என். விநாயக முருகன் கவிதைகள்

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

என். விநாயக முருகன்


துறவு
—————————
இலையுதிர்கால
மரம் போல
முற்றும் துறந்த
ஞானியைப் போல
ஒரு குழந்தையின்
செய்கையைப் போல
கொஞ்சமும் வெட்கப்படாமல்
சட்டையை கழற்றி வைத்து
ஊர்ந்து செ‌ன்றிருந்தது
சர்ப்பமொன்று
————————————————————————————————————
ஒரு காலக்குழப்பம்
———————————
எதிர்காலத்தை நினைத்தபடி
காரோட்டும் ஓட்டுனர்
கடந்தக்கால நினைவுகளை
அசைப்போட்டபடி
‌பி‌ன்னிருக்கையில் நான்
ஒரு திருப்பத்தின் சுதாரிப்பில்
எந்தக்காலத்திலோ வந்தவன்
எங்களை நிகழ்காலத்துக்கு
இழுத்துப்போட்டு
கடந்த காலத்துக்குப் போனவனாய்
சக்கரத்துக்கடியில் கிடந்தான்
————————————————————————————————————
சாலைகள்
———————
மனிதர்கள் புழங்காத
சாலைகள் எல்லாம்
நாக்கு தள்ளி
நீண்டுக் கிடக்கின்றன
தற்கொலை செய்தபடி
தற்கொலை செய்துக்கொள்ள
முடிவெடுத்து நடப்பவன்
மனசு மாற்றியும்
திருப்பி அனுப்புகிறது
‌சில நேரங்களில்
————————————————————————————————————
ஊதியம்
———
புலி வளையம் தாண்டுகிறது
கிளி சீட்டு எடுக்கிறது
குரங்கு கர்ணம் போடுகிறது
கரடி தாயத்து விற்கிறது
யானை காசு கேட்கிறது
மனிதன் பிடுங்கிக் கொள்கிறான்

————————————————————————————————————
புரியாமை
——————
இத்தனை எளிமையாக
இருக்கிறதே கவிதையென்று
விமர்சித்தார்கள்
புரியாமை கொண்ட வாழ்க்கையில்
தோற்றுப்போன வரிகளை எழுத
ஜோடனைகள் ஒரு கேடா?

நன்றி
என். விநாயக முருகன்

Series Navigation

author

என். விநாயக முருகன்

என். விநாயக முருகன்

Similar Posts