ரேகா ராகவன்
உன்னை நினைக்கையில்
கறிவேப்பிலைக் கொசுறாய்க்
கூடவே வரும் சில ஞாபகங்கள்……..
நினைவோடு நினைவாய்……..
பனிவிலகும் வேளை
நேற்றைய நிலவின் எஞ்சிய ஒளியில்
இன்றைய இளஞ்சிவப்புச் சூரியனுக்காய்க்
காத்துக் கிடந்த காலைப் பொழுது
இளங் காலை வெயிலில்
சின்னச் சின்ன மத்தாப்புப் பூக்களாய்த்
தெறிக்கும் தோட்டத்து நீர்ப் பாய்ச்சிகள்
மெல்லிய சத்தம் கேட்டதும் சப்த நாடியும் ஒடுக்கித்
தலைதூக்கி நிமிர்ந்து
நம் கண்ணோடு கண் பார்த்துச்
சட்டென்று ஓடிவிடும் துருதுரு அணில்கள்
பாலத்தின் மேல் செல்கையில்
இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை
தெரியும் நீலக்கடலை உரசும் வெளிர்நீல வானம்
எல்லையில்லாமல் சிறகடித்துப் பறக்கும் வெண் பறவை
அக்காட்சிக்கு உயிர் கொடுப்பதாய்………
வசந்த காலத்தில் மெல்ல விரிந்த வண்ணப் பூவின்மேல்
காற்றாய் அமர்ந்து இன்றுவரை தான் சேகரித்த
செய்திகளை ரீங்காரமாய்ச் சொல்லும் கறு வண்டு
உள்புகுந்து ஊடுறுவி ஆக்ரமித்து
உடல்முழுதும் பஞ்சாகிப் பறந்து
பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியாய்
ஒன்ற வைக்கும் இன்னிசை
சாலையின் இருபுறமும் நீண்டு சாய்ந்த மரங்கள்
இலையுதிர்காலத்துப் பனியாய்
உதிரும் வண்ண இலைகள்
பாதை இதோ முடிகிறது என நினைத்து நெருங்குகையில்
நம்மை உள்வாங்கி சரேலென விரிந்து
இன்னொரு அழகிய இயற்கை ஓவியத்தினுள்
கூட்டிச் செல்லும் விசித்திரம்………..
நினைவுகளின் தாக்கத்தில்
மனம் நிறைந்து பொங்கியதில்
சிந்திய சில ஞாபகங்கள்
இன்று இக்காகிதத்தில் கவிதையாய்
திண்ணை நவம்பர் 14, 1999
திண்ணை
|