ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

ப.மதியழகன்


சாயை

வெறுமை குடியிருக்கும்
கூடுகள்
அணுவுக்குள் ஒளிந்திருக்கும்
அண்டப்பேரண்ட ரகசியம்
கடலின் நீர்த்திவலைகளும்
கடல் தானா
அக்குரோணி படைகள்
மோதிக் கொள்வதைப் போல
வானத்தில் இடி
சோபிதத்தை
சொந்தம் கொண்டாடும்
பெண்ணினம்
பாதசாரிகள் நடக்கின்றனர்
வாகனங்கள் விரைகின்றன
இருளைக் கிழித்து ஒளியை பரப்பும்
மின்விளக்கு
குழந்தைகள் மிரளுகின்றன
பெரிய ஆகிருதி கொண்டவர்களெல்லாம்
பூச்சாண்டிகளென்று நினைத்து
பரிதி மறைந்தது
இருள் கவிந்தது
தூரத்துச் சந்திரன் ஏக்கத்தைக் கொடுத்தது
நிழலின் அளவு
ஒரே மாதிரி இருப்பதில்லை
எல்லா நேரங்களிலும்.

சாளரம்

ஜன்னல் கம்பிகள்
சிறைச்சாலையினுள்
இருப்பதைப் போன்று
தோற்றம் தருகின்றன
தென்றல் காற்று
தேடி வந்து தேகத்தில்
மோதும்
மழை வந்து
இருக்கின்றேனா என
எட்டிப் பார்க்கும்
சூரிய ஒளி
அனுமதியில்லாமல்
உள்ளே நுழையும்
தெருவில்
தள்ளுவண்டியில்
வந்து போகும்
கடலை, சுண்டல்
போன்ற தின்பண்டங்கள்
வாங்குவதற்கு
என்னை அழைக்கும்
மாலையில் கேட்கும்
குழந்தைகளின்
மழலைச் சத்தம் தான்
என்னை உயிர்ப்பிக்கும்.

குறளி வித்தை

உடுக்கை சத்தம்
காதடைக்க
உரக்க உரக்க கூவுகிறான்
காகிதங்களை
கரன்சி நோட்டுக்களாய்
மாற்றுவதாகவும்
செத்தவனை உயிர் பிழைக்க
வைப்பதாகவும்
பாம்பின் விஷத்தை
அரை நொடியில்
முறிப்பதாகவும்
சொல்லிக் கொண்டே
சட்டைப் பையின் கனத்தை
கண்களாலேயே அளக்கின்றான்
காசு போடாதவர்கள்
இரத்தம் கக்கப்போவதாய்
ஜக்கம்மா சொன்னதாய்
சொல்கின்றான்
பயந்து கொண்டு போட்டவர்கள்
பணத்தை இழந்து போனார்கள்
குறளி வித்தைக்காரனோ
கைப்பிடி திருநீற்றை
வைத்துக்கொண்டு
மாயாஜாலம் ஏதுமில்லாமல்
சில்லறைகளை குவித்துவிட்டான்
சற்றும் தாமதிக்காமல்
இன்னொரு ஊர்நோக்கி விரைகின்றான்
ஏமாறும் கூட்டம்
எல்லா ஊர்களிலும் இருக்கும்
என்றறிந்தவனாய்
உடுக்கை அடித்து
ஜக்கம்மாவை கூவி அழைத்துக் கொண்டே
தன் பயணத்தை தொடர்கின்றான்.
ப.மதியழகன்,

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts