தோழி

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

கு முனியசாமி


அந்தி நேரத்து மஞ்சள் வானம்
ஐப்பசி மாசத்து சாரல் மேகம்
ஆடியில் பெருகும் காவிரி வெள்ளம்
மாசறு பெண்ணே நீயென் செல்லம்….

எங்கே இருந்தாய் இத்தனை நாளாய்
எப்படி நுழைந்தாய் இதயத்தில் தானாய்
இத்தனை வேகம் ஈதென்னெ மாயம்
ஈரேழு ஜென்மத்து உறவின் காயம்….

மண்ணில் விழுந்த விதையும் முளைத்து
மரமாய் வளர சிலநாள் ஆகும்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிருள் உருக ஏனிந்த வேகம்….

கல்லாய் இருந்த மனசும் இன்று
பஞ்சாய் போச்சு பாரமாய் ஆச்சு
முள்ளில் விழுந்த மலராய் இன்று
முழுதும் நெஞ்சம் கலங்கிப் போச்சு…

மாயம் செய்தாய் மாசறு கள்ளி
மந்திரம் சொன்னாய் மனதைக் கிள்ளி£
ஐம்பது வயதில் இதுவென்ன கூத்து
அறிந்தும் உருகுது உயிரின் ஊற்று….

தப்பைக் கூட சரியாய்ச் செய்தால்
தப்பும் தப்பும் சரியென் றாகும்
உப்பும் உவர்ப்பும் உணர்வது போல
நட்பும் காதலும் இருந்தால் நன்று ….

கூடா நட்பு கூறுது மனசு
கூட்டிக் கழித்தால் மிஞ்சுதுன் நினைவு
ஊரும் உறவும் உணர மறுக்கும்
உண்மை நட்பையும் உலகம் எதிர்க்கும்….

வேசம் இல்லா உறவு வேண்டும்
விரசம் இல்லா நட்பு வேண்டும்
நாளை நடப்பது தெரிய வேண்டும்
நானுன் னுள்ளே துயில வேண்டும் ….

காமம் இல்லா காதல் வேண்டும்
கண்ணை மூடின் தூக்கம் வேண்டும்
காதல் இல்லா நட்பு வேண்டும்
கண்ணே உன்னுள் சாக வேண்டும் ….
——————

Series Navigation

author

கு முனியசாமி

கு முனியசாமி

Similar Posts