வேத வனம் விருட்சம் 89 –

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

எஸ்ஸார்சி


மகன் தந்தையை அறிகிறான்
தாயை அறிகிறான்
வளர்ந்து செல்வனாகிறான்
வானை விண்ணகத்தைச் சொர்க்கத்தைச்
சேர்ந்துமுடிகிறான்
முடிவில்லா வானம்
முடிவில்லா விண்ணகம்
முடிவில்லாத் தாய்
முடிவில்லாத் தந்தை
முடிவில்லா மகன்
முடிவில்லா விசுவதேவர்
முடிவில்லா ஐந்தின மக்கள்
முடிவில்லா ஒன்றின் இருப்பு
முடிவில்லா ஒன்றின் வருகை
புவியே நீ பிளந்துகொள்
மேகத்தைப்பிள
தாத்ருவே விண்ணக நீர் இருப்பை
அவிழ்த்துவிடு
வெப்பமோ தட்பமோ
புவியை பார்ப்பதில்லை
புவி பிளந்து நீர் நெய்யாய்ப்பாய்க
சோமன் வசிப்பிடம்
மங்களத்தின் இருப்பிடம்
பிரஜாபதி சனனகாரகன்
தாத்ரு எமக்கு நன்மை தருவோன்
ஒர் யோனிக்காரர்களிருவரும்
மனம் அறிவு ஒத்தவர்கள்
நிறைந்தோர் நிறைவளிக்கட்டும்
அநுமதி தேவதையே
அவியைப்பெறு
மங்களம் தா
நல்ல தலைவி நீ
நன்மையின் இருப்பிடம்
நிற்பதும் நடப்பதும் அநுமதி நின்னால்
கெட்ட கனவு கெட்ட வாழ்வு
கேடு கெடுமதியோன்
வீரமிலி பெயர் கெட்டோன்
கேடே எப்போதும் பேசுவோன் தூரமாகுக
மும்முறை பாதம் எடுத்து வைத்தோன்
விஷ்ணு கானக மிருகமென வீரமுடையோன்
அவன் இவண் வருக
அவன் பாதத்தில்
அனைத்தும் அடங்குகின்றன
மும்முறை அளந்தோனின்
பாத தூளியில் அனைத்தும் தஞ்சம்
இந்திரனின் நண்பன்
பலதுகள் நிரம்பிய கரத்தோன்
அளிக்கவே இவை அனைத்தும்
அக்கினியே பிறந்துள்ள எதிரிகளை
பிறக்கா எதிரிகளை
போர் செய்ய விரும்புவோரை
என் காலின் கீழாக்கு
மனைவியே எனக்கே ஆகுக நீ
மநு தந்த ஆடையால்
உன்னைப்பிணைக்கிறேன்
என்னோடிருந்திடுவாய்
பிற பெண்டிர்ப் பேச்சு வேண்டாம்
மனிதர்நோக்கும் வானக் கருடன்
ஆயிரங்கால்களும் நூறு வயதும் தருவோன்
சென்ற பொருள் மீண்டும் அளிக்கட்டும்
பிதுருக்களின் சுவதாவாகி நிறைபவன்
ரிக்கொடு சாமத்தை வலிமைக்கும்
யஜுசை சக்திக்கும்
நாடுகிறோம் யாம்
சசிபதி இந்திரன் துன்பஞ்செய்யாமலிருக்கட்டும்
வீரியன் கரும்பாம்பு கங்கபருவணன்
கக்கும் விடத்தை இவ்வவுடதம் நீக்குக
தேனில் பிறந்து தேன் சொட்டித் தேனாய்
இனிக்கும் செடி இது
பாம்பை எறும்புகள் புசிக்கின்றன
மயில்கள் பாம்பைத்துண்டமாக்கிப்பொறுக்குகின்றன
யாம் சபித்து எம்மைச் சபிப்போன்
யாம் சபிக்காமலே எம்மைச்சபிப்போன்
இடிபட்ட மரம் போலே வேர்வரை கருகியொழிக
வீடுகள் சுகம் தருவன
பால் பலம் தருவது
நல் மனம் படைத்தோர் வீடு வருக
ஆ வும் ஆடுகளும் வருக
வருகைபுரிந்தோர் இவண்
உனவும் அமிர்தமும் கொண்டு பசியாறுங்கள்
தவத்தால் தவம் வளர்கின்றது
அறிவொடு ஆயுளும் தாரும் எமக்கு
காற்று சுகம் தருக
கதிரோன் சுகம் தருக
இரவு சுகம் தருக
உஷை சுகம் தருக
அமாவாசையே விசுவரூபங்களை
நீயே பிறப்பிக்கிறாய்
அவியால் யாம் அமாவாசையை உபாசிப்போம்
அவள் பால் தருக
பூர்ணிமை முன்னும் பின்னும் பூரணமாகியவள்
வேள்விக்கும்உரியள் அவள்
விருத்திக்குங்கு அவளே மூலம்
சூரிய சந்திரர் கடல் சுற்றிவரும்
இ,ரு குழந்தைகள்
விசாலமாய் நோட்டமிடுவோன் சூரியன்
ருதுக்கள் தருவோன் சந்திரன்
வருணன் பந்தம் நீக்குவோன்
முடிவில்லாமை முன்னே நிற்கும் எம்மை
பிழையினின்று காப்போன்
அக்கினி அவன்
நிறை ஆயுள் தரட்டும்
நீர் எமது இழுக்கு அழுக்கு அசத்தியம் நீக்கிடுக
சமிதையே வளம் தருக
தாசர் பலம் மடிக
அவர் செல்வங்கள் நமக்கேயாகட்டும்
அவர் ஆண்மை அகல்க
மர்ம உறுப்பைத் துணித்துத்துண்டமாக்கிப்
பெண் முன்னே தாசனை முடமாக்குவோம். ( அதர்வ வேதம் கான்டம் 7)
புருடனே உயர்ந்து செல்
கரும்புள்ளியுடை எமனின் நாய்
நின்னை ப்பற்றவேண்டாம்
புவி சூரியன் சந்திரன்
அறிவோன் அறிவிப்போன்
உறக்கமில்லாதோன்
காப்போன் கண்காணிப்போன்
நினக்குப்பாதுகாவலர்களாகட்டும்
நீ பருகும் பாலும் புசிக்கும் தானியமும்
நஞ்சு நீக்கப்படுக
மரணமே இருகால் விலங்கு நான்கு விலங்குகளின்
கடவுளாய் அமைகிறான்
அஞ்சற்க நீ மரணமடைய மாட்டாய்
அக்கினியே நின் நாவால்
அரக்கர்களை அழி
செம்பசுவின் பாலை அரக்கர்கள் கொள்வதேது
அக்கினியே அவர்தம்
மர்ம பாகங்கள் சேதமுறுக
மெய்யைப்பொய்யை அறிவான் அறிஞன்
சோமன் பொய்யை அழிக்கிறான்
என்னைக்கவலைத் தின்னவைப்போன்
சுகம் சூன்யமாகுக
இந்திரனே ஆந்தைபோல் ஆனைபோல்
நாய்போல் குயில்போல் கருடன்போல்
கழுகுபோல் அரக்கர்களை
மட்பாண்டங்களாய் அடித்து நொறுக்கு
தாயத்து அணிதல் வீரனிற்கானது
சுமங்களம் அருள்வது
தீச்செயல்கள் உடன் தூரம்போகின்றன
ஆங்கிரசர் அசுரர் செய்தது
யாமே எமக்குச்செய்துகொண்டது
என அடுக்கி வரும் தீவினைகள் தொண்ணூறு
நதிகள் தாண்டி ச்செல்கின்றன
எதிரிகளின் சேனைகள் ஆயிரமாய் அழிக
கோட்டைதகர்க்கும் இந்திரன்
கலங்கிடச்செய்க எதிரிகளை
அனலும் புனலும் கண்டோடுக பகைவர்கள்
வானம் வலை திசை த்தூண்களாகித்
தசுயுக்களின் சேனை சேதமுறுக
புவியும் விண்ணும் கோஷிக்கட்டும்
அறிஞரும் ஆதாரமும் அவர்கள் அறியாதொழிக
வருடம் ஒடும்தேர்
நிறை வருடம் தேரோட்டியின் ஆசனம்
விராடன் தூண்
முன் நிற்போன் அக்கினி
இந்திரன் தேர்ப் போராளி
சந்திரனே தேர்ப்பாகன்
வெல்க வெற்றிமட்டுமேயிங்கு
முற்றாய் வெற்றி மட்டுமேயாகுக
அந்த இருவர் யார்
விராடனே சொல்
எம்மூன்றும் பெரியவை
எவற்றின் நான்காவதால் மொழி அறியப்படுகிறதோ
சேரும் அதனை சேர்க்குமதனை
அறிஞனான பிராமணன் தவங்கொண்டு அறிவான்
விராடனின் முதற்சேர்க்கை அவள்
அவளே எல்லாமாகிறாள்
சந்த இறகுடைய உஷைகளிருவர்
மூலம் நோக்கிச்செல்லும் சூரிய மனைவிகள்
மூன்று தாபங்கள் எழுகின்றன
பிறப்பு வலிமையோடிருத்தல் நாடாளுமை
அக்கினி யொடு சோமனை அவள் கொண்டுவர
முனிகள் சொர்க்கம் தந்தார்கள்
ஐந்து பசுக்கள் ஐந்து ருதுக்களாகின
ஐந்து உஷைகள் என பதினைந்தால் ஒழுங்காகின
ஐந்து திசைகள்
பஞ்ச பூதத்தொடு சூக்குமமும் சேர்ந்து
ஆறு ஆறு ஆனது
தண் மாதமாறு வெட்ப மாதமாறு
வேள்வி ஏழு சமிது ஏழு இனிமை ஏழு
ருதுக்கள் ஏழு நெய் ஏழு
முன் சொன்ன ஆறொடு மனம் புத்தி சேர
எண் பொருள்கள் புலனாகும்
ரித்விக்குகள் ஏழு
பசு முனி ஆதாரம் ஆசி யட்சன் ருது
இவை எல்லாமே ஒன்று ஒவ்வொன்று
வீட்டு அனலில் விராஜை இப்படியாய்
அறிபவன் இல்ல வேள்வி செய்வோன்
கீழ்த்திசை அனலில் விராஜை
அறிவோன் தேவர்க்குப்பிரியமானவன்
தென் திசை அனலில் அவள்
அறிவோன் வேள்வி அருகன்
அவை நடுவே வந்தாள் விராஜை
அறிந்தோன் அவை நிரம்பிக்கூடும்
பேச்சரங்கமிடை விராஜை வந்தாள்
அறிந்தோன் பேச்சாளியானான்
ஆய்வுக்கூடம் எழுந்தாள் விராஜை
அறிந்தோன் ஆய்வு நிறைஞனான்
வானம் நான்கானாள்
தேவர் மனிதர் அழைத்தனர் அவளை
உறுதி உணவு மொழி உற்சாகம் அவளே
வருக அவள் இவண்
அவள் விராஜை
அவளின் கன்று இந்திரன்
காயத்ரீ யே கன்று கட்டும் கயிறு
விராஜையின் முலைக்காம்பிரெண்டு
ரதந்திரா- பிருஹத்
யக்ஞ யக்ஞயா- வாமதேவ்யா
என்பவவையவை
முன்னது செடிகொடி தர
பின்னது தண்ணீர் தந்தது
வனம் வந்தாள் விராஜை
வனசுபதிகள் அவளைக்கொல்ல
மீண்டும் மீண்டும் ஆண்டுக்கொருமுறை
வளரலானாள்
பிதுரு உலகம் போன
அவள் கொல்லப்படவே
மாதமொறுமுறை தோற்றமானாள்
ஆகவே மாத அளிப்பு பிதிரர்க்கு
தேவர் உலகம் சென்ற அவளங்கும் கொல்லப்படவே
அரை மாதஞ்சென்று மீண்டுந் தோன்றினாள்
ஆகத்தான் வஷடு தருவது பட்சம் ஒர் முறை
மானுடர் இல்லம் வந்தாள்
மனிதர்கள் அவளைக்கொன்றார்கள்
மறுபடியும் அவள் தோன்றினாள்
ஆக மனிதர்கள் இரு தினங்கள் அளிக்கிறார்கள்
விராஜை அசுரர் இல்லம் சென்றாள்
அங்கு தான் வரவேற்றார்கள் அவளை
மாயா வலிமையை அவர்கள் கிரகித்துக்கொன்டார்கள்
பிதுர் உலகு சென்றாள் அவள்
பிதுருக்கள் சுவதாவை ஏற்றுக்கொண்டார்கள்
மனிதர்களிடம் விராஜை வந்தாள்
உழவும் தானியமும் மநு மகனுக்குக்கிடைத்தது
ஏழு ரிஷிகள் பிரம்மமும் தவமும் பெற்றார்கள்
தேவர்கள் வலிமை யுற்றனர்
கந்தர்வர்கள் அப்சரசுகள்
புண்ணிய வாசனை பெற்றார்கள்
குபேரன் மகன் ரஜத நாபி
மறைத்தல் கற்றுக்கொண்டான்
சருப்பங்கள்தாம் நஞ்சை வாங்கிக்கொண்டன ( அதர்வ வேதம் காண்டம் 8)
—————————————–

Series Navigation

author

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

Similar Posts