நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

என். விநாயக முருகன்


கைப்பைகள்
———————
நெரிசலான பேருந்துகளின்
ஜன்னலோர இருக்கைகளிலும்
வந்தமர்கின்றன
கைப்பைகள் மீதான
கவனம்

பைகளற்ற பயணத்தில்
எப்போதும் தொந்தரவு
செய்கின்றன
அடுத்தவர் சுமக்கத்தரும்
பைகள்

நெரிசலற்ற பேருந்தில்
ரசிக்கவிடாமல் தடுக்கும்
காலிப்பைகளின் கனம்

தேநீர்க்கோப்பைகள்
——————————
கழுவப்பட்டு
சீராக அடுக்கப்பட்டிருக்கும்
காலி தேநீர்க்கோப்பைகளில்
மிச்சமிருக்கின்றன
சிலத்துளி ரகஸ்யங்கள்
சிலத்துளி துரோகங்கள்
சிலத்துளி பிரியங்கள்
சிலத்துளி சோகங்கள்
சிலத்துளி
சந்திப்புக்கான அடையாளங்கள்
இவையென்று எப்போதும்
கழுவப்படாமலேயே

விதி
———
ஆறுச்சக்கர
டேங்கர் லாரியொன்று
வடக்கு நோக்கிச் செல்கிறது.

இருச்சக்கர வாகனக்காரன்
தெற்கு நோக்கிச் விரைகிறான்.

இவர்களை
மோதவிட்டால் என்னை
மோசமான கவிஞன்
என்பார்கள்.

அப்படியே விட்டால்
சாதாரணக் கவிதையென்று
விமர்சிப்பார்கள்.

அவரவர் விதிகளையும்
அவரவர் கவிதைகளையும்
அவரவர்களே எழுதுகிறார்கள்
எ‌ன்று முடிக்கவும்
இஷ்டமில்லை

என்ன செய்வதென்று
தெரியவில்லை
கைகளை பிசைகிறேன்

காலிக் கூண்டு
——————————
எப்போதும்
காலிக் கூண்டில்
அடைப்பட்டுக் கிடக்கும்
பறந்துப்போன
கூண்டுக்கிளியைப் பற்றிய
நினைவுகள்

என். விநாயக முருகன்

Series Navigation

author

என். விநாயக முருகன்

என். விநாயக முருகன்

Similar Posts