ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

ப.மதியழகன்


வேண்டுதல்

குதிரை வடிவ
பலூனுக்கு காற்றடித்துக்
கொண்டிருந்தான்
பலூன் வியாபாரி
விதவிதமான உருவமுடைய
பலூன்களைக் கண்டு
வியந்தது
திருவிழாவுக்கு வந்த
குழந்தையொன்று
அப்பாவிடம் பலூனைச்
சுட்டிக்காட்டி வாங்கித்தரச்
சொன்னது
வீட்டிற்குப் போகும் போது
வாங்கிக்கலாம் என்றார்
அப்பா
திருவிழாவில் எழுந்தருளிய
சாமியிடம்
அப்பா பொம்மை வாங்கித்
தர வேண்டுமென்று
வேண்டிக் கொண்டது
குழந்தை.

சந்திப்பு

கண்ணாடியில் பிரதிபலித்த
இளநரையால்
சிறிது வருத்தம்
முடிவுக்கு முன்னுரை
எழுதுவதல்லவா அது
மாசு கலந்த காற்றை
அன்றாடம் சுவாசிக்க
நேர்ந்தாலும்
வயிற்றுப் பிழைப்புக்காக
நகரத்தை விட்டு
நகர முடியவில்லை
நேற்று பார்த்த
அதே பிச்சைக்காரன்
நேற்று கால்களை இழந்தவன்
இன்று கரங்களை இழந்திருந்தான்
அவனுடைய போலித்தனத்துக்கும்
சில்லறைகள் விழத்தான் செய்தது
கழைக்கூத்தாடிச் சிறுமிக்கு
கயிற்றினில் நடக்கும் போது
இல்லாத பதட்டம்
தட்டை ஏந்தும் போது இருந்தது
ரயில்வே சநதிப்புகளில்
இருக்கைகள் நிரம்புகிறது
கையசைப்புகளுக்கு மத்தியில்
அசம்பாவிதம் ஏதுமின்றி
சென்றடைய வேண்டுமே என்ற
அக்கறை மிகுந்திருந்தது.

அடையாளம்

முட்டுச்சந்தில்
கொட்டிக் கிடந்த
குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்தது
தெரு நாய்
மைதானத்தில்
வானம் பார்த்து கிடந்த
பைத்தியம்
சாலையைக் கடந்தது
வானிலிருந்து விழுந்த
நட்சத்திரம்
பூமியை அடையும் முன்பே
எரிந்து போனது
சருகுகள் போர்த்திய
வனப்பாதையில்
கால் வைத்து
அமைதியைக் குலைத்தனர்
சுற்றுலாப் பயணிகள்
அடுக்களையில் புலம்பினாள்
அஞ்சம்மாள்
ஆதரவற்றோர் உதவித்தொகையை
அரசாங்கம் உயர்த்தித் தரவில்லையென
நாட்கள், வாரங்கள்,
மாதங்கள், வருடங்கள்
உருண்டோடுகின்றன
என்றாலும் இவன்
மழைக்குப் பயந்து
பயணிகள் நிழற்குடையில்
ஒதுங்கிய போதே
வாலிபம் தொலைந்தது.

அந்திம காலம்

அவரவர்
உள்ளங்களுக்கே தெரியும்
அவரவர்
எப்படிபட்டவரென்று
சுடரும் தொட்டால் சுடும்
நண்பர்களை வலியச்சென்று
வரவேற்று கைகொடுக்கும் போது
இன்பமாய் இருக்கும்
மரணத்தை வலியச் சென்று
யாரும் அழைப்பதில்லை
கதவைத் தட்டினாலும்
திறப்பதில்லை
மூங்கிலும் புல் இனமே
சாகும் வேளையில்
ஒரு மிடறு தண்ணீர்
தொண்டைக்குள் இறங்காது
வளைகுடா நாடுகளில்
புரட்சி வெடித்தது
சந்தைக்கு வந்த மாங்காய்
சீந்துவாரின்றி கிடந்தது
எப்போதும் குடையுடனே
காணப்படும் எதிர் வீட்டுத் தாத்தா
இறந்த போது
மழை பெய்தது.

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts