கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
தோளில் பச்சை குத்தப் போனவன்
************************************

*காஸ்வின் நகரத்தில்
நல் அதிர்ஷ்டம் வருமென
எதிர்பார்த்துப்
பார்சி மக்கள் முதுகிலோ
தோளிலோ அல்லது கரத்திலோ
பச்சை குத்திக் கொள்ளும்
பழக்கம் உண்டு
நீல மையில் அல்லது
கரிய நிறத்தில் !
நாவிதன் கடைக்குச் சென்று
தோள் பட்டையில்
நிமிர்ந்து நிற்கும்
நீல நிறச் சிங்கத்தைப்
பச்சை குத்தச் சொல்வான்
பாமரன் ஒருவன் !
“காலச் சக்கிர ஜோதி டத்தில்
உச்ச சிங்கம் எனக்கு ! ஆதலால்
கண்கவரும் முறையில்
வரைந்திடு
நீல நிறக் கோலத்தில் !”

++++++++++++++

ஊசி முதுகில் குத்தியதும்
‘ஓ வென’ அலறினான் பாமரன் !
“என்ன செய்தாய் இப்போது
எனக்கு வலிக்குது !
சிங்கத்தின்
எந்த உறுப்பை
வரையத் துவங்கினாய் ?”
“வாலை முதலில் வரைகிறேன்” என்று
நாவிதன் பதில் உரைப்பான் !
எலும்புச் சதைமேல் குத்தினால்
வலி உண்டாகும் !
வாலில்லாச் சிங்கத்தை
வரைந்திடு என்பான் !
நாவிதன் சொற்படிச் செய்தான் !
திரும்பவும் பாமரன் அலறி
“எந்த உறுப்பை வரைகிறாய்
இப்போது ?”
என்று வினவினான் !
“சிங்கத்தின்
செவிகளை” என்பான்
நாவிதன் ! “வேண்டாம்
காதிலாச் சிங்கத்தை”
வரையெனக்
கட்டளை இட்டான் பாமரன்.

+++++++++++++

ஊசி குத்திய உடன் மீண்டும்
ஆவென அலறி
ஓலமிட்டான் பாமரன் !
“எதனை வரைகிறாய்
இப்போது ?”
“வயிறை வரைகிறேன்,” என்றான்
நாவிதன் ! “வேண்டாம்
வயிறில்லா சிங்கத்தை
வரை எனக்கு,” என்பான்
பாமரன் !
விழித்தான் பச்சை குத்தும்
நாவிதன்
வழி தெரி யாமல்
கன்னத்தில் கைவைத்துச்
சிந்தித்தான்
கண நேரம் ! பிறகு
வீசி எறிந்தான் ஊசியை !
“எவரும் இதுவரை
இப்படி வரையக் கேட்டிலர் !
வாலில்லா, காதில்லா
வயிறில்லாச் சிங்கத்தை
வரைய விளித் திலார் !
படைத்த கடவுள் கூட
இப்படிப்
பச்சை குத்த முடியா தென
நகர்ந்தான் நாவிதன் !

+++++++++++++
*Qazwin or Ghazvin is the largest city and capital of the Province of Qazvin in Iran.
+++++++++++++
(தொடரும்)
***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 22, 2011)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts