பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


என்னோடு நீ இருப்பது
எனக்குள்ளே
எத்துணை இழப்பு எண்ணத்தை
எழுப்புது அந்தோ ?
மானிட வெற்றி வீரர்களில்
நானொருவன் !
ஏனெனில்
நீ அறிய மாட்டாய்
உன்முகம் இதுவரைக் காணாது
என்னோடு இருப்பவர்
ஆயிரக் கணக் கானவர் !
பன்முறை வெற்றி பெற்றவர்,
என்னோடு அணிவகுத்து
ஒன்றாய் நடந்த
இதயங்கள் ! பாதங்கள் !

எனை நீ அறியாதவள் ! நான்
ஏகாந்தி அல்லன் !
தனித்து வசிப்போன் அல்லன் !
அணி வகுப்பில்
என்னோடு வருவோருடன்
மட்டும்
முன் வரிசையில்
நின்று
வழி நடத்துவேன் !
வலுப் பெற்றவன் நான் !
ஏனெனில்
என்னோடு இருப்பது
சின்னஞ் சிறிய
என் வாழ்வு மட்டு மின்றி
எல்லாரது வாழ்வுகளும்
பின்னியது !

தளராத நடையில்
நான் முன்னோக்கிப் போகிறேன்
ஏனெனில்
ஆயிரம் விழிகள் எனக்கு !
தாக்கி அடிக்க இருக்கிறது
பாறைப் பளு எனக்கு !
காரணம்
ஆயிரம் கைகள் எனக்கு !
உலகக் கடற்கரை எங்கணும்
ஒலிக்கும் குரல் எனக்கு !
ஏனெனில்
பேசாதோர், பாடாதோர்
எல்லோரது
ஓசை முழக்கமும் சேர்ந்தது !
இன்றைக்கு அவர் இசைக்கும்
இக்குரல்
உன்னை முத்தமிடும்
என் வாய்க் குரல் !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 25, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts