அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம்

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இதுவரை பாரதத்தில் நிறுவப்பட்ட சாண எரிவாயு கலன்கள் கூட்டுத்தொகையாக பின்வரும் அட்டவணையில் காட்டப்படுகின்றன.

வருடங்கள் சாண எரிவாயு கலன்கள் (கூட்டுத்தொகையாக)

1961: 62 < 25,000

1980 வரை 100,000

1990 வரை 150000

1999 டிசம்பர் வரை 290587

(1999:2000 பாரத அரசின் ஆண்டறிக்கையிலிருந்து)

இத்தொழில் நுட்ப பரவுதல் குறிப்பாக அரசு மானியங்கள் மூலமாகவும் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் மூலமாகவுமே நடக்கிறது. சந்தை பொருளாதார ஏற்பு இத்தொழில் நுட்பத்திற்கு ஏற்படவில்லை. பாரத கிராமப்புறங்களில் எரிபொருள் பயன்பாட்டில் சாண எரிவாயுவின் பங்களிப்பு 0.43 சதவிகிதம். அதே சமயம் நேரடி சாண எரியூட்டல் 19.6 சதவிகிதம். மிக மெதுவான தொழில் நுட்பபரவலுடன் நிறுவப்பட்ட சாண எரிவாயு கலன்களின் செயல்பாட்டு திறமும் சாண எரிவாயுவின் குறைவான கள பங்களிப்பில் முக்கிய காரணிகளாக கண்டறியப்படுகின்றன. மேலும் ஒரு கள ஆய்வாளர் கூறுவதை போல சாண எரிவாயு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட அளவிற்கு கிராம வாழ்வினுடன் இசைவிக்கப்படவில்லை. ( ‘introduced but not integrated ‘) 1992 இல் தேசிய அளவில் நடத்தப்பட்ட தேசிய பொருளாதார மையம் நடத்திய கள ஆய்வு நான்கு வருட காலத்துக்குள் சாண எரிவாயு கலன்களுள் நிறுவப்பட்ட 3600 கிராமங்களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. செயல்பாட்டு சதவிகிதம் : 66. 1996 இல் மரபு சாரா எரிபொருள் அமைச்சகம் 1992 முதல் ’95 கால கட்டத்துக்குள் நிறுவப்பட்ட கலன்களின் செயல்பாட்டு சதவிகிதம் 88 என தெரிவித்தது. (கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அளவு: 727) டாடா ஆற்றல் ஆய்வு மையம் (TERI) யின் 1997 இல் மேற்கொண்ட கள ஆய்வு இன்று தன்னார்வ அமைப்புகளால் ஆதர்ச கையேடாகவே பயன்படுத்தப்படுகிறது. 1981 முதல் 1996 வரையிலான கலன்கள் தேசம் முழுவதிலுமாக 58 கிராமங்களில் கள ஆய்வு செய்யப்பட்டன. செயல்பாட்டு சதவிகிதம்: 81. TERI சாண எரி வாயுகலன்களின் செயல்பாட்டின்மைக்கான காரணங்களாக பின்வருவனவற்றை முன்வைக்கிறது:

அ) சமுதாய பொருளாதார பிரச்சனைகள்: கால்நடைகளின் எண்ணிக்கை குறைவு (சாவு அல்லது விற்றல் விளைவாக), தகராறுகள், நில பாகப்பிரிவினை போன்றவை (30%)

ஆ) தொழில்நுட்ப பிரச்சனைகள்: எரிவாயு குழாய்களில் அடைப்பு, விரிசல், அடுப்பின் ‘பர்னரில் ‘ பிரச்சனைகள் (45%)

இ) கட்டுமான பிரச்சனைகள் (6%)

ஈ) மற்றவை: கவனக் குறைவால் அல்லது மானுட தவறினால் எழுபவை. உதாரணமாக குறைவான சாண உள்ளீடு போன்றவை.(19%)

கலனின் செயல்பாட்டுக்கும் அப்பால் கலனி முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதும் முக்கியமானது, இப்பயன்பாட்டினை கணித அளவீட்டில் கொண்டு வருவதென்பது கடினமானது. லிட்மானின் ஆய்வு பலவித ஆற்றல் பயன்பாட்டு களநிலைகளை முன்வைத்து

பயன்பாட்டின் நல அளவீட்டினை நிர்ணயிக்கிறது. புரா கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட இக்கள ஆய்வில் சமுதாய சாண எரிவாயுகலன்கள் 78% பொருளாதார லாபத்தை ஏற்படுத்துவதாக கணிக்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் தனிநபர் கலன்களில் இந்த அளவு குறையுமென்றும் கணிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக சமுதாய அளவிலான கலன்களில் உள்ளீடு அளவு அதிகமாக உள்ளதால் சில சமயங்களில் சாணம் லாரிகளில் பக்கத்து ஊர்களிலிருந்து வரை கொண்டு வர வேண்டியதாகிவிடுகிறது. ஆய்வுகளில் வேதி உர பயன்பாடு குறைதல், சமையலறை புகைமண்டிய சூழல் மாற்றத்தால் ஏற்படும் மானுட நலம், மேம்படும் சுகாதாரம் அதனால் மிச்சப்படும் மருத்துவ செலவுகள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சீனத்தில் மேற்கொள்ளப்பட்ட சாண எரிவாயு கலன்களின் செயல்பாட்டில் வேதி உர பயன்பாடு குறைதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டஆய்வுகளில் கட்டுமான செலவு 20% அதிகரித்த பின்னும் கூட நிகர பொருளாதார இலாபம் கிட்டியதாக கண்டறியப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்ப பரவுதலுக்கு பொருளாதார அளவிலான ஊக்குவிப்பில் பொருளாதார இலாபம் குறித்த அளவிடுதல் முக்கியமானதாகும். சரியான தகவல் பரிமாற்றம் இன்றி முழுமையான சாண எரிவாயு கழிவின் உர பயன்பாடு இயலாத ஒன்றாகும். தொழில் நுட்ப தகவல் பரிமாற்றமின்றி இத்தொழில்நுட்பம் வேரூன்றுவது குதிரை கொம்புதான். நிறுவப்பட்ட கலனின் பராமரிப்புக்குக் கூட ‘காணப்பெறும் பொருளாதர இலாபம் ‘ (tangible economic gain, உதாரணமாக சுற்றுபுற சூழம் மேம்பாடு அல்லது தவிர்க்கப்படும் மருத்துவ செலவு ஆகியவை ‘காணப்பெறும் பொருளாதார இலாபங்கள் ‘ அல்ல.) ஒரு ஊக்குவிப்பு காரணமாகிறது. எனவே சரியான பயன்பாட்டு தகவலளிப்பு மற்றும் பயிற்சி இத்தொழில்நுட்பத்துடன் கொடுக்கப்படவேண்டும்.

பாரத அரசின் ஒன்பதாவது திட்டக்குழுவின் வார்த்தைகள் இத்தொழில்நுட்பத்தின் இன்றைய நிலையை தெளிவாக்குகின்றன. ‘சாண எரிவாயு நமக்கு இருக்கும் குவித்தன்மையற்ற எரிபொருள் மூலங்களில் மிகச் சிறந்தது. ‘ என கூறும் திட்டக்குழு அதே சமயம் மேலும் கூறுகிறது, ‘ஆனால் அதனை நியாயப்படுத்த அதன் பயன்பாட்டினை (உள்ளடங்கிய பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பயன்பாடு) அதனால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மேம்பாட்டினை அளவிடும் கள ஆய்வுகள் விரிவாக நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். ‘

ஒரு பாரதிய விவசாயியின் பார்வையில் இத்தொழில் நுட்ப பயன்பாட்டினை ஏற்பதில் உள்ள சிரமங்கள் என்ன ?

அ) அதிக முதலீடு

ஆ) இயக்க, பராமரிப்பு செலவுகளின் தன்மை

இ) உள்ளீட்டு அளவு மாறுபடும் தன்மை

ஈ) சரியான பொருளாதார உதவுகரங்கள் இன்மை

உ) பயன்பாடு பராமரிப்பு குறித்து தகவலின்மை

பொதுவாகவே குவித்தன்மையற்ற தொழில்நுட்பங்களின் பரவுதலை தடுக்கும் காரணிகளும் இவையே. இவை எவ்வாறு எதிர்கொள்ளப்படலாம் ? பாரத குடியரசு தலைவரும், இந்த தேசத்தின் ஏவுகணை தொழில்நுட்ப செயல்திட்டத்தின் தந்தையுமான ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாமின் எழுச்சி எண்ணங்களில் அதற்கான விடை இருக்கலாம்.

அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

author

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

Similar Posts