ப மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ப மதியழகன்


விளிம்பில்

கன்று ஈனுகிறது
பசு
சித்திரை வெயில்
உடலை வாட்டுகிறது
பருவம் தப்பி
பெய்கிறது மழை
விளைநிலங்களெல்லாம்
மனைகளாகிறது
கலியுகத்தில்
கடவுள் வீதியில்
அனாதையாகத் திரிகிறார்
வானம் போதுமா என்கிறது
பூமி போதுமே என்கிறது
இது சரியில்லை என்கிறது
கடல்
முக்காலமும் உணர்ந்த ஞானி
பிச்சை கேட்கிறான்.

மெளனத்தின் காலடித்தடம்

அவர்கள்
பேசிக் கொள்வதில்லை
ஒரே வீட்டில் தான்
இருக்கிறார்கள்
சைகைகளால் கூட
வார்த்தைகளை
பரிமாறிக் கொள்வதில்லை
அந்த வீட்டின் கதவுகளுக்கு
பூட்டு இல்லை
வீடெங்கும் விலையுயர்ந்த
பொருட்கள் இருக்கின்றன
அவைகளை அவர்கள்
உபயோகிப்பதில்லை
திருடன் புகுந்துவிடுவானோ
என்ற பயமுமில்லை
தாமரை இலை தண்ணீர்
போன்றது
அவர்களுக்கும் அந்த வீட்டிற்குமான
உறவு
வாழ்வின் அநித்யத்தை
உணர்ந்து வாழும்
அந்தர ஆன்மா அவர்கள்.

தீர்ப்பு

கேட்காமலே பதில் வரும்
மனைவியிடமிருந்து
அன்பு பகிர்ந்தளிக்கப்படும்
தாயிடமிருந்து
நேசம் பரிசோதிக்கப்படும்
காதலியிடமிருந்து
பாசம் பரிமாறப்படும்
குழந்தைகளிடமிருந்து
அக்கறை விநியோகப்படும்
கடன் கொடுத்தவர்களிடமிருந்து
நலமாய் வாழ வாழ்த்து வரும்
நண்பர்களிடமிருந்து
போகும் போது வருவதும்
வரும் போது போவதும்
இருக்கும் போது இறப்பதும்
இறந்த பின்னும் இருப்பதும்
கடைசி தருணங்களில்
கபளீகரமாவது
சிங்கத்தின் வாயினிலா
இல்லை
முதலையின் விழுங்கலிலா
யாருக்கும் விதிவிலக்கில்லை
தண்டணையிலிருந்து
மரணம் பீடு நடை போடும்
இப்புவனத்தில்.

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts