ப.மதியழகன்
சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை
மனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற
விலங்காய்ப் பயன்படுவான்
குருதியை யாரும் கண்டதில்லையா
அவனை கிழியுங்கள் இரத்தத்தை ருசியுங்கள்-
என அறிவிப்புப்பலகை தொங்கும் அவன் கழுத்தில்
கண்கள் மூடியே இருக்கும்
காணச்சகிக்காது இவ்வுலக நடப்பு ஒவ்வொன்றும்
வாய் இறைவனின் நாமத்தை
மறந்தும் உச்சரிக்காது
தப்பித்தவறி வந்து காப்பாற்றிவிடப் போகின்றானோ
என்ற அச்சத்தில்
காதுகள் எப்போதும்
துரோகச் செயலின் திட்டங்களை கேட்டே
நரக அவஸ்தை அனுபவித்துச் சாகும்
வாழ்க்கை துக்கமாகும்
மரணம் தாசியாகும்
எப்பொழுதும் அதைத் தேடியே
மனம் ஓடும்
உலக இயந்திரம் அவனை
கரும்புச் சக்கையாய்ப் பிழியும்
பெருங்கூட்டமொன்று அந்தச் சாறு போதையென
தண்ணீரில் கலந்து குடிக்கும்
இப்பூலகில் கொடிய வேதனையை
அனுபவித்தவன் மரணித்தால்
சொர்க்கத்தில் வாயிலை தெய்வம்
வந்தா திறக்கும்
அப்படி திறந்தால்
அவன் கடவுளல்ல
விழிப்புணர்வு பெற்று
தட்டுபவனே கடவுள்
திறப்பவன் அல்ல
கைவிடப்பட்ட இவ்வுலகில்
உன் மீது அறையப்படும்
ஒவ்வொரு ஆணியும்
உன்னை புனிதப்படுத்தும்
உயிர்த்தெழுதல் அன்றல்ல
இன்றும் நடைபெறலாம்
இன்னொரு யுக புருஷன்
அவனாகலாம்
அவன் உங்கள் எதிரிலேயே
நடமாடலாம்.
உறக்கமற்றவனின் விடியல்
அவனது கிழக்கில்
கதிரவன் உதிக்காது
சந்தன மரக்கட்டில் கூட
முள்படுக்கையாக மாறும்
அவனது உடலே
அவனுக்குப் பாரமாகும்
அந்த நாளில்
நரகத்தின் நிழல் வீட்டினுள் கவிந்து
அங்கிருந்த வெளிச்சத்தை விரட்டியடிக்கும்
கண்கள் ஜீவ ஒளியிழந்து
தூக்கத்திற்குத் தூண்டில் போடும்
தாயோ, தாரமோ எவரேனும்
தனது தலையை மடியில் வைத்து
கேசத்தை வருடமாட்டார்களா – என
அவன் மனம் மானிட ஸ்பரிசத்துக்கு
ஏங்கித் தவிக்கும்
மரணம்-கடவுளின் அன்புப் பரிசாகவும்
வாழ்வு-கருணையற்ற கடவுள்
தனது கொடிய கரங்களால் எழுதிய
தீர்ப்பாகவும் படும்
நிமிடங்கள் யுகமாகும்
போகங்களில் எந்நேரமும் திளைக்கத் தோன்றும்
விரக்தியின் விளிம்பில்,
றெக்கை முளைக்காத கூட்டுப்புழுவாய்
உயிர்வாழ்வதை விட
மடிந்து மக்கிப்போவதே மேலெனத் தோன்றும்
கனவுலோகத்தால் கைவிடப்பட்டவனின்
கற்பனை இப்படிப்போகும் –
வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு
மட்டும் தான் இரவுப்பொழுதில் உறக்கம்
அப்பணத்திற்கு வட்டியாக அளிக்கப்படும்
என சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நேற்று
செய்தித்தாள்களில் படித்தது போன்ற
ஞாபகம் எழும்
தூக்கம் ஒன்றே துக்கம் குறைக்கும்
இலவச நிவாரணி
அது கண்களைத் தேடி வந்து
தழுவாதபோது
வாழ்வு மகள் பூமாலையுடனும்,
புன்சிரிப்புடனும் எதிரில் நின்றாலும்…
அவன் கரங்கள்
மரண தேவதையை ஆரத்தழுவிக்கொள்ளும்.
பாதை மாறிய பயணம்
கைநீட்டி யாசிப்பவனுக்கு
மிட்டாய்களை கொடுக்காது குழந்தைகள்
வீதியல் போகும் வழிப்போக்கனை
தேடிச் சென்று கொடுக்கும்
தன்னுயிரை கெட்டியாக பிடித்துக்கொள்பவர்களுக்கே
ஆபத்து பரீட்சைகள் நடக்கும்
உயிர்க்கு அஞ்சாதவனிடத்தில்
தேவதைகள் வழியச் சென்று சிரிக்கும்
கோவில் வாசலில்
சில்லரை இருக்கும் திருவோட்டை
தேடிச் சென்று நிரப்பும்
பெருங்கூட்டம் இங்குண்டு
திகட்ட திகட்ட சுகங்களை
மன்மதனுக்கு அளிக்கும்
பல ரதிகள் இங்குண்டு
மண்தரையில் கால்பதிக்காமலேயே
மாடமாளிகைகளிலேயே வாழ்ந்து மறைந்த
பல கனவான்கள் இங்கு வாழ்ந்ததுண்டு
பிறந்தது முதல் பசி என்றால் என்னவென்று
அறியாத பல மாமனிதர்களைக் கொண்டது
எங்களின் ஏழ்மை நிறைந்த
இந்தியத்திருநாடு
என்றோ பட்டுப்பூச்சியாகலாம் என்ற கனவில்
கூட்டுப்புழுக்களாய் உழழும் ஜனத்திரள்
இன்னும் நம்புகிறது
தங்களுக்கு சிறகு முளைக்குமென்று.
ப.மதியழகன்,
- ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -7
- செய் நன்றி!
- புதிய மாதவி கவிதைகள்
- உலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)
- நூல் அறிமுகம் குரலற்றவனின் குரல்
- “மந்திர யோகம்”
- இறைவனின் தமிழ்ப் பேச்சு
- கொஞ்சமாய் குட்டிக்கதைகள்
- ஒரு ஹலோபதி சிகிச்சை
- கடிதம்
- பிரான்சு கம்பன் கழகம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழா
- ஒரு பெருங்குற்றம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -2 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !
- வார்த்தையின் அர்த்தம்
- வேத வனம் -விருட்சம் 71
- பால் நிலா
- மௌனமாய் ஒரு விரதம்
- இது அவள்தானா?
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -3
- டென்ஷன்.
- பெண்மனம்
- பட்சி
- பூ பூக்கும் ஓசை
- ஆண்டு 2050
- நினைவுகளின் தடத்தில் – 43
- பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்
- மொழிவது சுகம்: மகன் தந்தைக்காற்றும் உதவி
- ப.மதியழகன் கவிதைகள்
- வெவ்வேறு உலகங்கள்
- ஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு;
- இன்னுமொருமுறை எழுதுவேன்
- ஆயுதத்தின் கூர்முனை
- கையிருப்பு ..