டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி
என்ரிகோ ஃபெர்மி அணுக்கரு இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். இயற்பியலில் தொடர்வினைகளைப் (chain reactions) பற்றிக் கண்டுபிடித்ததனால் அவர் இவ்வாறு பாராட்டப்படுகிறார். இவர் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் பிறந்தவர். படிப்பில் மிகச் சிறந்து விளங்கிய இவர் தனது 21ஆம் வயதில் பிசா பல்கலைக் கழகத்தில் எக்ஸ்-கதிர்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். 1927ஆம் ஆண்டு ரோம் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்ரிகோ ஃபெர்மியின் அறிவுக்கூர்மையைப் பாராட்டி இத்தாலிக் கல்விக்கழகம் அவருக்கு உறுப்பினர் பதவி அளித்துப் போற்றியது. இவ்வுறுப்பினர் பதவி இத்தாலி நாட்டில் கல்வியிற் சிறந்த மேதைகளுக்கு அளிக்கப்படும் மிக உயர்ந்த பாராட்டு ஆகும். சுமார் 10 ஆண்டு கடின உழைப்பிற்குப்பின் 1934ஆம் ஆண்டில் இயற்பியல் துறையில் ஒரு அடிப்படை உண்மையை ஃபெர்மி கண்டுபிடித்தார். ஒரு தனிமம் (element) குறை வேக நியூட்ரான் மூலம் வெடிப்புக்கு (bombardment) உட்படுத்தப்பட்டால், அது கதிரியக்கம் (radioactive) உடையதாக மாறுவதோடு கதிர்வீச்சு (radiation) உமிழ்வும் நிகழும் என்பதே அவரது கண்டுபிடிப்பாகும். இம்முறையினால் ஒரு தனிமம் வெறோர் தனிமமாகவும் மாறக்கூடும். 1933ஆம் ஆண்டு நியூட்ரினோ என்னும் அடிப்படைத் துகள் ஒன்று (fundamental particle) இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. நியூட்ரான் வெடிப்பினால் ஃபெர்மி சுமார் 80 புதிய செயற்கை அணுக் கருக்களை (nuclei) உருவாக்கினார்.
இக்காலகட்டத்தில் முசோலினியின் சர்வாதிகார ஆட்சியினால், இத்தாலியில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. யூதர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாயினர். யூதப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருந்த ஃபெர்மியும் இடர்ப்பட வேண்டிய நிலை உருவாயிற்று. இந்நிலையில், அமெரிக்கவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாற்ற ஃபெர்மி அழைக்கப்பட்டார். தனது குடும்பத்தவர் அனைவருடனும் அமெரிக்கா சென்ற ஃபெர்மி மீண்டும் இத்தாலிக்குத் திரும்பவேயில்லை. எனவே தனக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து அவர் தப்பிக்க நேர்ந்தது. 1938ஆம் ஆண்டு ஃபெர்மிக்கு இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1944ஆம் ஆண்டு அவருக்கு நிரந்தர அமெரிக்கக் குடியுரிமையும் வழங்கப்பட்டது.
என்ரிகோ ஃபெர்மி தனது ஆய்வுப்பணியில் எத்தகைய ஆர்வமும், தீவிரமும் காட்டினார் என்பதை அவர் வாழ்நாளில் நடைபெற்ற பின் வரும் நிகழ்ச்சி தெளிவாக விளக்கும். ஒரு முறை ஃபெர்மி தம் ஆய்வுக்கூடத்திலிருந்த ஓர் அறைக்கு ஆய்வுக்கருவி ஒன்றை எடுத்துவரச் சென்று கொண்டிருந்தார். அப்போது அறிமுகமில்லாத புதியவர் ஒருவர் அங்கு வந்து தான் பேராசிரியர் ஃபெர்மியைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். தமது ஆய்வுப் பணியில் ஆழ்ந்து, கருமமே கண்ணாயிருந்த ஃபெர்மி அப்புதியவரைச் சற்றுக் காத்திருக்குமாறும், உள்ளே சென்று ஃபெர்மியை அனுப்பி வைப்பதாகவும் கூறிச் சென்றார். ஆய்வு வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்த பின்னர், புதியவரிடம் “நான்தான் ஃபெர்மி; தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் ?” எனக் கேட்டார். ஃபெர்மியின் அறிவியல் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் கண்ட அப்புதியவர் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டார்.
கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கட்டுபடுத்தப்பட்ட அணுக்கரு தொடர்வினைகள் (controlled nuclear chain reactions) பற்றிய ஆராய்ச்சியில் ஃபெர்மி ஈடுபட்டார். நியூட்ரான்களை வெடிப்புறச் செய்து யுரேனியம் அணுக்கருக்களைப் பிளப்பதில் அவர் வெற்றி கண்டார். இவ்வாய்வின் அடிப்படையில் பல ஆண்டுகள் கடினமாக உழைத்தார்; இறுதியாக 1942ஆம் ஆண்டு முதலாவது அணு உலை ஃபெர்மியினால் வடிவமைக்கப்பெற்று சிகாகோவில் நிறுவப்பட்டது. இவ்வுலையில் அணுக்கருப் பிளவினைப் பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி நடைபெற்றது. இவ்வணுவாற்றல் அறிவியல் உலகையே வியப்பிலாழ்த்தியது. இத்தாலிய மாலுமி நமக்குப் புதியதோர் உலகையே காட்டியுள்ளார் என்று போற்றிப் புகழ்ந்தனர்.
இதற்கிடையில் ஃபெர்மியின் அறிவியல் தோழர்கள் சிலர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டானைச் சந்தித்து, “மேற்கூறிய ஆய்வின் அடிப்படையில் சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை உருவாக்க இயலும் என்றும், ஜெர்மன் நாட்டில் சிலர் இப்பணியில் ஏற்கனவே ஈடுபட்டிருக்கலாம் என்றும்” அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டுக்குக் கடிதம் எழுதுமாறு வற்புறுத்தினர். செய்தி அறிந்த குடியரசுத் தலைவர் ஏராளமான பணத்தை ஒதுக்கி அணுகுண்டு தயாரிப்பில் உடனே ஈடுபடுமாறு ஃபெர்மியையும் அவரது அறிவியல் குழுவையும் கேட்டுக்கொண்டார். அணுகுண்டு தயாரிப்புக்கான ஆய்வில் ஈடுபடுவதற்காக ஃபெர்மி, லாஸ் அலமோஸ் மற்றும் நியூ மெக்சிகோ ஆகிய இடங்களுக்குச் சென்றார். இறுதியாக 1945ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் அணுகுண்டு வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது. இக்குண்டுகளே பின்னாளில் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவை மீது வீசப்பெற்று பேரழிவை உண்டாக்கின; போர் உடனடியாக முடிவுக்கு வந்தது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஃபெர்மி சிகாகோ பல்கலைக் கழகத்தில் அணுக்கரு ஆய்வு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார்; பின்னாளில் இந்நிறுவனம் அவர் பெயராலேயே அழைக்கப் பட்டது. மிகச் சிறந்த அறிவியல் ஆசிரியராகவும், அறிவியல் ஆய்வாளராகவும் விளங்கிய ஃபெர்மி இயற்பியலின் பல்வேறு துறைகளில் ஏராளமான நூல்களை இயற்றினார்.
என்ரிகோ ஃபெர்மியின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சேவைகளையும் பாராட்டி அமெரிக்கக் காங்கிரஸ் 1946 மார்ச்சு 19ஆம் நாளன்று அவருக்குப் பதக்கம் வழங்கிப் பெருமைப் படுத்தியது. 1954ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் நாள் தனது 53ஆம் வயதில், புகழேணியின் உச்சத்திலிருக்கும் போதே அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவருடைய நினைவைப் போற்றும் வகையில் வேதியியல் தனிமம் ஒன்றுக்கு ‘ஃபெர்மியம் (Fermium)’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளுவோருக்கு வழங்குவதற்காக அவர் பெயரில் ‘ஃபெர்மி பரிசு (Fermi Award)’ ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இன்று இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் அணு உலைகள் நிறுவப்பட்டு ஆற்றல் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிற்சில மாறுதல்களோடு இவ்வுலைகள் பணியாற்றினாலும், அனைத்தும் ஃபெர்மியின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டே இயங்குகின்றன என்பதில் மிகையேதுமில்லை.
டாக்டர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan
பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD
Email: ragha2193van@yahoo.com
- உன்னால் முடியும் தம்பி
- சரிவின் சித்திரங்கள் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சுயசரிதை நூல் அறிமுகம்)
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1
- கலைச்சொற்களைப்பற்றி
- சுஜாதாவின் ‘இரண்டாவது காதல் கதை ‘ – நாவல். ஒரு வாசகனின் குறிப்புகள்.
- காஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் புளுடோனிய வெப்பமின் கலனுக்கு எதிர்ப்புகள்! [Protest against Plutonium Powered Cassini Spaceship]
- அறிவியல் மேதைகள் என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi)
- நெஞ்சுக்குத் தெரியும்
- அழுக்கு
- கொள்கை ஒன்றே கூட்டணி தான் வேறு வேறு
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்
- மகுடம் சரிந்தது
- பாதியில் ஒரு கவிதை
- மான மிருந்தால், மங்கையரே!
- சிற்பிகளின் கற்பனைக்கு!
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- காலம் சஞ்சிகையின் வாழும் தமிழ்
- உயிர்மை பதிப்பகம்
- தகவல் பெறும் உரிமை- அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டம்
- பசிக்கட்டும்
- கூந்தலை முன்புறம் போடாதே!..
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 4)
- பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்யவேண்டும்.
- நல்லது நாடும் கிறுஸ்துவ மதமாற்றக்காரர்களே : எங்களை விட்டுவிடுங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினெட்டு
- அம்மா இங்கே வா வா…
- ஆண் விபசாரிகள்
- விடியும்! நாவல் – (8)
- ஃபீனிக்ஸ்
- கடிதங்கள்
- உரையாடும் கலை
- கடவுளே காதலா…
- புதிய பரிணாமம்
- ஊக்கமருந்து
- சுதந்திர தினம்.
- பசு
- கோவாவில் பொது சிவில் சட்டம்
- வேர்களைத் தேடி…. பயணக் குறிப்புகள் -2
- வாரபலன் ஆகஸ்ட் 2, 2003 ( ஆர்ச்சர், பொது சிவில் சட்டம், விவரணப்படம், இடாகினிப் பேய்)
- பணமில்லா அழகு பாழ்