தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


அன்ன பட்சி:-
**********************

பேசத்துவங்குமுன்னே
முடிவுக்கு வந்து விடுகின்றன..
நம் உரையாடல்கள்..

கடலில் மூழ்கிய கப்பல்களாய்
ஒரு கனவுக்குள் ஆழ்கிறது..
உன் கண்கள்..

அவ்வப்போது கலங்கரை
விளக்காய் என் கண்
தேடியலைந்து..

புன்னகைக் கையெழுத்தோடு
பூங்கொத்தாய் என்னைத்தர..
பூக்கும் இதழ் கிள்ளும்
பிள்ளை விளையாட்டில் நீ…

மொக்காய் இருந்த
வார்த்தைப் பூக்கள்..
நாம் பேசியபின்
போதவிழத் தொடங்கி
பூக்காட்டுக்குள் நாம்..

இழுத்துச் செருகின
திரைச்சீலையாய்..
இறுகிக் கிடந்த இமைகள்
உன் வருகைக் காற்றில் படபடத்து..

வெட்கத்தில் தாழத் தொங்குகின்றன
திரைகளைப் போல இமைகள்
திரும்ப அடங்கி..

என்னன்னவோ எழுதினேன்
உன்னைச் சந்திக்குமுன்..
பின் உன்னை மட்டும் எழுதினேன்..
உன் அல்லதையும் நல்லதாக்கி
அருந்தும் அன்னபட்சி நான்..


ப்ரக்ஞை:-
****************

இருப்புத் துருவும்
எண்ணங்களூடே
பயணத்தில்…
இருப்பற்றுக் கிடப்பது ..
எதாகவாவது..

யாதுமாய்., அற்றதாய்.,
செவிப்பறையில்
சத்தமற்ற சத்தம்..
கண்ணுள் ஒளியற்ற ஒளி..
நாசியும்., நாவும்., மெய்யுமாய்
வெளியற்ற வெளி…

யானெதற்கு..
இறையெதற்கு.,
இருப்பதெற்கு.,
உணவெதற்கு..
சலிப்புற்றுக் கவிழ்தலில்
சகலமும் நின்று…
ஞானமுற்றதாய் ..
ப்ரம்மையில்..

ப்ரக்ஞையற்ற
நிகழ்வெளியில்..
வெளி., உள்ளில் துழாவி..
எல்லையற்ற அதாகி.
ஆவியடங்கி
அதை சேரத்துடிக்கும்
அதற்ற அதுவாகி..

உயிர்க்க உண்ணும் யானாகி
உயிர்த்து உறையும் நானாகி
பிழையுற்றுக் குறையுற்றுக்
கிடக்கும் ப்ரக்ஞை..

Series Navigation

author

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts