு, நிதிக் கொடை ஆகியவற்றை மாதம் தோறும் இருதர நிதிக்கட்டுப்பாடுக் குழுவினர் சீராய்வு செய்து, கண்காணித்து வர வேண்டும். நிதிக்கட்டுப்பாடுக் குழுவினரில் உலக வங்கி, மாநில வங்கிகளின் நிபுணர்கள் உறுப்பினாராக அமைக்கப்பட வேண்டும்.

3. திட்டங்களுக்குப் ‘பச்சைக் கொடி ‘ காட்டுவதற்கு முன்பே, மக்கள் இடப்பெயர்ச்சி, நில ஆக்கிரமிப்பு, நட்ட ஈடளிப்பு, திட்ட வழக்குப் பிரச்சனைகள், திட்ட மாறுபாடுகள், மறு பாதைகள் போன்றவை தீர்க்கப்பட்டு சட்ட ரீதியான மாநில ஒப்பந்த உடன்பாடுகள் கைவசம் இருக்க வேண்டும். முதலாவதாகத் தீர்க்கப்படாத இம்மாதிரிப் பிரச்சனைகள், இடையிலே எழுந்தால் திட்டம் காலதாமதம் ஆக்குவதோடு, நிதியையும் விழுங்கி முடங்கிப் போய்விடும்!

4. திட்டங்களில் நிதிக் கையாடல், நிதித் திருட்டு, கைப்பணம், லஞ்சம், சாதனக் கடத்தல் போன்ற தவறுகள் செய்வோர் கண்டுபிடிக்கப் பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். தவறுகளைச் சீராய்வு செய்ய மாநிலங்களைச் சேராத நடுத்தர நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.

5. ஒவ்வொரு கால்வாய்-அணை-நீர்த்தேக்கத் திட்டமும் ஐக்கிய தேசீயப் பேரவைப் பிரதிநிதி ஒருவரால் நேரடிக் கண்காணிப்பில் நிறுவகமாக வேண்டும்.

இமாலய நதியிணைப்புத் திட்டங்களில் இந்தியா முற்பட வேண்டுமா ?

5.6 பில்லியன் ரூபாய் நிதியைப் பத்தாண்டுகள் புகுத்தி பாரத மாநில மக்கள் யாவும் ஒருங்கிணைந்து நீர்ப் பற்றாக்குறை பிரச்சனைகளை தவிர்க்கத் தேவையில்லை என்று முட்டுக்கட்டை போடுபவர் யார் ? பூத நதிகளில் ஆண்டு தோறும் பொங்கி வழிந்து கடலில் வீணாகும் நீர் வெள்ளத்தை அணைகட்டித் தடுத்துக் கால்வாய் மூலம், தென்னகத்தின் காய்ந்து போன நதிகளில் சேர்க்க முற்படும் ஆக்க நிபுணர்களைத் தாக்கி நிறுத்துபவர் யார் ? பாரதத்தின் மாபெரும் நதிகளில் 21 கிளைக் கால்வாய்களை வெட்டி, ஓய்ந்து போன நதிகளுடன் இணைத்து வட நாட்டிலும் தென்னாட்டிலும் 35 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நிலத்தில் நீர்ப்பாசான வேளாண்மையை விருத்தி செய்து தானிய உற்பத்தியைத் தடுக்க முயல்வது யார் ? நீர்வளக் கால்வாய்கள் வெட்டுதல், பேரணைகள் கட்டுதல், நீர்த்தேக்கம் கண்மாய்கள் தோண்டுதல், நீர்மின்சார நிலையங்கள் அமைத்தல் போன்ற தொழிற்துறைகள் பெருகி, 34,000 மெகாவாட் மின்சார ஆற்றல் உண்டாக்கிப் போக்குவரத்து வசதிகளும் பெருகப் போவதைக் கனவென்று ஒதுக்கிப் புறக்கணிப்பது யார் ? இந்த எதிர்ப்பாளிகள் யாவரும் இந்தியர் நலம் பேணும் இந்தியரா அல்லது இந்தியர் முன்னேற்றை முறிக்க முயலும் இந்தியாவில் வாழும் அன்னியரா ? இந்த வினாவுக்கு இந்தியரே பதில் கூறட்டும்.

ஆங்கிலேய ஆட்சியின் போது, அடிமை இந்தியாவை ஒன்றுபடுத்தி, நகரெங்கும் குறுக்கிட்டுச் செல்லும் பல்லாயிரம் மைல்கள் இரயில் பாதைகளை அமைத்து அன்னியர், அனைத்து மாநிலங்களையும் ஒரு தேசமாக இணைத்தனர்! ஆங்கில ஆட்சி வெற்றிகரமாக முடித்த இரயில்பாதைகளை, இப்போது விடுதலை அரசாங்கம் இந்தியாவில் செய்து முடிக்க மாநில அரசுகள் முட்டுக்கட்டை போடாமல் அனுமதிக்குமா என்பது ஐயப்பாட்டில் உள்ளது! பாரதம் பூரண விடுதலை பெற்றாலும், மாநிலங்கள் பல இன்னும் பழைய அரச பரம்பரைகள் தனியாக ஆட்சி செய்த முறையில்தான் நடந்து கொள்கின்றன. சர்தார் வல்லபாய் படேல் தனித்தியங்கிய இந்திய அரசர்களின் ஆட்சியைக் கலைத்துப், பாரத நாட்டுக் குடியரசில் யாவற்றையும் ஒன்றாய் இணைத்தார்! இப்போதுள்ள மத்திய அரசு நதியிணைப்புப் பிரச்சனைகளைத் தீர்த்துப் பல்வேறு மாநிலங்களை உடன்பட வைத்து, ஆக்கவினைகள் புரிய ஒரு திசைப்போக்கில் கொண்டுவர முடியுமா என்பது தெரியவில்லை! மொழிவாரியாகப் பிரிவுபட்ட மாநிலங்கள், நீர்ப்பங்கீட்டுப் போரில் பாகப் பிரிவினைப் போராட்டம் நடக்கும் உள்வீட்டுச் சகோதர்போல் நடந்து கொள்கிறார்கள்! இந்தியாவின் ஜீவ உறுப்புகள் போன்ற அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இயங்கி, நதியிணைப்புத் திட்டங்களை முழு முயற்சியில் முடிக்காவிட்டால், நீர்ப்பஞ்சமும், நீர்ப்பாசானச் சீர்கேடுகளும் விளைந்து சில உறுப்புகள் பழுதாகி, அவை முழு இந்திய மேனியையும் பாதிக்கும்படி வைத்துவிடும்!

இமாலயப் பிரதேசங்களில் பூகம்பம் நேர்ந்து, நதியிணைப்பு அணைக்கட்டு, கால்வாய், நீர்த்தேக்கம் ஆகியவை உடைந்து உயிர்ச்சேதமும், நிலச்சேதமும் நிகழ்ந்துவிடும் என்று அஞ்சுவோர், ஐம்பது ஆண்டுகளாக இமயமலை அடிவாரத்தில் ஓடும் பஞ்சாப்-ராஜஸ்தான் கால்வாயையும், 800 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ள பாக்ரா நங்கல் அணைகளையும், நீர்த்தேக்கங்களையும், டெல்லிக்கருகே நிறுவப்பட்டுள்ள நரோரா இரட்டை அணுமின் நிலையத்தையும் பார்த்து வரவேண்டும். இந்திய அரசாங்க நீர்த்துறைப், பூதள நிபுணர்கள் கணக்கீடும், மதிப்பீடும் செய்த 42 நதியிணைப்புத் திட்டங்களில் பல காரணங்களால் 25% புறக்கணிப்பாகி நான்கில் மூன்றைச் சாதித்தாலும், முப்பது நீரிணைப்புத் திட்டங்களால் நீர்வளமும், நீர்ப்பாசானமும் இந்தியா வெங்கும் பேரளவு பெருகத்தான் போகின்றன. இமாலய நதியிணைப்புத் திட்டங்களால் இந்தியப் பூதளத்தின் எழில்கோலம் அழிந்து போகும் என்று கூக்குரல் இடும் எதிர்ப்புவாதிகள் நீர்ப்பஞ்ச பிரச்சனைகளுக்கு வேறு சில நிரந்தர, நீண்டகால ஆலோசனைகளைக் கூறலாம்! உங்கள் வீட்டுக் குழாயில் ஒருதுளி நீரில்லாத போது, வீட்டுக் கிணற்றில் நீர்ச்சுனை வற்றிய போது, ஊர் ஆற்றில் நீரோட்டமின்றிப் பயிர்கள் வாடும் போது, காலையில் பல்தேய்த்து வாய் கொப்பளிக்க ஒரு வாளி தண்ணீருக்கு 100 ரூபாய் கொடுக்கும் போது குமுறி எழும் கோடான கோடி மக்களின் கோபத்தையும், கண்ணீரையும் துடைப்பது எப்படி என்று எதிர்ப்புவாதிகள் பேரளவு நீர்வளத்தை, நீண்ட காலம் அளிக்கும் ஆக்கவழிகளை எடுத்துக் காட்டலாம்!

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. SAravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [September 30, 2004] (Part II)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts