கோநா கவிதைகள்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

கோநா



கோநா.

கவிதை 1.

தலைப்பு: சற்றுமுன் பெய்தமழை.

தெருவெங்கும் குழிகளை
தெளிந்த வானத்தையும்
கொஞ்சம் மேகத்தையும்
நிரப்பி
சாலையை சீர்செய்துள்ளது
சற்றுமுன் பெய்தமழை.

பாதசாரிகள்
வாகன ஓட்டிகள்
பார்த்துச் செல்லுங்கள்
பறந்து கடந்திடும்
பறவைகளை மிதித்துவிடாமல்
விமானங்களில் மோதிவிடாமல்
தவிர…
நீங்கள்
தவறிவிழுந்துவிடவும் கூடும்
தரையில்லா
பிரபஞ்சப்பெருவெளிக்குள்
பூமியைச் சுற்ற
இன்னொரு நிலவாய்.

கவிதை.2

தலைப்பு; சிலதேநீர்த் துளிகளும் பல சூரியன்களும்

கைதவறி
விழுந்து
த ய றிது சி
உண்மையுடன்
கண்ணாடி டம்ளர்.

ஒளியில் மின்னிய
ஒவ்வொரு சில்லிலும்
இன்னும்
ஒட்டியிருக்கிறது
எனக்கான
சில தேநீர்துளிகளும்
பல சூரியன்களும்.

கவிதை.3

தலைப்பு; கடவுள் பைத்தியம்

சுருண்டு படுத்து
கடிக்கும் கொசுக்களுடன்,
அடிக்கும் குளிர்மழையுடன்
போராடி
உறங்க முயன்று…
பின்னிரவில் கண்ணசந்தவனை
தட்டியெழுப்பிப் போகிறது
ரோந்து வாகன சைரன் ஒலி.

துணி மூட்டையில்
தலைவைத்துப் படுத்திருந்த
வீதியோரத்து பைத்தியம்
காறிக் காறி
வானத்துள் துப்புகிறான்
தூக்கங்கெட்டு.

நரகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு
வேர்த்துக் களைத்து
சொர்க்கத்துள் நுழைந்த கடவுள்
கைக்குட்டை தேடுகிறான்
முகந்துடைக்க.

கவிதை.4

தலைப்பு; அலகு முளைத்த அல்லிகள்

பருவ நீர்க் குளத்துள்
பட்டுப்போன மரத்தின் கிளைகள்,
அடர்த்தியாய் பூத்திருக்கின்றன
அலகு முளைத்த அல்லிகள்
நிலாக் கண்களில் மலர்ந்திடும்
பறிக்க நினைத்தால் பறந்திடும்.

கவிதை.5

தலைப்பு: எ(அ)து.

உருவான(அ)து
சேர்ந்த(அ)து
வளர்ந்த(அ)து
மகிழ்ந்த(அ)து
இருந்த(அ)து
அறிந்த(அ)து
பெருகிய(அ)து
ம௫கிய(அ)து
உ௫கிய(அ)து
பிரிந்த(அ)து
கரைந்த(அ)து
குறைந்த(அ)து
மறைந்த(அ)து
அருவான(அ)து
பொதுவான(அ)து.

Series Navigation

author

கோநா

கோநா

Similar Posts