வேத வனம் -விருட்சம் 80

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

எஸ்ஸார்சி


சோமன் மலை வாசி

அறிஞன் கவி

ரசம் பெற்ற பிள்ளை அவனே மது

இன்பம் தருவோனுக்குச்

சோமகானஞ்செய்வோம்

சோமனுக்கு படையலிடுவோம்

சோமனை சிசுவெனக் கொண்டாடுவோம்

சோமன் செல்வம் கொணர் தாரை

இன்பம் தரு அருவி

மனக்கடலில் சோமன் நிலைக்கட்டும்

சாதகப்பறவை காண்போர் ஏரியிடம் வருக

துரிதமாய் வருவோனுக்கு

காற்றுபோல் வேகமும்

அறிவுமுடை வீரமகன்

கதிரவனால். பரிசாகிறான்

மரம் கனிந்த கனிகள் ஆயிரம்

கொணர்வதுபோலே

பகை கெல்வான் சோமன்

தோள் வலிமையும்

குதிரைப்படை வலிமையும்

அருள்க சோமன் எமக்கு

பகைவர்கள் நித்திரையில் வீழ்க

மதியில்லாதோர் நட்பொன்றில்லார்

பகைக்கவும் அருகதையிலி

திரும்பட்டுமிவர் போர்க்களம் விட்டு ( சாமவேதம் 110)

மகாவிரதன் மெய்யொளியன்

உறவு போற்றி

பாவம் நீக்கிப்

பாதம் முன்செல கோஷித்துக்

காட்டுப்பன்றியென முன்னேறுகிறான்

மேதாவிகள் அன்னமென

பின்னே நடந்து

வேள்விக்குண்டம் சேர்கின்றனர்

நண்பர்கள் வேணுகானம் இசைக்கின்றனர்

சோமன் இசை-எதிரொலிகள்

கூட்டி க்கலப்போன் ஒய்விலி

அந்நியர் அவன் திறமறியார்

இரவில் அரி

பகலில் ஒளி

எம் நடுவே சோமன்

சோம சோதியை கொண்டுவருவோர்

வேள்வியின் பாதை தெரிந்தோர்

முனிவர் தம் இருதயம் அமர்

ஒளியின் பதத்தைக்

கதிரோன் தன் கண்ணால்

திசைகளெனக்காண்கிறான் ( சா.வே.112)

சொர்க்க த்தலைவன்

பூமியின் தூதன்

சத்திய காரணன்

கவிஞன் மா ராசன்

மக்களின் விருந்து

எங்களுக்குப் புகலிடமான

எங்குமுறை அக்கினியைத்

தேவர்கள் சிருட்டிக்கிறார்கள்

விந்தை ஒளியோனே இந்திரனே

புனிதச்சோமங்கள்

உன்னையே நாடுகின்றன

பிரம்மம் அறிந்தோரைச்சேர்க

நீ இந்திரனே

தன் நாக்கினால் எவன் காடு

கருப்பாக்குகிறோனோ

அவனைத்துதிச்செய்வீர்

மித்திரா வருணர்களே

இந்திரனும் அக்கினியும்

எம்மிடம் வர வேகக்குதிரை அருள்க

வலிமையும் வெற்றியும் தருக ( சா. வே.114)

இளம் பெண்களிடை யுவன் போலே

சோமன் கலசம் ஏறுகிறான்

கானம் கூடி இசைக்கிறது

மடி நிறைந்த பசுக்கள் காத்துக்கிடக்கின்றன

வேள்விக்கூடம் நான்கு பக்கமும் மறைக்கப்பட்டு

தீராத விளையாட்டுப்பிள்ளை அந்த

அரியை வணங்கி நிற்கிறார்கள்

தீச்செயல்கள் இந்திரனை

நெருங்கவிடாதன

ஒயாச்செயலி வளர்வோன் இந்திரன்

தீயோர் அணுக முடியாதோன் ( சா.வே.115)

மேதாவியாய் வசீகரிமுடைச் சிசுவை

மருத்துக்கள் பிறப்பின் சமயமே

சுபமாக்குகிறார்கள்

கவி காவ்யத்தால்

முனி ஞானத்தால்

சோமன் இசைத்துக்கொண்டு

புனித கதி சேர்கின்றனர் ( சா.வே. 118)

பசுவின் கன்றுபோலே

இந்திரனை க்கூவிக்கூவி

முனிகள் விளிக்கின்றனர்

அறிவு தரும் ஆனந்தம் இதுவெனச்சுட்டும்

சோமம் வேத கோஷத்தில் திளைத்து

கடலில் நீண்டு நிலைக்கிறது

கடலின் உச்சத்து இன்பமளிக்கும்

சோம இருப்பை

இந்து வந்தனம் செய்கிறான் ( சா.வே 120)

மனித ஆயுள் கூட்டும்

சாதனமாய்ச் சோம ரசம் பெருகுக

இந்துவே நீ

கீர்த்திக்கு இணையாய் தனம் தருவோன்

பகைவரைக்கொன்று

தேவ எதிரியை முடித்து

அறிவொடு ஆனந்தம் காண்போன் நீ

தேவர்க்கு ஒளியும்

வானம் பூமி மக்கட்கு

மங்கலமும் வழங்கி வளர்க

அமுதனே சத்தியத்தின்

விதவித தருமத்தில் வளர்

விண் விளைவத்தனையும்

தரிக்கும் எம் மாச்சோமனே )

எல்லோரும் விரும்பும்

வலிமைஅருள்

ஈர்ப்பொளியுடை

ஆயிரம் பேருக்கு அன்னம் பாலித்திடச்

அருள்க செல்வம் ( சா. வே. 125)

Series Navigation

author

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

Similar Posts