ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

ப.மதியழகன்


சாகரம்

துயரப்பொதிகளை
தோணி சுமக்கும்
அலைகளை எதிர்த்து
பிழைத்தல் நடக்கும்
சீற்றங்கள்
படகுகளைச் சின்னாபின்னமாக்கும்
புசல் எச்சரிக்கை
கடலுக்குள் போவதைத் தடுக்கும்
எல்லைகளைத் தாண்டாத போதும்
தோட்டாக்கள் பரிசாகக் கிடைக்கும்
பலரின் கூக்குரலுக்கு
மெளனம் ஒன்றே
அரசாங்கத்திடமிருந்து
பதிலாகக் கிடைக்கும்
பொங்குவதும், உள்வாங்குவதும்
அடிக்கடி நடக்கும்
இவற்றை பொறுத்துக்கொண்டே
கட்டுமரம் கடலில்
வலை விரிக்கும்
கடலன்னையின் பேரிரைச்சல்
கண்ணுறக்கம் கெடுக்கும்
உயிரை கையில் பிடித்துக்கொண்டே
வாழ்க்கை ஓடம் மிதக்கும்.

பற்றுக்கோடு

நடைவண்டி
பயிலும் குழந்தை
வாழ்வின் முதல்படிக்கட்டை
தொட்டு நிற்கிறது

பால் வற்றிப்போன
பிச்சைக்காரி
என்ன செய்வாய்
அழும் குழந்தையை
வைத்துக் கொண்டு

குப்பை அள்ளவரும்
மூதாட்டி
சதா திட்டிக் கொண்டே
இருப்பாள்
தனது பீடை வாழ்வைக் குறித்து

காலைத் தீண்டும் நதிநீர்
ஓடித் தொலைகிறது
ஒளிந்து கொள்ள மறுத்து

பால்காரன் சிந்திய பாலை
நக்கிக் கொண்டே
வீதி வரை செல்லும்
வாகனம் மோதியதால்
தாயை இழந்து தவிக்கும்
நாய்க்குட்டி.

இடைவெளி

முத்தத்தின் ஈரம்
கூட காயவில்லை
கூந்தலில் சூடிய
மல்லிகைப்பூ வாடவில்லை
மனதில் பூத்த
நேசத்தில் விரிசலில்லை
உன்னைச் சுமந்து சென்ற
வாகனத்தின் தடம்
இன்னும் அழியவில்லை
உன் விழியோரம் அரும்பிய
கண்ணீர்த்துளிகள் காயவில்லை
உன் ஞாபகச் சுவடுகள்
துக்கத்தை ஏற்படுத்த
தவறவில்லை
பெண்ணினத்தில்
தேவதைகளுக்கு பஞ்சமில்லை
நீ ஏற்றி வைத்த
காதல் தீபம் அணையவில்லை
நேசமே சுவாசமானபோது
தூரத்தை எண்ணித் துயரமில்லை
உன் இசைவுக்காக
காத்திருந்த நாட்கள்
நெஞ்சைவிட்டு அகலவில்லை.

சாபவிமோசனம்

உனது வருகைக்குப்
பின்னால்
எனது அறை
வாசத்தில் மிதந்தது
உனது கண்ணீர்த்துளிகள்
எனது கல் மனதையும்
கரைத்தது
கோடையிலே
மழை வரக் கூடாது
மின்னல் உன்னை
புகைப்படம் எடுத்தால்
நான் என்ன செய்வது
கடவுளிடம்
உன் வேண்டுதல்
நிறைவேற வேண்டுமென்று
நான் வேண்டிக் கொண்டேன்
உனது புன்னகையில்
வழியும் மதுவைப் பருகி
தலை கிறுகிறுத்ததுப் போனேன்
கடலில் விழும்
சந்திரனின் பிம்பம்
உன்னைப் பெயர் சொல்லி
அழைக்கும்
உனது காலடியை
கற்களின் மீது வை
சாபவிமோசனம் பெற்று
அகலிகை உயிர்த்தெழலாம்.

காட்சி

ரயில்
லெவல் கிராஸிங்கைக்
கடக்கிறது
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த
பிச்சைக்காரன்
ரயிலைச் சபிக்கின்றான்.
பேருந்தில் ஏறி அமர்ந்தான்
பக்கத்திலிருந்தவன்
தூங்கி இவன் தோளில் சரிய
பேருந்துப் பயணம்
துர்சொப்பனமாய்க் கழிந்தது.
வண்டி பஞ்சராகி
இரவில்
தள்ளிக் கொண்டே
வீடு திரும்புகின்றான்
வழியில் நாய்கள் குரைக்க
அது வெறிக்கு
தனது கெண்டைக்கால் சதை
இரையாகிவிடுமோ
என்று வழிமுழுவதும்
உடல் வெலவெலத்து
வியர்வையில் நனைந்தது.
விசேஷத்திற்கு
போய்க் கொண்டிருக்கையில்
எதிர்வரும் பேருந்து
சட்டையில் சகதியை
வாரி இறைத்துச் செல்ல
சாலையை சரியாகப் பராமரிக்காத
சர்க்காரைச் சபித்தபடியே
வீடு வந்து சேர்ந்தான்.

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts