கொசு

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்மசக்கையில்தான்
ரத்தம் தேடும் கொசுக்கள்
தனக்காக அல்ல
தன் முட்டைகளுக்கு
ஊட்டம் சேர்க்க

தாய்மையின் தவிப்பே
கொசுக்களின் கடிப்பு

ஆண் கொசுக்கள்
கடிப்பதில்லை

முட்டை விளைச்சலே
கொசுவின் வேலை
மற்றபடி
குலம் வளர்ப்பதோ
குளத்தின் வேலை

கொசுவை வாழ்த்த இதோ
ஒரு வாழ்த்துச் செய்தி

‘ஐயாயிரம் பெற்று
ஆறு மாதம் வாழுங்கள்’

கொசுக்களிலும் உண்டு
மூவாயிரம் ஜாதிகள்- ஆனாலும்
ஜாதிச் சண்டை
கொசுக்களில் இல்லை

கொசுக்களின் ஆயுதங்கள்
மலேரியா
மஞ்சள் காய்ச்சல்
சிக்குன் குனியா
டெங்கி – ஆனாலும்
சகோதரக் கொசுவைக்
கொல்லாது கொசு

கொசுக்களில்
மலடுகள் இல்லை
மரிக்கும் நோய்களில்லை

கொசுக்கள் இல்லையெனில்
கோடிப் பேருக்கு வேலையில்லை

கொசுக்களின் ஆண்டுச் சாதனை
படுக்கையில் ஏழு மில்லியன்
பாடையில் இரண்டு மில்லியன்

நோபல் வெல்ல
குவளயம் புரட்ட வேண்டாம்
ஒரு கொசுவைப்
புரட்டுங்கள் போதும்

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation

author

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts