மதியழகன் சுப்பையா கவிதைகள்

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

மதியழகன் சுப்பையாஓயாது

கதவுகளை சாத்திவிட்டுப் போகிறது
இரவின் அமைதி
எஞ்சிய வெளிச்சங்களையெல்லாம் விழுங்கி
எங்கும் நிறைகிறது கனத்த இருள்
தளர்ந்து படுக்கையில் சாய
படர்கிறது தனிமைப் போர்வை
கனவுத் திரையில் கடந்தகால காட்சியோட்டம்
கதவு தட்டும் ஓசையும் கடிகார ஓசையும் ஓயாமல்
தட் தட் தட் – டிக் டிக் டிக்
நினைவு அங்குசங்களின் நிரந்தரக் குத்தல்கள் தாங்கி
தூக்கத்தின் பாதங்கள் பற்றி
கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்

இதற்கு மேலும்
இதற்குமேல் ஒன்றும் கேட்க முடியாது
அதற்குமேல் ஒன்றும் சொல்லவும் முடியாது
கேள்விகளின் போது செவிடாகி விடுவதும்
பதில் சொல்லும் போது ஊமையாகிப் போவதும்
வாடிக்கையாகி விட்டது
கல்லால் தோணி செய்து கடல் கடக்கும்
வேடிக்கை முயற்சிக்கு யார்தான் உதவுவாரோ?

விருப்பம்

நீ கடலாக இருக்கலாம்
ஓராயிரம் நதிகள் உன்னில் கலக்கலாம்
ஜீவநதியாய் இருக்கவே விரும்புகிறேன் நான்

நீயும் மரமும்

ஒவ்வொரு இலையாய்
ஒவ்வொரு பூவாய்
உதிர்க்கும் மரம்
உதிர்ந்தவைகள் உரமாகிப் போகிறது
உதரிய மரத்துக்கே
விழுகின்ற இலைகள் பார்த்து
கெக்கலிக்கிறது புத்திலை
மகரந்தம் சேர சூழ்பையுடன்
விழலாம் பறிக்கப் படலாம்
புத்தம்புது மலர்கள்
வியப்பில்லை மரத்துக்கு
துயரில்லை மரத்துக்கு
நீயும் மரமும் ஒன்றெனக் கொள்
Madhiyalagan@gmail.com

Series Navigation

author

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா

Similar Posts