ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

ப.மதியழகன்


கறுப்பு வெள்ளி
====
மதம் கொண்டு தாக்கும் அலைகள்
விண்ணுயர எழும்பும்
விஸ்வரூபம் எடுக்கும்
ராட்சசனைப் போல்
நகரையே மென்று விழுங்கும்
பிணக்குவியல்களுக்கிடையே
அலை கோரத் தாண்டவமாடும்
சீற்றம் கொண்ட அலைகள்
கட்டிடங்களைச் சின்னாபின்னப்படுத்தும்
கருணை சிறிதுமின்றி
பச்சிளம் பிஞ்சுகளை
வெள்ளத்தில் அடித்துச் செல்லும்
ஊரையே தும்சம் செய்த பின்னும்
வெறி அடங்காது
நான்கு திசைகளிலும் அலையும்
கால்களை வருடிச் செல்லும்
அலைகள் கூட்டம்
இன்று காவு வாங்கத் துடிக்கும்
மக்கள் விரும்பிச் செல்லும்
கடல் பரப்பு
இன்று தனது வேஷத்தையே
கலைக்கும்
பாதிப்புகள் தெரிய வந்தால்
உலகே கண்ணீர் வடிக்கும்.

***
பறவையின் பாஷை
***

நிர்மாலியப்படாத பூக்கள்
பூசனைக்கென்று காத்திருக்கும்
கனவில் கண்ட பேயை
கண் முன் நிறுத்துவாள பாட்டி
ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கையில்
நாய்கள் ஊளையிடும்
சாலவத்தில் உற்பத்தியாகும் கொசுக்கள்
நோய்களைப் பரப்பும்
திண்ணையுள்ள வீட்டைத்
தேடியலைவான் சந்நியாஸி
குயில் குஞ்சை கூட்டிலிருந்து
துரத்தும்
அடைகாத்த காகம்
வானம்பாடிகள் பாடி அழைக்கும்
வசந்த காலத்தை
புள்ளியாய் மறையும் வரையில்
பார்த்து ரசிக்க வைத்திடும்
படபடவென சிறகடித்துச் செல்லும்
வெண்புறாக்கள்
அக்காக் குருவி தனது துக்கத்தை
இயற்கையுடன் பகிர்ந்து கொள்ளும்
தேன் அருந்த வரும்
வண்டினத்தைக் கண்டு
கன்னம் சிவந்திடும்
தோட்டத்துப் பூக்கள்.

***

சுயம்வரம்

***
தரையில் கால் பாவாமல்
நடக்கும் யுவதி
கண் பார்வையிலேயே
நம்மைச் சுற்றி
சிறைக் கம்பிகள் முளைக்கும்
கவலை ரேகைகள்
காணாமல் போயின
நட்பு கிளைவிட்டு
வளரத் தொடங்கிய நாளிலிருந்து
பூக்களெல்லாம்
இதழ் விரித்து
அவளைப் பார்த்துச் சிரித்தன
காற்றரசன் ரதத்திலிருந்து
கீழிறங்கி அவளை
வணங்கி நின்றான்
மேகக் கூட்டங்கள்
அவள் மேனியில்
கதிர்கள் படாவண்ணம்
பரிதியை மறைத்து
நின்றன
புவியரசனின் ராஜ்யத்தில்
அவளொரு இளவரசியாக
வாழ்ந்து வந்தாள்
அவளுடைய சுயம்வரத்தில்
பங்கேற்க
நான் எந்த தேசத்தையும்
அரசாளவில்லை.

***

பிச்சை பாத்திரம்
***

கை நிறைய
சில்லறைக் காசுகள்
மெல்லிய சோகம்
இழைந்தோடும் கண்கள்
அங்கங்கே கிழிந்த
ஆடைகள்
குளித்து நாளானதால்
உடலில் கவுச்சி நாற்றம்
கத்தி கத்தி வரண்டு
போன தொண்டையிலிருந்து
கீச்சுக் குரல்
கண்ணைச் சுற்றிய கருவளையம்
உறக்கமின்மையை உணர்த்தும்
செருப்பில்லாத பாதங்களில்
வெடிப்பு
எல்லோரும் அவளை
அலட்சியப்படுத்துவதால்
யாரையும் அவள்
லட்சியம் செய்வதில்லை
வயிற்றைப் புறந்தள்ளி வாழ முடியுமா
மண்டபத்து வாயிலில்
எச்சில் இலை பொறுக்கிக் கொண்டிருந்தாள்
நூறு பேர் அமர்ந்திருக்கும்
பந்தியில்
ஒருத்திக்குக் கூடவா உணவில்லை.

***
சாத்தானின் கரங்கள்
***

சாத்தானின் கொடிய கரங்களில்
பூந்தளிர்கள் அகப்பட்டன
மனிதமற்ற மிருகத்தின் செய்கைகள்
மிகக் கொடியதாக இருந்தன
இன்னும் மலராத மொட்டுக்களை
காமுகர்கள் கசக்கி எறிந்தனர்
பால்யம் மாறாத முகங்களில்
பீதி குடிகொண்டது
கள்ளங் கபடமற்ற
வெள்ளை உள்ளத்தில்
உதிரத்தின் ரேகைகள் பதிந்தன
வேட்டையாடுதலைப் போலே
மனித உருவில் விலங்குக் கூட்டம்
விரும்பியே செய்யும் காரியமிது
பிள்ளைப் பிராயத்தில்
சித்ரவதை அனுபவிக்கும் வேதனை
அக்குழந்தையின் பால்யத்தை
பறித்துவிடும்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நிகழ்வின் சுவடு மட்டும்
வடுவாக மனதில் தங்கிவிடும்
குற்றவுணர்ச்சி சிறிதுமற்ற
ஈனப்பிறவியின் செய்கைகள்
சமுதாயத்தை முற்றிலுமாய்
சீரழித்துவிடும்
இனி என்றென்றும்
விழிப்போடு இருப்போம்
அவர்களுக்கு அன்றன்றே
தண்டணையைக் கொடுப்போம்.

(பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளுக்காக)

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts