செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி


2. செல்பேசி: இருவழி ரேடியோ

செல்பேசி ஒரு ‘இருவழி (Duplex) ரேடியோ ‘ என்று இந்தத் தொடரின் முதல் பத்தியிலே சொன்னோம். வானொலி நிலையமும், ஏற்பியும் கொண்ட அமைப்பு ஒருவழி (Simplex) ரேடியோ. நம்மிடம் உள்ள வானொலி ஏற்பியால் சைகைகளை வாங்க மட்டுமே முடியும், அனுப்ப முடியாது. செல்பேசியோ சைகையை ஏற்று, அதே சமயத்தில் அனுப்பும் வேலையையும் ஆற்றுகிறது. Duplex என்ற சொல் இருவழியைக் குறிக்கிறது. Duplex என்றால் பொதுவாக இரு பிரதான கூறுகள் கொண்டு திகழ்வது. தொடர்பாடல் துறையில், ‘Duplex ‘ என்று தொடர்பாடல் தடங்களைக் குறிக்கும் போது ‘இருவழி ‘ எனப் பொருள்படுகிறது. தகவலை இரு திசைகளிலும் ஒரே நேரத்தில் கொண்டு செல்லும் தடம் ‘Full-Duplex ‘ தடம். ஒரே ஊடகத்தில் ‘Forward-முன்னோக்கும் ‘ மற்றும் ‘Reverse-பின்வாங்கும் ‘ என இருவேறு தடங்களை அமைத்து, அவற்றைப் பிரிக்கும் முறை ‘Duplexing ‘ (இரட்டை வழியாக்கம்) என வழங்கப்படும்.

படம் 3. அ) வானொலி ஏற்பி- ஒருவழி ரேடியோ. ஆ) செல்பேசி-இருவழி ரேடியோ.

Frequency Division Duplexing (FDD): அதிர்வெண் பங்கிட்ட இரட்டை வழியாக்கம்

செல்பேசி அமைப்புகளில் இரட்டை வழியாக்க ஏற்பாடு, தனித்தனி அலைவரிசைகளை செலுத்துவதர்க்கும், ஏற்பதர்க்கும் பயன்படுத்தி, செலுத்தியும் ஏற்பியும் ஒன்றுக்கொன்று இடைஞ்சல் இல்லாதவாறு அமைக்கிறது. FDD ஏற்பாட்டில் ஒரே நேரத்தில் செலுத்தும் வழித்தடங்கள் சந்தாதாரருக்கும் தளநிலையத்துக்கும் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் சைகைகளை ஏற்கும் வசதியும் இருக்கிறது. தளநிலையத்தில் செலுத்தும் அன்டெனா மற்றும் ஏற்கும் அன்டெனா தனித்தனியே இயங்கி இருவேறு தடங்களோடு தொடர்பாடுகின்றன. சந்தாதாரர் அலகில் (செல்பேசியில்) ஒரே அன்டெனா தளநிலையத்துக்கு அனுப்பவும், தளநிலையத்திலிருந்து ஏற்கவும் பயன்படுத்தப்படுகிறது. Duplexer என்ற கருவி ஒரே அன்டெனா ஒரே சமயத்தில் செலுத்தவும், ஏற்கவும் வழிவகுக்கிறது. FDD முறையை வசதியாக்க, செலுத்தும் அலைவரிசைக்கும் ஏற்கும் அலைவரிசைக்கும் இடைவெளி குறைந்த பட்சம் மைய அதிர்வெண்ணில் 5 சதவிகதமாவது இருக்கவேண்டும். இவ்வாறு அலைவரிசைகள் அமையும் போது இரட்டை-வழியாக்கியால் (Duplexer) போதுமான அளவு செலுத்தியை ஏற்பியிடமிருந்து தனிமைப்படுத்த (Isolate) முடியும். குறைந்த செலவில் தயாரிக்கவும் முடியும்.

FDD யில், இரண்டு ஒருவழித் தடங்கள் ஒரு இணையாகவும், குறிப்பிட்ட அதிர்வெண் இடைவெளியியுடனும் விளங்கி, ரேடியோவின் இருவழித் தடத்தை நிர்ணயிக்கின்றன. தகவலை தளநிலையத்திலிருந்து நகரும் பயனரிடம் எடுத்துச் செல்லும் தடம் முன்னோக்கு தடம் (Forward Channel). தகவலை நகரும் பயனரிடமிருந்து தளநிலையத்துக்கு எடுத்துச் செல்லும் தடம் பின்வாங்கு தடம் (Reverse Channel). வடஅமெரிக்காவில் வழங்கி வரும் செல்லுலர் AMPS (Advanced Mobile Phone System: உயர்நிலை நடமாடும் பேசி அமைப்பு) அமைப்பில் பின்வாங்கு தடத்தின் அதிர்வெண் சரியாக 45 MHz முன்னோக்குத் தடத்தைக் காட்டிலும் குறைவாக இருக்கவேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

படம் 4. தளநிலையம், செல்பேசிகளோடு தொடர்பாட இருவழித் தடங்களை அணுகுகிறது. செலுத்தும் தடம் ‘Forward Channel ‘ (சிகப்பு). ஏற்கும் தடம் ‘Reverse Channel ‘ (பச்சை). ஒரே செல்பேசி அன்டெனா இந்த இரண்டு அலைவரிசைகளையும் செலுத்தும்/ஏற்கும் பணியைச் செய்தாலும், இரட்டை வழியாக்கி (Duplexer) அலைவரிசைகளைப் பிரிக்கிறது. ஒரு அழைப்புக்கு என்று ஒதுக்கப்படும் இரு குரல் தடங்கள் 30 kHz அகலம் கொண்ட அலைவரிசைக் குறும்பட்டைகள். 25 MHz அகலம் கொண்ட அதிர்வெண் பட்டைக்குள் ஒரு செலுத்தும் தடமும், 45 MHz இடைவெளியில், இணையான ஏற்கும் தடமும் சேர்ந்து ‘இருவழி ‘ ரேடியோ தடமாக (Duplex Channel) விளங்குகிறது.

செலுத்தவும்/ஏற்கவும் தனித்தனி அலைப்பட்டைகள் 45 MHz இடைவெளியில் அமைந்திருப்பதால் இரட்டை-வழியாக்கி இரு பட்டை-புகு (band-pass) வடிப்பான்கள் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. செல்பேசியின் ஏற்பி, 869-894 MHz அலைப்பட்டைக்குள் ஒரு அலைவரிசையில் ஏற்கிறது. செல்பேசியின் செலுத்தி, 824-849 MHz அலைப்பட்டைகுள் ஒரு அலைவரிசையில் செலுத்துகிறது.

பின்குறிப்பு: 1 kHz- 1 கிலோ ஹெர்ட்ஸ்=1000 ஹெர்ட்ஸ். 1 MHz- 1 மெகா ஹெர்ட்ஸ், 1,000,000 ஹெர்ட்ஸ்.

—-

kathirk@earthlink.net

Series Navigation

author

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி

Similar Posts