இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (1)

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


மன்னும் இமயமலை எங்கள் மலையே!

மாநில மீதது போல்பிறி தில்லையே!

இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே!

இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே ? ….[எங்கள் நாடு]

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்!

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்! ….[பாரத தேசம்]

எல்லாரும் ஓர்குலம்! எல்லாரும் ஓரினம்!

எல்லாரும் இந்திய மக்கள்!

எல்லாரும் இந்திய மக்கள்! …[பாரத சமுதாயம்]

மகாகவி பாரதியார்

தேசீய நதியிணைப்புத் திட்டங்கள் பூர்த்தியானால், இந்தியர் ஒருமைப்பாடு வளரப் போவதாய் அரசாங்கம் அறிவித்து வருகிறது! அது தவறான அறிவிப்பு! பகைமைப்பாடு குறைந்து மாநிலங்களுக்குள் ஒருமைப்பாடு மிகுந்தால்தான், நதியிணைப்புத் திட்டம் எதுவுமே நிறைவேறப் போகிறது!

கட்டுரை ஆசிரியர்

முன்னுரை: இந்திய அரசாங்கம் முதலாய்வு செய்து தேர்ந்தெடுத்த நதியிணைப்புத் திட்டங்கள் பாதகத்தை விட கூடுமானப் பலன்களை அளிக்குமாயின், மாநிலங்கள் அவற்றை நிறைவேற்ற முடியும் என்னும் உறுதிப்பாடு கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது. அரசாங்கம் மறு சீராய்வுகள் செய்து, உடன்பாடுகளுடன் உறுதி பெறாத இந்தத் திட்டங்கள் மக்களுக்குப் பலன்தருமா, பாதகம் தருமா, பகை உண்டாக்குமா, நிதி விரையமாகுமா அல்லது நிறுத்தப்படுமா என்னும் தகவலின்றித் திட்டங்களின் தலைவிதியைத் தீர்மானம் செய்வது கடினம். நீர்ப்பங்கீட்டுக்கு ஒருமைப்பாடும், இடப்பெயர்ச்சிக்கு பொறுமைப்பாடும் இல்லாமல் பகைமூளும் மாநிலங்களில் இத்திட்டங்களுக்கு விதையிட்டால் பயிர்கள் வளர்வதற்குப் பதிலாகக் களைகளே விளையப் போகின்றன! ஆதவே மாநில அரசுகளின் பூரண ஒப்பந்தம், பாதிக்கப்படும் மக்களின் உடன்பாடு பெறாத இத்திட்டங்களைத் போற்றிக் கொள்ளுவதோ அல்லது புறக்கணித்துத் தள்ளுவதோ சரியில்லை என்பது என் கருத்து. புதிய முயற்சிகளை ஒப்புக் கொண்டு நிறைவேற்றும் போது எதிர்பார்க்கும் பாதிப்புகளும், எதிர்பாராத பாதிப்புகளும் இடையிடையே எழத்தான் போகின்றன! பாதிப்புகள் எவையேனும் இல்லாமல் எந்தப் பலாபலனும் உண்டாவதில்லை!

நான் ஒரு நீர்ப்பாசான, நீர்வளத்துறை எஞ்சினியர் அல்லன். நதியிணைப்புத் திட்ட பணிக்குழுவில் [Task Force] உறுப்பினரான பாரத ஏவுகணைத் திட்ட அதிபர், டாக்டர் கஸ்தூரிரங்கன் நீர்வளத்துறை எஞ்சினியர் அல்லர்! மக்களைப் பாதித்துப் பலனளிக்கும் சிக்கலான பொறித்துறைத் திட்டங்களில் பங்கெடுத்து வெற்றிகரமாகச் சாதித்த எவரும் நதியிணைப்புத் திட்டங்களைச் சீராய்வு செய்யத் தகுதி உடையவர்களே! இந்தியா, கானடா இரண்டு நாடுகளின் கனநீர் அணுமின்சக்தி நிலையங்களில் கட்டமைப்பு, இயக்கம், பராமரிப்புப் பணிகளில் நாற்பது ஆண்டுகளும், பெரியாறு நீர்மின்சார நிலைய நிறுவகத்தில் சில காலமும் அனுபவம் பெற்ற எனது சீராய்வு முழுமையான தன்று! அது பன்முகப் பார்வையில் இல்லாமல் இருக்கலாம். விடுதலை அடைந்த இந்தியா, இமாலய நீர்வளத்தை திருப்பிப் பாக்ரா, நங்கல் அணைகைளைக் கட்டி, பஞ்சாப்-ராஜஸ்தான் கால்வாய் மூலம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நீர்ப்பாசான வசதிகளை விருத்தி செய்து வருகிறது. விடுதலை இந்தியாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டு மின்சார நிலையங்கள் உருவாகிக் கன யந்திரத் தொழிற்சாலைகள் தோன்றி இந்தியர்களின் நிபுணத்துவமும், எதனையும் நிறுவகம் செய்ய உதவும் பிரம்மாண்டமான யந்திரச் சாதனங்களும், நுணுக்கக் கருவிகளும் கைவசம் உள்ள போது, நதியிணைப்புகள் போன்ற பூதத் திட்டங்களில் முற்படுவதில் எவ்விதத் தவறும் இல்லை!

பல மொழிகள் பேசி வேற்று மாநிலங்களில் வாழும் இந்தியர் ஒருங்கிணைந்து அணு ஆராய்ச்சித் துறைகள், அணுமின்சார நிலையங்கள் ஆகியவற்றைப் பாரதமெங்கும் நிறுவகம் செய்து கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சிறப்புடன் பராமரித்து வருகிறார்கள்! இந்திய அணுமின்சார வளர்ச்சியும், விருத்தியும் புதிய நீர்ப்பாசான நதியிணைப்புத் திட்ட அமைப்புகளுக்கு முன்மாதிரியாக, வழிகாட்டியாகக் கண்முன்னே நிற்கின்றது. கன யந்திரத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கிவரும் இந்தியர், நதியிணைப்புத் திட்டங்களைச் சாதிப்பதில் ஏன் பின்வாங்க வேண்டும் என்பதே எனது கேள்வி! பெரும் நதியிணைப்புத் திட்டங்களுக்கு இந்தியாவில் வித்திட்டு, அடித்தள மிட்டுக் கட்ட ஆரம்பித்த ஸர் ஆர்தர் காட்டன், விஸ்வேஷ்ரையா, கே.எல். ராவ், காப்டன் தஸ்தூர் ஆகிய அத்தனை பேரும் நீர்வளத்துறை, நீர்பாசானப் நிபுணத்தில் பொறியியல் மேதைகள் என்பதை முதலில் இங்கே குறிப்பிட விழைகிறேன். நதியிணைப்புத் திட்டங்களை நிறைவேற்றப் பொறித்துறை நுணுக்கங்கள், கட்டுமானச் சாதனங்கள், மனித வல்லமைகள், மனிதர் எண்ணிக்கை எல்லாம் இருந்தும், முதல் வினை ஊக்கியான [Catalyst] ஒருமைப்பாடு மட்டுமே இந்தியா வெங்கும் மக்களிடையே பெரும்பான்மையாகக் காணப்படாத பண்பாகத் தோன்றுகிறது!

நதியோரம், கடலோரங்களைத் தேடும் உலக நாகரீகங்கள்

தொன்மை காலம் தொட்டே உலகக் குடியினங்கள் யாவும் முதன் முதலில் கடலோரங்களையும், நதிக்கரை ஓரங்களையும் அண்டிக் குடியேறித்தான் தமது பரம்பரைகளை விருத்தி செய்து வந்துள்ளன. பாரதத்திலே குறிப்பிட்ட காலங்களில் வெள்ளம் கரை புரண்டோடும் கங்கா, யமுனா, பிரமபுத்ரா ஆகிய முப்பெரும் நதிக் கரைகளில் ஜனப்பெருக்கம் மிகுந்துள்ள காரணம் அவற்றில் ஆண்டு முழுவதும் பொங்கி ஓடும் நீர்வளச் செழிப்பே. வெள்ளிப் பனிமலை இமயத்தின் முடியில் பிறக்கும் இப்பெரும் நதிகள் ஆண்டு முழுவதும் வற்றாத நீர்வள முடையவை. பாரதத்தில் ஒருபுறம் பார்த்தால், சில பகுதிகளில் மழை அளவுக்கு மிஞ்சிப் பெய்து, ஆற்று வெள்ளம் மக்களுக்குப் பெருஞ் சேதத்தை விளைவிக்கிறது! மறுபுறம் பார்த்தால், சில பகுதிகளில் மழையே சிறிதும் இல்லாமல் நதிகள் வறண்டு, குடிநீர்ப் பஞ்சமும், வேளாண்மைப் பயிரிழப்பும் மக்களுக்குப் பெருந் தொல்லை விளைவிக்கிறது! மழையை எதிர்பார்த்து வாடும் பல நதிகளும், அதை நம்பி ஏமாறும் பல வேளாண்மை மக்களும் பாரதத்தின் வட மேற்கிலும், தென்னகத்திலும் மிகையாகப் பல்லாண்டுகள் இருப்பது மெய்யான வரலாறு!

சரித்திர பூர்வமாக ஜீவநதிகளை ஓயும் நதிகளுடன் இணைத்துத் தமிழ்நாட்டில் நீர்ப்பஞ்சத்தை நீக்கியவர், இருநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னகத்தில் பணியாற்றிய ஆங்கில இராணுவ அதிகாரி, ஜெனரல் ஸர் ஆர்தர் காட்டன் [General Sir Arthur Cotton (1803-1899)]! நீர்ப்பாசான எஞ்சினியரான [Irrigation Engineer] ஆர்தர் காட்டன் மெட்ராஸ் மாகாணப் பொறியியல் குழுவினராய் 1828 இல் தென்னகத்தில் [இந்திய விடுதலைக்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மலையாளம் ஆகிய நான்கு பகுதிகளும் ஒன்றாய்ச் சேர்ந்திருந்தன] நீர்ப்பாசான வசதிகளை விருத்தி செய்து, பயிரின வளர்ச்சியைப் பெருக்குவது ஒன்றையே தனது விருப்பக் குறிப்பணியாய்ச் செய்து வந்தார். அத்துடன் சென்னையில் இந்திய நீரழுத்தப் பொறியியற் துறைப்பள்ளி [Indian School of Hydraulic Engineering] ஒன்றையும் ஏற்படுத்தினார். அவரது நீர்ப்பாசான விருத்திப் பணித் தென்னாட்டில் கோடிக் கணக்கான மக்களின் உயிரைப் பஞ்சத்தின் கோரப் பிடியிலிருந்து காப்பாற்றியது என்று வரலாறுகளில் அறியப்படுகிறது. அவரது உருவச்சிலை, நினைவுக் காட்சியகம் ஆந்திரா ராஜமுந்திரியில் இன்றும் பாதுகாப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 2003 ஆம் ஆண்டில் பாரதம் ஜீவநதிகளைத் தென்னக நதிகளுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளது, அவரது 200 பிறப்பாண்டு விழாவைக் கொண்டாடுவதாக நாம் எண்ணிக் கொள்ளலாம்!

இந்திய நீர்ப்பாசானத்தில் நிச்சயமற்ற நீர்வள அவலநிலை!

இந்திய மழைப் பொழிவுகள் பொதுவாக வங்காள விரிகுடாக் கடல் அல்லது அரேபிக் கடலில் வேனிற் காலத்துத் தணிவழுத்தங்களில் உண்டாகி மலைக் குன்றுகளில் மோதிப் பெய்யும் மலைநீட்சி மழைப் பொழிவுகளே [Orographic Rainfall]! வேனிற்கால மழைகளே 85% நீர்ப்பொழிவுக்குக் காரண மாகின்றன. நிச்சயமற்றுத் தவறிவிடும் அம்மழைப் பொழிவுகளே பல இடங்களில் நீண்டகால வறட்சியை உண்டுபண்ணுகிறது. காலநிலைப் பெய்வு, ஆண்டுப் பெய்வு ஆகியவைத் தள்ளாடி ஆடும் நிலைமை நீடிக்கும் போது, மாநிலங்களுக்கு நீர்ப்பிரச்சனை ஏற்படுகிறது. ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்களின் பெரும்பகுதியில் மழைப் பொழிவுகள் குன்றிப் போவதுடன், நீர்ப்பற்றாக்குறை, குடிநீர் பஞ்சத்தால் மக்கள் தவிக்கும் நிலையும், நீர்ப்பாசான பயிர்களின் அழிகளால் உணவுப் பற்றாமையும் ஏற்படுகிறது. மாநிலத்தின் சில பகுதிகளில் நீர்ப்பொழிவு மிகவும் தணிந்து எந்தப் பயிரும் பூமியில் எழாமலே போய் விடுகிறது. அதே சமயத்தில் மற்ற பகுதிகளில் பேய்மழை கொட்டிப் பெருவெள்ளம் ஏற்பட்டு, வளர்ந்து முதிரும் பயிரினங்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன.

இந்தியாவின் 1000 மில்லியன் ஜனத்தொகை இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளில் இரட்டிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது! அப்போது மக்களுக்குத் தேவைப்படும் உணவு தானியத்தின் அளவு: 450 மில்லியன் டன்! ஆற்றுநீரைப் பயன்படுத்தி 1950 ஆண்டில் நீர்ப்பாசானம் செய்த 50 மில்லியன் டன் தானிய உற்பத்தியிலிருந்து, 2000 இல் 200 மில்லியன் டன்னாகப் பெருக்கிச் சுயதேவைப் பூர்த்தி அடைந்துள்ளது இந்தியா. நீர்ப்பாசானத் தகுதி பெற்ற நிலங்கள் 22 மில்லியன் ஹெக்டா ஏக்கரிலிருந்து 95 மில்லியன் ஹெக்டா ஏக்கராக அதே காலத்தில் பெருகியுள்ளன. 2040 ஆம் ஆண்டில் 2000 மில்லியன் மக்களுக்கு தானியம் அறுவடை செய்ய 160 ஹெக்டா ஏக்கர் நீர்ப்பாசான நிலங்கள் எதிர்ப்பார்க்கப்படும்! ஆனால் இந்தியாவின் பொதுப்படையான நதி, நீர்வளத் தேக்கங்கள் மூலமாக நீர்ப்பாசானம் செய்யத் தகுதி யுடையவை: 140 மில்லியன் ஹெக்டா ஏக்கரே! அதாவது, 2040 இல் தேவையானது: 160 மில்லியன் ஹெக்டா ஏக்கர்! ஆனால் கிடைப்பது: 140 மில்லியன் ஹெக்டா ஏக்கர் மட்டுமே!

எதிர்பார்க்கப்படும் 160 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நீர்ப்பாசானப் பெருக்கத்திற்கு புதுவித நீர்த்துறை அமைப்புகள் உருவாக வேண்டும். கங்கை, பிரமபுத்திரா நதிகளில் வெள்ளப் பெருக்குகள் தவறாது நிகழும் விபத்துகளாகி, தேசத்தின் 60% நீரோட்டம் அவற்றில்தான் ஓடுகின்றன! 1950 இல் வெள்ளத்தில் நேர்ந்த சிதைவு இழப்பு 52 கோடி ரூபாயாக இருந்தது, 1998 இல் 5846 கோடி ரூபாயாகப் பூத பெற்றது! பீஹார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நேர்ந்த வெள்ளங்களின் அடிப்பால், மக்கள் பட்ட வேதனையுடன் நிதி இழப்பு சராசரி ஆண்டுக்கு 1343 கோடி ரூபாய் ஏற்படுகிறது! அதே சமயத்தில் ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆண்டு தோறும் தவறாது மழை சுண்டி வறட்சி ஏற்படுகிறது. ஏறக்குறைய 85% மழையற்ற வறட்சி இப்பகுதிகளைத்தான் தாக்குகிறது!

எதிர்கால உணவு தானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; பெருக்கெடுத்தோடி பயிரழிக்கும் ஆற்று வெள்ளங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்; மழைநீர் சுருங்கி வறட்சி பெருகி ஏற்படும் பயிரிழப்பைத் தவிர்க்க வேண்டும்;

மாநில அரங்குகளின் நீர்வளக் குறைவு நிறைவு வேறுபாடுகளைச் சமப்படுத்த வேண்டும்; இப்பிரச்சனைகளுக்கு எல்லாம் நிரந்தரத் தீர்வு காண்பது எப்படி ? இதுவரைச் சிறிய அளவில் இமாலயச் சரிவுகளில் செய்து வெற்றிகண்ட பழைய நதியிணைப்புத் திட்டங்களைப் பின்பற்றுவது ஒருவித முற்பாடு! அதுதான் இந்திய அரசாங்கம் எடுத்துக் கொண்ட புது முயற்சி! மித மிஞ்சிய நீர்வெள்ளம் கொண்ட நதியின் நீரைக் கால்வாய் மூலம் வறண்ட நதியுடன் இணைத்துப் பங்கிட்டுக் கொள்வது! இமயத்தில் உற்பத்தியாகும் கங்கா, பிரமபுத்திரா நதிகள் வட நாட்டிலும், மேற்குத் தொடர் மலைகளில் பிறக்கும் மகாநதி, கோதாவரி ஆகியவைத் தென்னகத்திலும் உபரி நீர்வெள்ளம் கொண்டவை. அந்த ஜீவநதிகளின் அருகில் சில பகுதியில் புதிதாக நீர்த்தேக்கங்களைக் கட்டி மிஞ்சிய உபரி வெள்ளத்தைப் பாய்ச்சி நிரப்பிக் கொண்டால், கால்வாய்கள் வெட்டி நீரற்ற அல்லது நீர் குன்றிய நதிகளுடன் இணைத்துக் கொள்ளலாம். அவ்விதம் உபரிநீர் நீர்ப்பாசான வசதிகளுக்குப் பயன்படுத்துவதுடன், நீர்மின்சாரமும் தயாரிக்கலாம். நீர்ப்பாதையும் அமைத்துக் கொள்ளலாம். தொழிற்சாலைகளுக்கு அந்நீரைப் பயன்படுத்தலாம். வேண்டுமானால் புழக்க நீராகவும், சுத்தீகரித்துக் குடிநீராகவும் உட்கொள்ளலாம்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எழுந்த இமாலயத் திட்டம்

பழைய மத்திய மந்திரியும் நீர்ப்பாசான எஞ்சினியருமான டாக்டர் கே.எல். ராவ் 1972 இல் சமர்ப்பித்த கங்கா காவேரி இணைப்புத் திட்டம் நிதி விழுங்கும் என்று அங்கீகாரம் ஆகவில்லை! பாரதப் பெருநதிகளைச் சிறுநதிகளுடன் இணைக்கும் பல பத்தாண்டுகளுக்கு முற்பட்ட அப்பழைய திட்டம், திடாரெனப் புத்துயிர் பெற்று 2003 ஆண்டில் ஆலமரமாய் விரிந்து விழுதுகள் விட்டுப் பரவியது! பாரத நாட்டின் குடிநீர்ப் பற்றாக்குறை, நீர்ப்பாசானப் பிரச்சனைகளைத் தீர்க்கும் மாபெரும் அந்த நீரிணைப்புத் திட்டம் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றது! ஆனால் இந்தியச் சமூகக், கலாச்சார, அரசியல், பூகோளச் சூழ்மண்டலக் கோலத்தைச் சீர்குலைக்கப் போகும் அந்த இமாலயத் திட்டங்கள் எவ்விதம் நிறைவேறப் போகின்றன என்னும் ஐயம் பலரது இதயத்தில் பேரதிர்ச்சியையும் பெருந் துடிப்புகளையும் உண்டாக்கி விட்டிருக்கிறது! கங்கா, பிரமபுத்திரா பூத நதிகளை இணைக்க முடியுமா, இணைத்தாலும் அவற்றிலிருந்து ஏராளமான நீர்வெள்ளம் அடித்துக் கொண்டு வருமா, அப்படி வந்தாலும் வெள்ளம் கால்வாய் மூலமாக ஆயிரம் மைல்கள் ஓடிக் கொள்ளிடம் காவிரி நதியில் கலக்குமா என்றெல்லாம் ஐயப்பாடுகள் எழுந்துள்ளன! இந்திய அரசாங்க நீர்த்துறைப் பூதள நிபுணர்கள் கணக்கீடும், மதிப்பீடும் செய்த 42 நதியிணைப்புத் திட்டங்களில் பல காரணங்களால் 25% புறக்கணிப்பாகி நான்கில் மூன்றைச் சாதித்தாலும், முப்பது நீரிணைப்புத் திட்டங்களால் நீர்வளமும், நீர்ப்பாசானமும் இந்தியா வெங்கும் பேரளவு பெருகத்தான் போகின்றன.

வீட்டுச் சாக்கடைகள், ஊர்க்கழிவு ஓடைகள், தொழிற்சாலைக் கழிவு வெளிவீச்சுகள் அனுதினமும் சங்கமமாகும் கங்கா, யமுனா புனித நதிகளின் இணைப்பு நீரோட்டம், பல கோடி ரூபாய்ச் செலவில் தென்னக நதிகளில் சேர்க்கப்பட வேண்டுமா என்ற பெரிய கேள்வியும் மாந்தர் மனதில் எழாமல் இல்லை! ஆறுகளில் நீரற்ற மாநிலங்களில் நீர்ப்பாசான வசதிகளுக்கு அழுக்குநீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கங்கா, யமுனா புனித நீரைக் குடிநீராக்க மாபெரும் இரசாயன நீர்ச் சுத்தீகரிப்புச் சாதனங்களும், குளோரின் வாயுவைப் புகுத்தும் நீர்க்கலன்களும் [Water Treatment Equipment & Chlorination Injectors] ஊர்களில் நிறுவகமாக வேண்டும். நீர்ப்பற்றாக்குறை மாநிலங்கள் கடற்கரையிலோ அல்லது கடலுக்கு அண்டையிலோ இருந்தால், கடல்நீரில் உப்பைநீக்கிக் குடிநீராகவோ அன்றி புழக்க நீராகவோ மாற்றிப் பரிமாறலாம். ஆனால் மில்லியன் டன் கணக்கில் ஆண்டு தோறும் தேவைப்படும் நீர்ப்பாசான ஆற்று வெள்ளத்தை, ஓடாத நதிகளில் உண்டாக்குவது எப்படி ? நீர்வளம் செழித்த பூத நதிகள் கடலில் கொட்டி வீணாக்கும் பேரளவு நீர்வெள்ளத்தைத் திருப்பி, மெலிந்துபோன ஆறுகளில் கலப்பதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

முந்தைய பிஜேபி அரசாங்கம் ஒரே சிந்தனையில் உறுதியாக முன்வந்து முப்பெரும் வட இந்திய நதிகளின் வெள்ளத்தையும், நீர்வளம் செழித்த நதிகளின் வெள்ளத்தையும் கால்வாய்கள் மூலம் தேவையான வடதிசை மாநிலங்களுக்கும், வறண்டு போன தென்னக மாநிலங்களுக்கும் நீரைப் பகிர்ந்து கொள்ளத் திட்டங்கள் வகுத்தது பாராட்ட வேண்டிய மகத்தான தீர்மானமாகும். அத்திட்டங்களை இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் முழுமனதாய் ஆதரித்துப் பறைசாற்றியதும் பாராட்டுக்குரிய உரையே. அத்துடன் உச்ச நீதி மன்ற நீதிபதி கிர்பால் அவர்களை உடன்பட வைத்து சட்டத்தின் பாதுகாப்புடன் திட்டங்களை நிறைவேற்ற முற்பட்டதும் பாராட்ட வேண்டிய தீரச் செயலே. ஆயினும் கங்கா பிரமபுத்திரா நதியிணைப்பு, நீர்ப்பங்கீடுகளில் இந்தியா நேபாளம், பூதான், பங்களா தேசங்களுடன் பலமுறைக் கூட்டுரையாடி உலகநீர் ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

முன்னாள் பிரதம மந்திரி வாஜ்பையி 2003 இல் அறிவித்தபடி 21 பகுதிகளில் இமாலய நதிகளில் கிளைத் தொடுப்பு இணைப்புகளைத் தோண்டி 22 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நிலங்களில் நீர்ப்பாசான விளைச்சலை எதிர்பார்க்கலாம். அத்துடன் அந்த நீரோட்டங்களில் அணைகள் கட்டி 30,000 மெகாவாட் ஆற்றல் மின்சாரமும் உண்டாக்கலாம். அடுத்து அமைக்கும் 21 தென்னக நதிகளின் கால்வாய் இணைப்புகள் 13 மில்லியன் ஹெக்டா ஏக்கர் நிலங்களில் நீர்ப்பாசான விளைச்சல்களையும், 4000 மெகாவாட் ஆற்றல் மின்சார உற்பத்தியையும் எதிர்பார்க்க முடியும். இப்பெரும் நதிவள இணைப்புகளால் உணவு தானிய விருத்தி 220 மில்லியன் டன்னிலிருந்து, 450 மில்லியன் டன்னாக இரட்டிக்கும். 560,000 கோடி ரூபாய் [112 பில்லியன் அமெரிக்க டாலர்] நிதி மதிப்பீட்டில் உருவாகப் போகும் அத்திட்டங்களால் அநேக மாநிலங்கள் நீர்ப்பாசானப் பயன்கள் அடைவதுடன், கட்டுமானத் தொழிற்துறைகளும் பெருகி இந்தியாவில் 10 மில்லியன் மக்களுக்கு நேரடி ஊழியங்களும், தொடுப்புப் பணிவினைகளும் [Spin off Jobs] மிகுந்திடப் போகின்றன.

பாரத தேசத்தின் உயர்நீதி மன்றம் மக்கள் விண்ணப்பம் ஒன்றிற்கு 2002 இல் பதிலளிக்கும் போது, இந்திய அரசு நதியிணைப்புத் திட்ட முற்பாடுகளை விரைவாக முடுக்கிவிட்டு 2016 ஆண்டுக்குள் முடித்துவிட வேண்டுமென ஆணையிட்டது. திட்டங்கள் யாவற்றையும் முடிக்க 40 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று அனுமானம் செய்யப்ட்டுள்ளது. உடனே அந்நாள் பிரதமர் வாஜ்பையி நதியிணைப்புத் திட்டப் பணிகளை நிறைவேற்ற ஆணைப் பணிக்குழுவை [Task Force] நியமித்து சுரேஷ் பிரபுவை அதிபதி ஆக்கினார். தேசிய நதியிணைப்புத் திட்டங்களை ஊக்குவித்த ஆக்கவாதிகள் முந்தையப் பிரதமர் வாஜ்பையி, இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் மந்திரி சுரேஷ் பிரபு, அமெரிக்க இந்தியப் பொறியியல் நிபுணர் சொக்கலிங்க கண்ணப்பன் ஆகியோர்.

தமிழ்நாட்டு நாட்டரசன் கோட்டை நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம் கண்ணன் 1968 இல் அமெரிக்காவுக்குப் புலப்பெயர்ச்சியாகி டெக்ஸஸ் மாநிலத்தில் புரஃபெஸ்ஸனல் எஞ்சினியர் பதிவு பெற்று 25 ஆண்டுகள் பெட்ரோ கெமிகல் தொழிற்சாலை, அணுமின் நிலைய அனுபவங்களை அடைந்தவர். டென்னஸ்ஸிப் பள்ளத்தாக்கு ஆணையகத்தின் [Tennessee Valley Athority] திறன்மிக்க இயக்கத்திற்குப் பரிசு பெற்றவர். நாசா கோடார்டு அண்டவெளிப் பயண மையத்தின் [NASA Goddard Space Flight Centre] பரிசையும், ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனியின் பரிசையும் அடைந்தவர். கண்ணப்பன் தன்வசம் உலக ஒப்பந்த மாதிரிப் பட்டயங்கள், அகில நாட்டு ரீதியில் நீர்வளம் எவ்விதம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்னும் தகவல்களும் இருப்பதாகக் கூறுகிறார். அவர் இந்திய நதியிணைப்புத் திட்டங்களில் டெக்ஸஸ் மாநில நிபுணத்துவங்களைப் புகுத்த முயற்சி செய்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு வருகிறார்.

நதியிணைப்புத் திட்டங்களை மேற்பார்க்கும் ஆணைக்குழு

அந்நாள் பிரதமர் வாஜ்பையி நதியிணைப்புத் திட்டப் பணிகளை நிறைவேற்ற ஆணைப் பணிக்குழுவை [Task Force] நியமித்து சுரேஷ் பிரபுவை அதிபதி ஆக்கினார். மற்றவர்கள்: சி.சி. படேல் துணை அதிபதி, டாக்டர் சி.டி. தாட்டே உறுப்பினர்-செயலாளர். பகுதிக் கால உறுப்பினர்கள்: நீர்வளப் பற்றாக்குறை மாநில அதிகாரி, நீர்வளம் செழித்த மாநில அதிகாரி, நிதித்துறை நிபுணர் ஒருவர், சமூகவாதி ஒருவர், சட்ட நிபுணர் ஒருவர், கானக விலங்கின நிபுணர் ஒருவர். இவர்களின் ஆணைப் பணிகள் பின்வருமாறு:

1. நதியிணைப்பு திட்டமொன்றுக்கு நிதிச்சிக்கன ஆய்வு, சமூக நிதிவளப் பாதகம், சூழ்தளச் சீர்கேடு, இடப்பெயர்ச்சித் தயாரிப்பு ஏற்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பீடு விபரம் அளித்தல்.

2. பாதிக்கப்படும் மாநிலங்களுக்கும், பயன்பெறும் மாநிலங்களுக்கும் இடையே ஏற்படும் தகராறுகளை விரைவில் தீர்க்க வழிமுறைகளை வகுத்தல்.

3. நதியிணைப்பு திட்டம் ஒன்றின் பல்வேறு அங்கப் பணிகளைத் திரட்டி, முக்கியமானவற்றை வரிசையில் கொணர்ந்து, நிறைவேற வழிமுறைகள் தயாரித்தல்.

4. நதியிணைப்புத் திட்டம் ஒன்றை நிறைவேற்றப் பணிவினை இயக்கக்குழு அணியமைப்புக்கு [Organizational Structure] ஆலோசனை அளித்தல்.

5. நதியிணைப்புத் திட்டங்களுக்கு நிதிதிரட்ட பல்வேறு உபாய முறைகளைக் கையாளுதல்.

6. நதியிணைப்பு திட்டப் பணிகளில் எதிர்ப்படும் சில குறிப்பிட்ட அங்கப் பணிகளுக்கு அன்னிய நாட்டு நிபுணத்துவத்தின் உதவியை நாடுதல்.

ஆணைப் பணிக்குழு டெல்லியைத் தலைமையகமாக வைத்துக் கொள்ளும்.

இமாலயத் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது ?

30 முக்கிய நதியிணைப்புத் திட்டங்களில் 14 இணைப்புக் கால்வாய்கள் இமாலயப் பிரதேசப் பகுதிகளில் கட்டப்பட விருக்கின்றன. இமாலய மலைத்தொடர்ப் பரப்புகள் பூகம்ப அதிர்ச்சி அரங்கில் உள்ளதால், அமைக்கப்படும் அணைக்கட்டுகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் யாவும் பூகம்ப ஆட்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தகுதியில் கட்டப்பட வேண்டும். இமாலயச் சரிவிலும், அடிவாரத்திலும் பாக்ரா, நங்கல் போன்ற பல அணைக்கட்டுகள், நீர்தேக்கங்கள், பஞ்சாப்-ராஜஸ்தான் கால்வாய்கள் 50 ஆண்டுகளாக பூகம்பப் பகுதிகளில்தான் அமைக்கப்பட்டுள்ளன! இந்தியாவில் டெல்லிக்கருகில் கட்டப்பட்டிருக்கும் நரோரா அணுமின் நிலையம் இத்தகைய பூகம்ப ஆட்டங்களில் தப்பிக் கொள்ளும் தகுதியில் அமைக்கப் பட்டுள்ளது. பூகம்ப பூமியான ஜப்பான் தேசத்தில் 54 அணுமின் நிலையங்களும், கடல்மேல் நிற்கும் பல தொங்கு பாலங்களும், 33 மைல் நீளத்தில் 800 அடி ஆழத்தில் குடைந்து கட்டப்பட்ட உலகிலே பெரிய கடல் குகையும் பூகம்ப ஆட்டங்களைத் தாங்கி நிற்கின்றன! இந்தியாவில் பூகம்ப நடுக்கத் தகுதி பெற்ற அணைகளைக் கட்டும் பொறிநுணுக்கம் கைவசம் உள்ளது. மேலும் அப்படி நிகழும் பூகம்பத்தில் அணையில் விரிசல்கள் ஏற்பட்டுப் பெரும் நீருடைப்பு நேர்ந்தாலும், அந்த வெள்ளம் கடலை நோக்கி திரும்பும்படி கால்வாய் டிசைன் செய்யலாம்.

திட்டங்களின் முழு விபரங்களைத் திரட்டிப் பாதிக்கப்பட்டுப் பலனடையும் மாநிலங்களின் அரசுகள், நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றுடன் ஆணைக்குழுவினர் முதலில் உரையாடி, வாதாடி இருபுறக் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும். பலமுறை இவ்விதம் கூடிக் கலந்து திட்டம் நிறைவேற சம்பந்தப்பட்ட அரசுகள், குழுக்கள், கிராம ஆட்சிகள் உடன்பட்டுக் கையொப்பம் இடவேண்டும். திட்டங்களை முடிக்க 2016 ஆண்டு வரையரை செய்யப்பட்டாலும், சில திட்டங்கள் கால எல்லைகளைக் கடந்தும் நீடிக்கப்படலாம். 21 இமாலய இணைப்புத் திட்டங்கள், 21 தென்னகத் திட்டங்கள் ஆக 42 நதியிணைப்புகளில் முக்கியமானவை, எளிதானவை, நீண்டவை, சிறியவை, காலம் கடத்துபவை, சிரமப் படுத்துபவை, சிக்கலாவை, செய்ய முடியாதவை என்று பிரிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட திட்டங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், நகராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துகள் உடன்பாடு, குறைபாடு அல்லது எதிர்ப்பாடு தெரிவித்த பிறகே 42 திட்டங்களின் தகுதி நிலைகள் தரம் பிரிக்கப்பட வேண்டும். முதலில் உடன்பாடு பெற்ற சிறிய திட்டங்கள், எளிய திட்டங்கள், முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். சிரமமான திட்டங்களில் எங்கே பிரச்சனைகள் எழுந்துள்ளன என்று அறியப்பட்டு சிக்கல்கள் தீர்க்க வழிகளை அணுக வேண்டும். பூதளப் பழுதுகள் உள்ளதாலோ, பூகோளப் பிசகுகள் தடுப்பதாலோ அல்லது அரசியல், சமூகப் பொருளாதாரத் தொல்லைகளாலோ தீராத இடையூறுகள் முட்டுக்கட்டை யிட்டால், அவ்விதத் திட்டங்களை நிறுத்தி வைப்பது நல்லது.

தேசீய ஒருங்கிணைப்புப் பண்புகளை ஊட்டுவிப்பது எப்படி ?

இந்தியா ஓர் ஐக்கியக் குடியரசு. ஐக்கியம் என்னும் பதத்தில் செழித்த மாநிலம் ஏழமை மாநிலத்துக்கு உதவும் பண்பும் பொருளும் அடங்கியுள்ளது. ஒருதாய் மக்கள்போல் சொத்துகளைப் பங்கீடு செய்து கொள்ளும் பண்பு ஒட்டியுள்ளது. மாநிலங்களின் ஐக்கியத்தை இறுக்கிப் பிணைப்பது மக்களின் ஒருமைப்பாடு. நிலைப்பாடு இல்லாத ஒருமைப்பாடை மாநிலங்கள் தமக்குள் உண்டாக முன்னடி வைத்துச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்! தேய்ந்து போகும் ஒருமைப்பாடை, மாநிலப் புதிய அரசுகள் அடிக்கடித் தமக்குள் புதுப்பித்துக் கொள்வது அவசியம். அண்டையில் இருக்கும் இல்லங்கள் நட்புடன் பழகிக் கொள்வதுபோல், மாநிலங்கள் தமக்குள்ளும் மத்திய அரசுக்கு இடையேயும் ஒப்புடன் நடந்து கொள்வது, நதியிணைப்புத் திட்டங்களைத் தீர்மானிக்கவும் நிறைவேற்றவும் ஆணிவேராக நிலைத்து நிற்கும். இந்தியர் பேசும் மொழிகள், பிறந்த மாநிலங்கள், பிழைக்கும் முறைகள், வெளித்தோல் நிறங்கள், தோன்றிய இனங்கள் வெவ்வேறு ஆயினும், யாவரும் ஒரே இந்தியப் பாதுகாப்புக் குடையின் கீழ் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலத்தில் வசித்துக் கொண்டு எல்லைக் கோடுகளைப் போட்டு, இல்லாத வேலிக்குள் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

மாநில முதலமைச்சர்கள், மாண்புமிகு மந்திரிமார்கள், கல்லூரி, பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், வெள்ளித்திரை நடிகர்கள், இயல், இசை, நாடகக் கலைஞர்கள் ஆகியோர், மாநில மக்கள் ஒருமைபாடுக்குப் பல முறைகளில் இருபோக்கு ஆக்கப் பாதைகளை அமைக்கலாம். வேற்று மொழிகளையும், அவற்றைப் பேசுவோரையும் எள்ளி நகையாடிக் கொண்டு பகைமைப் பயிர்களை வளர்க்கும் அண்டை மாநிலங்களில் நதியிணைப்புத் திட்டம் எதுவும் நடக்கப் போவது கடினம்! அண்டை மாநில அறிஞர், அரசாங்க அமைச்சர், கலைஞர் ஆகியோரைத் தங்கள் விழாக்களில் அழைத்துக் கலந்து கொள்ளச் செய்து கெளரவிக்கலாம். உதாரணமாகத் தமிழ்ப் பல்கலைக் கழகங்களில் பிற மாநிலங்களின் நட்பைச் சம்பாதிக்க தெலுங்கு, கன்னடம், மலையாள, மராட்டி, பஞ்சாபி, வங்காள போன்ற பிறமொழி மாணவர்களுக்குச் சலுகைகள் அளிக்கலாம். தமிழ்நாட்டில் அண்டை மாநிலக் கண்காட்சிகளை அமைத்து அவரது மகத்தான சாதனைகளைப் பொது நபர்களுக்குக் காட்டலாம். இதுபோல் பல ஆக்க வழிகளில் ஒருமைப்பாடை உண்டாக்க அண்டையில் உள்ள இரு மாநிலங்கள் தமக்குள் பல பாலங்களைக் கட்டிக் கொள்ளலாம். மாநிலங்களுக்குள் ஏற்படும் ஒருமைப்பாடு ஒன்றுதான் நதியிணைப்புத் திட்ட ஆரம்பத்துக்கும் வெற்றிகரமான முடிவுக்கும் உதவப் போகிறது. திட்டங்களின் இடையிடையே ஏற்படும் தடைகளையும், தாமதத்தையும் தவிர்க்க ஒருமைப்பாடுதான் துணையாகக் கைகொடுக்கப் போகிறது.

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. SAravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [September 21, 2004]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts