இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை


புதிய சட்டங்கள்!

வன்னி நகரில் நடந்த
வன்செயல்களின் கொடூரத்தில்…
இடம்பெயர்ந்தலைந்தேன்
தாங்காத சோகத்தில்!

போர் மேகங்கள் ஒன்றுசூழ்ந்து
பொழிந்தன அன்று
குண்டு மழைகள்..
ஈவிரக்கம் துளியுமின்றி
துண்டாடப்பட்டன
அப்பாவிகளின் தலைகள்!

தடுப்புக்காவலில்
தாளாத
சோகம் கண்டவர்கள்
இன்றும் கூட
என்ன ஆனார்களோ?

பதுங்குக் குழிக்குள்
பதுங்கியே
பாதி வாழ்க்கை முடிந்தாச்சு..
பயத்துடன் வாழ்ந்த காலம்
இப்போதுகளில் தான் முடிவாச்சு!

புருஷனையும்
புள்ளைகளையும் இழந்து
இந்த ஏழை படும் பாட்டை
யாரறிவார்…
எங்களைப் போன்றே வாழ்விழந்த
அனைவரும் தான்
இதை அறிவார்…

வேதனை வாழ்வு
வெறுத்த நிலையில்
கூடி வந்தன
மீள்குடியேற்றும் திட்டங்கள்…

சொல்லுங்கள் ஐயா!
எதுவென்றாலும்
என் குடும்பத்தை மீட்டித்தருமா
இந்த புதிய சட்டங்கள்???

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை
(poetrimza@yahoo.com)

சங்கீதமிசைக்கும் சமாதானப் புறா!

அண்ணார்ந்து பார்த்தேன்..
அழுதபடி காட்சியளித்தது
அகல விரிந்த வானம்!

தினமொன்றிலே
பலதடவை கேட்கும்
வெடிகுண்டுச் சத்தத்தால்
அன்றெல்லாம்
ஊர்க்குருவிகளும்
உல்லாசம் மறந்தபடி!

ஷெல்வீச்சைக் கேட்டே
பழகிப்போயிருந்தாலும்
எங்கள் உயிர்மூச்சு
ஸ்தம்பித்துப்போனது
உண்மை தான்!

நாலாபுறமும் நோக்கினேன்
திட்டுத்திட்டாக
இரத்தம் உறைந்து
படிந்து கிடந்தது!

முட்டிமோதின
எதிலோ என் கால்கள்!
ஓ.. துண்டாடப்பட்ட யாரோ ஓர்
அப்பாவியின்
பாதங்கள் அவை!

அகோரமான இந்தக்காட்சியை
படமெடுத்திட இயலாமல்
ஒழிந்து கொண்டது
அப்போது என் இதயம்!

உயிர்பிழைத்த
அந்த சம்பவங்கள்
தற்போது இல்லாமல்
சங்கீதமிசைக்கிறது
சமாதான வெண்புறா!!!

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை
(poetrimza@yahoo.com)

Series Navigation

author

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை

Similar Posts