ப.மதியழகன் கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

ப.மதியழகன்


வனம்

வனத்தில் அடியெடுத்து வைத்த
சில் நிமிடங்களில்
மனிதர்களின் ஆரவாரம் மறைந்து
அந்தகாரம் கவிய
நிசப்தம் சர்ப்பமாய் கண்முன்னே
படமெடுத்துப் பயமுறுத்தியது
பலநூறு கிளைகள் பரப்பி
விசித்திரமாய் அமைந்த
அரசமரத்தின் ஆகிருதி
கானகத்தை எங்கு நோக்கினும்
கண்ணைவிட்டு அகலாமல்
நீக்கமற நிறைந்திருந்தது
விலங்குகளின் கால் தடங்கள்
அழியாமல் பல நாட்களாய்
அப்படியே நிலைத்திருப்பது
கடற்கரை மணலில்
கலைந்துபோய் கிடக்கும்
எண்ணற்ற காலடிச்சுவடுகளை
ஞாபகப்படுத்தியது
மூங்கில்களின் உரசலினால்
உண்டான சப்தம்
வனம் முழுவதும் எதிரொலித்தது
அடர்ந்த அந்த வனாந்திரத்தில்
பாதையைத் தேடித் தேடி
கானகத்தின் இதயப் பகுதியை நோக்கி
கால்கள் செல்லச் செல்ல
மனம் தான் மனிதன் என்பதையே
ஆதாம் நிலையை அடைந்திருந்தது!

காளி

அன்றிருந்த
அதே கடல்
அதே வானம்
அதே நிலவு
அதே நட்சத்திரக்கூட்டங்கள்
அதே சுண்டல்காரன்
அன்று கடற்கரை மணலில்
எனதருகில் நீ
இன்று அவ்விடத்தில் காரிருள்
தனிமையெனும நஞ்சுதனை
மெல்ல மெல்ல அருந்திச்சாகும்
பித்தனாய் நான்
எனதுயிரை களப்பலியாக
எடுத்துக்கொண்ட
காளியாய் நீ.

mathi2k9@gmail.com

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts