செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-5

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

முனைவர். கதிரவன் கிருஷ்ணமுர்த்தி.


நுண்ணலை அடுப்பு (Microwave Oven) எப்படி வேலை செய்கிறதென்று தனியே அந்த சாதனத்தை மட்டும் விளங்கப்படுத்துவது இலகுவான காரியம். செல்பேசி எப்படி வேலை செய்யுது ?. இதைச் சொல்ல செல்பேசியை மட்டும் தனி ஒரு சாதனமாகப் பார்க்க முடியாது. செல்லுலர் அமைப்பின் ஒரு அங்கமே செல்பேசி! அந்த செல்லுலர் அமைப்பைப் பற்றிய அடிப்படை அறிமுகமும் புரிதலும் அவசியமாகிறது. செல்பேசியில் பல செயற்பணிகள் செல்லுலர் அமைப்புடன் இணைந்துதான் ஆற்றப்படுகின்றன. செல்பேசியை தெரிந்துகொள்ள செல்லுலர் அமைப்பைப் பற்றிய பரந்த கண்ணோட்டம் இன்றியமையாததாகிவிடுகிறது.

அடிப்படை செல்லுலர் அமைப்பு

ஒரு அடிப்படை செல்லுலர் அமைப்பு மூன்று துணையமைப்புகள் கொண்டது: மொபைல்-செல் பேசி, தள நிலையம் (Basestation) மற்றும் நடமாடும் தொலைபேசி நிலைமாற்றும் அலுவலகம் (Mobile Telephone Switching Office-MTSO). இம்மூன்று அமைப்புகளையும், அவற்றை இணைக்கும் தொடுப்புகளுடன் (connections) படம் 11 காட்டுகிறது.

படம் 11: செல்லுலர் அமைப்பு.

1. செல்பேசி: கட்டளை அலகு, செலுத்தி-ஏற்பி மற்றும் அன்டெனா அமைப்பும் கொண்டது.

2. செல் தளம் (Cell site) அல்லது தளநிலையம் (Basestation): செல்பேசிகளுக்கும், செல்பேசி-நிலைமாற்றும் அலுவலகத்திற்கும் இடைமுகப்பாக (Interface) விளங்குவது தான் தளநிலையம். கட்டளை அலகு, ரேடியோ பெட்டிகள், அன்டெனா, மின்னாக்கி மற்றும் தரவு முனையங்கள் (Data Terminals) உள்ளன.

3. MTSO நடமாடும் செல்பேசியின் நிலைமாற்றும் அலுவலகம். ஒரு மைய ஒருங்கிணைக்கும் உறுப்பாக எல்லா தளநிலயங்களுக்கும் திகழ்கிறது. செல்லுலர் செயலியும், செல்லுலர் நிலைமாற்றியும் தன்னகத்தே கொண்டது. அழைப்புகளை முறைவழிபடுத்துதல் மற்றும் தொலைபேசிக் கம்பெனியின் வட்டார அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு சந்தாத் தொகை கணித்தல் போன்ற பணிகளை ஆற்றுகிறது.

4. தொடுப்புகள்: மூன்று துணை அமைப்புகளும், ரேடியோ (கம்பியில்லா) மற்றும் அதிவேக தரவு இணைப்புகளால் ஒன்று சேர்க்கபட்டு, ஒரு அமைப்பாகக் கட்டப்படுகின்றது. ஒவ்வொரு நகரும் பேசியும், தொடர்பாடல் இணைப்புக்காக ஒரு வழித்தடத்தைப் பயன்படுத்தலாம். இந்த வழித்தடம் நிலைபெற்ற ஒன்றல்ல; மாறாமல் இருக்காது. சேவை வட்டாரத்தில், உபயோகத்துக்காக ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். செல் தளங்கள் ஒவ்வொன்றும் பல வழித்தடங்களைப் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் பல நடமாடும் பயனர்களை இணைக்கவல்லன.

MTSO நடமாடும் செல்பேசி அமைப்பின் உயிர் துடிப்பாக விளங்குகிறது. அதன் செயலி மைய ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகப் பணியை ஆற்றுகிறது. செல்லுலர் நிலைமாற்றி நடமாடும் சந்தாதாரர் அழைப்புகளை மற்ற நடமாடும் சந்தாதாரர் அல்லது நாடுதழுவிய தொலைபேசி கட்டமைப்புக்கு திருப்பும் செயலாற்றுகிறது. MTSO, தொலைபேசி அலுவலகங்களிடை பயன்படுத்தப்படும் குரல் தண்டுகளுக்கு ஒத்த குரல் தண்டுகளைப் பயன்படுத்துகிறது. இதுபோக, கண்காணிப்பு இணைப்புகளென, தரவு இணைப்புகள், செயலிக்கும் நிலைமாற்றிக்கு இடையிலும், செல்தளங்களுக்கும் செயலிக்கும் இடையிலும் வழங்கி வருவதை படம் 11 இல் காணலாம். கம்பியில்லா ரேடியோ இணைப்பு, குரல் சமிக்கைகளை நடமாடும் செல்பேசிக்கும், தளநிலையத்துக்கும் இடையே தொடர்பாடல் இணைப்பு வழங்குகிறது . அதிவேக தரவு இணைப்புகளை சாதரண குரல் தர தண்டுகளால் (voice grade trunks) வழங்க முடியாது. நுண்ணலை இணைப்பு (Microwave Link) அல்லது T-carrier (உயர் ரக கம்பி இணைப்பு) செல்தளத்துக்கும் MTSO வுக்கும் இடையில் வேண்டியுள்ளது.

W.C.Y. Lee, ‘Mobile Cellular Telecommunications ‘, Analog and Digital Systems, McGraw-Hill, Inc.

kathirk@earthlink.net

Series Navigation

author

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி

Similar Posts