இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

ப.மதியழகன்


பிறழ்வு

எனது சுய ஒழுக்கம்
பிறழ்வை சந்திக்கும் வேளைகளில்
எனது செயலுக்காக
நான்கு சுவர்களுக்குள்
நானே வெட்கப்படும் தருணங்களில்
வார்த்தைகளால் மனிதர்களை
கொள்ளி வைக்கும் கணங்களில்
ஒருவரது மனதில்
ஆழ்ந்த நம்பிக்கையால்
எழும்பிய அடித்தளத்தை
வாதத்தால் உடைத்தெறியும்
நாழிகையில்
எனது சவப்பெட்டியில் அறைய
பைநிறைய ஆணிகளை
நானே சேகரிக்கின்றேன்!

———————

கேள்விக்குறி

எல்லா மனிதர்கள் முன்பும்
ஒரு கேள்விக்குறி
விடை தெரியாத புதிராகத்தான்
விடிகிறது பொழுதுகள்
ஆங்காங்கே ஆச்சர்யக்குறி
தோன்றத்தான் செய்கிறது
ஆனால் கேள்விக்குறியின்
விஸ்வரூபம் முன்பு
ஆச்சர்யக்குறி சுவடற்றுப் போகிறது
வினாக்களுக்கு விடைகாண நேரமின்றி
விரைந்தோடுகிறது நாட்கள்
சற்றே அயர்வுற்று
இளைப்பாறும் தருணங்களில்
இதற்கென்ன தீர்வென்று
எல்லார் சிக்கல்களும்
கேள்வி்க்குறியோடு மனத்திரையில்
தோன்றி மறைகின்றன
கேடயம் கூட கையில் ஏந்தாத என்னை
கூர் வாளால் குத்திக் கிழிக்கின்றன
உதிரம் வழிந்த பின்னர் கூட
உணராதா நான் சாதாரண மானிடனென்று!

mathi2k9@gmail.com

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts