தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


விட்டுப் போனவை:-
******************************

ஒரு கோப்பைக்குள் பாதரசமாய்
ஏந்தி இருந்தாய் உன் கனவை..
காலம் தீர்ந்த அவகாசத்தில்
கையளித்துச் சென்றாய் என்னிடம்..

குழியாடிக் குவியாடிக்
கண்களாடிக் கலந்தேன்…
நகரும் வெள்ளிக் கண்ணாடியில்..

அதிகமசைந்து
தங்கம் துளைந்தாடியது அது..

இன்ப அதிர்ச்சியோ என்னவோ..
கை தவறிப் போட்டுடைத்தேன்..
குன்றிமணிகளாய்த் தரையில் சிதறி..

அமில ஓட்டைகள்
கத்தரித்திருந்த
சோதனைச்சாலை அங்கியோடு.,
தவழ்ந்தேன் தரை முழுதும்..
ஒன்று சேர்த்துக் கோர்த்துவிடலாமென..

வெறுப்பு..:-
******************
கொலைக்கத்திகளும்
கொம்பின் முனைகளும்
முத்தமிடும் உலகில்
தாவரமாகவோ
காய்கறியாகவோ வாழ்வது..

கத்திரிக்கோல்களால்
நறுக்கப்படவே தினம்
செய்வதறியாது சிரிக்கும்
செந்நிற ரோஜாவாய் பூத்திருப்பது..

வீட்டின் மேல் பழையதும்
வேண்டாததும் போட்டு
அடைக்கும் பரணாயும்.,
ட்ரங்குப் பெட்டியாயும் இருப்பது..

காலடி எடுத்து
வாசலில் வைத்தாலே
திருவிழாவோ., தெப்பமோ,
தேரோ., உலாவோ செல்லும்
அம்மனாய்த் தோன்றுவது..

பூப்பல்லக்குகளும்., வாகனங்களும்.,
கோமடங்களும்., செங்காவியும் சூழ.,
வணக்கத்திற்குரிய சிலையாய்
சிறையுண்டிருப்பது..

===
கனவு..:-
*************

ஓவிய வகுப்பில்
ஓயாமல் பென்சில் திருகி
முனை ஒடித்துக்
குட்டு வாங்கிய
குழந்தையின் இரவில்….
சாபமிட்டு விரலமுறிக்கும்
கொடுந்தேவதைகள்
முளைத்துக் கிடந்தார்கள்
கனவெங்கும்..

Series Navigation

author

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts