ஐரோப்பிய GPS உலக துல்லிய இடம் காட்டும் அமைப்பு துவக்க ஐரோப்பிய தலைவர்கள் பச்சைக்கொடி:

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

2008இல் நடைமுறைக்கு வரும்


ஐரோப்பிய விண்துறை அமைப்பு என்ற European Space Agency (ESA) இல் 15 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஸ்விட்ஜர்லாந்து ஆகியவை. இதில் கனடா சிறப்பு அங்கத்தினராகவும் சில திட்டங்களில் கலந்து கொள்ளவும் செய்கிறது.

ஐரோப்பிய அரசாங்கங்கள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து கலிலியோ என்று அழைக்கப்படும் இந்த ஐரோப்பிய துணைக்கோள் வலையை உருவாக்க முடிவு செய்திருக்கிறார்கள். இது அமெரிக்க ராணுவத்துறை கட்டுப்படுத்தும் Global Positioning System க்கு மாற்றாக இருக்கும் என்று இவர்கள் முனைகிறார்கள்.

இது அடிக்கடி நிறுத்தப்பட்ட ஒரு திட்டம். இந்தத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் 3.2 பில்லியன் ஈரோக்கள். இதுவே ஐரோப்பாவின் மிகப்பெரிய கட்டுமானப்பணியாகும். இது 30 துணைக்கோள்களை உலகத்தைச் சுற்றிலும் நிறுத்திவைக்கும். இது 2008இல் நடைமுறையில் உபயோகப்படுத்தப்படும் என்று முனைகிறார்கள்.

2003 மே மாதத்தில் இறுதி ஒப்பந்தம் அனைத்து ஐரோப்பிய நாடு தலைவர்களாலும் பாரிஸில் கையெழுத்திடப்பட்டது.

கலிலியோவைக்கொண்டு, தரையில் டிராபிக் கட்டுப்பாடு, கடல் மற்றும் ஆகாயவிமானம் போன்றவற்றை கட்டுப்படுத்துவது, எண்ணெய் கண்டுபிடிப்பது மற்றும் அறிவியல் ஆராய்ச்சியிலிருந்து கைக்கடிகாரத்தில் எங்கே இருக்கிறோம் என்று கண்டறிந்து கொள்ளும் உபகரணங்கள் வரை உபயோகப்படுத்தலாம்.

இந்த கலிலியோ திட்டம் சுமார் 140000 வேலைகளையும், சுமார் 460 சதவீத போட்டபணத்துக்கு லாபத்தையும் கொண்டுதரும் என்று நம்பப்படுகிறது. இது ஐரோப்பாவின் விண்துறை ஆராய்ச்சியையும் தொழிற்சாலைகளையும் மேம்படுத்தும் என்றும் நம்புகிறார்கள்.

அமெரிக்க ஜிபிஎஸ் அமைப்பு போலன்றி, கலிலியோ முழுக்க முழுக்க பொதுமக்கள் கையிலேயே -அரசாங்ககட்டுபாட்டில் அல்லாமல்- இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜிபிஎஸ் அமைப்பு முழுக்க முழுக்க பெண்டகன் என்னும் ராணுவத்துறைக்குச் சொந்தமானது. இது போரற்ற காலங்களில் பொதுமக்கள் உபயோகத்துக்கு பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டது.

கலிலியோவின் பொதுமக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பு ஜிபிஎஸ் அமைப்பை விட அதிகத்துல்லியமானது. பூமியில் ஒரு மீட்டர் அளவுக்கு துல்லியமாக இடத்தை கணக்கிட வல்லது.

அமெரிக்க கலிலியோ திட்டத்தை தனது ஜிபிஎஸ் திட்டத்தை முறியடிக்க முனையும் ஐரோப்பிய முயற்சியாகவும், தனக்கு விண்துறையில் இருக்கும் முன்னேற்றத்தை முறியடிக்க முனையும் ஐரோப்பிய முயற்சியாகவும் பார்க்கிறது.

சென்ற வருடம் அமெரிக்க துணை ராணுவமந்திரி பால் வுல்போவிட்ஸ் அவர்கள் ஐரோப்பிய கலிலியோ அமைப்பு ‘அமெரிக்க ராணுவத்தின் திறனுக்கு போட்டி மற்றும் எதிரி. நமது எதிரிகளிடம் நம்மிடம் இருக்கும் வசதி வாய்ப்புகள் இருக்கக்கூடாது என்னும் கொள்கைக்கும் எதிரி ‘ என்றும் இதனை எதிர்த்தார்.

அதே நேரத்தில் அமெரிக்க அமைப்புக்கு இது எதிரி அல்ல என்று ஐரோப்பா வலியுறுத்துகிறது.

ரஷ்யா ஏற்கெனவே GLONASS என்ற அமைப்பை பெரும்பகுதி – முழுமை பெறாத அளவில் – உருவாக்கியிருக்கிறது. இந்த கலிலியோ அமைப்பை GLONASS மற்றும் GPS அமைப்போடு உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று ஐரோப்பாவின் விண்துறை அமைப்பு தெரிவிக்கிறது.

கலிலியோ திட்டத்தின் முதலாவது துணைக்கோள் 2004இல் விண்ணுக்கு ஏவப்பட இருக்கிறது.

மொத்தம் 30 துணைக்கோள்கள் (27 நடைமுறை துணைக்கோள்கள், 3 உதவி அல்லது ஸ்பேர்ஸ்) பூமியிலிருந்து சுமார் 23616 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட இருக்கின்றன.

*** மேல் செய்திகளுக்கு

http://www.esa.int/export/esaNA/GGGMX650NDC_index_0.html

Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts