தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


தாம்பத்யம்
==============
என்றுமே புரிந்துகொள்ளாத தன்மைக்கு
என்ன பெயரிடாலென்ன..?

வருடங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல..
வருடல்கள் மட்டுமேயும்..

வாழ்க்கைக்குள்ளும் ஒரு நெகிழ்வு.,
ஒரு புரிவு., பரிவு..

எனக்கான பிரபஞ்சத்தில் நானும்..
உனக்கான பிரபஞ்சத்தில் நீயும்..

அவ்வப்போது விண்கற்களாய்
தவறாய் முட்டிக்கொண்டு..
தவறாமல் மோதிக்கொண்டும்.

அவரவர் இலக்கில் அநாமதேயமாய்..
எரிந்து எங்கோ வீழும் வால் நட்சத்திரங்களாய்..

பால் வீதியின் சிதறல்களில்தான் இருக்கிறோம்..
நான் மட்டும் உன் நினைப்பில் சிறுகோளாய்…
உன்னை மட்டுமே சுற்றி..

இருக்கட்டும் எல்லாம்.. .,
அவரவர் ஹீலியப் பந்து எரியும்வரை..
முழுமையும் வெண்சாம்பலாய் மாறும்வரை,,

கிரகணங்களும் அமாவாசைகளும்
நம் உயிர்ப்பையும் இருப்பையும் உணர்த்த.,
எப்போதோ பௌர்ணமிகளும் ப்ரகாசமாய்..

கடல் அடையும் விளையாட்டு..:-
==============================

அலங்காரத்தோடும் .,
பாதுகாப்போடும்
கடலில் கரையப் போகும்
பிள்ளையார் படம் போட்ட
தாளில் மடிக்கப் பட்டது ,
கணவன் அடித்துத்
தண்டு உடைந்த தோடு..

வீடெங்கும் இறைந்து
கிடந்தன வார்த்தைகள் .,
வலித்த தோளோடும்
துடைத்தும் தீராமல்..

வேங்கையின் உறுமலாய்
காற்றும் சுட்டுக் கிடந்தது
பல மணி நேரம்..வீடே
அனல் கோப்பையாய்..

துணிகள் ., பாத்திரங்கள்
குப்பைகள் போல் சோர்ந்து
சுவற்றோரம் முடங்கி..

ஒவ்வொரு வருடமும்
களிமண்ணில் உருவாகி
குடையோடு வீடு வந்து
அருள் பாலித்து
கடல் அடையும் விளையாட்டில்
விநாயகரும் வாழ்வும்..


தேன்சிறகு முத்தம்
———————————
தாலாட்டுன் ரயில்
தாய் போலெனக்கு..

ஆடுகளும்., பாசி ஊசிகளும்
அசை போட்டு நடந்தபடி..

கிரானைட் பெஞ்சுகளில்
சாய்ந்து அமர்ந்திருந்தோம்.
அணைத்துக் குலவியபடி..

போவோர் வருவோரெல்லாம்
புகை பொங்கப்பார்த்தபடி..

ஒரு முத்தம் கொடுடா என்றேன்.
என் குழல் கற்றையை
விரலால் சுழற்றினாய்..

தோடை., காதை தடவினாய்..
கன்னத்தோடு கன்னமிழைத்தாய்..
காது கேட்காதது போல்..

தடதடத்து வந்தது ரயில்…
என் கோபம் போல்…

ஒழுங்கய் சாப்பிடு.,
சமர்த்தாய்த் தூங்கு
இந்தா என் கைக்குட்டை ..

இம் என்று வாங்கினாய்…
முத்திரை இடாத தபாலாய்
தளதளப்பாய் ஒரு வாரம் ஆகும் என்றேன் ,,

இம் என்றாய்
பொய்க்கோபம் மிக
போயமர்ந்தேன்..
உன் முகம் ஏக்கமாய்ப் பார்த்து..

இதழ்களில் பிஞ்சுக் கரம் பதித்து
பறக்கும் முத்தம் பரிசளித்தாய்..
பட்டாம் பூச்சியாய் அது
கன்னம் அப்பியது..
தேன் சிறகுகளோடு..

உன் அப்பா கையிலிருந்து..
இன்னும் இன்னும் அள்ளியிறைத்தாய் ..
அட படவா முன்பே கொடுப்பதற்கென்ன.

நிகழவே இல்லை நம் சந்திப்பு
————————————————–
நான் உன் பின்னே வர
நீ எதன் பின்னோ விரைய.
குதிரை முன் கட்டிய கொள்ளுப்பை..

பாம்புகளும் பூரான்களும்
அடைசலாய் நெளியும்
கெட்ட கனவொன்றில் முழித்து..

வேர்வைச் சுரப்பிகள்
அமிலக் கண்ணீராய் அரிக்க
இன்மையின் திரையில்…

பூக்கள் இருப்பதாய்
உணர்ந்த இடத்தில் ..
தொட்டுப் பார்க்க
உறுத்திய முட்களும் இல்லை..

பூநாகமும் திருநீற்றுப் பச்சையும்
மணத்துக் கிடக்க.. நிலவைப்
பலமுறை பின்னுருட்டினேன்..

உராய்ந்த தடமறியா
வலியுணராமல் பின்னோக்கி
பாதச் சுவடுகள் தேயத்தேய..

கொடுத்ததெல்லாம் திருப்பி
நேர்த்திக் கடனை நேர் செய்தேன்..
சந்தனமும் மிளகாயும் அரைத்துப் பூசி..

குழப்பம் இல்லா
குழந்தைச் செடியாய்
மொக்குகள் சுமந்தேன்..

பூக்கள் மணக்கும் நாளில்
நானும் நீயும் சந்திக்கவேயில்லை..
இனி சந்திக்கப் போவதுமில்லை..

Series Navigation

author

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts