அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

அரவிந்தன் நீலகண்டன்


முன் குறிப்பு:

அணுஉலைகள் குறித்து மிக வேகமாக சிந்திக்கின்றனர் திரு.சின்ன கருப்பனும் மற்றும் திரு.ஜெயபாரதனும். திரு. சின்ன கருப்பனின் கட்டுரையில் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்கள் குறித்து ஒரே வரியுடன், ஒதுக்கப்படுகிறது. இக்கட்டுரையாளன் அணு உலைகளுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் இன்றைய எரிபொருள் பயன்பாட்டு பாதைகள், அதன் மதிப்பீடுகள் ஆகியவை சார்ந்த மனமண்டலம் குறித்த (நம்பிக்கையின்மையின் விளிம்பிலான) ஐயம் உடையவன். பாரதத்தின் இன்றைய எரிபொருள் உற்பத்தி, பயன்பாடு விநியோகம் ஆகியவற்றில் பாரத சமுதாயத்தின் பெரும்பான்மை மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்களின் ‘சிறிய ‘ அளவு பங்களிப்பு மானுட நலம் மற்றும் மேம்பாட்டுக்கு வர்த்தக ரீதியிலான ஆற்றல் விளைவுகளை காட்டிலும் பெரும் அளவு இருக்கும் என கருதுகிறேன். அதாவது பெட்ரோலிய மூலத்திலிருந்து ஒரு மெகாவாட் ஆற்றல் பயன்பாடு இன்று விளைவிக்கும் மானுட நல அளவினைக் காட்டிலும் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்கள் மூலம் கிட்டும் ஒரு மெகாவாட் ஆற்றல் பயன்பாடு விளைவிக்கும் மானுட நல அளவு இன்னமும் அதிகமாக இருக்கும் என்னும் கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரையை (முடிந்தால் தொடரினை) எழுத முற்படுகிறேன். மார்க்சியத்தின் மேம்போக்குத் தனமின்றி, ஒரு முழுமைத்தன்மை கொண்ட மானுடநலம் பற்றிய அடிப்படை இடத்தை, (மதிப்பீடுகள், தொழில்நுட்பம், சமூக பொருளாதார அமைப்புகள் ஆகியவை சந்திக்கும் ஒரு இடம்) ,ஆற்றல் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு குறித்த விவாதத்தின் மூலம் தொட முடியுமென நம்புகிறேன். அதன் தொடக்கமாக:

பாரத சமுதாயத்தின் எரிபொருள் பயன்பாட்டு தன்மைகள்

எந்த பண்பாட்டிற்கும் முன்நிபந்தனையாக ஆற்றல் பயன்பாடே விளங்குகிறது என்பார் புகழ்பெற்ற வருங்காலவியல் ஆய்வாளரான ஆல்வின் டாஃப்லர். இன்றைய வளரும் உலகின் வேக வளர்ச்சி பொருளாதாரங்களில் ஒன்றான பாரதமும் அதி வேகமாக வளரும் ஆற்றல் தேவையுடன் விளங்குகிறது.

கடந்த ஐம்பதாண்டுகளில் பாரதத்தின் ஆற்றல் அல்லது எரிசக்தி பயன்பாட்டு தேவை பெருக்கத்தன்மையுடன் வளர்ந்துள்ளது. 1953 இல் 90மில்லியன் டன் எண்ணெய்க்கு சமமான (million oil tonne equivalent MOTE) எரிசக்தி பயன்பாட்டிலிருந்து, நாற்பதாண்டுகளில் 370 MOTE பயன்பாட்டிற்கு பாரதம் சென்றுவிட்டது. அதே சமயத்தில் வர்த்தக தன்மை கொண்ட மற்றும் வர்த்தக தன்மையற்ற எரிசக்தி பயன்பாடுகளிலும் ஒரு பெரும் மாற்றத்தை காணமுடிகிறது. 1953 இல் 30% எரிசக்தி, வர்த்தக தன்மை கொண்ட எரிசக்தி மூலங்களிலிருந்தும் (நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள், இயற்கை வாயு மற்றும் மின்சக்தி) 70% எரிசக்தி வர்த்தக தன்மையற்ற எரிசக்தி மூலங்களிலிருந்தும் (விறகு, சுள்ளி, விலங்கு கழிவுகள் மற்றும் வைக்கோல் போன்ற விவசாய கழிவுகள்) நமக்கு கிடைத்தது. 1997 இல் இந்த அமைப்பு 70% எரிசக்தி, வர்த்தக தன்மை கொண்ட எரிசக்தி மூலங்களிலிருந்தும் 30% எரிசக்தி வர்த்தக தன்மையற்ற எரிசக்தி மூலங்களிலிருந்தும் என தலைகீழாக மாறிற்று. ஆனால் இந்த தேசிய எரிசக்தி புரட்சி கிராமங்களின் எரிசக்தி பயன்பாட்டிற்கு எவ்வித தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது ?

பாரத மக்கள் தொகையில் 75% மேல் வாழும் கிராமப்புறங்களில் எரிசக்தி பயன்பாட்டினை இரு முக்கிய துறைகளாக பிரிக்கலாம்.

1.கிராம வீட்டு சமையலுக்கான பயன்பாடு. இதுவே இன்றைய தேதியில் பாரத கிராமங்களில் மிகவும் எரிபொருள் பயன்படுத்தும் துறை. (கிராம எரிசக்தி பயன்பாட்டில் 75% இத்துறையிலேயே செலவிடப்படுகிறது.)

2.விவசாய துறை (15 முதல் 20% எரிசக்தி பயன்பாடு)

3. இதர துறைகள் (கிராமப்புற சிறு தொழில்கள் போன்றவை : 5 முதல் 10%)

1980/81 முதல் 1990/91 வரையிலான காலத்தில் தேசிய எரிசக்தி பயன்பாடு 40.45% லிருந்து 50.57% ஆக உயர்ந்தது; ஆனால் வர்த்தகதன்மையற்ற ஆற்றல் பயன்பாடு 59.54% லிருந்து 49.42% சதவிகிதமாயிற்று அதே காலகட்டத்தில் வர்த்தக தன்மைகொண்ட ஆற்றல் பயன்பாடு கிராம சமையல்களில் 4.47% லிருந்து 4.82% ஆக மட்டுமே உயர்ந்தது. வர்த்தகதன்மையற்ற ஆற்றல் பயன்பாடு 95.53% லிருந்து 95.18% ஆக குறைந்தது. அதே சமயம் விவசாய துறையில் ஆற்றல் பயன்பாட்டு சதவிகிதம் கிராமங்களின் சமையல் பயன்பாட்டு சதவிகிதத்திலிருந்து மாறுபடுகிறது. 1953 இல் கால்நடை மற்றும் மானுட உழைப்பாற்றல் 85% லிருந்து 35.16% ஆக 1992 இல் குறைந்தது. அதே காலகட்டத்தில் வர்த்தக ஆற்றல் சார்ந்த இயந்திர ஆற்றல் 15% லிருந்து 64.84% ஆக உயர்ந்தது. (இந்த ஆற்றல் பயன்பாட்டு மாற்றமே பல பஞ்சங்களை எதிர்கொள்ளாது பாரதத்தை காத்தது.) மின்மயப்படுத்தலை எடுத்துக் கொண்டால், தேசிய அளவில் மின்னாற்றல் பயன்பாடு உடையோரின் சதவிகிதம் ஐம்பதுக்கும் குறைவு. ஒரு பில்லியன் தாண்டிய பாரத மக்கள் தொகையில் 75% வாழும் கிராமப்புறங்களில் மின்னாற்றல் பயன்பாடு உடையோரின் சதவிகிதம் தேசிய சதவிகிதத்திற்கும் குறைவு. சமுதாய மேம்பாட்டுத்தன்மையுடனான பொருளாதார வளர்ச்சியால் பாரதத்தின் ஆற்றல் பயன்பாட்டு அளவு மிக அதிகமாக அதிகரிப்பதை, கடந்த பத்தாண்டுகள் ஆற்றல் பயன்பாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக தன்மையுள்ள மற்றும் அத்தன்மையற்ற ஆற்றல் பயன்பாடுகளின் வேறுபாடுகள், குறிப்பாக முந்தையதன் வளர்ச்சியும் பிந்தையதனின் வீழ்ச்சியும் தெளிவாக இப்புள்ளிவிவரங்களில் நாம் காண முடியும்.

மிகத் தெளிவாக மாறிவரும் பாரதத்தின் ஆற்றல் பயன்பாடு அதன் 75% சதவிகித மக்களுக்கு எவ்வித சமுதாய பொருளாதார மாற்றங்களும் ஏற்படுத்தாத விதத்திலான உற்பத்தி மற்றும் விநியோக முறையினை கொண்டுள்ளது. அதிகரிக்கும், வர்த்தக தன்மையுடைய ஆற்றல் பயன்பாடு நகரங்களில் மாத்திரமே பயன்படுகிறது. மாறாக கிராமப்புறங்களுக்கு அதன் கசிவே உள்ளது. இனிவரும் வருடங்களில் பாரதத்தின் ஆற்றல் தேவை கீழே காட்டப்படுகிறது.

பாரதம் ஏற்கனவே ஒரு ஆற்றல் இறக்குமதியாளராக உலகச் சந்தையில் உள்ளது. பாரதத்தின் அந்நிய செலாவணி விகிதங்களை பாரதத்திற்கு பாதகமாக மாற்றிக் கொண்டிருக்கும் விஷயம் இது. இன்றைய பொருளாதார வளர்ச்சி வேகத்தை அப்படியே

நிலையாக கொண்டு செல்லும் பட்சத்தில், இன்று 3040 x 10^15 ஜூல்கள் ஆற்றலை இறக்குமதி செய்யும் பாரதம் அடுத்த பத்தாண்டுகளில் 17315 x 10^15 ஜூல்களை எட்டிப்பிடிக்கும். இது எத்தகைய பொருளாதார வலிமையற்ற தன்மைக்கு பாரதத்தை எடுத்துச் செல்லும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இதற்கு பாரதம் கொடுக்கும் விலையின் பயன் அதன் 75% சதவிகித மக்கள் தொகைக்கு எவ்விதம் சென்றடையும் ? மற்றும் அதனால் ஏற்படும் மானுட மேம்பாட்டால் பாரதத்தின் உற்பத்தி திறன் எவ்வாறு பெருகும் ? இக்கேள்விகளுக்கான பதிலை ,கடந்த ஐந்து பத்தாண்டுகளை வைத்து பார்த்தோமானால், மிகவும் கவலைக்குரியதாகவே காணவேண்டியுள்ளது. ஒரு வேளை இதற்கான பதில் 25 கோடி நகர்ப்புற பாரதியர்களுக்கு ‘பல் குத்தக் கூட போதுமானதாக இல்லாத ‘ ஆற்றலை உற்பத்தி செய்யும் மூலங்களிலிருந்து நமக்கு கிடைக்கலாம். ஐக்கிய நாடுகளின் சமுதாய மேம்பாட்டு செயல்திட்ட மேலாண்மை அதிகாரி ஜேம்ஸ் ஸ்பத்தே கூறுகிறார், ‘இன்றைய நடைமுறையிலேயே ஆற்றல் உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியன தொடருமெனில் பல வளரும் நாடுகளுக்கு முன்னேற்ற வேகம் குறைந்துவிடும் முழுமையாக நின்றும் கூட போய்விடலாம். நமது ஆற்றல் பயன்பாட்டுத்தன்மை குறித்து நாம் மறு சிந்தனை செய்தே தீரவேண்டும். ‘

பின்குறிப்பு:

வர்த்தகதன்மையுள்ள ஆற்றல் தன் உற்பத்தியில் மிகுந்த சுற்றுப்புற சூழல் சார்ந்த விலைகளை நம்மை கொடுக்கவைக்கும் தன்மை கொண்டது.வர்த்தக தன்மையற்ற ஆற்றல் பயன் பாடு தன்னளவில் திறமையற்றதென்பதுடன் மாசுத்தன்மையையும் கொண்டது. எனவே பின்நோக்கி நகரும் தன்மையினை இக்கட்டுரை வலியுறுத்தவில்லை. மாறாக இன்றைய ஆற்றல் உற்பத்திக்கான தொழில்நுட்ப தேர்வு தன்னளவில் ஒரு பெரும் மானுட சமுத்திரத்தினை புறக்கணிக்கிறது. எனவே குவித்தன்மையற்ற, பரவுதன்மை கொண்ட தொழில்நுட்பத்தின் தேவையினை குறித்து பேசுகிறது பல் குத்தும் துரும்பினை பற்றிய

இக்கட்டுரை (அல்லது கட்டுரை தொடரின் முதல் கட்டுரை).

***

அரவிந்தன் நீலகண்டன்

பயன்படுத்தப்பட்ட இணைய தள பக்கங்கள்:

1.http://www.incg.org.in/CountryGateway/RuralEnergy/Overview/RuralenergyinIndia.htm

2.SARMA, E.A.S et al., ாIndia ‘s Energy Scenario In 2020ி, World Energy council, 2002.

(http://www.worldenergy.org/wec-geis/ publications/ default/ tech_papers/ 17th_congress/ 1_1_27.asp)

Series Navigation

author

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

Similar Posts