தொடரும்

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

என்.விநாயக முருகன்


பல வருடங்களுக்கு
மேலாக ஓடிகொண்டிருக்கும்
மெகா சீரியலில்
இடையில் எத்தனையோ மாற்றங்கள்.
ஆரம்பத்தில் நடித்த ஒருத்திக்கு
கல்யாணம் ஆனது.
மற்றொரு நடிகைக்கு
இரண்டு முறை கர்ப்பமாகி
இரண்டு குழந்தைகள் பிறந்தன.
அவருக்கு பதில் இவர்
இவளுக்கு பதில் அவளென்று
நூறு முறை மாற்றிவிட்டார்கள் பாத்திரங்களை.
இடையில் மூன்று முறை
வேறு வீடு வேறு அலுவலகம் மாறியிருந்தேன்.
இது தவிர ஒரு முறை
இறந்து மீண்டும்
பிறந்தும் தொலைத்து விட்டேன்.

பாரி
—–
பு‌திதாக வ‌ந்திருந்த
போக்குவரத்துக்காவலர் பெயர் பாரியாம்.
செம கறாராம்.
சிக்னலொன்றில் காத்திருக்கையில்
பக்கத்து பயணி சொன்னார்.
பாரி துரத்திக்கொண்டு ஓடும்
சிறுமியின் கைகளிலிருந்து
சிதறியோடுகிறது பூக்கூடை.
காவல் வாகனத்தை
கடந்து அடுத்த தெரு சந்துக்குள்
மறைகிறாள் எஞ்சிய பூக்களுடன்.
இயலாமையின் வெறுப்பில்
சிதறும் பழங்கள்,
கண்ணாடி வளையல்கள்,
சில விசும்பல்களை
தாண்டி திரும்பும்
பாரியின் வாகனம் மீது
படர்ந்து கிடந்தன முல்லைப் பூக்கள்.

-நன்றி
என்.விநாயக முருகன்

navina14@hotmail.com

Series Navigation

author

என். விநாயக முருகன்

என். விநாயக முருகன்

Similar Posts