ப மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

ப மதியழகன்


வெறி கொண்ட பேரலைகள்

சங்கிலியால் பிணைத்தது போன்று
உறுமிக் கொண்டுள்ளது
சீறிப் பாயும் அலைகள்
வானுயர எழும்புகிறது
பரிதி பார்ப்பதற்கு பயந்து
மேகங்களுக்கிடையே பதுங்கிக்
கொள்கிறது
கடல் தனது கரங்களால்
கட்டிடங்களை கபளீகரம்
செய்கிறது
கரையை மோதும் அலையின் வேகம்
கண்டு உடம்பு நடுங்குகிறது
வாகனங்களை உருட்டித் தள்ளியபடியே
வெள்ளம் ஊருக்குள் நுழைகிறது
வெறி கொண்ட வேங்கையென
கடலலைகள் பாய்கிறது
கடல் எல்லை தாண்டி வந்துவிட்டதை
எண்ணி
பறவைகள் அச்சம் கொள்கின்றன
சடலங்கள் குவியலாக
தண்ணீரில் மிதக்கின்றன
பிணந் தின்னிக் கழுகுகள்
வானில் வட்டமிடுகின்றன
ஆழியின் கோரத்தாண்டவம
பேரழிவை ஏற்படுத்திச் சென்றது
கடல் சென்ற தடத்தைப் பார்த்து
மனித இனம் பேரச்சம் கொண்டது
சமுத்திர சர்ப்பம் தனது பிளவுண்ட நாக்கை
அடுத்து எப்போது நீட்ட இருக்கின்றது.

பசலை

தாழைக்குத் தண்ணீர் வேண்டும்
கொண்டலுக்கு மழையாகும்
கொடுப்பினை வேண்டும்
காற்றே சற்று நேரம் சும்மா கிட
மழையை எங்கே அழைத்துச் செல்ல
முயல்கிறாய் நீ
வெள்ளிச் சுருணையைப் போல்
மின்னல் ஒளி இறங்கிற்று
கரடுமுரடான பாதையில்
ரதம் செல்வதைப் போல்
வானம் இடித்திற்று
மகனைப் பிரிந்த தாய் போல
ஆகாயம் அழுதிற்று
மண் தான் பெற்ற
பெரும் பேறுக்காக
முகிலுக்கு நன்றி நவின்றிற்று
மழை விடைபெறும் சமயம்
பசலை பீடித்த பெண் போல
பூமி ஏங்கிற்று.

பிறை

நிலவற்று வானம்
மூளியாய் இருந்தது
வானத்துச் சந்திரனைக்
காணாத குழந்தை
யாரோ களவாடிவிட்டதாக
அப்பாவிடம் புகார் கூறியது
நிலா வளர்வதும், தேய்வதும்
அதற்கு வியப்பைத் தந்தது
விண்மீன்களை
ஆகாய ஆடையின்
துளைகளாக அது கருதியது
பறவையின் பாஷை
அதற்குப் புரிந்தது
மழையை கண் இமைக்காமல்
பார்த்து ரசித்தது
பொம்மைகளுடன் படுத்துறங்கியது
இரவுக்கனவுகள் விரியத் தொடங்கியது
சொப்பனம் என்பதை அறியாமல்
குழந்தை விளையாடிக் களித்தது
கண்விழித்ததும் தன் கூட விளையாடிய
கடவுளை தேடத் தொடங்கியது.

நீராம்பல்

அந்திநேரத்து வானம்
சூரியனை விழுங்கும்
ஆகாயத்தில் நட்சத்திரங்கள்
சிறுபுள்ளியாய்த் தெரியும்
கடல் தனது சுயரூபத்தை
மூடியே மறைக்கும்
மின்னலின் பேரொளி
கண்ணையே பறிக்கும்
இடிவந்து விழுந்து
பூமியைப் பிளக்கும்
கார்முகிலைப் பார்த்து
மயில் தோகையை விரிக்கும்
மழையின் ஸ்பரிசத்துககு
மரங்கள் ஏங்கியே தவிக்கும்
கும்மிருட்டானதை அடுத்து
பறவைகள் கூட்டுக்குத் திரும்பும்
கடலுடன் சங்கமிப்பதை எண்ணி
நதிநீர் ஓடியே களைக்கும்
காகித கப்பல்கள் கனவுகளைச்
சுமந்தபடி
கவிழ்ந்து போய் கிடக்கும்
நீரின் அளவையே நீராம்பல்
கொண்டிருக்கும்.

ப.மதியழகன்

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts