‘ரிஷி’யின் கவிதைகள்

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

ரிஷி


நடப்பு

(1)

பலவீனம்

என்னால் உருவாக்கவியலாத
ஒரு தாமரைப்பூ
தன்னால் பல்கிப் பெருகியவாறு.

நீரின் ஒரு துளியை
உள்ளங்கையில் திரட்டியெடுக்கலாகாமல்
திணறிக் கொன்டிருக்கிறோம்
இன்னமும்.

ஐந்து விரல்களை ஒரேயளவாய்
இயல்பாய் நீட்டிக் கொள்ள
முடியுமா உன்னால்…?

இத்தனை கையாலாகாத்தனத்தை ஒளிக்கவோ
வன்முறையைக் கைக்கொண்டு களிக்கிறோம்?

(2)

எழுதப்படா விதிகள்

தொழிலதிபர்களே ஆட்சியாளர்களாய்
ஆட்சியாளர்களே தொழிலதிபர்களாய்
வழிவழியாய் வந்த வண்ணம்…
முன்னமிருந்திருப்பார்களோ
காட்சிக்கு எளியர்கள்,
குடிசைவாழ் தலைவர்கள்…

இன்னமும்
நாள் குறித்து, ஆள் திரட்டி,
காரணங்கற்பித்து
ஆயிரக்கணக்காய் குடிகளை
காவுகொடுத்து
கெக்கலித்து வக்கரித்து
போரைப் பரவி வரும்
பெருந்தகையாளர்கள் பலர்
மெத்தப் படித்த மேற்குடியாளர்களாய்.

சாதிகளின் மேற்கவிந்த சாதிகளாய்
நிதியும் அதிகாரமும்
நலிந்தோரை மிதித்தபடி…

(3)

முழங்கப் பழகுவோம்

பேசத் தெரிய வேண்டும்
திருத்தமாக.
பொய்யென்றாலும் பரவாயில்லை-
கையிலடித்து சத்தியம் செய்யாத குறையாய்
உரைக்கப் பழக வேண்டும்.
கரைக்கக் கரைக்கக் கல்லும் கரையும்.
கரைத்தால் மட்டும் போதாது,
காணாமல் போய்விட வேண்டும்.
வையத்துள் ஆனானப்பட்ட வாழ்வு வாழ
கட்டாயமாய் கையகப்படுத்திக் கொள்வோம்
மேடைகளையும், ஒலிவாங்கிகளையும்,
மறவாமல் மசியையும், மின்னஞ்சல்
முகவரிகளையும்.
கூட்டிக் கழித்துப் பெருக்கிப் போட்டால்
வந்து விழ வேண்டும் நாம் விரும்பிய விடை.
காய் நகர்த்த வேண்டும் அதற்காய்
அயராது;
காலம் கனியும்.
கவைக்குதவாது-
வலிக்குமோ பிறர்க்கு என்ற கரிசனம்.
அவைநாயகர் நாமாதலே அவசரமும்
அவசியமும்.

(4)

மாஜிகளாகாத நாஜிகள்

யாருமே மனிதர்களில்லை
அவர்களைத் தவிர;
எதுவுமே உண்மையல்ல
அவர்கள் மொழிவதைத் தவிர.
மாஜிகளாகாத நாஜிகள்
நாள் முழுக்க நகர்வலம்
வந்துகொண்டிருக்கிறார்கள்.
மக்களை நலம் விசாரித்தவாறு.
வறுமைக்கோட்டை வரையும் நேரம்
துக்கம் தொண்டையை அடைத்ததாக
ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளின்
அதி ஆடம்பர அரங்குகளில்
அவர்கள் சொல்வதை
நாம் நம்பித்தானாக வேண்டும்.
பார்த்து பதவிசாக நடந்து கொண்டால்
பதவிகள், பரிசுகள் தேடி வரலாம்.
எதிர்த்துக் கேள்வி கேட்டால்
எவருக்கோ அடிவருடிகளாக்கப்பட்டு விடுவீர்கள்.
சுவரில்லாமல் வரைய முடியாதா என்ன?
அது தான் இருக்கவே இருக்கிறதே
ஏமாந்த சோணகிரிகளின் வெற்று முதுகுகள்…
“பத்திரம், கவனமாயிருங்கள்”, என்று கூறியவாறே
கத்தியால் அழுத்திக் கீறி,
பீறிடும் அவருடைய ரத்தத்தைக் கொண்டே
பதமாய் சித்திரம் தீட்டிவிட
சொல்லியா தர வேண்டும்?

(5)

பாவம் குடிமக்கள்

உம்மை மேய்ப்பராகவும்
எம்மை வழி தவறிய வெள்ளாடாகவும்
அல்பகலாய் உருவேற்றியவாறு…
எமது சிந்திக்கும் திறனை எமக்கே எதிரியாக்கி
எம் சுயம் தன்வயமிழந்துபோய்
உன் தலையாட்டி பொம்மையாகிவிட்டதும்
நாங்கள் முழுமனிதராகி விட்டதாய்
முன்மொழியப்படுகிறது; வழிமொழியப்படுகிறது.
திட்டவட்டமாய்
வட்டத்துள் எம்மை முடக்கிவிடும் திட்டம்
வெகு எளிதாய் பூர்த்தியாகி விட
வேர்த்து விறுவிறுத்து வகையறியாது
காலத்திற்கும் எம் மீதான எமதன்பை
நட்பை, மதிப்பை, மரியாதையை
கரிசனத்தை, நல்லெண்ணத்தை
வேறெதையெதையெல்லாமோ
பிரிந்து விட்டவனாய், துறந்து விட்டவளாய்
உமது வாயிலிருந்து உதிரும் சொல்முத்துக்களை
அதிகதிகமாய் திரட்டத் தொடங்கி இன்று
கதிகெட்டு நிற்கிறோம்.
‘பாவம் குடிமக்கள்’ என்று பாவனையாய்
கண்ணில் நீர்மின்ன,
எழுதித் தரப்பட்டதை மனனம் செய்து ஒப்பித்தவாறு
மளமளவென்று மேலேறிச் சென்றவண்ணம்,
அடிவாரத்தில் தளர்ந்து நின்றுகொண்டிருக்கும்
எம்மைப் பார்த்து
அவ்வப்போது எப்படி அத்தனை அன்போடு
புன்னகைக்கிறீர்கள்?!

(6)

எப்பொருள் மெய்ப்பொருள்

“பத்து நிறங்களைக் கொண்டது வானவில்!”, என்றனர்.
“இருக்கலாம்” என்றேன்.
“பறவைகள் பேசுவதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்!” என்றனர்.
“நல்லது”. என்றேன்.
‘இல்லை என்ற சொல் எங்கள் அகராதியிலேயே இல்லை” என்றனர்.
“புண்ணியாத்மாக்கள் நீங்கள்!”, என்றேன்.
“எண்ணியது எண்ணியாங்கு முடிப்போம்!” என்றனர்.
“என் கண்ணே பட்டுவிடப் போகிறது!” என்றேன்.
பழி நீங்க வாழ்வதே எங்கள் லட்சியம்” என்றுரைக்க
வழிகாட்டியாய் உம்மைக் கொள்வோம் நிச்சயம்”, என்றேன்.

“அப்படியெனில், நாங்கள் சொல்வதையெல்லாம்
நம்புகிறாய் தானே?”
“எப்படியும் மாட்டேனே!”

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

author

ரிஷி

ரிஷி

Similar Posts