மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

என். விநாயக முருகன்


யாரும் எழுதிவிடலாம்
————————————–
யாரும் எழுதிவிடலாம்.

கொஞ்சம் சிகரெட்.
கொஞ்சம் தேனீர்.

கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் பணம்

கொஞ்சம் தனிமை
கொஞ்சம் வறுமை

கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் நெருப்பு

கொஞ்சம் காமம்
கொஞ்சம் ஞானம்

கொஞ்சம் வாழ்க்கை
கொஞ்சம் மரணம்

அப்படியே
கொஞ்சம் கவிதையும்
கிடைத்துவிட்டால்
யாரும் எழுதிவிடலாம்.
ந‌ல்ல கவிதையை

சந்திப்புகள்
——————
எப்போதும்
சந்திக்க விரும்புகின்ற
நபர்களை பொறுத்தே
நீளுகின்றன
எல்லாச் சாலைகளும்

சந்திப்புகளுக்கான
காரணங்களை பொறுத்தே
சுவாரஸ்யமாகின்றன
எல்லா சந்திப்புகளும்

திரும்பி வரும்
சாலைகள் எங்கும்
சிதறியோடுகின்றன
எல்லா சந்திப்புகளும்
எப்போதும்

எதிர்பாராதது
———————
என் கவிதையை
ரசித்தவர்.
அதன் படிமத்தை
விமர்சித்தார்.
சொற்களின் ஆழத்தில்
உறங்கும் மௌனத்தில்
மூழ்கினார்.
இந்த இடத்தில்
இந்த வார்த்தை தேவையில்லை
அன்பாக சுட்டிக்காட்டினார்.

இறுதியில் கேட்டது
நானே எதிர்பாராதது
ஆமா.. ஒரு கவிதைக்கு
எவ்வளவு கிடைக்கும்?


navina14@hotmail.com

Series Navigation

author

என். விநாயக முருகன்

என். விநாயக முருகன்

Similar Posts