தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


தீட்டு
**************

பாத்ரூம் போனால்
காவலாய் சத்தகம்..
படுக்கை பக்கம்
தடுப்பாய் உலக்கை.

தலைக்குக் குளித்தாலும்
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு., தனி டம்ளர்..

தனி நாடு கேட்காத
எனக்கு தனியிடம்..
துண்டு நிலம்..
தோல் தலையணை..

கிணறு வற்றிவிடும்.,
செடி பட்டுவிடும்..
ஊறுகாய் கெட்டுவிடும்.

கருப்பை சூல் சுமக்க
மகரந்தம் பக்குவமாக்கும்
பருவத்தின் சுழற்சி இது,..

சாமி படைத்த என்னை
மறைக்க சாமிக்கு
ஏன் திரைச்சீலை..

பின் குழந்தைகளோடு
இருக்கும் கடவுளர்கள் மட்டும்
எப்படி தீட்டுக்களற்று..

——————–
மழை…
****************

* பெயிண்ட் அடிப்பவனைப் போல
ஈரவண்ணம் அடித்துக்
கொண்டிருந்தது மழை….

* மதியம் புகுந்து
மஞ்சள் வண்ணமடித்துக்
கொண்டிருந்தது வெய்யில்..

* இரண்டும் கோர்த்து
பாலமாக்கி ஏழுவர்ணம் அடித்துக்
கொண்டிருந்தது வானம்…

********************************************

மழை தொல்லை தாங்கலை
புலம்பிக் கொண்டிருந்தார்கள் இளைஞர்கள்..
மெசெஜ் மழை பொழியும் காதலி பார்த்து..

************************************************

குடையோடு நடந்து
கொண்டிருந்தார்கள் மனிதர்கள்..
மழையும் நடந்து
கொண்டிருந்தது அவர்களோடு..

***********************************************

பால்கனியிலிருந்து சிதறிய
அவள் கூந்தல் ரோஜாக்கள்
மழை நதியில் பாய்மரக் கப்பலாய்
மிதந்து வந்து கொண்டிருந்தது
என் வீடு நோக்கி..

———————————————————————-
கல்யாணமுருங்கை:-
***********************************

கோலமாவில் தோய்ந்த முஷ்டிகளால்
உன் பாதங்கள் வரைகிறேன்…

சீடைகள் செய்யத் தெரியாததால்
வெண்ணை கடைந்து வைத்திருக்கிறேன்..
நீ பிடிப்பிடியாய் உண்ணும் அவலும் கூட..

விஷம் கக்கும் பூதனை., காளிங்கன்
இல்லை இங்கு..
அன்பைக் கக்கும் நான் மட்டுமே..

வருடம் ஒரு முறை
வருகிறாய் வீட்டுக்குள்..
என் வயிற்றில் ஒருமுறையாவது வாயேன்..

உறைபனியிலிருந்து
குழாய் வழிப் பயணத்திலோ…
தொட்டிலில் இருந்து தத்தாகவோ…

————————————————————————–
நசிகேதன் அக்னி..:-
************************

முன்னையிட்டதும்.,
பின்னையிட்டதும்.,
அன்னையிட்டதும்.,
என்னையிட்டதும்…

மண்ணில் பிறந்ததும்.,
மண்ணை பேர்த்ததும்..
தீக்குள் நுழைந்ததும்..
மண்ணில் புதைந்ததும்..

எந்தன் செயலல்ல..
மந்தன் செயலதோ..
சந்தேகங்களை
தேகம் சுமப்பதோ..

மண்ணை ஆளவும்.,
விண்ணை ஆளவும்
அஸ்வமேத யாகப்
பெண் பொம்மை போதுமே..

உந்தன் யாகத் தீ..
என்னை ஆ(க்)குதீ…
நீ நிறை சொர்க்கம் ஏக
நான் நசிகேதன் அக்னி..

Series Navigation

author

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts